under review

பாண்டிமண்டல சதகம்

From Tamil Wiki
பாண்டிமண்டல சதகம்

பாண்டிமண்டல சதகம் (பதிப்பு: 1932), பாண்டிமண்டலத்தின் சிறப்பைக் கூறும் நூல். மதுரை ஐயம்பெருமாள் இந்நூலை இயற்றினார். நூறு பாடல்களைக் கொண்ட நூல். (சதகம் = நூறு). இதன் காலத்தை அறிய இயலவில்லை.

வெளியீடு

பாண்டிமண்டல சதகத்தின் முதல் 36 பாடல்கள், 1921-ம் ஆண்டின் செந்தமிழ் இதழில் வெளியாகின. நூல் முழுமையையும் ஸ்ரீகாழிக் கண்ணுடைய வள்ளல் சந்தானத்து ஸ்ரீமுத்துச் சட்டைநாத வள்ளல், பல பிரதிகளை ஒப்பிட்டுச் சரிபார்த்துத் தர, ஸ்ரீகாழி வித்துவசிகாமணி ப.அ. முத்துத்தாண்டவராய பிள்ளையால், சீர்காழி ஸ்ரீ அம்பாள் பிரஸ்ஸில், 1932-ல் பதிப்பிக்கப்பட்டது. மதுரை ஐயம்பெருமாள் இந்நூலின் ஆசிரியர்.

பாண்டிமண்டல சதகம் தருமபுர ஆதின மடாதிபதி ஸ்ரீமத் சுப்பிரமணிய தேசிக சுவாமிகளுக்கு உரிமையாக்கப்பட்டது.

ஆசிரியர் குறிப்பு

பாண்டிமண்டல சதகத்தை இயற்றியவர் மதுரை ஐயம்பெருமாள். வரலாற்றறிவும் இலக்கிய, இலக்கண அறிவும் கொண்டிருந்த இவர் பண்டிதர் என்றும் ஆசிரியர் என்றும் போற்றப்பட்டார். தொண்டை மண்டலத்தைச் சார்ந்த தென்காரைக் காட்டில் தோன்றி தென்பாண்டி நாட்டு மதுரையம்பதியில் வாழ்ந்தவர். வேளாளர். இவரைப் பற்றிய பிற விவரங்களை அறிய இயலவில்லை.

நூல் அமைப்பு

பாண்டிமண்டல சதகத்தின் தொடக்கத்தில் கணபதி மற்றும் முருகன் மீதான இரு காப்புச் செய்யுள்கள், அவையடக்கம் மற்றும் சிறப்புப் பாயத்தைத் தொடர்ந்து கட்டளைக் கலித்துறையால் ஆன நூறு சதகப் பாடல்கள் இடம் பெற்றன.

உள்ளடக்கம்

பாண்டிமண்டல சதகத்தின் ஒவ்வொரு பாடலும் ‘பாண்டியன் மண்டலமே’ என்ற வரிகளுடன் முற்றுப்பெற்றது. பாண்டிய மண்டலத்தோடு தொடர்புடைய மன்னர்கள் அறிஞர்கள், ஞானிகள், அருளாளர்கள், வள்ளல்கள் எனப் பலரது சிறப்புகளைப் பேசுகிறது.

பாடல் நடை

பாண்டிய மண்டலத்தின் பெருமை

புகுந்த சமயம் விடார்தேரர் ஞானமில் புல்லவரா
லுகந்தவர் போலவர்க் குள்ளாகி யின்மை யொழிக்குமருள்
மிகுந்த சிவனிடத் தன்பாகிப் பூவென மேற்கல்லினால்
மகிழ்ந்தெறி சாக்கியர் வேளாளர் பாண்டியன் மண்டலமே.

ஒள்ளிய மாயனும் வேதனு மெய்திட வும்பர்தொழுந்
துள்ளிய மான்மழுக் கையர்நின் றாடத் துதிபெருகுந்
தெள்ளிய சித்ர சபைவெள்ளி யம்பலம் சீர்மருவும்
வள்ளிய தாம்ர சபைமூன்றும் பாண்டியன் மண்டலமே.

சொல்லிய மங்கைக் கரசியார் கொங்கைத் துணையழுந்திப்
புல்கி மணஞ்செய்து நேரியன் போர்வென்று பூதியணி
நெல்லையில் வாழ்கின்ற சீர்நெடு மாறர்தம் நேசம்வைத்து
வல்லியங் காத்துப் புரந்தவர் பாண்டியன் மண்டலமே.

திருமிக்க சேரற் கரசு பெறத்தமிழ் செப்பிடவுந்
தருமிக்கு மிக்கசுத் தித்தமிழ் கொங்கென்று தான்சொலவும்
கருணைக் கடல்நங் கடம்பா டவியிற் கலந்திருக்க
வரிசைப் புலமை செலுத்திய பாண்டியன் மண்டலமே

பாட்டொன்று பாடிப் பதினாறு கோடி பரிசுபெற்றுத்
தீட்டும் பதினாறு நூறா யிரம்பொனார் செந்தமிழ்க்கு
வேட்டு வளவன்றன் சங்கத்தி லேறி வியந்திருந்து
வாட்ட மிலாது களிகூரும் பாண்டியன் மண்டலமே

மதிப்பீடு

பாண்டிமண்டல சதகம் பாண்டிய மன்னர்களின் பெருமை, சான்றோர்களின் உயர்வு மற்றும் பாண்டிய மண்டலத்தின் சிறப்பைப் பேசும் நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jun-2024, 21:54:04 IST