under review

பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

From Tamil Wiki
கொச்சகக் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கொச்சகக் (பெயர் பட்டியல்)

பல் + தாழிசை = பஃறாழிசை. பல தாழிசைகள் வரும் பா. எத்தனை தாழிசைகள் வந்தாலும் அவை ஒருபொருள்மேல் அடுக்கியே வரும். தரவினை அடுத்து தனிச்சொல் பெற்றும் பெறாமலும், மூன்றிற்கு மிகுதியான தாழிசைகள், தனிச்சொல், சுரிதகம் பெற்று வரும் பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்.

பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவின் இலக்கணம்

  • கலிப்பாவின் பொது இலக்கணம் பெற்று வரும்.
  • தரவினை அடுத்து தனிச்சொல் பெற்றும் பெறாமலும் வரும்.
  • மூன்றிற்கு மிகுதியான தாழிசைகள் பெற்று வரும்.
  • தரவு, (தனிச்சொல்), தாழிசை, தனிச்சொல், சுரிதகம் பெற்று வரும்.
  • பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவில், தரவின் அடிச்சிற்றெல்லை மூன்றடி. தாழிசையின் அடி எண்ணிக்கை இரண்டு முதல் நான்கு.

உதாரணப் பாடல்

(தரவு)

தண்மதியேர் முகத்தாளைத் தனியிடத்து நனிகண்டாங்
குண்மதியு முடைநிறையு முடன்றளர முன்னாட்கட்
கண்மதியொப் பிவையின்றிக் காரிகையை நிறைகவர்ந்து
பெண்மதியின் மகிழ்ந்தநின் பேரருளும் பிறிதாமோ

(தாழிசை)

இளநல மிவள்வாட விரும்பொருட்குப் பிரிவரயேல்
தளநல முகைவெண்பற் றாழ்குழ றளர்வாளோ.
தகைநல மிவைவாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல்
வகைநல மிவள்வாடி வருந்தியில் லிருப்பாளோ.

அணிநல னிவள்வாட வரும்பொருட்குப் பிரிவாயேல்
மணிநலன் மகிழ்மேனி மாசொடு மடிவாளோ.
நாம்பிரியோ மினியென்று நறுநுதலைப் பிரிவாயேல்
ஓம்பிரியோ மெனவுரைத்த வுயர்மொழியும் பழுதாமோ.

குன்றளித்த திரடோளாய் கொய்புனத்தற் கூடியநாள்
அன்றளித்த வருண்மொழியா லருளுவது மருளாமோ.
சில்பகலு மூடியக்காற் சிலம்பொலிச்சீ றடிபரவிப்
பல்பகலுந் தலையளித்த 8பணிமொழியும் பழுதாமோ.

(தனிச்சொல்)

அதனால்

(சுரிதகம்)

அரும்பெற லிவளினுந் தரும்பொரு ளதனினும்
பெரும்பெற லரியன வெறுக்கையு மற்றே
விழுமிய தறிமதி வாழி
தழுவிய காதலிற் றரும்பொருள் சிறிதே

- மேற்கண்ட பாடலில், ஒரு தரவு, ஆறு தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகியன அமைந்துள்ளது. இப்பாடல் நான்கடித் தரவும், இரண்டடித் தாழிசை ஆறும், தனிச் சொல்லும், நான்கடிச் சுரிதகமும் பெற்று வந்த, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா.

உசாத்துணை


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Aug-2023, 03:33:23 IST