under review

ந.வெங்கடேசன்

From Tamil Wiki

ந.வெங்கடேசன் (வில்லியனூர் ந.வெங்கடேசன்) (பிறப்பு: அக்டோபர் 30, 1940) புதுவையைச் சேர்ந்த கல்வெட்டறிஞர். புதுவை, காரைக்கால் பகுதிகளில் விரிவான கல்வெட்டு ஆராய்ச்சிகள் நடத்தி தொல்லியல் மற்றும் வரலற்றுத் தொடர்பான பல நூல்களை எழுதியவர். புதுவை அரசின் தொல்காப்பியர் விருது பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை உறுப்பினர்.

பிறப்பு, கல்வி

ந.வெங்கடேசன் புதுவை மாநிலம் வில்லியனூரில் அக்டோபர் 30, 1940-ல் சீ.நடராசன், சுப்புலட்சுமி ஆகியோருக்குப் பிறந்தவர். பள்ளிக் கல்வியைப் புதுவை வேதபுரீசுவரர் வித்யாநிலையத்தில் பெற்றார். தாமோதரன் என்ற தமிழாசிரியரின் வழிகாட்டலின் பேரில் 1958-ல் புலவர் புதுமுக வகுப்பிற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் படித்துத் தேர்ந்தார்.

கல்விப்பணி

சென்னை மாகாண முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி தலைமையில் இயங்கிய வள்ளலார் குருகுலத்தில் தமிழாசிரியராக ஓராண்டு பணிபுரிந்தார். பிறகு சென்னையில் அரசுப் பள்ளிகளில் 35 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1998 -ல் வளவனூர் மேல்நிலைப்பள்ளியில் பணி நிறைவு செய்தார்.

கல்வெட்டு ஆராய்ச்சி

வரலாற்றில் அரிக்கமேடு நூல் அட்டை.jpg

வில்லியனூர் ந. வேங்கடேசன் இதுவரை 26 நூல்களைத் தமிழில் வெளியிட்டுள்ளார். இவை பெரும்பாலும் கல்வெட்டுகள், தமிழரின் தொன்மை, வரலாற்றுச் சிறப்பை விளக்கும் நூல்களாக அமைந்துள்ளன. புதுச்சேரி காரைக்கால் பகுதியில் உள்ள கல்வெட்டுகள் பற்றி காலஞ்சென்ற பாகூர் குப்புசாமியுடன் இணைந்துவிரிவான ஆய்வுகள் செய்து நூல்கள் எழுதியிருக்கிறார். இவரது நூல்கள் புதுச்சேரியில், பாகூர், திருவாண்டார் கோயில், மதகடிப்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள பல்லவர்-சோழர்கால கல்வெட்டுகள், கோயில் மற்றும் சிலைகளின் அமைப்பு முறைகள், அதன் தனிச்சிறப்புகள் பற்றிய நுட்பமான பல தகவல்களை உள்ளடக்கியவை. புதுவை பிரெஞ்சு பண்பாட்டுக் கழகத்துடனும் பிரஞ்சு நிறுவன நூலகத்துடனும் தொடர்பு உடையவர்.

விண்ணகரக் கல்வெட்டுகள் ந வெங்கடேசன்.jpg
தொடர்புடைய பணிகள்
  • தொல்புதையல், திருச்சிற்றம்பலம் ஆகிய ஏடுகளில் துணையாசிரியராகப் பணியாற்றுகிறார்.
  • புதுவை வரலாற்றுச் சங்கத்தில் தொடக்க காலம் முதல் இணைந்து பணியாற்றி வருகின்றார்.
  • தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் கழகத்தில் உறுப்பினர்.
  • நடன. காசிநாதன் நிறுவிய தமிழகத் தொன்மையியல் ஆய்வு நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளார்.
  • தென்னார்க்காடு மாவட்ட ஊர்ப்பெயர்கள் குறித்து ஆய்வுசெய்து வருகிறார்.
  • தமிழகக் கோயில் வரலாறுகள் பற்றி மக்கள் தொலைக்காட்சியில் 50 பகுதிகளாகத் தொடர் உரையாற்றினார்.
  • சன் தொலைக்காட்சியில் அரிக்கமேடு குறித்த உரையாட்டில் பங்காற்றினார்.
  • புதுவைப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு ஆய்வாளராகப் பணியேற்று அவர் எழுதிய 'புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் அரிய செய்திகள்' என்ற நூலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
  • பிரெஞ்சு நிறுவனம் வெளியிட்ட சமணம், புத்தர் குறித்த ஒளிவட்டுகளில் பணிபுரிந்துள்ளார்.

விருதுகள், பரிசுகள்

  • தொல்காப்பியர் விருது -புதுவை அரசு( வரலாற்றில் மதகடிப்பட்டு என்ற நூலுக்காக )
  • கலைமாமணி விருது- புதுவை அரசு (2008).
  • கல்வெட்டுக் கலைமணி-காரைக்கால் பாரதியார் கழகம் (கல்வெட்டுகளில் காரைக்கால் பகுதி நூலுக்காக)

படைப்புகள்

  • பண்பும் பயனும் (மொழியியல் கட்டுரைகள்) 1979
  • வரலாற்றில் வில்லியனூர்- 1979
  • வரலாற்றுச் சின்னங்கள்
  • வரலாற்றில் ஆரிய வைசியர்
  • பல்லவன் கண்ட பனைமலைக்கோயில்
  • புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் ஊர்ப்பெயர்கள்
  • புதுவை மாநிலக் கல்வெட்டுகளில் நாடும் வளநாடும்
  • புதுவை மாநிலச் செப்பேடுகள்
  • கல்வெட்டுகளில் காரைக்கால் பகுதிகள்
  • கல்வெட்டுகளும் சில வரலாறுகளும்
  • வரலாற்றில் அரிக்கமேடு
  • நீர்நிலைகளும் வரிகளும்
  • கல்வெட்டுகளில் திருவாண்டார் கோயில்
  • கல்வெட்டுகளில் திருபுவனை
  • கல்வெட்டுகளில் மதகடிப்பட்டு
  • கல்வெட்டுகளில் பாகூர்
  • விண்ணகரக் கல்வெட்டுகளில் அரியசெய்திகள்
  • கல்வெட்டுகளில் திருமால் திருப்பதிகள்
  • தேவாரத்தில் இசைக்கருவிகள்
  • பொன்பரப்பின வாணகோவரையன்(இணையாசிரியர்)
  • திருநள்ளாற்று தருபாரணேசுவரர் கோயில் ஒரு ஆய்வு
  • கல்வெட்டுகளில் தொண்டைநாட்டுத் திருமுறைத் தலங்கள்
  • பி.எல்.சாமியின் ஆய்வுக்கட்டுரைகள்(தொகுதி 1) தொகுப்பாசிரியர்
  • பி.எல்.சாமியின் ஆய்வுக்கட்டுரைகள் (தொகுதி 2) தொகுப்பாசிரியர்
  • நடுநாட்டில் சமணம்

உசாத்துணை


✅Finalised Page