under review

பா. ஜம்புலிங்கம்

From Tamil Wiki
Drbjambulingam 12.jpg
பா.ஜம்புலிங்கம் மனைவியுடன் நன்றி:குருகு இதழ்

பா. ஜம்புலிங்கம் (பிறப்பு: ஏப்ரல் 2, 1959), பௌத்த ஆய்வாளர். சோழநாட்டில் பௌத்தம் பரவியிருந்த வரலாறு மற்றும் புத்தர் சிலைகள் குறித்து நீண்டகாலமாக ஆய்வு செய்து வருபவர். களப்பணிகளில் 60-க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளைக் கண்டறிந்து பட்டியலிட்டுள்ளார்.

பிறப்பு, கல்வி

பா. ஜம்புலிங்கம் ஏப்ரல் 2, 1959 அன்று கும்பகோணத்தில் பாலகுருசாமி-தர்மாம்பாள் இணையருக்குப் பிறந்தார். கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் புதுமுக வகுப்பு பயின்று, பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். தட்டச்சும், சுருக்கெழுத்தும் பயின்றார்.

தனி வாழ்க்கை

பா. ஜம்புலிங்கம் சென்னை, கோவை முதலிய ஊர்களில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழத்தில் தட்டச்சாளர் மற்றும் சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்தார்.

பா. ஜம்புலிங்கத்தின் மனைவி பாக்கியவதி, மகன்கள் பாரத், சிவகுரு. தற்போது தஞ்சையில் வசித்து வருகிறார்.

வரலாறு/பௌத்தம் குறித்த ஆய்வு

ஜம்புலிங்கம் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்த ஐராவதம் மகாதேவனுக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். சோழர் கால ஓவியங்களைப் பார்வையிட அவருடன் தஞ்சைப் பெரிய கோவிலுக்குச் சென்றார். கார்த்திகேசு சிவத்தம்பியின் 'Literary History in Tamil' நூலைத் தட்டச்சு செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. இவை அவருக்கு வரலாற்றாய்வில் ஆர்வத்தை ஏற்படுத்தின.

Buddhabookwrapper.jpg
புத்தூர் புத்தர் சிலையுடன்

பா. ஜம்புலிங்கம் பல்கலைக்கழத்தில் பதிப்புத்துறை தொடங்கி பல துறைகளில் பணிபுரிந்தார். தேர்வுப்பிரிவில் வேலை பார்த்தபோது ஆய்வாளர்களுடன் கிடைத்த நட்பும், பல துறைகளைச் சார்ந்த ஆய்வேடுகளைப் படிக்கும் வாய்ப்பும் அவருக்கு ஆய்வில் ஆர்வத்தைத் தூண்டின. பணிபுரிந்து கொண்டே படிக்கும் வாய்ப்பு இருந்ததால் முதுகலைப் பட்டம் பெற்றார். ‘Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur district’ என்ற தலைப்பில் இளம் முனைவருக்கான ஆய்வையும், 'சோழநாட்டில் பௌத்தம்' என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வையும் மேற்கொண்டார்.

பா. ஜம்புலிங்கம் தமிழகத்திலுள்ள புத்தர் சிலைகளைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம் கொண்டார். மயிலை சீனி வேங்கடசாமி பட்டியலிட்டிருந்த புத்தர் சிலைகளை ஆதாரமாகக்கொண்டு ஆய்வைத் தொடங்கினார். இவரது களப்பணியின் காரணமாக அய்யம்பேட்டை, உள்ளிக்கோட்டை, காஜாமலை, குடவாசல், குழுமூர், சுந்தரபாண்டியன் பட்டினம், திருநாட்டியத்தான்குடி, பட்டீஸ்வரம், புதூர், மங்கலம், வளையமாபுரம் போன்ற ஊர்களில் அரிய புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன. நாகப்பட்டிணத்திலுள்ள புத்தரின் செப்புத் திருமேனிகளைப் பற்றிய குறிப்புகளை ஆவணப்படுத்தினார். தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் 21 புத்தர் சிலைகளைக் கண்டறிந்தார். 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டறிந்தார். ‘தஞ்சையில் சமணம்’ என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியன்பட்டினத்தில் நின்ற கோலத்தில் புத்தர் சிலை, முசிறி அருகே மங்கலம் என்னும் கிராமத்தில் கண்டுபிடித்த மீசையுள்ள புத்தர் சிலை, மானம்பாடியில் கிடைத்த அழகிய வேலைப்பாடுடன் ஏழடுக்குப் பீடத்துடன் உள்ள புத்தர் சிலை என பல தனித்தன்மையான பல புத்தர் சிலைகளைக் கண்டு ஆவணப்படுத்தினார். இதுவரை ஆய்வாளர்கள் கண்டறிந்த சோழ நாட்டு புத்தர் சிலைகளை எல்லாம் அட்டவணைப்படுத்தி, அவற்றின் இன்றைய நிலையை உறுதி செய்து, சிதைந்தவை, புதிதாக கண்டறியப்பட்டவை அவற்றோடு தொடர்புடைய வருடங்கள் என்று அனைத்துத்தகவல்களும் கொண்ட முழுமையான பட்டியலை உருவாக்கியது அவரது குறிப்பிடத்தக்க பணி.

பா.ஜம்புலிங்கம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பல நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ள புத்தர் செப்புத் திருமேனிகளைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தினார்.

