under review

பார்த்தசாரதி பங்காரு

From Tamil Wiki
பார்த்தசாரதி பங்காரு.jpg

பார்த்தசாரதி பங்காரு (பிறப்பு: ஜனவரி 14, 1954) மலேசியாவில் எ.எம்.என் மின்னியல் ஊடகத் துறை வளர்ச்சிக்கு முதன்மையான பங்கினை ஆற்றியவர்களில் ஒருவர்.

பிறப்பு,கல்வி

பார்த்தசாரதி பங்காரு ஜனவரி 14, 1954-ல் பினாங்கில் பிறந்தார். பார்த்தசாரதி பங்காருவின் தந்தையார் பெயர் பங்காரு நாயுடு, தாயார் பெயர் மாரியாயி. பங்காரு நாயுடு - மாரியாயி இணையருக்குப் பிறந்த எட்டுப் பிள்ளைகளில் பார்த்தசாரதி பங்காரு ஏழாவது பிள்ளையாவார்.

1960--ம் ஆண்டு முதல் 1967--ம் ஆண்டு வரை பார்த்தசாரதி பங்காரு தமது ஆரம்பக்கல்வியைப் பினாங்கில் உள்ள சுப்ரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியில் பெற்றார். பார்த்தசாரதி பங்காரு 1968-ல் பினாங்கு ஜார்ஜ்டவுன் இடைநிலைப்பள்ளியில் மேற்கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் பார்த்தசாரதி பங்காரு பினாங்கு மெத்தடிஸ்ட் ஆண்கள் பள்ளியில் ஆறாம் படிவத்தை நிறைவு செய்தார். மலேசிய வானொலி தொலைக்காட்சியில் பணியாற்றிய காலத்தில் பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாகப் பட்டப்படிப்பைத் தொடர்ந்த பார்த்தசாரதி பங்காரு 1995--ம் ஆண்டு அரசியல், சமூகவியலில் சிறப்புப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

Photo1667392906.jpg

1973-ல் பார்த்தசாரதி பங்காரு ஆறாம் படிவம் முடித்தவுடன், கெடா மாநிலத்தில், கூலிம் வட்டாரத்தில் அமைந்துள்ள பெலாம் தோட்ட தமிழ்/தெலுங்குப் பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கூலிம் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றப்பட்டு, அங்கு ஓராண்டு காலம் பணியாற்றினார். 1978--ம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து விடைபெற்று, மலேசிய வானொலி தொலைக்காட்சியில் உதவி தயாரிப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

1979--ம் ஆண்டு பார்த்தசாரதி பங்காரு, ஆர். பார்வதி என்பவரைத் திருமணம் செய்தார். பார்த்தசாரதி பங்காரு - ஆர். பார்வதி இணையருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

ஊடகத்துறை வாழ்க்கை

மலேசிய வானொலி தொலைக்காட்சியில் உதவி தயாரிப்பாளர்

1978--ம் ஆண்டு மலேசிய வானொலி தொலைக்காட்சியில் உதவி தயாரிப்பாளராக வேலைக்குச் சேர்ந்த பார்த்தசாரதி பங்காரு விளையாட்டுத் துறைக்கு அனுப்பப்பட்டார். அப்பிரிவில் மிகவும் அனுபவம் வாய்ந்த எஸ். கே. குலசிங்கம், மூ கிம் சொய் ஆகிய விளையாட்டுச் செய்தி தயாரிப்பாளர்களின் கீழ் பார்த்தசாரதி பங்காரு பணியாற்றினார்.

விளையாட்டுத் துறை அறிவிப்பாளர்களான கல்கர்னாயின் அசான், அமரான் ஹமிட், ஜமாலுதின் அலியாஸ், ஜஹிடின் அமாட் ஆகியோருடனும் இணைந்து பார்த்தசாரதி பங்காரு செயல்பட்டார். தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள், மெர்டேக்கா காற்பந்து போட்டி, ஹாக்கி விளையாட்டு, 1981--ம் ஆண்டு துருக்கி நாட்டின் முதல் இஸ்லாமிய விளையாட்டுப் போட்டிகள் எனப் பல போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்கு பார்த்தசாரதி பங்காரு சென்றார்.

