under review

நாகராஜா கோவில்

From Tamil Wiki

நாகராஜா கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலில் உள்ள நாக வழிபாட்டு ஆலயம். மூலவர் நாகராஜா. 'நாகர்கோவில்' என்ற ஊர்ப்பெயர் இக்கோவிலின் காரணமாக உருவானது. ஆலயத்தில் அனந்த கிருஷ்ணனுக்கு சந்நிதி உள்ளது. அனந்த கிருஷ்ணன் பெயரிலேயே திருவிழாவும் தேரோட்டமும் நடக்கின்றன.

இடம்

நாகராஜா கோவில் கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலில் ஒழுகினசேரி என்னும் பகுதியில் உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பெயர்

நாகர்கோவில் என்னும் பெயர் பழங்காலத்தில் நாகராஜா கோவிலைக் குறிப்பதாகவே இருந்துள்ளது. பின்னர் கோவிலைச் சுற்றி உள்ள ஊரின் பெயராகவும் அவ்வூர் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலை நகராகவும் மாறியுள்ளது. நாகர்கோவில் என்னும் பெயர் வழங்கப் பட்டிருந்தாலும் 'கோட்டாறு' என்னும் பெயரே வழக்கில் இருந்துள்ளது. பொ.யு. 1800-க்குப் பின் புராட்டஸ்டண்டுக் கிறிஸ்தவர்களின் வருகைக்குப் பின்னர் நாகர்கோவில் என்னும் பெயர் பெருவழக்காக மாறியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

மூலவர்

நாகராஜா கோவில் மூன்று கருவறைகளைக் கொண்டது. மூலக்கருவறை நாகராஜா அல்லது நாகரம்மன் கருவறை என அழைக்கப்படுகிறது. மூலக்கருவறை காலத்தால் பழையது. இக்கருவறை மண்சுவரால் எழுப்பப்பட்டு மூங்கில் கம்புகளில் தென்னை ஓலைகளால் வேயப்பட்ட கூரையைக் கொண்டது. கருவறையின் முன்பு வாகனம், பலிபீடம் இல்லை. கருவறைக்குள் இருக்கும் மூலக் கற்சிலை நான்கு தலைகள் கொண்டது. இச்சிலை ஐந்து தலைகள் கொண்ட உலோக அங்கியால் பொதியப்பட்டுள்ளது. ஐந்தாவது தலை அறுபட்ட நிலையில் காணப்படுகிறது.

மகாமேரு மாளிகை(தெற்கு பிரதான வாயில்)

மூலவரான சிவன் கருவறையில் ஆவுடையாரில் லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இக்கருவறையின் முன் அறையில் நந்தி சிலை உள்ளது.

அனந்தகிருஷ்ணன் கருவறையில் அனந்தகிருஷ்ணன் சிலையும் அதன் இருபுறங்களிலும் பாமா, ருக்மிணி சிலைகளும் உள்ளன.

தொன்மம்

நாகராஜா கோவிலுக்கு எழுதப்பட்ட தலவரலாறு கிடையாது. செவிவழிக் கதைகளே உள்ளன.

செவிவழிக் கதைகள்

கோவில் இப்போது இருக்கும் இடம் ஒரு காலத்தில் புல்லும் புதர்களுமாக இருந்துள்ளது. ஒரு இளம்பெண் புல் அறுத்துக்கொண்டிருக்கும் போது திடீரென ரத்தம் கண்டு அஞ்சி பார்த்த போது ஐந்து தலை நாகம் ஒன்றின் தலையில் அரிவாள் வெட்டி ரத்தம் வருவதைக் கண்டு, பக்கத்திலிருந்த தன் ஊர் மக்களிடம் நடந்ததை கூற அவர்கள் அங்கு வந்து பார்த்து நாகத்திற்கு இழைத்த தீங்குக்குப் பரிகாரமாக அவ்விடத்தில் சிறு கோவில் ஒன்றை கட்டினர்.

களக்காட்டு மன்னர் ஒருவர் காட்டுப்பகுதிகளை சீர்செய்து நாடாக்க அரண்மனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் மக்களை அழைத்துக் கொண்டு காடுகளை சீர்திருத்தினர். அப்போது ஓரிடத்தில் கல் ஒன்று சேதப்பட்டு ரத்தம் வழிந்தது. அங்கு நாகபிம்பம் தெரிந்தது. அன்று இரவு களக்காடு மன்னர் கனவில் தோன்றிய நாகர் உன் ஆட்கள் தன்னை சிதைத்ததாகவும் உன்னை பீடித்துள்ள தொழுநோய் தீர எனக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று கூறினார். அதன்படி மன்னர் நாகருக்குக் கோவில் எழுப்பினார்.

தர்னேந்திரன் கதை

ஆய்வாளர் செந்தீ நடராசன் அனந்த கிருஷ்ணன் என தற்போது நாகராஜா என அறியப்படும் தெய்வம் சமண சமய தெய்வமான தர்னேந்திரன் என்னும் நாகராஜா என்று குறிப்பிடுகிறார். அதனால் தர்னேந்திரனின் தொன்மக் கதை ஆலயத்துடன் தொடர்புடையதாகிறது.

சமண சமய நெறிப்படி ஆன்மா தீர்த்தங்கரராக மாறுவதற்குப் பல பிறவிகள் எடுத்து பக்குவப்படுகிறது. சமண சமயத்தின் இருபதிமூன்றாவது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்கு (பார்ஸ்வநாதர், பார்ஸ்வர், பார்சுவர்) பிறவிதோறும் கொடுமைகள் செய்ய கமடன்(கமட்டா) வருகிறான். பார்சுவநாதரின் இறுதிப் பிறவியில் கமடன் மகிபாலனாகப் பிறந்து தவம் செய்கிறான். அப்போது தீயிலிட ஒரு கட்டையைப் பிளக்க முயற்சிக்கும்போது சிறுவனாக இருந்த பார்சுவநாதர் அதனுள் ஒரு பாம்பு இணை உள்ளது பிளக்க வேண்டாம் என கேட்கிறான். மகிபாலன் கேட்காமல் கட்டையை பிளக்கிறான் பாம்புகள் இறக்கின்றன. பார்சுவன் மந்திரம் ஓதியதால் அவை கீழுலகுக்குச் சென்று தர்னேந்திரன் என்னும் நாக அரசனாகவும் பத்மாவதி என்னும் நாக அரசியாகவும் பிறவி எடுக்கின்றன.

பார்சுவர் பிறப்பறுக்க தவம் செய்ய காடு செல்கிறார். கமடன் முற்பிறவித் தவத்தால் சம்பர தேவனாக வான் சென்று பார்சுவர் தவம் செய்யும் போது நெருப்புமழை, நீர்மழை, கல்மழை என பொழிந்து தொடர்ந்து ஏழு நாட்கள் இடையூறு செய்கிறான். இதனை உணர்ந்த தர்னேந்திரன் சென்று தனது ஐந்து தலைகள் கொண்ட நாகக்குடை கொண்டு வார்சுவரைப் பாதுகாக்கிறான். பத்மாவதியும் வஜ்ஜிரக் குடை விரித்து பாதுகாத்தாள் என்பது ஸ்ரீபுராணம் கூறும் தொன்மம்.

கொம்மண்டையம்மன் கதை

நாகர்கோவில் வடசேரி கொம்மண்டையம்மன் நாகராஜா கோவில் உள்ளே அனுமதிக்கப்படாததற்கு காரணமாக ஒரு தொன்மக் கதை சொல்லப்படுகிறது.

கொம்மண்டையம்மன் அனந்தகிருஷ்ணனின் சகோதரி. ஒருநாள் சிறுதெய்வங்களோடு விளையாடும்போது மீனை உண்டதால் தீட்டுப் பட்டாள். தீட்டின் காரணமாக அனந்தகிருஷ்ணன் சகோதரியை ஒதுக்கி வைத்தான். திருவிழாக் காலங்களில் ஆலயத்தினுள் நுழையாமல் விழாக்களில் மட்டும் கலந்து கொள்ள அனுமதித்தான். இதன் காரணமாக கொம்மண்டையம்மன் தேர்வீதிகளில் வலம் வந்து கோவில் வெளியே நின்று விடுகிறாள்.

நாகவழிபாடு

அரசமரத்தடி நாகங்கள்

நாகவழிபாடு மிகத் தொன்மையானது. நாட்டுப்புறத் தெய்வங்களின் கூறுகளை உள்ளடக்கிய வழிபாட்டு முறை. விஷத்தினல் எதிரிகளைக் கொல்லும் சக்தியை பாம்புகள் கொண்டிருப்பதால் அவற்றுக்கும் கடவுளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பி மக்கள் வழிபட்டனர். புராணங்களில் அதிக அளவில் நாக வழிபாடு பேசப்படுகிறது. கேரளத்திலும் குமரி மாவட்டத்திலும் சர்ப்ப(பாம்பு)க் காவுகள் அதிகமாக உள்ளன.

நாகராஜா கோவிலில் நாகவழிபாடு மிகப் பழங்காலத்திலே இருந்துள்ளது. நாகராஜா என்னும் இக்கோவிலின் மூல தெய்வத்திற்கு நேர்ச்சை செய்வதன் மூலம் சரும வியாதிகளைப் போக்கி நலம் பெறலாம் என்னும் நம்பிக்கை இங்கு பல காலமாக இருந்து வருகிறது.

கோவில் அமைப்பு

கோவில் வளாகத்தைச் சுற்றி உயர்ந்த மதில்சுவர் கல் நாகர் உருவங்களுடன் உள்ளது. கோவில் சதுரவடிவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் வளாகத்தின் கிழக்கிலும் தெற்கிலும் வடக்கிலும் வாசல்கள் உள்ளன. கிழக்கே அனந்தகிருஷ்ணன் சந்நிதியின் எதிரிலும், நாகராஜர் சந்நிதி எதிரிலுமாக இரு வாசல்கள் உள்ளன. கோவில் முகப்பு நுழைவாயில் கேரளபாணியில் அமைந்துள்ளது.

கோவில் வளாகம்
பக்தர் குளம்

கோவில் முன்புறம் உள்ள வாயில் கிழக்கு பிரதான வாயில் அல்லது உமை பங்கனேரி வாயில் என அறியப்படுகிறது. கிழக்கு வாயில் இருபுறம் தொங்கும் மாலை மற்றும் பூக்களின் ஓவியங்களுடன் கேரள பாணி ஓட்டுக்கூரையுடன் உள்ளது. கிழக்கு வாயில் வழி உள்ளே நுழைந்ததும் வலதுப்பக்கம் வடகிழக்கு மூலையில் நீராழி என அழைக்கப்படும் சதுர வடிவ பக்தர் குளம் உள்ளது. பக்தர் குளம் 8 சென்ட் பரப்பளவில் உள்ளது. சுற்றி வடக்கிலும் கிழக்கிலும் தென்னை, வேம்பு முதலிய மரங்கள் உள்ளன. குளத்தைச் சுற்றியமைந்துள்ள மதில்சுவரில் நாகங்ககளின் சிற்பங்கள் அதிகம் காணப்படுகின்றன.

அரசடி விநாயகர்

கிழக்கு வாயில் வழியாக கோவிலினுள் நுழைந்ததும் இடப்புறம் அரச மரத்தின் அடியில் அமைக்கப்பட்ட மேடையில் கிழக்கு நோக்கி விநாயகர் மற்றும் கருவறை விநாயகர் சிற்பங்கள் உள்ளன. சுற்றிலும் நிறைய நாகச் சிற்பங்களும் உள்ளன.

கோயில் முகப்பு

அரசமரத்தின் மேற்கு திசையில் கொட்டார(அரண்மனை) வடிவ கோவில் முகப்பு உள்ளது. தெற்கு வாயிலின் வடக்கிலும் தெற்கிலும் இரு தூண்களுடன் கூடிய இரண்டு திண்ணைகள் உள்ளன. கேரள பாணியில் ஓட்டுகூரையுடன் கோவில் முகப்பு அமைந்துள்ளது. முகப்பின் வலப்புற வாயிலில் ஐந்து தலை நாகச் சிற்பமும் இடப்புற வாயிலில் ஐந்து தலை நாகக் குடையின் கீழ் கிருஷ்ணன் பாமா ருக்மணியுடன் நிற்கும் சிற்பமும் உள்ளன. வாயில்களுக்கு நடுவில் மேல் பகுதியில் சங்குச் சிற்பமும் தெற்கு வாயிலின் தெற்கு மேற் பகுதியில் சக்கரத்தின் சிற்பமும் அதன் தென் பகுதியில் காவல் தெய்வச் சிலையும் உள்ளன. முன்னர் சிலைகள் இருந்த மேல் பகுதி சாரளங்களுடன் இருந்துள்ளது, 2006-ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது இப்போதுள்ள சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

தெற்கு வாயில்கள்
அலுவலகம்

கோவிலின் தென்புறம் வடக்கு நோக்கி அறநிலையதுறையின் கோவில் அலுவலகம் உள்ளது. இரு வாயில்கள் கொண்ட கட்டிடத்தில் கிழக்கு வாயில் பகுதியில் அறநிலையத்துறை அலுவல் பணிகள் நடைப்பெறுகின்றன. திருப்பணிக்குழு அலுவலகம் என்று அழைக்கப்படும் மேற்கு வாயிலில் திருப்பணிக் குழுவின் அலுவல்கள் நடைபெறுகின்றன. இப்போது அலுவலகம் உள்ள பகுதியும் அதனை ஒட்டி கிழக்கு தெற்காக உள்ள பகுதியும் முன்னர் கல்வெட்டுகள் குறிப்பிடும் குணவீர பண்டிதன் மற்றும் கமலவாகன பண்டிதன் ஆகியோரின் வீடுகளாக இருந்துள்ளன. சிங்கபெருமாள் அகம் என்று அழைக்கபட்ட அவ்வீட்டில் இருந்து கோவிலை நிர்வகித்து வந்துள்ளனர். 2006-ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது அவை இடிக்கப்பட்டு அதன் சிறுபகுதி அலுவலகமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபம்

கோவிலின் தென்புறம் ஒரு திருமண மண்டபம் உள்ளது.

