under review

நிலக்கொடை

From Tamil Wiki
நிலக்கொடை(பள்ளிச்சந்தம்) ஆவணக் கல்பலகை, நாகராஜா கோவில், நாகர்கோவில்.

ஆலயங்களின் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறவும் ஆலயங்களைப் புதுப்பிக்கவும் அறச் செயல்களுக்கும் மன்னர்களாலும் அதிகாரிகளாலும் செல்வந்தர்களாலும் மக்களாலும் ஆலயங்களுக்கு நிலக்கொடைகள் அளிக்கப்பட்டுள்ளன. மன்னர், கோவில் மற்றும் கிராமச்சபைப் பணியாளர்களுக்கும் நிலக்கொடைகள் அளிக்கப்பட்டுள்ளன. நிலக்கொடைகள் கல்வெட்டுகளில் நிவந்த சாசனங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டுகள்

கல்லில் எழுத்துகளைப் பொறிக்கும் கல்வெட்டுக்கலை நெடுங்காலமாக உள்ளது. கல்வெட்டுகள் கோவில் சுவர்கள், கற்பலகைகள், பொதுக் கட்டிடங்கள், பாறைகளின் சரிவுகள், கல்தூண்கள் எனப் பல இடங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுகள் மக்களுக்கு செய்திகள் பகிரவும் ஆவணப்பதிவுகளாகவும் பெரும்பாலும் காணப்படுகின்றன. கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடைகள் கல்வெட்டுகளில் நிவந்த சாசனங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. கொடை அளிக்கப்பட்ட நிலங்களின் வருவாய் மூலம் கோவில்களில் தினசரி பூஜைகள் செய்ய, சிறப்பு திருவிழாக்கள் நடத்த, உணவு வழங்க, தீபம் ஏற்ற, தேவாரம் ஓத, திவ்ய பிரபந்தங்கள் பாட, இசைக்கருவிகள் இசைக்க, நாடகம் நடத்த, நடனம் ஆட, கல்வி பணிகளுக்காக என நிவந்த சாசன ஆணைகள் பொறிக்கப்பட்டுள்ளன. நிலக்கொடை மட்டுமின்றி பொன்னும் பொருளும் கொடைகளாக அளிக்கப்பட்டுள்ளன.

வகைகள்

கோவில்காரியங்களுக்கும் பிற அறச்செயல்களுக்கும் நிலக்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகின்றன.

நிலக்கொடை வகைகள்
வகை விளக்கம்
தேவதானம் சிவன் கோவில்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம்
திருவிடையாட்டம் திருமால் கோவில்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம்
பள்ளிச் சந்தம் சமண, பெளத்த பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்ட நிலம்
மடப்புறம் திருமடங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம்
பிரம தேயம்(பிரமதேசம்), பட்டாவிருத்தி, வேதவிருத்தி, புராணவிருத்தி, அகரம், சதுர்வேதி மங்கலம் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம்
சாலாபோகம் அறத்தின் பொருட்டு கொடுக்கப்பட்டுள்ள நிலம்
முற்றூட்டு புலவர்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நிலம்
காணி முற்றூட்டு ஜோதிடர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம்
தொறுப்பட்டி அரசன் வெற்றி பெற தன் தலையை கொடுத்தவர்களுக்கு தரப்பட்ட நிலம்
உதிரப்பட்டி போரில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு கொடுக்கப்பட்ட நிலம்
தேவதான பிரம்ம தேயம் கோவிலுக்கும் பிராமணர்களுக்கும் விடப்பட்ட நிலம்
காணியாட்சி சாசனப் பட்டயம் பரம்பரை உரிமைக்காக கொடுக்கப்படும் நிலம்
திருநாமத்துக்காணி சிவன் கோவிலுக்கான நிலம்
அருச்சனாவிபவகாணி மூலவரை அர்ச்சிக்கும் பட்டருக்கு கொடுக்கப்பட்ட நிலம்
சர்வமானிய இறையிலி வரிவிலக்கு பெற்ற நிலம்
ஊரமை இறையிலி அரசாங்கத்திற்குரிய தீர்வையை ஊர்சபை ஏற்க வேண்டி கொடுக்கப்பட்ட நிலம்
குடிநீங்காத் தேவதானம் குடிகளை நீக்காமல் சிவன் கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட கிராமம்
ஸ்தானமானிய இறையிலி கோவில் அலுவலர்களுக்கு மானியமாகக் கொடுக்கப்பட்ட நிலம்

உசாத்துணை

  • நாகராஜாகோவில், சிவ. விவேகானந்தன், காவ்யா பதிப்பகம், முதல் பதிப்பு - 2007.


✅Finalised Page