Photo1667392906 (6).jpg

மலேசிய வானொலி தொலைக்காட்சியின் பொது உறவு பிரிவு

ஈராண்டுகளுக்குப் பிறகு 1980--ம் ஆண்டு மலேசிய வானொலி தொலைக்காட்சியின் பொது உறவுப் பிரிவுக்கு பார்த்தசாரதி பங்காரு மாற்றலாகினார். அப்பிரிவு தயாரித்து வழங்கிய வாராந்திர தொகுப்பு நிகழ்ச்சிகளான தும்புவான் மிங்கு போக்கஸ், லெம்பாரான் மிங்கு, ஸ்கோப், நாடாளுமன்ற அமர்வுகளின் நேரடி ஒளிபரப்பு, சுதந்திர தின அணிவகுப்புகள், பேரரசரின் அரியணை அமரும் விழா, தேர்தல் முடிவுகள், வெளிநாட்டுப் பிரமுகர்களின் வருகைகள் ஆகிய பல்வேறு தயாரிப்பு நிகழ்ச்சிகள் அல்லது நேரடி நிகழ்ச்சிகளின் உதவித் தயாரிப்பாளராகப் பார்த்தசாரதி பங்காரு பணியாற்றினார்.

தும்புவான் மிங்கு வாராந்திரத் தமிழ் தொகுப்பின் உதவி தயாரிப்பாளராகத் திகழ்ந்த பார்த்தசாரதி பங்காரு 1980-ல் அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக நியமிக்கப்பட்டார். தும்புவான் மிங்கு நிகழ்ச்சியின் மூலம் பார்த்தசாரதி பங்காரு நாடு முழுவதும் பயணித்து நூற்றுக்கணக்கான சாதனையாளர்களின் வாழ்க்கையைக் காட்டினார். தும்புவான் மிங்கு நிகழ்ச்சியின் வழி பார்த்தசாரதி பங்காரு மலேசிய இந்தியர்கள் மத்தியில் பொருளாதாரச் சிந்தனையை வலுப்படுத்தினார். 1987-ம் ஆண்டு தும்புவான் மிங்கு நிகழ்ச்சியில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களைப் பேட்டி கண்டார். ‘டிமன்சி’, ‘பிசினஸ் ஹரி இனி’ போன்ற மலாய் மொழி நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகவும், டிவி 1வின் மலாய் மொழி செய்தித் தயாரிப்பாளராகவும் பார்த்தசாரதி பங்காரு பணியாற்றினார்.

1995--ம் ஆண்டு தமது பட்டப்படிப்பை முடித்தவுடன் பார்த்தசாரதி பங்காரு டிவி 2இன் ஆங்கிலச் செய்திகளின் ஆசிரியர்களில் ஒருவராகப் பொறுப்பேற்று ஆறாண்டு அப்பிரிவில் பணிபுரிந்தார்.

வானொலி ஆறின் தலைவர்

வானொலி 6 பணியாளர்கள் (2002)

ஆகஸ்டு, 2001--ம் ஆண்டு பார்த்தசாரதி பங்காரு வானொலி ஆறின் பத்தாவது தலைவராக நியமிக்கப்பட்டார். 2001--ம் ஆண்டு தமிழ் வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்த இருபத்து மூன்று புதிய அறிவிப்பாளர்களுக்கு பார்த்தசாரதி பங்காரு பழம் அறிவிப்பாளர்களின் துணையோடு அவர்களைப் பயிற்றுவித்து பணியமர்த்தினார் .

பார்த்தசாரதி பங்காரு வானொலி ஆறின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு விளம்பர நிகழ்ச்சிகளின் நேரம் சுருக்கப்பட்டது. அந்த நேரத்தை நிரப்பும் பழைய நிகழ்ச்சிகள் மீண்டும் ஒலியேறத் தொடங்கின. அவற்றுள் இவ்வார இசைக் குழு, இசையரங்கம், உல்லாச ஊர்வலம், தொடர் நாடகம் ஆகியவை அடங்கும். புதிய நிகழ்ச்சிகளான குறளமுதம், உலகப் பணக்காரர்கள் ஓர் அறிமுகம், அறிவிப்பாளர் விருப்பம் ஆகியவை வானொலி நேயர்களின் கவனத்தை ஈர்த்தன.

விளையாட்டரங்கம் நிகழ்ச்சிக்குச் சில புதிய பகுதி நேர அறிவிப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பார்த்தசாரதி பங்காரு வானொலி ஆறின் தலைவராகப் பொறுப்பேற்றப் பிறகு வானொலி நேயர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்துக்கும் மேல் உயர்ந்தது.

மின்னல் பண்பலை

Photo1667392906 (2).jpg

2005--ம் ஆண்டு மார்ச் வரை வானொலி ஆறு என அழைக்கப்பட்டு வந்த மலேசியத் தமிழ் வானொலி 2005--ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மின்னல் பண்பலை என பெயர் மாற்றம் கண்டது.