மகாமேரு மாளிகை(தெற்கு வாயில்)

மேரு என்றால் மேரு மலையைக் குறிக்கும். மேரு மலை சிவபெருமானால் தனுவாக தாங்கப் பெற்ற பொன்னிற ஆயிரம் தலைகளுடைய மலை என்னும் தொன்மம் கொண்டது. இத்தொன்மப் பின்னணியில் கோவிலின் பிராதான வாயிலான தெற்கு வாயில் மகாமேரு மாளிகை என அழைக்கப்படுகிறது. மகாமேரு மாளிகை நாகர்கோவில் நகராட்சியின் முத்திரையாக உள்ளது.

தெற்கு வாயில் பெரிய மரத்திலான கதவுகள் கொண்ட அரண்மனை வாசல் போன்ற உயரமான வாயில். வாயிலின் மேற்புறம் மூன்று கும்ப கலசங்களுடன் ஒட்டுக்கூரை வேயப்பட்ட ஓர் அறை உள்ளது. வாயிலின் இருபுறமும் அறைகள் உள்ளன. வாயிலின் அடியில் நாகராஜா கோவிலின் தேருக்கான மரப் பொருள்கள் பாதுகாக்கப்படும் பாதாள அறை உள்ளது. வாயிலின் மேற்கு பகுதியில் மலபார் கட்டடக்கலை பாணியிலான முழுக்க தேக்கு மரத்தால் ஆன மாளிகை உள்ளது.

சிங்கபெருமாள் அகம் (ஒரு பகுதி)(தற்போது அலுவலகமாக செயல்படுகிறது)
வெளிச்சுற்றுச் சுவர்

நாகராஜா கோவில் 73 செண்ட் பரப்பளவு கொண்டது. கோவிலைச்சுற்றி செவ்வக வடிவில் பெரிய கற்களை கொண்டு கட்டப்பட்ட சுற்றுச் சுவர் உள்ளது. சுவரின் உச்சியில் அதிக எண்ணிக்கையில் நாகச்சிலைகள் உள்பக்கமாக திரும்பி உள்ளன. சுவரில் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது. நான்கு பக்கமும் வாசல்கள் உண்டு. தெற்கு வாயில் திருவிழாவின் போது மட்டும் திறக்கப்படும், வடக்கு வாயில் பாலமுருகன் சந்நிதி செல்ல பயன்படுத்தபடுகிறது, மேற்கு வாயில் நிரந்தரமாக அடைக்கப்பட்டு நாகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன, கிழக்கு வாயில்கள் பிராதான முகப்பு வாயில்களாக உள்ளன.

தெற்குச் சுவர் வாயில்கள்

கோவிலின் தெற்குச் சுவரில் திருவிழாக் காலங்களில் மட்டும் திறக்கப்படும் இரண்டு வாயில்கள் உள்ளன. மகாமேரு மாளிகைக்கு நேராக அமைந்துள்ள பெரியவாயில் வழியாக திருவிழா காலங்களில் வாகனங்கள் எடுத்துச் செல்லப்படும். வாயிலின் மேற்பகுதியில் இரண்டு ஐந்து தலை நாகங்கள் மற்றும் அவற்றின் நடுவே பாமா ருக்மணியுடன் இருக்கும் அனந்த கிருஷ்ணன் சிலைகள் உள்ளன. பெரிய வாயிலின் உள்ளே இருபுறமும் மூன்று விளக்குப்பாவைச் சிற்பங்கள் உள்ளன. வாயிலின் இருபுறங்களிலும் பூக்கள், முகங்கள், அன்னவால் கருக்கு, மாலைகள் ஆகியவற்றின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

பெரியவாயிலுக்கு கிழக்காக சிறிய வாயில் ஒன்று உள்ளது. சிறிய வாயிலின் மேற்புறம் மூன்று தலை நாகமும் அதன் மேல் விரிந்த இதழ்களைக் கொண்ட பூவும் அதனைச்சுற்றி பூமாலை அலங்காரமும் உள்ளன. வாயில்களின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள் 1992-ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது அமைக்கப்பட்டவை.

வடக்கு வாயில்

நாகராஜா கோவிலின் முன்பு வடக்கு திசையில் தெற்கு நோக்கி வடக்கு வாசல் உள்ளது. வாயிலின் இருபுறமும் விளக்கு பாவை மற்றும் சைவ சமய அடியவர்களின் சிற்பங்கள் உள்ளன. வளைந்த அமைப்புடைய வாயிலின் மேற்பகுதியில் இருபுறமும் ஐந்து தலை நாகத்தின் சிலைகளும் நடுவே இந்து தெய்வங்களின் சிற்பங்கள் பலவும் உள்ளன. அவற்றின் கீழே கையில் கதையுடன் வாயில் காவலர் சிற்பங்கள் உள்ளன. 1970-ம் ஆண்டு கட்டப்பட்ட வடக்கு வாயில் கோபுரத்தில் பூக்கள், குலை தள்ளிய வாழை ஆகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

அரசமரம், நாகச் சிலைகள்
இடும்பன் சந்நிதி

நாகராஜா கோயில் முன்பக்கம் உள்ள வடக்கு வாயில் உள்ளே இடது பக்கம் இடும்பன் சந்நிதி உள்ளது. இடும்பன் பீமனிடம் சண்டையிட்டு மாண்ட அரக்கன் என்றும் முருகனோடு சண்டையிட்டு தோற்று பின்னர் அவன் மனைவி இடும்பியின் வேண்டுகோளை ஏற்று முருகன் அவனை உயிர்ப்பித்து தனது பூத கணங்களோடு சேர்த்துக் கொண்டான் என்னும் தொன்மங்கள் உள்ளன. நாகராஜா கோவிலில் முருகனின் கணங்களின் தலைவனாக முருகனுக்கு காவலாக இடும்பன் சந்நிதி உள்ளது. இடும்பன் சந்நிதி 4 அடி நீளமும் 4.1 அடி அகலமும் 6.5 அடி உயரமும் கொண்டது.

ஆஞ்சநேயர் சந்நிதி

நாகராஜா கோவிலின் வடக்குச் சுவரில் தெற்கு நோக்கி ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. ஆஞ்சனேயர் சிலை ஒரு காலை மடக்கி அமர்ந்திருப்பதாக உள்ளது. இரு கைகளில் இசைக்கருவிகளும் தலையில் கிரீடமும் கழுத்தில் மாலைகளும் உள்ளன.

துர்கையம்மன் சந்நிதி

நாகராஜா கோவிலின் வடக்கு வாயில் வழியாக செல்கையில் மேற்கு திசையில் கிழக்கு நோக்கி மூன்று சந்நிதிகள் உள்ளன அவற்றில் வடக்கில் துர்க்கையம்மன் சந்நிதி உள்ளது. நாகரம்மன் கோவிலை தோற்றுவித்து வணங்கி வந்த கன்னிமேட்டுச் சேரிப் பெண்ணின் சமாதியின் மேல் இச்சந்நிதி கட்டப்பட்டுள்ளதாக வாய்மொழித் தொன்மம் உள்ளது. துர்க்கையம்மன் சந்நிதி 5.3 அடி நீளமும் 4 அடி அகலமும் 10 அடி உயரமும் கொண்டது. துர்க்கையம்மன் சிலை சங்கு சக்கரம் தாங்கி திருமாலின் பெண் வடிவமாக காட்சியளிக்கிறது.

பாலமுருகன் சந்நிதி

துர்கையம்மன் சந்நிதிக்கு தெற்கில் கிழக்கு நோக்கி பாலமுருகன் சந்நிதி உள்ளது. இங்கு முருகன் சிலை வாகனமான மயில் இல்லாமல் வேலுடன் காட்சியளிக்கிறார். முருகன் சிலையுடன் மயில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது மயிலின் தலை உடைந்து விழ அதை குளத்தில் போட்டு விட்டனர் என்றும் அதற்கு காரணமாக நாகத்திற்கு எதிரியான மயில் கோவிலில் இருக்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது. சந்நிதியின் உள்ளே அமர்ந்த நிலையில் விநாயகர் சிலையும் உள்ளது. பாலமுருகன் சந்நிதி 6 அடி நீளமும் 6.8 அடி அகலமும் கொண்டது. சந்நிதியின் வெளி முகப்பில் வீர மகேஸ்வரரும் வீரபாகுவும் வாயில் காவலர்களாக உள்ளனர். 1979-ம் ஆண்டு செங்கோட முதலியார் என்பவரால் இந்த சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

இடும்பன் சந்நிதி
கிருஷ்ணன் சந்நிதி

முருகன் சந்நிதிக்கு தெற்கில் செவ்வக வடிவ பீடத்தில் புல்லங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலை கிழக்கு நோக்கி உள்ளது. கிருஷ்ணனின் சிலை மயிற்பீலி கொண்ட கிரீடத்துடன் காதுகளில் குண்டலமும் கழுத்தில் மாலையுடனும் உள்ளது. விரிந்த குடையின் கீழ் மூன்றடி உயரத்தில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

புஷ்பக்குளம்

நாகராஜா கோவிலின் வடப்புறம் துர்க்கை சந்நிதிக்கு பின்புறம் புஷ்பகுளம் என்று அழைக்கப்படும் சிறியகுளம் உள்ளது. குளத்தில் கோவில் அர்ச்சகர்களான நம்பூதிரிகள் மற்றும் தந்திரிகள் மட்டுமே நீராட அனுமதி உள்ளது. பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

அர்ச்சகர் வீடு

புஷ்பக்குளத்தின் மேற்குப்பக்கம் கிழக்கு நோக்கி அர்ச்சகர் வீடு உள்ளது. 1960-ம் ஆண்டுக்கு பின்னரே அர்ச்சகர் வீடு மற்றும் துர்க்கை, பாலமுருகன், கிருஷ்ணன் சந்நிதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு முன் இப்பகுதி நந்தவனமாக இருந்துள்ளது.

வெளித் திருச்சுற்று

முன்பக்க வாயில் வழியாக உள்ளே சென்றால் வெளிப்பிரகாரம் என்று அழைக்கப்படும் வெளித்திருச்சுற்று காணப்படுகிறது. நாகராஜா கோவிலின் முன்புள்ள இரண்டு வாயில்களில் நாகராஜா சந்நிதிக்கு முன்னுள்ள வாயில் உள்ளே செல்வதற்கும் அனந்த கிருஷ்ணன் சந்நிதிக்கு முன்னுள்ள வாயில் வெளியே வருவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. முன்வாயில் வழியாக உள்ளே செல்கையில் காணப்படும் வெளிப்பிரகாரத்தின் வலது பக்கம் திண்ணை அமைந்துள்ளது. திண்ணையில் விளக்குப்பாவை சிற்பங்களுடன் கூடிய கல்தூண்கள் உள்ளன.

மணிக்கூண்டு

வெளிப் பிரகாரத்தில் கோயிலுக்கு முன்பாக மணிக்கூண்டு உள்ளது. இது ஓடு வேயப்பட்ட கூரை மற்றும் ஆறு கல்தூண்களுடன் உள்ளது. ஓட்டுக் கூரையின் உச்சியில் கும்பம் உள்ளது. மணிக்கூண்டின் மேற்பகுதியில் இரு தூண்கள் நடப்பட்டு பெரிய மணி தொங்க விடப்பட்டுள்ளது. சுமார் 1.5 அடி உயரமுள்ள மரத்தில் செய்யப்பட்ட நாகச்சிற்பம் இங்கு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திருவிதாங்கூர் அரச குடும்பத்தால் கோவிலுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது முன்னர் திருவிழா காலங்களில் யானைகளை நிறுத்தி வைக்கப் பயன்படுடத்தப்பட்டுள்ளதால் யானைக் குடில் என்றும் அழைக்கப்படுகிறது.

கிருஷ்ணன் சந்நிதி
கொடிமரம்

நாகராஜா கோவில் வெளிப் பிரகாரத்தில் மணிக்கூண்டிற்குத் தெற்குப்பக்கம் அனந்தகிருஷ்ணன் சந்நிதிக்கு முன்பாக கொடிமரம் உள்ளது. கொடிமரம் தேக்கு மரத்தில் செய்யப்பட்டு பித்தளைத் தகட்டால் பொதியப்பட்டுள்ளது. கொடிமரத்தின் அடிபாகம் தாமரைப் பூ கவிழ்த்து வைக்கப்பட்ட வடிவில் உள்ளது. பீடம் அடியிலிருந்து உபானம், உபபீடம், பத்மஜகதி, விருத்த குமுதம், கபோதகம், பத்ம பீடம் என்னும் அமைப்பில் உள்ளது. பீடத்தில் வேதிகை இல்லை. நாற்பது அடி உயர கொடிமரத்தின் உச்சியில் ஆமை உருவம் மற்றும் அதன் அடியில் சதுரமான வடிவில் காணப்படும் பகுதியில் நான்கு மணிகள் உள்ளன மேலும் அதன் அடியில் சாய்வாகக் காணப்படும் நீண்ட கம்புப் பகுதியில் ஒரு மணி உள்ளது. கொடிமரம் ஏப்ரல் 24,1950 அன்று நிறுவப்பட்டுள்ளது.

பலிபீடம்

வெளிப் பிரகார கொடிமரத்தை அடுத்து கொடிமர அரணுக்குள் பலிபீடம் உள்ளது. பலிபீடம் கொடிமரபீடத்தை போன்ற தோற்றத்தில் அதைவிட சிறியதாக பித்தளை தகட்டால் பொதியப்பட்டு உள்ளது.

நாகமணி பூதத்தான் சந்நிதி

நாகராஜா கோவில் தெற்கு வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி நாகமணி பூதத்தான் சந்நிதி உள்ளது. காவல் தெய்வமான நாகமணி பூதத்தான் சிலை மூன்று அடி உயரத்தில் கையில் கதையுடன் ஐந்து தலை நாகத்தின் கீழ் நின்ற கோலத்தில் உள்ளது. கோவில் மேற்பகுதி விமானத்துடன் நாகமணி பூதத்தானின் உருவமும் காவல் தெய்வங்களின் உருவங்களுடனும் காணப்படுகிறது. நாகராஜா அனந்த கிருஷ்ணனாக மாற்றம் பெற்ற காலத்தில் நாகமணி பூதத்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டு தனி சந்நிதி உருவாக்கப்பட்டுள்ளது. கோபுரம் 1992-ல் அமைக்கப்பட்டுள்ளது.