பா.ஜம்புலிங்கம் பட்டியலிட்ட சிலைகள்
  • 2002-சுந்தரபாண்டியன்பட்டனத்தில் புத்தர் சிலை
  • 2003-திருநாட்டியத்தான்குடியில் புத்தர், நாயனார் சிலைகள்.
  • 2005-உள்ளிக்கோட்டையில் புத்தர்சிலை
  • 2006-குழுமூரில் புத்தர்சிலை
  • 2007-வளையமாபுரத்தில் புத்தர்சிலை
  • 2008-திருச்சியில் புத்தர்சிலை
  • 2009-செருமாக்கநல்லூரில் சமணர்சிலை
  • 2010-பஞ்சநதிக்குளத்தில் சமண தீர்த்தங்கரர் சிலை
  • 2011-தோலியில் சமண தீர்த்தங்கரர் சிலை
  • 2012-கண்டிரமாணிக்கத்தில் புத்தர்சிலை
  • 2013-கிராந்தியில் புத்தர் சிலை
  • 2013-கவிநாட்டில் சமணர் சிலை

இலக்கிய வாழ்க்கை

பா. ஜம்புலிங்கம் சிறுகதைகளும் நாவல்களும் எழுதினார். 'வாழ்வில் வெற்றி'. 'பீர்பால் தந்திரக் கதைகள்', 'மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள்', 'கிரேக்க நாடோடிக் கதைகள்' போன்ற நூல்களை எழுதினார். குளோனிங் முறையில் உயிர்கள் உருவாக்குவதைப் பற்றி 'படியாக்கம்' என்னும் அறிவியல் நூலை எழுதினார்.

பா. ஜம்புலிங்கம் தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பாளர். விக்கிபீடியா ' 1000: பதிவு அனுபவங்கள்' என்னும் மின்னூலைப் படைத்தார்.

பா.ஜம்புலிங்கத்தின் 100-க்கும் மேற்பட்ட இலக்கிய/வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வு இதழ்களிலும் நாளிதழ்களிலும் வெளிவந்தன. முன்னூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தன் வலைப்பூக்களில் எழுதியுள்ளார்.

ஜம்புலிங்கம். களப்பணியில் மட்டுமின்றி இலக்கியத்திலும் பௌத்தம் தொடர்பான விஷயங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். புத்தரைக் கடவுளாக ஏற்றுக் கொண்டு பாதபீடிகையை வணங்க வழிகாட்டியது மகாயான பௌத்தம். இதன் சாட்சியமாகவே திருக்குறளில் கடவுளின் வடிவமாகத் திருவடி குறிப்பிடப்படுகிறது என்கிறார் ஜம்புலிங்கம். அது போலவே புத்தர் பிறந்தவுடன் அவரது பாதங்கள் நிலத்தில் படவில்லை. தாமரை மலர்கள் தோன்றி பாதங்களைத் தாங்கிக் கொண்டன. அதன் அடையாளமாகவே 'மலர் மிசை ஏகினான்' என்கிறார் வள்ளுவர் என்றும் சொல்கிறர்

அமைப்புப் பணிகள்

தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004), தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு மலர் (2020) போன்ற மலர்க்குழுக்களின் உறுப்பினராகப் பங்காற்றினார்.

விருதுகள்

  • 'சித்தாந்த ரத்னம்’ -திருவாவடுதுறை ஆதீனம்
  • ‘அருள்நெறி ஆசான்’ -தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம்
  • ‘பாரதி பணிச்செல்வர்-அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம்
  • முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர்’ -புதுக்கோட்டை கணினி தமிழ்ச்சங்கம்,

மதிப்பீடு

பா. ஜம்புலிங்கம் பௌத்த ஆய்வாளராகவும், பல புத்த திருமேனிகளை ஆவணப்படுத்தியவராகவும் அறியப்படுகிறார். புத்தர் சிலைகளுக்கான தேடலில் இவர் கண்டடைந்தவற்றை தொகுத்த 'சோழ நாட்டில் பௌத்தம்' தமிழக அளவில் ஒரு முன்மாதிரி. இந்நூல் இரண்டு விதங்களில் முக்கியமானது. ஒன்று இதில் இடம்பெற்றுள்ள அரிய புத்தர் சிலைகளின் புகைப்படங்கள், இரண்டாவது சிலைகள் குறித்த துல்லியமான தரவுகள்" என்று எஸ். ராமகிருஷ்ணன் இந்நூலைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

  • தஞ்சையில் சமணம் (மணி.மாறன், தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்து, 2018),
  • விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் (மின்னூல் 2020)
  • சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, 2022)
சிறுகதைத்தொகுப்பு

வாழ்வில் வெற்றி (2001)

மொழிபெயர்ப்பு
  • மரியாதைராமன் கதைகள் (2002),
  • பீர்பால் கதைகள் (2002),
  • தெனாலிராமன் கதைகள் (2005),
  • கிரேக்க நாடோடிக்கதைகள் (2007),
அறிவியல்
  • படியாக்கம் (cloning)(2004)
ஆய்வுகள்
  • ஆய்வியல் நிறைஞர்:தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995).
  • முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999).
ஆங்கில நூல்கள்
  • Tantric Tales of Birbal, (மொழிபெயர்ப்பு),New Century Book House, Chennai, November 2002 [2]
  • Judgement Stories of Mariyathai Raman, (மொழிபெயர்ப்பு), New Century Book House, Chennai, November 2002 [3]
  • Jesting Tales of Tenali Raman, (மொழிபெயர்ப்பு), New Century Book House, Chennai, October 2005 [5]
  • Nomadic Tales from Greek, (மொழிபெயர்ப்பு), New Century Book House, Chennai, May 2007

உசாத்துணை


✅Finalised Page