ந.சி. கந்தையா பிள்ளை
- கந்தையா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கந்தையா (பெயர் பட்டியல்)
ந.சி. கந்தையா பிள்ளை (1893 - 1967) ஈழத்துத் தமிழறிஞர், மொழியாய்வாளர், உரைநடையில் தமிழ் இலக்கியங்களை எழுதியவர், தமிழாராய்ச்சியாளர், தமிழ் அகராதிகள் தொகுத்தார். தமிழ் மொழி, நாகரிகத்தின் தொன்மை பற்றிய நூல்கள் பல எழுதினார்.
பிறப்பு, கல்வி
ந.சி. கந்தையாபிள்ளை யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடையில் 1893-ல் நன்னியர் சின்னத்தம்பியின் மகனாகப் பிறந்தார். அவ்வூரில் கல்வி கற்றார்.
தனிவாழ்க்கை
ந.சி. கந்தையாபிள்ளை கந்தரோடைப் பள்ளியில் ஆசிரியப்பணி செய்தார். ஆசிரியப் பணியிலிருக்கும்போது ஈழத்தில் பெரும் புலவர்களின் அறிமுகத்தில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றார். சில காலம் மலேயாவில், பிரித்தானியா ரயில்வேத்துறையில் பணியாற்றினார். இலங்கை திரும்பி தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
ந.சி. கந்தையா பிள்ளை நவாலியூர் மருதப்பு என்பவரின் மகளான இரத்தினம்மாவைத் திருமணம் செய்தார். பிள்ளைகள் திருநாவுக்கரசு மற்றும் மங்கையற்கரசி.
இலக்கிய வாழ்க்கை
தமிழ் அகராதிகள்
ந.சி. கந்தையாபிள்ளை தமிழியம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட அறிஞர்களுள் ஒருவர். பொது அறிவுத் துறையிலும், அகராதித் துறையிலும் பங்களிப்பாற்றினார். செந்தமிழ் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, காலக்குறிப்பு அகராதி, திருக்குறள் அகராதி போன்ற அகராதிகளை எழுதினார். ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
தமிழ் ஆராய்ச்சி
ந.சி. கந்தையாபிள்ளை தமிழ்மொழி, தமிழ்நாகரிகம், சிவவழிபாடு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தமிழ்நாடு சென்று தமிழ்நூல்களை, தொல்பொருள் ஆதாரங்களைப் பெற்று ஆராய்ந்தார். இவற்றை ஆதாரமாகக் கொண்டு பல ஆராய்ச்சி நூல்களை எழுதினார். தமிழ் நாட்டில் வீரபாகுப் பிள்ளையால் நடத்தப்பட்ட ஒற்றுமை நிலையம் மூலமாகத் தனது நூல்களை வெளியிட்டார். முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய பதிப்பகங்களும் ந.சி. கந்தையாவின் நூல்களை வெளியிட்டன.
ந.சி. கந்தையாபிள்ளை தமிழின் தொன்மை குறித்து ஆராய்ந்தார். உலகின் மிகப்பழைய நாகரிகம் திராவிட நாகரிகம் என சான்றுகளுடன் விளக்கினார். 'தமிழ் ஆராய்ச்சி', 'தமிழ் விளக்கம்', 'நமது மொழி', 'தமிழ் பழமையும் புதுமையும்', 'திராவிடமொழிகளும் இந்தியும்', 'திராவிடம் என்றால் என்ன?', 'தமிழர் சரித்திரம்', 'முச்சங்கம்', 'வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர்', 'இந்து சமய வரலாறு' போன்ற நூல்களை எழுதினார்.இந்நூலகளில் தமிழ் மொழியே உலக மொழிகளில் மூத்த மொழி தமிழர் நகரிகமே உயர்ந்த நாகரிகம் என்ற கருதுகோள்களில் எழுதினார். சிந்துசமவெளி மக்கள் தமிழரே என விளக்கும் வகையில் ’சிந்துசமவெளி நாகரிகம்’ நூலை எழுதினார்.
மறைவு
ந.சி. கந்தையா பிள்ளை தனது எழுபத்தி நான்காவது வயதில் 1967-ல் இலங்கையில் காலமானார்.
நூல் பட்டியல்
- அகநானூறு
- அறிவுக் கட்டுரைகள்
- அறிவு மாலை
- அறிவுரைக் கோவை
- ஆரியர் தமிழர் கலப்பு
- அகத்தியர்
- ஆதி மனிதன்
- ஆதி உயிர்கள்
- ஆரியத்தால் விளைந்த கேடு
- ஆரியர் வேதங்கள்
- இராமாயணம் நடந்த கதையா?
- இந்து சமய வரலாறு
- இராபின்சன் குரூசோ
- இலங்கைப்புலவர்கள்
- உலக அறிவியல் நூல்
- உங்களுக்குத் தெரியுமா
- உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு
- கலிங்கத்துப் பரணி
- கலித்தொகை
- கலிவர் யாத்திரை
- சிவன்
- சிந்துவெளி நாகரிகம்
- சிவவழிபாடு
- சிந்துவெளித் தமிழர்
- சைவ சமய வரலாறு
- தமிழ்மொழி
- தமிழகம்
- தமிழ் ஆராய்ச்சி
- தமிழ் விளக்கம்
- தமிழர் வரலாறு
- தமிழர் நாகரிகம்
- தமிழ் இந்தியா
- தமிழர் பண்பாடு
- தமிழர் சமயம் எது?
- தமிழ் பழமையும் புதுமையும்
- தமிழர் யார்?
- தமிழர் சரித்திரம்
- தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா?
- திருவள்ளுவர்
- திருக்குறள்
- திராவிட மொழிகளும் இந்தியும்
- திராவிட நாகரிகம்
- திராவிடம் என்றால் என்ன?
- திராவிட இந்தியா
- தென்னிந்நியக் குலங்களும் குடிகளும்
- நமது தாய்மொழி
- நமது மொழி
- நமது நாடு
- நீதிநெறி விளக்கம்
- நூலகங்கள்
- பரிபாடல்
- பத்துப்பாட்டு
- பதிற்றுப்பத்து
- பாம்பு வணக்கம்
- புறப்பொருள் விளக்கம்
- புரோகிதர் ஆட்சி
- பெண்கள் சமூகம் அன்றும் இன்றும்
- பெண்கள் புரட்சி
- பெண்கள் உலகம்
- பொது அறிவு
- பொது அறிவு வினா விடை
- முச்சங்கம்
- விறலிவிடுதூது
- மறைந்த நாகரிகம்
- மனிதன் எப்படித் தோன்றினான்?
- மரணத்தின் பின்
- வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தமிழர்
அகராதி
- திருக்குறள் அகராதி
- தமிழ்ப் புலவர் அகராதி
- தமிழ் இலக்கிய அகராதி
- காலக்குறிப்பு அகராதி
- செந்தமிழ் அகராதி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Sep-2023, 06:26:05 IST