வாகன அறைகள்

நாகராஜா கோவில் வெளிப்பிரகாரத்தில் மூன்று வாகன அறைகள் உள்ளன. தெற்கு பெரிய வாயிலை ஒட்டி கிழக்குப்பக்க அறையில் பல்லக்கு வாகனங்கள் உள்ளன.வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள அறையில் நெருப்புக் கோழி வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம் என நான்கு வாகனங்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்தின் வடகிழக்கில் உள்ள வாகன அறையில் மூன்று தேர்வாகனங்கள்(இந்திர வாகனம்), மூஞ்சுறு வாகனம், குதிரை வாகனம், புஷ்ப வாகனம் மற்றும் செடி வாகனம் ஆகியன உள்ளன.

நந்தவனம்

வெளிபிரகாரத்தின் மேற்கு வாயிலில் குளத்துடன் கூடிய நந்தவனம் ஒன்று உள்ளது. மரங்கள் சூழ்ந்த குளக்கரையைச் சுற்றி பல நாகச்சிற்பங்கள் உள்ளன. குளத்தின் நடுவில் ஆவுடையாரின் மேல் அமைந்த ஐந்து தலை நாகச் சிலை உள்ளது. விரிந்த பாம்பின் படத்தினுள் ஒரு மனித உருவம் உள்ளது. குளத்தின் தென்புறம் சுமார் ஒன்றரை அடி உயர கற்பீடத்தில் கிழக்கு நோக்கி ஐந்து நாகச்சிலைகள் உள்ளன.

அரசமரத்தடி விநாயகர்
சாஸ்தா சந்நிதி

வடக்கு வெளிதிருச்சுற்றில் கான்கிரீட்டில் கட்டப்பட்டு ஓட்டு கூரை கொண்ட சிறிய சாஸ்தா கோவில் உள்ளது. கூரையின் மேல் கும்ப கலசம் உள்ளது. வாயிலில் இரு துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. சந்நிதி முன் ஒரு அர்த்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு முன்பிருந்த யானைச் சிலை அகற்றப்பட்டு வேலைப்பாடுகளுடைய ஆறு கல்தூண்களுடன் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கல்தூண்களின் மேற்பகுதியில் வாழைப்பூ வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. மண்டப மேற்பகுதி பூ வேலைபாடுகளுடன் உள்ளது.

சாஸ்தாகோவில் நாகராஜா கோவிலின் தோற்றம் முதலே உள்ளது. சன்னதியின் முன் யானை சிற்பங்கள் இருந்துள்ளன. சமண சமய சாஸ்தாவாக இருந்து பின்னர் அதிகப்படியான சபரிமலை அய்யப்ப பக்தர்களின் வருகையால் தர்ம சாஸ்தாவாக மாறியுள்ளது. கருவறை புதுப்பிக்கப்பட்டு யானைச் சிலைகள் அகற்றப்பட்டு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

கற்பலகைகள்

கோவில் முன்பாக வெளிபிரகாரத்தில் ஐந்து கற்பலகைகள் கல்வெட்டுகளுடன் உள்ளன. இவற்றில் நான்கு ஒரே அளவுடையது ஒன்று பிற கற்பலகைகளைவிட சற்று உயரம் குறைவாக உள்ளது.

மன்னர் வென்று மண் கொண்ட பூதல ஸ்ரீ வீரஸ்ரீ உதய மார்த்தாண்ட வர்மா, சமண சமயப்பெரியோர்களான இருவர் கேரளன் நாராயணன் குணவீர பண்டிதன், சீவகாருடையான் கமலவாகன பண்டிதன், தம்பிரான்குட்டி சடையன், மாளுவநம்பி முதலியோர் நாகராஜா கோவிலுக்குச் செய்த கொடைகளும் திருப்பணிகளும் இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் நாகராஜா கோவில் சமணப்பள்ளியாக இருந்ததன் சான்றாக உள்ளன.

நாகத்துவாரபாலகர்கள்

கிழக்கு வெளிப்பிராகாரத்தில் நாகராஜா சன்னதி முன் அர்த்தமண்டப நுழைவாயிலில் கல்லில் செய்யப்பட்டு பித்தளை அங்கியால் போர்த்தப்பட்ட நாகதுவாரபாலகர் சிலைகள் உள்ளன. இடதுபுறம் உள்ள சிறிய சிலை பார்சுவ நாதரின் காவல் யக்‌ஷன் தர்னேந்திரனான நாகராஜாவாகவும் வலப்புறம் அமைந்துள்ள அளவில் பெரிய சிலை பார்சுவ நாதரின் காவல் யக்‌ஷியும் தர்னேந்திரனின் மனைவியுமான பத்மாவதியுமாகவும் கொள்ளப்படுகிறது. பித்தளை அங்கிகள் 2006-ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது அணிவிக்கப்பட்டுள்ளன.

நாகமணி பூதத்தான் சந்நிதி

வெளிப்பிரகார கிழக்குச் சுற்றில் நாகராஜா சந்நிதி முன் தரையில் படுத்து வணங்கும் மனிதனின் சிற்பம் உள்ளது. இடுப்பில் வேட்டிக் கட்டி இடது பக்கம் கொண்டை முடியப்பட்டு மூன்று வளையகல்களுடன் கைகள் முன்பக்கம் நீட்டி வணங்கும் விதமாக செதுக்கப்பட்டுள்ளது.

உள் திருச்சுற்று

நாகராஜா கோவில் கல்லால் கட்டப்பட்டது. உள் திருச்சுற்று அல்லது உள் பிரகாரத்தின் கிழக்கில் இரண்டு வடக்கில் ஒன்று தெற்கில் ஒன்று என நான்கு வாயில்கள் உள்ளன. தென்கு வாயில் திருவிழா காலங்களில் மட்டுமே திறக்கப்படும் வடக்கு வாயில் அர்சகர்கள் புஷ்பகுளத்திலிருந்து நீர் எடுத்து வரவும் பக்தர்கள் வெளித்திருச்சுற்றில் உள்ள துர்க்கை, பாலமுருகன், கிருஷ்ணன் சன்னதிகளுக்கு செல்லவும் பயன்படுத்தப்படுகிறது. உள்த்திருச்சுற்றில் நாகராஜா சந்நிதியிலிருந்து இடப்புறமாக சுற்றி வருகையில் இடதுபக்கம் சிற்ப வேலைபாடுகள் கொண்ட தூண்களுடன் திண்ணை வடிவில் தியான மண்டபம் உள்ளது. உள்திருச்சுற்றின் தென்கிழக்கு மூலையில் மடைப்பள்ளி காணப்படுகிறது. இவ்வறை கோவில் பிரசாதம் தயாரிக்கும் சமயலறையாக செயல்படுகிறது.

கன்னிமூலை கணபதி சந்நிதி

உள்புரகாரத்தின் தென்மேற்கு மூலையில் 6.5 அடி நீள அகலங்களுடன் 7 அடி உயரத்தில் கணபதி சந்நிதி காணப்படுகிறது. கருவறையில் கணபதி, சிவலிங்கம் மற்றும் வெண்ணெய் கிருஷ்ணன் சிலைகள் உள்ளன.

உற்சவ மூர்த்தி சந்நிதி

கன்னிமூலை விநாயகர் கருவறைக்கு வடக்கே கிட்டதட்ட கன்னிமூலை விநாயகர் கருவறை அமைப்பில் உற்சவ மூர்த்தி சந்நிதி உள்ளது. வேட்டைக் கிருஷ்ணன், வேட்டையம்மன், சக்கரத்தாழ்வார், விநாயகர் ஆகிய்யோரின் உற்சவ மூர்த்தி சிலைகள் உள்ளன. திருவிழாக் காலங்களில் வாகனங்கள் மேல் ஊர்வலம் வர பயன்படுத்தபடுகின்றன. உள்திருச்சுற்றில் வடக்கு சுற்றில் ஓய்வு அறை மற்றும் மின் அறை உள்ளன. நாகராஜா சந்நிதி முன் அர்த்த மண்டபத்தின் வலது பக்கம் கிணறு உள்ளது.

நாகராஜா கோவில் தெற்கு உள்வாயில்

நாகராஜா கருவறை முன்புள்ள அர்த்தமண்டபம் நடுவில் கம்பிக் குழாய்கள் அமைக்கப்பட்டு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இருபக்கமும் பெரிய உண்டியல்கள் உள்ளன. வலது பக்கம் கண் இல்லாத குத்துவிளக்கு மற்றும் ஆமை-நாக விளக்கு ஒன்றும் உள்ளன. ஆமை-நாகவிளக்கில் ஆமை நான்கு கால்களையும் தலையையும் வெளியே நீட்டி உள்ளது, அதன் மேல் கண்விளக்கு ஐந்து அடுக்குகளாக உள்ளது, அதன் மேல் ஐந்து தலை நாகம் படமெடுத்த நிலையில் உள்ளது. அனந்த கிருஷ்ணன் கருவறை முன்பும் அர்த்தமண்டபம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடுவில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

கருவறைகள்

நாகராஜ கோவிலில் நாகராஜா, சிவபெருமான் மற்றும் அனந்தகிருஷ்ணன் ஆகிய மூல தெய்வங்களுக்கான மூன்று கருவறைகள் உள்ளன.

நாகராஜா கருவறை

நாகராஜர் கருவறை மண்சுவரால் ஆனது; மூங்கில் கம்புகளின் மேல் ஓலை வேயப்பட்ட கூரை கொண்டது. காலத்தால் முந்திய நாகராஜா கருவறை 6 அடி நீளம் 5 அடி அகலமும் 6.5 அடி உயரமும் கொண்டது. நாகராஜா கோவில் மூலவரான நாகருக்கு கருவறை முன்பு பலிபீடம், வாகனம் இல்லை. நாகராஜா சிலை நான்கு தலைகள் கொண்ட கற்சிலை ஐந்தாவது தலை உடைந்த நிலையில் உள்ளது. ஐந்து தலைகள் கொண்ட உலோக அங்கியால் போர்த்தப்பட்டுள்ள மூலவர் சிலை சுயம்பு சிலை என கூறப்படுகிறது.

சிவன் கருவறை

நாகராஜா கருவறைக்கு தெற்காக சிவன் கருவறை உள்ளது. இக்கருவறை 19-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. கருவறை 6.25 அடி நீளமும் 6 அடி அகலமும் 6.5 அடி உயரமும் கொண்டது. சிவலிங்கம் பரம பீடம், விஷ்ணு பீடம் உள்ளபட அரை அடி உயரத்தில் ஆவுடையாரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவன் கருவறை முன்பு நந்தி சிலை உள்ளது.

நாகராஜா கருவறை(மண்சுவர், ஓலைக்கூரை)
அனந்த கிருஷ்ணன் கருவறை

சிவன் கருவறைக்கு தெற்கே அனந்த கிருஷ்ணன் கருவறை உள்ளது. 16-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கருவறை 5.75 அடி நீளமும் 7.25 அடி அகலமும் 7.25 அடி உயரமும் கொண்டது. கருவறையில் அனந்தகிருஷ்ணன் சிலையும் இருபுறங்களில் பாமா மற்றும் ருக்மணி சிற்பங்களும் உள்ளன. கருவறையின் இடது பக்கம் உள்ள சிறிய அறையில் வேட்டைக் கிருஷ்ணன், வேட்டையம்மன், சக்கரத்தாழ்வார், விநாயகர் உலோகச் சிற்பங்கள் உள்ளன. தைத்திருவிழாவின் எட்டாவது நாள் பரிவேட்டையின் போது வேட்டைக் கிருஷ்ணன் சிலை ஊர்வலமாக கொண்டுச் செல்லப்படும்.

கட்டிட அமைப்பு

நாகராஜா கோவில் மண்டளியாக முதலில் கட்டப்பட்டு பின்னர் கற்றளியாக மாற்றப்பட்ட கோவில். நாகராஜா சந்நிதி இப்போதும் மண்டளியாகவே உள்ளது. கோவில் உள்கட்டமைப்பு திராவிட கட்டட கலைக்கு சான்றாக உள்ளது. கல்லால் ஆன கோவில் விமானம் அதிட்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்னும் ஆறு பகுதிகளை கொண்டுள்ளது.

அனந்த கிருஷ்ணன் கருவறை

நாகராஜா கோவில் அனந்த கிருஷ்ணன் கருவறை அதிஷ்டானம் உபானம், ஜகதி, முப்படைக் குமுதம், கண்டம், பட்டிகை, பத்ம வேதிகை ஆகிய அங்கங்கள் கொண்டு சுமார் 4.5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எளிமையான ஜகதிப்பட்டை மேலுள்ள முப்பட்டை வடிவிலுள்ள குமுதப்பட்டையில் அன்னத்தின் தோகை வடிவ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. குமுதப் பட்டையின் மேலுள்ள கண்டவரி மேலும் கீழும் எளிய கம்பு என்னும் சுற்றுறுப்பு மற்றும் பூதங்களின் தலையை போன்ற சிற்பங்களுடன் உள்ளது.