2005--ம் ஆண்டு வானொலி ஆறில் நடப்பில் உள்ளது போலத் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆகிய பாடல் தொகுப்பு நிகழ்ச்சிகளுக்குப் பதிலாக, நான்கு தமிழ்பாடல்களுக்குப் பின் மற்ற மொழிப் பாடல்களில் ஒன்று ஒலிபரப்பப்பட்டது. தமிழ்ப் பாடல்களுக்கிடையே இதர மொழிப்பாடல்கள் திணிப்பு வேண்டாம் எனக் கண்டனக் குரல்கள் தொடர்ந்ததால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அம்முறை கைவிடப்பட்டது.

பார்த்தசாரதி பங்காரு பொறுப்பேற்றிருந்த காலத்தில் தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தமிழ் மொழி ஆர்வலர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் வானொலியில் உரிய வாய்ப்பளிக்கப்பட்டது.

ஆய்வுக் கட்டுரை படைத்தல்

2010--ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில் பார்த்தசாரதி பங்காரு ‘மலேசியாவில் வானொலி தொலைக்காட்சியில் தமிழ் பயன்பாடும் அதன் எதிர்காலச் சவால்களும்’ எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை படைத்தார்.

நிகழ்ச்சியின் தேர்வு, தணிக்கைப் பிரிவு

வானொலியில் ஐந்தாண்டுகால பணிக்குப் பிறகு 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் பார்த்தசாரதி பங்காரு தொலைக்காட்சிக்கு மாற்றலாகினார். அங்கு தனியார் துறையினரால் தயாரிக்கப்படும் தொலைக்காட்சி நாடகங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் தரக் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும், அவற்றின் தேர்வு அதிகாரியாகவும் பார்த்தசாரதி பங்காரு செயலாற்றினார். தமிழ் நாடகங்கள், தொடர் நாடகங்கள், விழாக்காலச் சிறப்பு நிகழ்ச்சிகளின் தரத்தைக் கண்காணிப்பது பார்த்தசாரதி பங்காருவின் கடமைகளுள் ஒன்றாக இருந்தது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு 2008--ம் ஆண்டு மீண்டும் வானொலி தலைவர் பதவியின் பார்த்தசாரதி பங்காரு நியமிக்கப்பட்டார். 2008--ம் ஆண்டு வானொலியில் புதிதாகச் சேர்ந்த மேலும் சில இளம் அறிவிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதும், அவர்களின் எழுத்துப் படிவங்களை மேம்படுத்துவதும் தலையாய பணியாக பார்த்தசாரதி பங்காருக்கு இருந்தது.

ஏழு ஆண்டுகள் வானொலியில் சேவையாற்றிய பிறகு மீண்டும் தொலைக்காட்சியில் தமிழ்ச் செய்திப் பிரிவில் பார்த்தசாரதி பங்காரு பணியாற்றினார். இறுதியாகச் செய்திப் பிரிவில் நான்காண்டு கால சேவைக்குப் பின்னர் ஜனவரி 2014--ம் ஆண்டு தமது அறுபதாவது வயதில் பார்த்தசாரதி பங்காரு பணி ஓய்வு பெற்றார்.

பணி ஓய்வு பெற்றும் பார்த்தசாரதி பங்காரு அரசாங்க மின்னியல் ஊடகத்தில் 37 ஆண்டு காலம் அனுபவம் பெற்றிருப்பதால் 2015-ல் உள்துறை அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் தணிக்கை வாரிய உறுப்பினராகப் பணியாற்றினார்.

Photo1667392906 (5).jpg

ஒலிச்சிற்பிகள்

73 ஆண்டுகளாக மலேசியாவின் தமிழ் வானொலிச் சேவையின் வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் 2017--ம் ஆண்டு ‘ஒலிச்சிற்பிகள்’ எனும் ஆவண நூல் உருவாக்கப்பட்டது. ‘ஒலிச்சிற்பிகள்’ நூல் உருவாக்கத்தில் பார்த்தசாரதி பங்காரு பங்காற்றினார்.

மலேசிய பாரதி தமிழ் மன்றம்

2015--ம் ஆண்டு ஜோகூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின் மேனாள் அமைப்பாளர் திரு. ஆர்.தியாகராஜன் அவர்களால் அமைக்கப்பட்ட மலேசிய பாரதி தமிழ் மன்றத்தின் செயலாளராகப் பார்த்தசாரதி பங்காரு செயலாற்றுகிறார்.

Photo1667392906 (3).jpg

விருது

  • அரசாங்கத்தின் நற்சேவையாளர் விருது (2008)
  • ஏ.எம்.என் விருது (2007)

உசாத்துணை

  • மலேசிய முத்தமிழ்ச் சான்றோர்கள் தொகுதி 1, 2019.
  • ஒலிச்சிற்பிகள் (2017), உமா பதிப்பகம்.


✅Finalised Page