அதிஷ்டானத்தின் மேல் மட்டத்திலிருந்து உத்திரத்தின் அடிமட்டம் வரை உள்ள கருவறை சுவரைச் சுற்றி தெற்கில் இரண்டு மேற்கில் ஒன்று வடக்கில் இரண்டு என ஐந்து தேவகோட்ட மாடங்கள்(கோஷ்டபஞ்சரம்) சிற்ப வேலைபாடுகளுடன் உள்ளன. கோஷ்ட பஞ்சர மாடங்கள் தேரின் அமைப்பைப் போன்று புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. மாடங்களின் பக்கங்களில் அரைத்தூண்களும் நடுவில் கால்தூண்களும் உள்ளன. கால், உடல், இடைக்கட்டு, கலசம், தாடி, குடம், கண்டம், பத்மம், பலகை, வீரகண்டம், போதிகை ஆகிய உறுப்புகளைக் கொண்ட தூண்கள் தெற்கில் பத்து மேற்கில் ஆறு வடக்கில் பத்து என மொத்தம் இருபத்தியாறு உள்ளன. தூண்களின் அடியில் அன்னவால் கருக்கு புடைப்புச் சிற்பமாக உள்ளது. இத்தூண்களில் பின்புற சுவரின் ஓரமுள்ள இரு தூண்களும் முழுத்தூண்களாக காணப்படுகின்றன. போதிகை குலை தள்ளிய பூ தொங்கியிருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனந்தகிருஷ்ணன் கருவறை (தென்மேற்கு மூலை)

தூண்களின் போதிகையின் மேல் பிரஸ்தரம், மஞ்சம், கபோதகம் என அழைக்கப்படும் தளவரிசைக் கூரைப்பகுதி உள்ளது. கூரைப்பகுதி உத்திரம், கம்பு, கபோதகம், யாளிவரி என்னும் உறுப்புகள் கொண்டுள்ளது. பிரஸ்தரத்தின் மேலே தெற்கும் மேற்கும் வடக்கும் உள்ள கர்ணகூடுகளில் நரசிம்மன், சாஸ்தா, பத்மாவதி, முக்குடை நாதர்கள் மற்றும் தேர் வடிவங்கள் உள்ளன. மேற்கே உள்ள மூன்று கர்ண கூடுகளில் இரு ஓரங்களில் கோடிக் கருக்கும் நடுவில் மையப் பானைக் கருக்கும் செதுக்கப்பட்டுள்ளன. விமானத்தின் மேற்பகுதி சிகரம் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது.

கிழக்கே இந்திரன் ஐராவததில் இடக்காலை மடித்து வலக்காலை தொங்க விட்டு கையில் கத்தி வஜ்ரம் ஆகிய ஆயுதங்கள் தாங்கி அபய வரத முத்திரைகளுடன் அமர்ந்துள்ள சிற்பம் உள்ளது. தெற்கில் தட்சிணா மூர்த்தி மேற்கில் நரசிம்மர் வடக்கில் பிரம்மா ஆகிய சிற்பங்கள் உள்ளன. நான்கு மூலைகளிலும் இரண்டு சிங்க யாளிகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளது. சிகரத்தின் உச்சியில் பதுமம் கவிழ்க்கபட்டது போன்ற வடிவத்தின் மேலே கலசம் அமைந்துள்ளது.

அனந்த கிருஷ்ணன் கருவறையின் கூரை மேல் தங்க முலாம் பூசப்படாத வட்ட வடிவிலான கன்னி மூலை விநாயகர் கருவறைச் சிகரம் காணப்படுகிறது. விநாயகர் சிகரத்தில் அமர்ந்த மற்றும் நின்ற கோலத்தில் விநாயகர் சிற்பங்கள் உள்ளன. அதன் மேல் பகுதியில் கர்ணகூடு வேலைபாடுகளும் உச்சியில் பூதத்தின் தலையும் செதுக்கப்பட்டுள்ளன. சிகரத்தின் மேல் கலசம் உள்ளது.

தியான மண்டபம்
நாகமணி பூதத்தான் கருவறை

நாகமணி பூதத்தான் சந்நிதி கருவறை கோபுர அமைப்பு கொண்ட முன்மண்டபத்துடன் சிறிய கோவில் வடிவில் உள்ளது. கோபுரத்தின் மேற்பகுதியில் நடுவே மாடம் அமைக்கப்பட்டு மாடத்தில் நாகமணி பூதத்தான் சுதைச் சிற்ப்பம் அமைக்கப்பட்டுள்ளது. இரு ஓரங்களில் பூதங்களும் நான்கு முறமும் சிறு உருவங்களும் காணப்படுகிறது. நடு மாடத்தின் மேல் தாமரை பீடம் ஆமைக்கப்பட்டு அதன் மேல் படமெடுத்த பாம்பின் உருவமும் அதன் மேல் பூதத்தலையும் உச்சியில் கலசமும் உள்ளன.

இடும்பன் கருவறை

இடும்பன் சந்நிதி எளிய விமானம் கொண்டது. கருவறை மேல் நான்கு புறமும் காவலர் சிற்பங்கள் வலக்கையில் ஆயுதத்துடனும் இடக்கையில் கதையுடனும் ருத்திராட்ச மாலை, பூணூல் அணிந்து உள்ளன. விநாயகர் அமர்ந்த நிலையிலும் முருகன் நின்ற நிலையிலும் அபய வரத முத்திரைகளுடன் உள்ளனர். மயில் காவடி ஏந்திய பக்தரின் உருவம் உள்ளது.

பாலமுருகன் கருவறை

பாலமுருகன் சந்நிதி எளிய சிறிய விமானத்துடன் காணப்படுகிறது. நான்கு பக்க சுவர்களில் வாசல் வடிவில் கோஷ்ட பஞ்சரங்கள் உள்ளன. தென்புறம் கணபதி மற்றும் சாஸ்தா சிற்பங்கள் காணப்படுகிறது. சாஸ்தாவின் இருபுறமும் தொங்கும் விளக்குகளும் கணபதியில் இருபுறமும் குத்து விளக்குகளும் உள்ளன. கருவறை மேற்பகுதியில் முருகன் நின்ற கோலத்தில் அபயமுத்திரையுடன் உள்ள சிற்பம் மற்றும் கஜலட்சுமி சிற்பம் உள்ளன. கூரையின் முன்புறம் இடது ஓரம் திருமால் ஒரு தேவியுடன் நாக குடையினுள் அமர்ந்ந்திருக்கும் சிற்பமும் வலது ஓரம் சிவன் சக்தி, விநாயகர், முருகனுடன் அமர்ந்திருக்கும் சிற்பமும் நடுவில் மாடத்தில் முருகன் மற்றும் விநாயகர் சிற்பங்களும் உள்ளன. பின்பக்கம் ஓரங்களில் தாமரைப்பூவின் மேல் கையில் அபய முத்திரையுடன் தாமரை மலர்கள் ஏந்தி அமர்ந்துள்ள லட்சுமி சிற்பமும் நாகக் குடையின் கீழ் கிரீடம் அணிந்த சக்தி சிற்பமும் உள்ளன. மாடத்தின் மேல் பூதத்தலைகளும் உச்சியில் செம்பு கலசமும் அமைந்துள்ளன.

துர்ககை சந்நிதி
துர்க்கை கருவறை

துர்க்கையம்மன் கருவறை சிறிதாக வேலைபாடுகளுடன் மூன்று தளங்களை கொண்ட அமைப்பில் உள்ளது. கிழக்கில் இந்திரன், தெற்கில் தட்சணா மூர்த்தி, மேற்கில் நரசிம்மன், வடக்கில் பிரம்மா ஆகியோரின் சுதை சிற்பங்கள் அமைந்துள்ளது. நான்கு மூலைகளிலும் கைகளில் அஞ்சலி முத்திரையுடன் இடக்கால் மடித்து வலக்கால் தொங்க விட்ட நிலையில் அமர்ந்திருக்கும் பெண்கள் சிற்பங்கள் உள்ளன. இச்சிலைகளுக்கு நடுவே இந்திரன், தட்சிணா மூர்த்தி, நரசிம்மன் மற்றும் பிரம்ம ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. மாடங்களின் மேலே பூதத்தின் தலையும் உச்சியில் கலசமும் காணப்படுகின்றன.

சுற்றுச்சுவர்

நாகராஜா கோவில் சுற்றுச்சுவர் வரிக்கற்களால் கட்டப்பட்டு அதன் மேல் ஏராளம் நாகச்சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. நாகச் சிற்பங்கள் படமெடுத்த வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. படமெடுத்த நாகங்கள் சிலவற்றில் நாகக் குடைக்குள் சிவலிங்கம் ஆள் உருவம் என வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கோபுரங்கள்

நாகராஜா கோவில் கோபுரம் இரு தளங்கள் கொண்ட கேரள பாணியில் ஓடு வேயப்பட்ட அரண்மனை வாயில் தோற்றம் கொண்டது. இரு வாயில்கள் கொண்ட முன்பகுதியில் உள்ள திண்ணையில் ஏழு தூண்கள் உள்ளன. இரண்டாம் தளத்தில் மூன்று மாடங்கள் நீண்டு உள்ளன. இடது மாடத்தில் காவல் தெய்வம் நாகமணி பூதத்தான் சிற்பமும் நடு மாடத்தில் கிருஷ்ணன் தேவியருடன் நின்றிருக்கும் சிற்பமும் வலது மாடத்தில் படமெடுத்த ஐந்து தலை நாகச் சிற்பமும் உள்ளன. மூன்று மாடங்களுக்கு நடுவே வலது பக்கம் வெண்சங்கு மற்றும் இடது பக்கம் சக்கரமும் காணப்படுகின்றன.

வெளித்திருச்சுற்று நாகராஜா சந்நிதி வாயில் கோபுரம் பிற்காலத்தில் 1992 - ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் நடுவில் படமெடுத்த நிலையில் ஐந்து தலை நாகச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் அடிப் பகுதியில் படமெடுத்தப் பாம்பினுள் அபய வரத முத்திரைகளுடன் ஓர் உருவம் அகாணப்படுகிறது. கோபுரத்தில் கர்ணக்கூடு, பூவேலைபாடுகள், பூதத்தலைகள் மற்றும் உச்சியில் படமெடுத்த ஐந்து தலை நாகம் ஆகியவை உள்ளன.

முகப்பு கோபுரம்

நாகராஜா வாசல் கோபுரத்தின் இடது பக்கம் 1992-ல் அமைக்கப்பட்ட அனந்த கிருஷ்ணன் வாயில் கோபுரம் உள்ளது. கோபுரத்தின் நடுவில் ஐந்து தலை நாகக் குடைக்குள் கிருஷ்ணன் சிற்பமும் இருபுறம் மூன்று தலை நாகக் குடைக்குள் பாமா ருக்குமணி சிற்பங்களும் உள்ளன. மூவருக்கும் மேலுள்ள திருவாசியின் உச்சியில் கோரைப்பல் கொண்ட பூதத்தலை உள்ளது. கோபுர உச்சியில் படமெடுத்த ஐந்து நாகச்சிலைகள் உள்ளன. கோபுரம் கர்ண கூடுகளும் தேரின் அமைப்பும் சித்தர வேலை பாடுகளும் கொண்டதாக அமைந்துள்ளது.

நாகராஜா கோவில் வடக்கு வாசல் கோபுரம் மூன்று தளங்களைக் கொண்டது. கோபுரத்தின் அடிப்பகுதியில் முனிவர், பாவை விளக்கு, அடியவர் ஆகிய சிற்பங்களும் முதல் தளத்தில் இரு பூதங்களின் சிற்பங்களும் இரண்டாம் மூன்றாம் தளங்களில் தெய்வங்களின் சிற்பங்களும் உள்ளன. உச்சியில் பூதத்தின் தலை உள்ளது.

கோவில் தெற்கு வாசல் கோபுரம் உச்சியில் மூன்று மாடங்களுடன் அமைந்துள்ளது. நடுமாடத்தில் கிருஷ்ணன் ஐந்து தலை நாகக் குடையின் அடியிலும் தேவிகள் மூன்று தலை நாகக் குடையின் அடியிலும் உள்ள சிற்பங்கள் காணப்படுகின்றன.

மகாமேரு மாளிகை என அழைக்கப்படும் நாகராஜா தெற்கு வெளிப்புற வாயில் இருபுறம் கல்லாலும் மேற்பகுதி மரத்தாலும் ஆனது. கேரள பாணி கட்டட அமைப்பில் ஓட்டுக் கூரை, சாரளங்காளுடன் வாயிலும் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது.

நாகராஜா கோவில் கிழக்கு வெளி வாயில் மரச்சட்டங்கள் மேல் ஓட்டு கூரையுடன் சிறு கோபுரம் போன்ற அமைப்பு கொண்டது. கேரள பாணியிலான இந்த கோபுர அமைப்பின் இருபுறமும் கலசம் போன்ற உருவம் உள்ளது.

கிழக்கு பிரதான வாயில்

சிற்பங்கள்

கருவறைச் சிற்பங்கள்

அனந்தகிருஷ்ணன் அனந்தகிருஷ்ணன் கருவறையில் இருக்கும் அனந்தகிருஷ்ணன் சிலை 23 - ஆவது சமண சமயத் தீர்தங்கரரான பார்சுவநாதரின் யகூஷன் தர்னேந்திரனான நாகராஜா சிலை என்று முனைவர் சிவ. விவேகானந்தன் கூறுகிறார். நாகராஜா சந்நிதியாக இருந்து 16 - ஆம் நூற்றாண்டிற்கு பின் அனந்தகிருஷ்ணன் சந்நிதியாக மாறியதாக ஆய்வாளர் செந்தீ நடராசன் கூறுகிறார். அனந்தகிருஷ்ணன் சிலை கடு சர்கரையால் செய்யப்பட்டது. மூன்றடி உயரம் மற்றும் முக்கால் அடி அகலம் கொண்டது. கடுச் சர்கரையால் செய்யப்பட்ட சிற்பம் என்பதால் சிலைக்கு அபிஷேகம் இல்லை. அனந்தகிருஷ்ணன் ஆடையின்றி நிர்வாணமாக கிரீட மகுடம் அபய முத்திரையுடன் நின்ற நிலையில் நாகக் குடைக்குள் உள்ளார். சிலைக்கு அரைஞாண் பூணப்பட்டுள்ளதாக தொல்லியல் அறிஞர் எஸ். ராமச்சந்திரன் கூறுகிறார். மனித உருவ சிற்பத்தின் இடையிலிருந்து நாகம் மேலெழுந்து தலை மேல் படம் விரித்து நிற்கிறது. அனந்தகிருஷ்ணன் சிற்பத்தின் இருபுறமும் மூன்றடி உயரத்தில் பாமா மற்றும் ருக்குமணி சிற்பங்கள் உள்ளன. இவை பத்மாவதி மற்றும் அம்பிகா சிற்பங்கள் என்று சிவ. விவேகானந்தன் கூறுகிறார்.

நாகர்: நாகராஜா சந்நிதியில் ஐந்து தலைகள் கொண்ட நாகர் சிலை உள்ளது. ஒரு தலை உடைந்த நிலையில் உள்ளது. இச்சிலை சுயம்புவாக தோன்றியதாக பரவலாக அறியப்படுகிறது.

சிவலிங்கம்: நாகராஜா கோவில் சிவலிங்கம் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் மற்றும் ருத்ர பாகம் சேர்த்து அரை அடி உயரத்தில் உள்ளது. பூஜா பாகம் மட்டும் சுமார் 1.25 அங்குலம் உயரம் கொண்டது. கருவறையின் முன் ஒரு அடி உயரமுள்ள நந்தி சிற்பம் அமர்ந்த நிலையில் உள்ளது.

கன்னி மூலை விநாயகர்: ஒன்றரை அடி உயரம் கொண்ட விநாயகர் சிற்பம் நான்கு கைகள் கொண்டது. சிலையின் வலது மேற் கரத்தில் சங்கும் வலது கீழ்க்கரத்தில் அங்குசமும் இடது மேற்கரத்தில் மோதகமும் இடது கீழ்கரத்தில் அபய முத்திரையும் என வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் கருவறையில் 2.25 அடி உயரத்தில் நாகக்குடையின் கீழ் இருக்கும் லிங்கச் சிற்பம் காணப்படுகிறது. சிவலிங்கச் சிற்பம் 3.25 அகல பீடத்தின் மீது உள்ளது. விநாயகர் கருவறையில் வெண்ணைக் கிருஷ்ணன் சிற்பமும் உள்ளது.

இடும்பன் சிலை

துர்க்கை: நாகராஜா கோவில் துர்க்கையம்மன் சிற்பம் நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் காணப்படுகிறது. வலது வெளிப்புற கையில் சக்கரமும் இடது வெளிப்புற கையில் சங்கும் உள்ளன. உள்புற கைகளில் இடது கை தொங்கிய நிலையிலும் வலது கை அபய முத்திரையுடனும் உள்ளன. துர்கையின் சிங்க வாகனம் சந்நிதி முன் படுத்த நிலையில் உள்ளது.

பாலமுருகன்: நாகராஜா கோவில் பாலமுருகன் சிலை மூன்றடி உயர நின்ற கோலச் சிற்பம். கரண்ட மகுடத்துடன் வலது கையில் அபய முத்திரையும் இடது கையில் வரத முத்திரையும் தாங்கியபடி உள்ளது. பாலமுருகன் சந்நிதியில் ராஜ கணபதி சிலை ஒன்று காணப்படுகிறது. கணபதியின் கரங்கள் உடைந்த தந்தம், சங்கு மற்றும் பாசாங்குசம் தாங்கியபடி உள்ளன. பாலமுருகன் சந்நிதி முன் 3.5 அடி உயரமுடைய வீரபாகு மற்றும் வீரமகேசுவர் சிலைகள் உள்ளன.

கிருஷ்ணன்: நீல நிற குடையின் கீழ் இடக்காலை சாய்வாக மடக்கி நின்ற கோலத்தில் குழல் ஊதும் நிலையில் கிருஷ்ணன் சிலை உள்ளது. தலையில் மயில் பீலியுடன் கிரீடம் காணப்படுகிறது. மூன்றடி உயரத்தில் உள்ள இச்சிற்பத்தின் காதுகளில் குண்டலம் கழுத்தில் மாலைகள் கால்களில் சலங்கை ஆகியவை காணப்படுகின்றன.

இடும்பன்: நின்ற கோலத்தில் முறுக்கு மீசையும் விரித்த சடையுமாக இடும்பன் சிலை காணப்படுகிறது. இடும்பன் இரண்டு பக்கங்களிலும் பாரம் தூக்கப்பட்ட கம்பை சுமந்தபடி உள்ளார். மூன்றடி உயரமுள்ள சிற்பத்தின் தலையில் கிரீடம் சூட்டப்பட்டுள்ளது.

சாஸ்தா: சாஸ்தா சிற்பம் வலது கால் தொங்கிய நிலையிலும் இடது கால் மடிக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகிறது. வலது கரத்தில் தாமரை மொட்டும் தலையில் கிரீடமும் அணிந்து காணப்படுகிறார்.

நாகமணி பூதத்தான்: ஐந்து தலை நாகக் குடையின் கீழ் தலையில் கிரீடம் கைகளில் கதையுடன் மூன்றடி உரத்தில் அமைந்துள்ளது நாகமணி பூதத்தான் சிலை.

துவாரபாலகர்கள்
நாகத்துவாரபாலகர்கள்

நாக துவாரபாகர்கள்: நாகராஜா கோவிலில் காணப்படும் நாக துவாரபாலகர் சிற்பங்கள் அரிதானவை. சிற்பங்கள் ஏழு அடி உயரத்தில் ஐந்து தலைகள் படமெடுத்தபடியும் வால் சுருண்டும் உள்ளன. இடது பக்க நாகத்தின் படம் சிறிதாகவும் வலது பக்க நாகத்தின் படம் பெரிதாகவும் காணபபடுகிறது. இவை பார்சுவநாதரின் யக்‌ஷன் தர்னேந்திரன் மற்றும் யக்‌ஷி பத்மாவதியாக கொள்ளப்படுகின்றன. தர்னேந்திரனின் படத்தினுள் பார்சுவநாதரின் சிறிய சிற்பம் உள்ளது.

அர்த்தமண்டப துவாரபாலகர்கள்: கிழக்கு வாசல் வழியாக அர்த்த மண்டபத்திற்குள் நுழையும்போது வீரர்கள் போன்ற தோற்றத்தில் இரு அர்த்தமண்டப துவாரபாகர் சிற்பங்கள் உள்ளன. இடப்பக்க சிற்பத்தின் இடது கை விஸ்மயா முத்திரையுடனும் வலது பக்கச் சிற்பத்தின் வலது கை சூசி முத்திரையுடனும் காண்டப்படுகின்றன. இடது பக்க சிற்பத்தின் வலது கால் தூக்கிய நிலையிலும் இடது கை ஊன்றி நிற்கும் கதையின் நுனியை பிடித்தவாறும் அமைந்துள்ளது. சிற்பங்கள் தலையில் கிரீடமும் காதுகளில் குண்டலமும் கழுத்தில் மாலையும் கால்களில் தண்டையும் அணிந்தபடி உள்ளன. கால் முட்டு பகுதிக்கு மேல் தொடை வரை சல்லடம் போன்ற ஆடை உள்ளது. தூக்கிய கால்களுக்கிடையில் மணிமாலை தொங்கியபடி காணப்படுகின்றன.

புடைப்புச் சிற்பங்கள்

நாகராஜா கோவில் கல்தூண்கள் சுவர்களில் இந்து மற்றும் சமணம் சார்ந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.

மகாவீரர்: மகாவீரர் பத்மாசன நிலையில் கைகளில் சிங்க முத்திரையுடன் அமர்ந்துள்ள சிற்பம் ஒரு தூணின் கிழக்குப் பக்கம் உள்ளது. மகாவீரர் நீண்ட காதுகளுடன் தியான நிலையில் உள்ளார். அவர் தலையின் மேல் சந்திராதித்தம், நித்த விநோதம், சகல பாசானம் என்னும் மூன்று குடைகள் உள்ளன.

நேமிநாதர்: நாகராஜா கோவில் தூண் ஒன்றில் நேமிநாதர் முக்குடையின் கீழ் அமர்ந்துள்ள சிற்பம் அழகிய வேலைபாடுகளுடன் உள்ளது. தேவ கன்னியர் இரு புறங்களிலும் காணப்படுகின்றனர்.

பார்சுவநாதர்: நாகராஜா கோவிலில் நின்ற கோலத்தில் உள்ள பார்சுவநாதர் சிற்பங்கள் இரு தூண்களில் காணப்படுகின்றன. தலை மேல் ஐந்து தலை நாகம் படமெடுத்த நிலையில் உள்ளது. நீண்ட இரு கைகள் தொங்கிய நிலையில் உள்ளன.

பத்மாவதியும் அம்பிகையும்: ஒரு தூணில் பத்மாவதி சிற்பமும் மற்றொரு தூணில் அம்பிகை சிற்பமும் உள்ளன. பத்மாவதி மூன்று தலை நாகப் பீடத்தின் மீது அபய வரத முத்திரைகளுடன் அமர்ந்த நிலையில் உள்ளார்.

நாகர் சந்நிதி வாயில் மேற்சுவரில் பத்மாவதியும் அம்பிகையும் நின்ற கோலத்தில் மலர்களுடன் உள்ளனர். அவர்கள் தலைமேல் மூன்று தலை நாகம் படமெடுத்து நிற்கின்றன.

நாகர் சிலைகள், நிரந்திரமாக அடைக்கப்பட்டுள்ள மேற்கு வெளிவாயில்

முக்குடை நாதர்கள்: நாகராஜா கோவில் உள்பிரகார சுவர்களிலும் போதிகைகளிலும் பல முக்குடைநாதர்களின் சிற்பங்கள் உள்ளன.

தர்னேந்திரன்: நாகராஜா சந்நிதி வாயில் மேற்சுவரில் கிரீட மகுடம் அணிந்து அபய முத்திரையுடன் தர்னேந்திரன் காணப்படுகிறது. நாகம் ஒன்று தர்னேந்திரனின் இடுப்பில் சுற்றி தலை மேல் படம் விரித்து நிற்கிறது.

பரந்தாமன்: அனந்தகிருஷ்ணன் சந்நிதி சுவரின் மேல் அழகிய வேலைபாடுகளுடைய திருவாசியினுள் பாம்பணையில் படுத்திருக்கும் பரந்தாமன் சிற்பம் உள்ளது. பரந்தாமன் தெற்கே தலை வைத்து வடக்கே கால் நீட்டியபடி படுத்துள்ளார். இடது கையை நீட்டி வலது கையை மடக்கியபடி உள்ளார். திருவாசியின் வெளியே இருபுறம் இரு பெண்களின் சிற்பங்கள் உள்ளன.

சிவலிங்கம்: அர்த்தமண்டபத் தூண்களில் சிவலிங்க புடைப்பு சிற்பங்கள் உள்ளன. திருவாசியினுள் சிவலிங்கம், நாகங்களின் நடுவே சிவலிங்கம், பசு பால் சுரக்கும் சிவலிங்கம், காகம் பூஜை செய்யும் சிவலிங்கம், குரங்கு பூஜை செய்யும் சிவலிங்கம் என சிவலிங்கங்கள் காணப்படுகின்றன.

கிருஷ்ணன்: புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன், ராதையுடன் ஆலிங்கனம் செய்யும் கிருஷ்ணன், கோபியருடன் விளையாடி மரத்தின் மேல் இருக்கும் கிருஷ்ணன், தவழும் பாலகிருஷ்ணன், அரிட்டனை வதைக்கும் கிருஷ்ணன், இரண்யவதம் செய்யும் கிருஷ்ணன் என கிருஷ்ணன் சிற்பங்கள் உள்ளன.

காளி: காளி அபய வரத முத்திரைகளுடன் கதை, கத்தி, சங்கு, சக்கரம், வாள், கேடயம் போன்ற ஆயுதங்கள் தாங்கியபடி உள்ள சிற்பம் காணப்படுகிறது.

ராமர்: அனுமன் தோள் மீது அமர்ந்த ராமன், வில் ஏந்திய ராமன் என நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் ராமர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. நின்ற கோலத்தில் லட்சுமணன் சிற்பமும் உள்ளது.

முருகன்: முருகன் மயில் மீது அமர்ந்திருக்கும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கால் மடக்கி ஒரு கால் தொங்கவிட்டு அபய வரத முத்திரைகளுடன் முருகன் சிற்பம் அமைந்துள்ளது.

துர்கையின் வாகனம், சிங்கம்

பிற தெய்வங்கள்: நாகராஜா கோவிலில் வால் பீடத்தில் அனுமன், சேதுபந்தன அனுமன், விநாயகர், விஷ்ணு, இருபக்கமும் தேவியருடன் வரதராஜர், கருடாழ்வார், அர்சுணன் தபசு, இசக்கியம்மன், பகவானை ஏந்திய நிலையில் கருடாழ்வார், கரும்பு வில் வளைக்கும் மன்மதன், மலர் ஏந்திய ரதி ஆகிய சிற்பங்களும் உள்ளன.

விலங்குகள்: நாகராஜா கோவில் அர்த்த மண்டப தூண்களில் யானை, ஆமை, சிங்கம், யானையின் வாலைக் கடிக்கும் சிங்கம், யானை முதுகில் ஏறும் சிங்கம், குரங்கு, அன்னம், நாய், குதிரைத் தலை, கருடன், மான் மயில், காகம் ஆகிய விலங்கு மற்றும் பறவைச் சிற்பங்கள் உள்ளன.

மன்னர் குடும்பம்: அரச குடும்பத்தினர் உருவ சிற்பங்கள் அர்த்த மண்டபத் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. அரச குடும்பத்தினர் கை கூப்பி வணங்கியபடி நிற்கும் சிற்பங்கள், யானை மீது மன்னர் அமர்ந்திருக்கும் சிற்பம் என மனித சிற்பங்கள் உள்ளன. இவை வேனாட்டை ஆண்ட மன்னர் குடும்பத்தினர் சிற்பங்களாக இருகலாம் என பொதுவாக கருதப்படுகிறது.

முனிவர்: தூண்களில் விரிசடை முனிவர், அஞ்சலி முத்திரையுடன் முனிவர், நிர்வாணப் பெண்ணைக் கண்டு உணர்ச்சியுடன் நிற்கும் முனிவர் என பல முனிவர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. வணங்கிய நிலையில் காணப்படும் அடியவர்கள் உள்பட பல அடியவர் சிற்பங்கள் காணப்படுகின்றன.

ஆண்கள்: கம்பு ஊன்றி நிற்கும் வீரன், கத்தியுடன் நிற்கும் வீரன், வில் வாளுடன் குறவன், அசுரன் காலடியில் மனிதன், குறவன் தோளில் மான், மத்தளம் கொட்டுபவர் ஆகிய சிற்பங்களும் காணப்படுகின்றன.

பெண்கள்: பெண்ணின் காலில் முள் எடுக்கும் சிற்பம், கடி முத்திரையுடன் ஒரு கையில் மலரும் கொண்ட பெண், சங்கு ஓதும் பெண், ஆடல் மங்கை, நிர்வாணப் பெண்(அருகில் உணர்ச்சியுடன் முனிவர்), மரத்தில் சாய்ந்து கண்ணாடி பார்த்து ஒப்பனைச் செய்யும் பெண், வெஞ்சாமரம் ஏந்தி நிற்கும் பெண், விளக்குப் பாவை, வளையத்தினுள் முகம் ஆகிய பெண் சிற்பங்களும் உள்ளன.

மலர்கள்: நாகராஜா கோவில் மண்டப தூண்களில் பூக்களின் சிற்பங்கள், பூச்சித்திரச் சிற்பங்கள், வளையுத்துடன் பூச்சிற்பம், லில்லிப்பூச் சிற்பம், வில்வப்பூச் சிற்பம், தொங்க விடப்பட்ட மாலை, மலர்க் கொடி என மலர்களின் சிற்பங்கள் காணபடுகின்றன.

கருக்கணிகள்: நாகராஜா கோவிலில் அடைப்புக் கருக்கு, அன்னவால் கருக்கு, வட்டக் கருக்கு சிற்பங்கள் உள்ளன.

வடிவங்கள்: நாகராஜா கோவிலில் கும்பம், கும்ப பஞ்சரம், யாளி, சிங்க யாளி, ஐந்து தலை நாகம், வாயோடு வாய் ஒட்டிய நிலையில் மீன்கள், பறவையின் தோகை, சங்கு பூதம், பின்னிய நிலையில் இரட்டை நாகம், முகத்தோடு முகம் படம் விரிக்கும் இரு நாகங்கள் ஆகிய சிற்பங்கள் உள்ளன.

வடக்கு வாயில்(1970)
உலோகச் சிற்பங்கள்

நாகராஜா கோவிலில் நாகரின் அங்கி, அனந்தகிருஷ்ணன் அங்கி, உற்சவ மூர்திகள், விஷ்ணு சக்கரம், ஆமை விளக்கு, நாக விளக்கு, பலி பீடம், கோவில் விமான சிகரம், நாக துவாரபாலகர் அங்கி என உலோக சிற்பங்கள் உள்ளன.

அனந்தகிருஷ்ணன் அங்கி: அனந்தகிருஷ்ணனின் கடு சர்க்கரைச் சிற்பம் வெள்ளி அங்கியால் பொதியப்பட்டுள்ளது. கிரீட மகுடம் அணிந்து தலை மேல் ஐந்து தலை பாம்பு படம் விரித்து நிற்பது போல அனந்தகிருஷ்ணன் அங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாகராஜா அங்கி: நாகராஜா கருவறையில் உள்ள நாகர் சிற்பம் ஒரு தலை உடைந்து நான்கு தலைகள் கொண்டதாக உள்ளது. நாகர் சிற்பத்தின் மேல் நிர்மால்ய தரிசனத்திற்கு பிறகு சுமார் ஒரு அடி உயரமுடைய ஐந்து தலை வெள்ளி அங்கி சார்த்தப்படுகிறது.

உற்சவமூர்த்தி(அனந்தகிருஷ்ணன்): உற்சவமூர்த்தி கருவறையில் அனந்தகிருஷ்ணனின் உலோகத் திருப்பலி உற்சவமூர்த்தி சிற்பம் உள்ளது. உற்வமூர்த்திச் சிற்பம் தலையில் கிரீடமும் தலைக்குமேல் படம் விரித்த ஐந்து தலை நாகமும் காணப்படுகின்றன. சிற்பம் ஒரு கிலோ எடைக் கொண்ட செப்புத் திருமேனி, இரண்டடி உயரம் கொண்டது. பத்ரபீடத்திலன் மேல் உள்ள பத்மபீடத்தில் வைக்கப்பட்டுள்ள உற்சவமூர்த்தி சிற்பம் திருப்பலிச் சுற்றின் போது வெளியே எடுத்து வரப்படும்.

உற்சவமூர்த்திகள்(பாமா, ருக்மிணி): உற்சவமூர்த்தி கருவறையில் பாமா மற்றும் ருக்மிணிகளின் திருப்பலி உலோக உற்சவ மூர்த்தி சிற்பங்கள் அனந்தகிருஷ்ணனின் இடமும் வலமும் காணப்படுகின்றன. இடது கை தொங்கிய நிலையில் வலது கையில் மலர் தாங்கி கிரீடம் அணிந்து மூன்று தலை நாகக் குடையுடன் சிற்பங்கள் காணப்படுகின்றன. சிற்பங்கள் திருப்பலியின் போது வெளியில் எடுத்து வரப்படும்.

வேட்டைக்கிருஷ்ணன்: அனந்தகிருஷ்ணன் கருவறைக்கு முன்புள்ள அறையில் வேட்டைக்கிருஷ்ணன் சிலை 1.25 அடி உயரத்தில் உள்ளது. தலையில் கிரீடம் கழுத்தில் பிறை ஆபரணம் அணிந்து கைகளில் அபய வரத முத்திரைகளுடன் காணப்படுகிறது. நாகம் ஒன்றின் வால் வயிற்றில் சுற்றியபடியும் தலை வேட்டைக்கிருஷ்ணன் தலைக்கு மேல் படம் விரித்தபடியும் காணப்படுகிறது. திருவிழாவின் போது வேட்டை செல்லும்போது இச்சிலை எடுத்துச் செல்லப்படும்.

உட்சுவர் நாகச்சிற்பங்கள்

வேட்டையம்மன்: அனந்தகிருஷ்ணன் கருவறையை ஒட்டிய அறையில் வேட்டையம்மன் சிற்பம் பாமாவின் வடிவில் உள்ளது. திருவிழாவில் வேட்டை செல்லும்போது இச்சிலை எடுத்துச் செல்லப்படும்.

கணபதி:அனந்தகிருஷ்ணன் கருவறைக்கு முன்புள்ள அறையில் கணபதியின் உற்சவமூர்த்தி சிற்பம் உள்ளது. நின்ற கோலத்தில் நான்கு கைகளும் துதிக்கையும் கொண்டு சிற்பம் வடிவமைக்க்ப்பட்டுள்ளது. வெளிப்புற கைகளில் அங்குசமும் பாசாங்குசமும் உள்புறக் கைகளில் தண்டமும் மோதகமும் உள்ளன. திருவிழாக் காலங்களில் சிற்பம் வெளியில் கொண்டு வரப்படும்.

பாலமுருகன் : பாலமுருகன் சந்நிதியில் பாலமுருகனின் ஒரு அடி உயரமுடைய உற்சவமூர்த்திச் சிற்பம் நின்ற கோலத்தில் உள்ளது. கிரீடம் அணிந்து பத்ரபீடத்தின் மீது உள்ள வட்ட வடிவ பீடத்தின் மீது சிற்பம் உள்ளது.

சக்கரமும் விளக்கும்: பத்ம பீடத்தில் உள்ள விஷ்ணுவின் சக்கரமும் ஆமை மீதுள்ள ஐந்தடுக்கு கண் விளக்கும் உலோகச் சிற்பங்களாக உள்ளன. விளக்கின் மேற்பகுதி படமெடுத்த ஐந்து தலை நாகத்தின் வடிவில் உள்ளன.

மரச் சிற்பங்கள்

நாகராஜா கோவிலில் தேர், வாகனங்கள் மற்றும் ஒரு பாம்பின் சிற்பம் ஆகிய மரச்சிற்பங்கள் உள்ளன.

ஆதிசேடவாகனம்: அனந்தகிருஷ்ணனின் வாகனம். ஆதிசேடன் வாகனம் ஐந்து தலைக் கொண்டது. தலைகள் குடைபோல் விரிந்து உடல் நாகக்குடையின் கீழ் சுருண்டு காணப்படுகிறது. விழாவின் போது நாகக்குடைக்கு கீழே அனந்தகிருஷ்ணன் அமர்த்தபட்டு வீதியுலா நடைபெறும். நாகக்குடையில் படம் ஒன்றாக அகன்ற வடிவிலும் தலைகள் தனித்தனியே பிரிந்தும் காணப்படும். தலையில் சிவப்பு கண்ணாடி கற்கள் வைக்கப்பட்டு கண்கள் அமைக்கபட்டுள்ளது. தைமாத திருவிழாவின் போது ஆதிசேடவாகனத்தில் அனந்தகிருஷ்ணன் வீதியுலா நடைபெறும்.

அன்னவாகனம்: பாமாவின் வாகனம். வெண்மை முதன்மையாகவும் அலகும் கால்களும் சிவப்பு நிறத்திலும் நீலம், பச்சை, மஞ்சள் ஆகிய நிறங்களும் கலந்து அன்னப்பறவையின் வடிவில் அமைக்கப்பட்ட மரச்சிற்பம். தைமாதத் திருவிழாவின் மூன்றாம், நான்காம், ஆறாம் நாட்களில் பாமா அன்ன வாகனத்தில் வீதி உலா வருகிறாள்.

பாலமுருகன் சந்நிதி

கமலவாகனம்: ருக்மணி மற்றும் பாமாவின் வாகனம். நாகராஜா கோவில் கமல வாகனம் ஆமையின் மீது அமைக்கப்பட்டுள்ளது. தலையும் கால்களும் வெளியே நீட்டிய ஆமையின் மீது படமெடுத்த நாகங்களும் யானைகளும் நிற்க அதன் மேல் வட்ட வடிவ பீடத்தின் மீது கமலம் உள்ளது. கமலம் தலை கவிழ்ந்த பல அடுக்குகளும் தலை நிமிர்ந்து விரிந்த பல அடுக்குகளுமாக உள்ளது. கமலத்தின் மேல் மூர்த்தி அமரும் பீடம் உள்ளது. இருபுறமும் இரு பணிப்பெண்கள் நின்றபடி உள்ளனர். கமலம் மேல் திருவாசி உள்ளது. யானைக்கு கருப்பும் வெள்ளையும் நாகத்திற்கு மஞ்சளும் சிவப்பும் பீடத்திற்கு மஞ்சள், பச்சை, செந்தாமரை நிறம் பணிப்பெண்களுக்கு பச்சை, சிவப்பு, மஞ்சள், கருப்பு கமலத்திற்கு கமலச்சிவப்பு வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. கமல வாகனத்தில் ருக்மிணி ஐந்தாம் நாள் விழாவிலும் ஆறாம் நாள் காலையிலும் வீதியுலா வருகிறார். பாமா ஒன்பதாம் திருவிழா அன்று தேர் நிலைக்கு நின்றபின் வீதியுலா வருகிறார்.

குதிரைவாகனம்: வேட்டைகிருஷ்ணன் மற்றும் முருகனின் வாகனம். குதிரை வாகனம் மரத்தால் செய்யப்பட்டு பித்தளை அங்கியால் பொதியப்பட்டுள்ளது. குதிரை முன்னங்கால்களைத் தூக்கி பின்னங்கால்களை பீடத்தில் ஊன்றி பாயும் நிலையில் உள்ளது. குதிரைச் சிற்பத்தில் முகக்கயிறு, கடிவாளம், நெற்றிப்பட்டம், கதுக்குப்பி, தலைக்குஞ்சத்திரள் ஆகிய முகத்தணிகளும் கழுத்துக் கயிறு, மணிமாலை, பதக்கச்சரம், கண்டமாலை ஆகிய கழுத்தளிகளும் கண்டப்பதக்கமும் குளம்பினை ஒட்டிய அணிகளும், முதுகில் சித்திர போர்வையும் அலங்கரிகின்றன. தை மாதத் திருவிழாவின் எட்டாம் நாள் விழாவில் வேட்டைகிருஷ்ணனும் சூர சம்காரத்தின் போது முருகனும் குதிரை வாகனத்தில் செல்வார்கள்.

செடிவாகனம்: ருக்மிணியின் வாகனம். தலையும் கால்களும் வெளியே நீட்டிய ஆமையின் மீது படமெடுத்த நாகங்களும் யானைகளும் நிற்க அதன் மேல் வட்ட வடிவ பீடத்தின் மீது மரம் உள்ளது. மரத்தின் தண்டு இலைகள் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. மரத்தின் நிர்வாணமாக பெண்கள் காணப்படுகின்றனர். சிந்திப்பது போல காலை மடக்கி கையை ஊன்றி நிற்பது போல மரத்தில் ஏறுவது போல என பெண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளனர். வாகனத்தின் இருபக்கமும் இரு பணிப்பெண்கள் உள்ளனர். வாகனத்தின் உயரம் சுமார் பத்து அடி. தை மாதத் திருவிழாவின் ஐந்தாம் மற்றும் ஆறாம் நாள் காலையில் ருக்மிணி செடிவாகனத்தில் வீதியுலா வருகிறார்.

இவ்வாகனம் கற்பக விருட்சமா குருந்த மரமா என்ற குழப்பம் எழுந்ததால் செடிவாகனம் என அழைக்கப்படுகிறது. கோபியர்கள் காணப்படும் இவ்வாகனத்தில் கண்ணன் அனந்தகிருஷ்ணன் அமர்த்தபடாமல் ருக்மிணி அமர்த்தபடுகிறார். வீதிஉலா சமயத்தில் நிர்வாணப் பெண்கள் துணியால் கட்டி மூடப்படுகிறார்கள்.

சிம்மவாகனம்: துர்கையம்மனின் வாகனம். ஐந்தடி உயரமுள்ள சிம்ம வாகனம் கோரைப்பற்களுடன் யாளியின் முகத்தோற்றத்துடன் காணப்படுகிறது.

மயில்வாகனம்: பாலமுருகனின் வாகனம். நாகராஜா கோவிலில் இரண்டு மயில்வாகனங்கள் சிறிய வேறுபாடுகளுடன் ஒரே அமைப்பில் காணப்படுகின்றன. மயில் வாகனங்களுக்கு விரிந்த தோகை இல்லை. நீழ கழுத்துடனும் செம்பொன்னிற கண்களுடனும் வலது காலை முன்னால் வைத்து இடது காலை பின்னால் வைத்து நடக்கும் பாவனையில் இரு அடுக்கு சிறகுகளுடன் உள்ளது. தோகைக்கும் கழுத்தின் அடிபரப்பிற்கும் இடையே தோகை அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தின் எடையை தாங்க வயிற்றின் அடியே குத்துக்கால் தாங்கல் அமைக்கப்பட்டுள்ளது. தலையில் கொண்டை கழுத்தில் பதக்கச்சரம், அட்டிகை ஆகியவை காணப்படுகின்றன.

நடுமாடம், முகப்பு கோபுரம்

நெருப்புக்கோழி வாகனம்: ருக்மிணியின் வாகனம். பொதுவாக கோவில்களில் அரிதாக காணப்படும் ஆறடி உயர நெருப்புகோழி வாகனம் இரண்டு விரல்களுடைய நீண்ட கால்களில் இடது காலை முன் பக்கம் வைத்து வலது காலை பின் பக்கம் வைத்து நடப்பது போல வடிவமைக்க்ப்பட்டுள்ளது. வால் நிமிர்ந்து மேலேச் சென்று வளைந்து காணப்படுகிறது. கூர்ந்து பார்க்கும் கண்களுடன் பிளந்த வாய் சிவந்தும் பழுப்பு நிற அலகுடனும் காணப்படுகிறது. பீடத்திற்கும் நீண்ட கழுத்தின் முன்பகுதிக்கும் குத்துகால் தாங்கல் அமைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் பதக்கச்சரம், அட்டிகை அணிந்துள்ளது. தைத்திருவிழாவின் போது மூன்றாம் ஆறாம் நாட்களில் ருக்மிணியுடன் வீதியுலா வருகிறது. அன்ன விளாஞ்சி, அன்ன கிளாஞ்சி என்னும் பெயர்களிலும் அறியப்படுகிறது.

மூஞ்சுறு வாகனம்: விநாயகரின் வாகனம். நாகராஜா கோவில் மூஞ்சுறு வாகனம் சாம்பல் வண்ணத்தில் குறுகிய கால்களுடன் வயிற்றை குத்துக்கால் தாங்க வாயைத் திறந்தபடி தலையை தூக்கியபடி உள்ளது. முதுகில் வேலைபாடுகள் உள்ள சித்திரப் போர்வை உள்ளது. வழாவின் அனைத்து நாட்களிலும் விநாயகரின் வீதிஉலா உண்டு.

இந்திர வாகனம்: அனந்தகிருஷ்ணன், பாமா, ருக்மிணி ஆகியோரின் வாகனங்கள். நாகராஜா கோவிலில் ஒன்பது அடி உயரமும் நான்கு அடி அகலமும் கொண்ட தேர் போன்ற தோற்றம் கொண்ட மூன்று வாகனங்கள் வாகன அறையில் வைக்கப்பட்டுள்ளன. இவை தேர் வாகனம் என்றும் அழைக்கப்படுகிறது. சதுரவடிவ வாகனத்தின் நான்கு மூலைகளிலும் மூன்று தூண்கள் பொருத்தப்பட்டுள்ளது. தூண்களின் மேல் அழகிய வேலைபாடுகளுடன் கோவில் கோபுரம் போன்ற அமைப்புடன் கூரை அமைக்கப்பட்டுள்ளது. வாகனம் வண்ணங்கள் தீட்டப்பட்டு உள்ளது. தைத் திருவிழாவில் அனந்தகிருஷ்ணன், பாமா, ருக்மிணி தனித்தனி வாகனங்களில் வீதிஉலா வருவர்.

பல்லக்கு வாகனம்: அனந்தகிருஷ்ணன், பாமா, ருக்குமணி, வடசேரி கொம்மண்டையம்மன் ஆகியோரின் வாகனம். நாகராஜா கோவிலில் நான்கு பல்லக்குகள் உள்ளன. முன்னும் பின்னும் வளைவுகளால் அலங்கரிக்கப்பட்டு நடுவே செவ்வகத்தின் மீது அரைவட்டமாக பல்லக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. திருவீதி உலாவின் போது பல்வேறு வண்ண திரைகள், கண்ணாடி மணிகள், பூமாலை என பல ஒப்பனைகளுடன் காணப்படும் பல்லக்கில் தெய்வ மூர்த்திகள் வடிவ சிறப்புகளுடன் அமர்வர். பல்லக்கு வாகனங்களில் அனந்தகிருஷ்ணன், பாமா, ருக்குமணி, கொம்மண்டையம்மன் ஆகியோர் தைத்திருவிழா ஏழாம் நாள் காலை வீதி உலா வருவர்.

தெற்கு வெளி வாயில்

கோவில் தேர்: நாகராஜா கோவில் தேர் வடிவம் கோவில் விமானத்தை போன்றது. தேர் கிழக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டிருக்கும். நான்கு சக்கரங்களுடன் ஏராளம் இந்து மத சிற்பங்கள் தாங்கி தேர் அமைந்துள்ளது. ஒன்பதாம் நாள் விழாவில் காலை தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு கோவில் முன்பாக வந்து சேரும். பின்னர் கப்பல் ராகம் இசைத்து தேர் நின்ற இடத்தில் நிலைநிறுத்தப்படும்.

வழிபாடு

நாகராஜா கோவிலில் தினமும் கேரள தாந்திரிக முறையில் ஐந்து காலப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. நாகர் கருவறையிலிருந்து எடுக்கப்படும் மண் நாகராஜா பிராசதமாக வழங்கப்படுகிறது. இம்மண் ஆறு மாதம் கறுப்பு நிறத்திலும் ஆறு மாதம் வெள்ளை நிறத்திலும் காணப்படும் என்று கூறப்படுகிறது.

கோவில் விவரங்கள்
  • நடை திறப்பு: காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை
  • மூலவர்: நாகராஜா, அனந்தகிருஷ்ணன், சிவலிங்கம்
  • பூஜை முறை: தாந்திரிக முறை
  • தல விருட்சம்: ஓடவள்ளி
  • தீர்த்தம்: நாகத்தீர்த்தம்
  • முகவரி: அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோவில் - 629 001, கன்னியாகுமரி மாவட்டம்.
  • தொலைபேசி எண்: 04652-232420
கால அட்டவணை
ஐந்து கால பூஜைகள்
பொழுது நேரம் பூஜை
காலை 4 மணி நிர்மால்ய தரிசனம்
காலை 5.30 மணி உஷத்காலப்பூஜை
காலை 11 மணி உச்சிக் காலப் பூஜை
மாலை 6.30 மணி சாயரட்சை பூஜை
மாலை 8 மணி அர்த்த சாம பூஜை(அத்தாள பூஜை)
திருப்பலி

நாகராஜா கோவில் திருப்பலி உச்சிக்காலப் பூஜை மற்றும் அர்த்த சாம பூஜைகளில் நடைபெறும். கோவிலுக்குள் மூன்று சுற்றுகளும் வெளித் திருச்சுற்றில் மூன்று சுற்றுகளும் சுற்றி வரப்படும். திருப்பலியின் போது அனந்தகிருஷ்ணன் சந்நிதி தாழிடப்பட்டிருக்கும். உள்திருச்சுற்றை சுற்றும் போது முதல் சுற்றில் தலைமை அர்ச்சகர் பாணி விளக்குடன் சுற்றி வருவார். இரண்டாம் சுற்றின் போது துணை அர்சகர் அனந்த கிருஷ்ணன் விக்கிரகத்தை மார்போடு அணைத்து தூக்கி வருவார் அப்போது பாணியும் மேளமும் இசைக்கப்படும்.

தலைமை அர்சகர் வெளித் திருச்சுற்றை சுற்றி வரும்போது வெண்சோற்றை எட்டுதிக்கு பாலகர், நாகமணி பூதத்தான் மற்றும் சாஸ்தாவுக்கும் தூவி நீர் தெளித்து செல்வார். அதன் பின் துணை அர்சகர் வெளித்திருச்சுற்றில் இருமுறையும் உள்திருச்சுற்றில் ஒருமுறையும் சுற்றி வருவார். திருப்பலி முடித்தப்பின் அனந்தகிருஷ்ணன் விக்கிரகம் கருவறையில் மூலவர் அருகில் அமர்த்தபட்டு தாளிடப்படும். அர்த்த சாம பூஜையின் பின் நடைபெறும் திருப்பலியின் போது இறுதிச் சுற்றின் போது நகர் சந்நிதி முன் தேர்மேடை அமைத்து அதில் அமர்த்தி பழம், பொரி படைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட பின்னர் விக்கிரகம் அனந்தகிருஷ்ணன் கருவறையில் வைக்கப்படுகிறது.

அரசடி விநாயகர், நாகங்கள்
சிறப்பு வழிபாடுகள்

ஞாயிற்றுகிழமைகள் நாகருக்கு சிற்பான நாளாக கருதப்படுகிறது. இந்நாட்களில் அதிக அளவிலான பக்தர்கள் குறிப்பாக கன்னிப்பெண்கள் அதிகம் வருகின்றனர். இந்நாட்களில் கலசாபிஷேகத்திற்கு முன்னர் பக்தர்கள் கொண்டு வடும் பால் கொண்டு அபிஷேகம் நடைபெறுவதால் அன்று உச்சிகால பூஜை ஒரு மணி அளவில் நடைபெறும்.

செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகள் துர்கை மற்றும் பாலமுருகனுக்கு உகந்த நாட்களாக கருதப்படுகிறது. ஆவணி, மார்கழி, மாசி, சித்திரை மாதங்களில் நாகராஜா கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆவணி மூன்றாம் ஞாயிறு புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஆவணி நான்காம் ஞாயிறு நாகர் நான்கு தேர் வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவார்.

மார்கழி மாத அனைத்து நாட்களும் திருப்பள்ளி எழுச்சி சிறப்பு பூஜைகள் நடைபெறும். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் கிருஷ்ணனுக்கு நிலாகாட்டும் சடங்கு நடைபெறும். சிவனுக்கு மாதம் இருமுறை பிரதோஷம் நடைபெறும். நாகராஜா கோவில் சிவனுக்கு பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு மூன்று நாட்கள் முன்னர் சாயரட்சை பூஜைக்கு முன் பால், தேன், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு வெண்பொங்கல் அமுதாக படைக்கப்படும். தீபாரதனை முடித்து நந்திக்கு உளுந்து படைக்கப்படுகிறது. மாசி மாதம் சிவராத்திரியன்று சிவனுக்கு சிறப்பு பூஜைகள் உண்டு. அதே பூஜைகள் நாகருக்கும் நடத்தப்படுகிறது.

தமிழ் வருடப்பிறப்பான சித்திரை முதல் நாள் கனி காணுதல் என்னும் சடங்கு நடைபெறும். பங்குனி கடைசி நாள் அர்த்தசாம பூஜை முடித்து அரிசி, தேங்காய், காய்கனிகள், சர்க்கரை, கொன்றைப் பூ கொண்ட தட்டு கருவறைக்குள் வைக்கப்படும். காலை இறைவன் மங்கல பொருள்களுடன் காட்சி தருவார்.

ஒவ்வொரு மாதமும் ஆயில்ய நட்சத்திரம் அன்று நாகராஜாவிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றயதினம் இரவில் வெள்ளி ஆதிசேட வாகனத்தில் நாகர் வரம் வருவார். ஒவ்வொரு மாத இறுதி வெள்ளி பாலமுருகனுக்கும் ஆடி மாத செவ்வாய் கிழமைகள் துர்க்கைகும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ராகுகாலத்தில் சிறப்பு ராகுகால பூஜை நடைபெறுகிறது.

இசை
நித்திய பூஜை ராகங்கள்
பொழுது நேரம் பூஜை இசைக்கப்படும் ராகம்
காலை 4 மணி திருப்பள்ளி எழுச்சி பூபாளம்
காலை 5 மணி அபிஷேகம் மலைய மாருதம், பிலகிரி
காலை 5.30 மணி உஷத்காலப்பூஜை மோகனம்
காலை 6 மணி திருப்பலிச்சுற்று ஆரபி
காலை 10.30 மணி அபிஷேகம் தன்யாசி
காலை 11 மணி உச்சிக் காலப் பூஜை தர்பார்
காலை 11.30 மணி திருப்பலிச் சுற்று ஸ்ரீராகம்
மாலை 6.30 மணி தீபாராதனை சங்கராபரணம் மற்றும் நாட்டைக் குறிச்சி
மாலை 8 மணி அத்தாள பூஜை கேதார கெளளை
மாலை 8.15 மணி திருப்பலி மற்றும் தீபாராதனை ஆனந்த பைரவி
ஆயில்ய நட்சத்திரத்தில் நாகர் திருச்சுற்றை வலம் வரும்போது புன்னாகவராளி
பக்தர் வழிபாடு(மஞ்சள், பால் அபிஷேகம்)
நம்பிக்கைகள்
  • நாகதோஷம் நீங்க நாகராஜா கோவில் நாகரை வழிபடுகிறார்கள்.
  • பிள்ளைப்பேறு வேண்டி அரசமரத்தை சுற்றி வருதல் தொட்டில் மரத்தில் தொட்டில் கட்டுதல் முதலிய சடங்குகள் செய்யப் படுகின்றன.
  • ராகு கேது தோஷங்களிலிருந்து விடுபட நாகராஜருக்கு மஞ்சள் பொடி, கரிப்பொடி, அரிசி மாவு, தேன், பால், கரும்புச்சாறு, கமுகம்பூ, இளநீர், நெய், கதலிப் பழம் படைக்கப்படுகிறது.
  • வெள்ளியில் நாகர் உருவமும் மூன்று முட்டைகளும் நாகராஜருக்கு காணிக்கையாக செலுத்தினால் மங்கலம் நிகழும் என்னும் நம்பிக்கை உள்ளது.
  • கல்லாலான நாகர் சிலையை தந்திரி ஒருவரால் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் ராகு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
  • தோல் வியாதி குணமாக நாகராஜா கோவிலில் உப்பும் நல்ல மிளகும் காணிக்கையாக செலுத்த வேண்டும் என நம்பிக்கை உள்ளது.
  • ஏழரை நாட்டுச் சனி, கண்டகச் சனி மற்றும் சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமை சாஸ்தா சந்நிதியில் தேங்காயை உடைத்து அதில் நல்லெண்ணை ஊற்றி எள்ளை துணியில் கட்டி விளக்கேற்றி வழிபடவேண்டும்.

திருவிழாக்கள்

நாகராஜா கோவில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் பத்து நாட்கள் நடைபெறும். கோவில் திருவிழா அனந்தகிருஷ்ணனுக்குரியது மூலவர் நாகராஜருக்கு திருவிழா கிடையாது. திருவிழா நாட்கள் காலையில் நிர்மால்ய தரிசனத்தோடு தொடங்கி இரவு திருப்பலி மற்றும் திருபூதப்பலியுடன் முடியும்.

இளைக்கட்டு
கொடிமரம்

திருவிழா முந்தய நாள் இளைக்கட்டு என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அனந்தகிருஷ்ணன் சந்நிதி முன் மண்டபத்தில் ஆல், அரசு, அத்தி, இத்தி, பலா, நாவிளி, சிறுமுளை, பூவன், குறுந்தாள் ஆகியவற்றின் சுள்ளிகள் அடுக்கி நெய் விட்டு ஹோமம் வளர்க்கப்படுகிறது. பின்னர் தருப்பைப் புல்லும் நூலும் சேர்த்து முறுக்கிய புனிதக்கயிறு ஒன்றை அனந்தகிருஷ்ணன் கருவறையைச் சுற்றி கட்டுவர்.

கொடியேற்றம்

கொடியேற்ற நாளில் காலையில் கொடிப் பட்டத்திற்கு கண் திறக்கப்பட்டு கொடியை மேளதாளங்களுடன் தேர் வீதிகளில் கொண்டு வருவர். கொடிக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரத்தின் கீழ் வெற்றிலை பாக்குடன் பழம், வெண்பொங்கல் படைத்து தந்திரியால் பூஜை செய்யப்படும். அப்பொது தந்திரி தலைமை அர்சகருக்கு தட்சணையாக பணம் கொடுப்பார். கொடிப்பட்டத்தில் தேங்காய், மணிமாலைகள், பூக்கள் ஆகியவை கட்டி மேளதாளத்துடன் கொடி ஏற்றுவார். கொடிமரத்தைச் சுற்றி மாலை சாற்றி தருப்பை, மாவிலை, அரசிலை கட்டப்படும். நான்கு புறமும் திருசூலம் நடப்பட்டு கொடிமரத்திற்கு பரிவட்டம் சாற்றப்பட்டு மீண்டும் பூஜை நடைபெறும். தேக்குக்கம்பு ஒன்று பூஜைகள் செய்யப்பட்டு தேர் நிறுத்தப்பட்டிருக்கும் தென்மேற்கு மூலையில் நடுவார்கள்.

வீதிஉலா
தைத்திருவிழா வீதிஉலா நிகழ்வுகள்
நாள் வாகனம் உற்சவ மூர்த்தி குறிப்புகள்
1 மூஞ்சூறு விநாயகர் தேர் வீதிகளில் வலம் வரும்

குறிப்பிட்ட ராகத்தில் இசைக்கருவிகள் இசைக்க்ப்படும்

பூப்பந்தல் அனந்தகிருஷ்ணன், பாமா, ருக்மிணி
2 பூப்பந்தல் அனந்தகிருஷ்ணன், பாமா, ருக்மிணி காலையும் மாலையும் தேர் வீதிகளில் வலம் வரும்

முடிந்து திருப்பலியும் திருபூதப்பலியும் நடைபெறும்

3 பூப்பந்தல் அனந்தகிருஷ்ணன், பாமா, ருக்மிணி காலையில் தேர் வீதிகளில் வலம் வரும்
மூஞ்சுறு விநாயகர் மாலையில் விநாயகர் முன்செல்ல அனந்த கிருஷ்ணன், தேவியர் அவரவர் வாகனங்களில் தேர் வீதிகளில் வலம் வருவர்

வடசேரி கொமண்டையம்மனின் சிங்கவாகனம் வந்து கிழக்கு தேர் வீதியிலுள்ள அம்மன் கோவிலில் நிலைக்கொள்ளும் கொம்மண்டையம்மன் ஆலயத்திற்குள் வர அனுமதி இல்லை

சிங்க வாகனம் அனந்தகிருஷ்ணன்
அன்ன வாகனம் பாமா
அன்ன விளாஞ்சி ருக்மிணி
சிங்க வாகனம் கொம்மண்டையம்மன்
4 பூப்பந்தல் அனந்தகிருஷ்ணன், பாமா, ருக்மிணி காலையில் தேர் வீதிகளில் வலம் வரும்
சிங்க வாகனம் அனந்தகிருஷ்ணன் விநாயகர், அனந்தகிருஷ்ணன், பாமா, ருக்மிணி தேர்வீதிகளில் வரும்போது கொம்மண்டையம்மன் வாகனமும் வீதி உலாவில் சேர்ந்துக்கொள்ளும்
அன்ன வாகனம் பாமா
அன்ன விளாஞ்சி ருக்மிணி
சிங்க வாகனம் கொம்மண்டையம்மன்
5 மூஞ்சுறு விநாயகர் காலையும் மாலையும் வீதிஉலா நடைபெறும்
ஆதிசேட வாகனம் அனந்தகிருஷ்ணன்
செடிவாகனம் பாமா
கமல வாகனம் ருக்மிணி
6 (காலை) மூஞ்சுறு விநாயகர் காலையில் வீதி உலா நடைபெறும்
ஆதிசேடன் அனந்தகிருஷ்ணன்
அன்ன வாகனம் பாமா
அன்ன விளாஞ்சி ருக்மிணி
6 (மாலை) மூஞ்சுறு விநாயகர் மாலையில் வீதி உலா நடைபெறும், தேர்வ்விதியில் கொம்மண்டையம்மன் இணைந்து கொள்வார்
யானை அனந்தகிருஷ்ணன்
அன்ன வாகனம் பாமா
அன்ன விளாஞ்சி ருக்மிணி
சிங்க வாகனம் கொம்மண்டையம்மன்
7 (காலை) மூஞ்சுறு விநாயகர் அனந்தகிருஷ்ணன், பாமா, ருக்குமணி, கொம்மண்டையம்மன் அவரவர் பல்லக்கு வாகனங்களில் வீதியுலா வருவர்
பல்லக்கு அனந்தகிருஷ்ணன்
பல்லக்கு பாமா
பல்லக்கு ருக்மிணி
பல்லக்கு கொம்மண்டையம்மன்
7 (மாலை) மூஞ்சுறு விநாயகர் மாலை வீதி உலா நடைபெறும்
இந்திர வாகனம் அனந்தகிருஷ்ணன்
இந்திர வாகனம் பாமா
இந்திர வாகனம் ருக்மிணி
சிங்க வாகனம் கொம்மண்டையம்மன்
8 (மாலை) குதிரை வேட்டைகிருஷ்ணன் மாலையில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் வரை சுமார் 2.5 கி.மீ. வேட்டை கிருஷ்ணன் மற்றும் அனந்தகிருஷ்ணன் தேவியருடன் வேட்டைக்கு செல்வர்

(வேட்டை நிகழ்ச்சி விளக்கமாக கீழே)

கேடய வாகனம் அனந்தகிருஷ்ணன்
கேடய வாகனம் பாமா
கேடய வாகனம் ருக்மிணி
8

(இரவு)

மூஞ்சுறு விநாயகர் எட்டாம் நாள் இரவு அத்தாளப் பூஜைக்குப் பின் வீதிஉலா நடைபெறும்
குதிரை வேட்டைகிருஷ்ணன்
அன்ன வாகனம் அனந்தகிருஷ்ணன்
தட்டு வாகனம் பாமா
தட்டு வாகனம் ருக்மிணி
சிங்க வாகனம் கொம்மண்டையம்மன்
9 (காலை) குதிரை வேட்டைகிருஷ்ணன் காலையில் வேட்டைகிருஷ்ணன் வீதிஉலா நடைபெறும்

பின்னர் தடம் பார்த்தல்(விளக்கமாக கீழே) சடங்கு நடைபெறும் குதிரை வாகனத்திலிருந்து வேட்டைகிருஷ்ணன் தேருக்கு மாற்றப்படுவார் தேவியர் இருவர் மற்றும் விநாயகர் தேருக்கு கொண்டு வரபடுவர் தேர் நான்கு வீதிகளையும் சுற்றி வரும் (தேரோட்ட நிகழ்வு விளக்கமாக கீழே)

தேர் வேட்டைகிருஷ்ணன்
தேர் பாமா
தேர் ருக்மிணி
தேர் விநாயகர்
9

(இரவு)

மூஞ்சுறு விநாயகர் இரவு வீதியுலா நடைபெறும், இசைக்கருவிகள் இசைக்கப்படாது

வீதியுலா முடிந்து பூஜைகள் இல்லை

குதிரை வேட்டைகிருஷ்ணன்
ஆதிசேடன் அனந்தகிருஷ்ணன்
கமல வாகனம் பாமா
செடி வாகனம் ருக்மிணி
சிங்க வாகனம் கொம்மண்டையம்மன்
10 ஆதிசேடன் அனந்தகிருஷ்ணன் ஆறாட்டு(ஆறாட்டு விளக்கமாக கீழே) முடிந்து அனந்தகிருஷ்ணன் ஆற்றிலிருந்து கோவில் வரை உலா வருவார், வரும் வழியில் உள்ள வீடுகளில் வாகனம் நிறுத்தப்படும் தேர்வீதிகளை சுற்றி கோவில் வந்தடையும்
வேட்டை

நாகராஜா கோவில் தைத்திருவிழாவின் எட்டாம் நாள் மாலை நாகராஜா கோவிலில் இருந்து நாகர்கோவில் நகரின் மேற்கில் இருக்கும் வெட்டூர்ணிமடத்திற்கு 2.5 கி.மீ. தூரம் வேட்டைகிருஷ்ணன் மற்றும் அனந்தகிருஷ்ணன் தேவியருடன் வேட்டைக்கு செல்லும் நிகழ்சி நடைபெறும். வேட்டைகிருஷ்ணன் குதிரை வாகனத்திலும் அனந்தகிருஷ்ணன் மற்றும் தேவியர் கேடய வாகனத்திலும் வெட்டூர்ணிமடம் வந்து சேர்வர். குதிரை வாகனம் இறக்கி வைக்கப்பட்டு வாகனத்தின் முன் இளநீர் தேங்காய் வேட்டை பொருளாய் வைக்கப்படும். அர்ச்சகர் வீல்லில் அம்பு கோர்த்து குறிபார்த்து நான்கு புறங்களில் இருந்தும் எய்வார். அத்துடன் வேட்டையாடுதல் நிறைவுறும். பின் உற்சவ மூர்த்திகள் கோவில் வந்து பூஜைகள் நடைபெறும்.

பக்தர் குளம்
தடம் பார்த்தல்

தைத்திருவிழாவின் முக்கிய நாளான தேரோட்ட தினத்தில் காலை தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். ஒன்பதாம் நாள் காலை வேட்டைகிருஷ்ணன் குதிரை வாகனத்தில் தேர்வீதிகளை சுற்றிவந்து பின்னர் முந்தய நாள் வேட்டைக்கு சென்ற வெட்டூர்ணிமடம் வழியில் பாதி தூரம் சென்று திரும்புவார்.

தேரோட்டம்

தடம் பார்த்து திரும்பிய வேட்டைகிருஷ்ணன் தேர்மூடு என அறியபடும் தேரடிக்கு திரும்புவார். அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள தேருக்கு வேட்டைகிருஷ்ணன் குதிரை வாகனத்தில் இருந்து மாற்றப்படுவார். அனந்தகிருஷ்ணனின் தேவியரான பாமா, ருக்மிணி மற்றும் விநாயகர் ஆகியோரை இசை வாத்தியங்கள் முழங்க தேரடிக்கு எடுத்து வருவர். தலைமை அர்ச்சகர் மேளதாளத்துடன் பாணி விளக்கும் சுத்திக் கலச பாத்திரங்களும் எடுத்து தேரடிக்கு வருவார். சுத்திகலசத்து நீரை மந்திரம் ஓதி தேரின் மீது தெளிப்பார். விநாயகர், பாமா, ருக்மிணி ஆகியோரை தேரில் அமர்த்துவார். பின்னர் பூஜை நடைபெறும். தேரினுள் அர்ச்சகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் அமர்ந்திருப்பார்கள். பொதுமக்களும் கோவில் நிர்வாகிகளும் தேர்வடத்தை தொட்டு வணங்கி தேரை இழுப்பார்கள். நான்கு தேர்வீதிகளையும் சுற்றி 11 மணியளவில் கோயில் முன்பாக வரும். அங்கிருந்து கப்பல் ராகம் இசைக்கப்பட்டு தேர் புறப்பட்ட இடத்தில் நிலைநிறுத்தப்படும். பின்னர் பூஜை நடத்தப்பட்டு இறைப் படிமங்களை எடுத்து அருகிலுள்ள மண்டபத்தில் அமர்த்துவார்கள். இத்துடன் தேரோட்ட நிகழ்ச்சி முடியும்.

ஆறாட்டு
நான்காவது கற்பலகை

திருவிழாவின் பத்தாம் நாள் காலை ஆறு மணி அளவில் பூமாலை அணிவிக்கப்பட்ட ஒரு பசுவும் அதன் கன்றும் கோவிலுக்குள் கொண்டுவந்து அனந்தகிருஷ்ணன் திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும். இரவு ஏழு மணியளவில் அனந்தகிருஷ்ணன் ஆற்றில் நீராடும் ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெறும். ஆறாட்டு நாகர்கோவிலின் வடக்கு எல்லையிலுள்ள ஒழுகினசேரி பழையாற்றில் நடைபெறும். தந்திரி அனந்தகிருஷ்ணனின் திருமேனியை தன் மார்போடு அணைத்துக் கொண்டு ஆற்றில் இறங்கி நீராடுவார். முடித்து ஆற்றின் கரையில் அரிசிமாவு, மஞ்சள் பொடி, தயிர், பால், தேன், நெய், பன்னீர், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடைபெறும். வெண்பொங்கல் படைக்கப்பட்டு பூஜை நடைபெறும்.

தன் சகோதரனுடன் ஆறாட்டுக்குவரும் கொம்மணடையம்மனும் நீராடி பூஜைகள் முடித்து வடசேரிக்கு புறப்பட்டு செல்வார். ஆறாட்டு முடித்து அனந்தகிருஷ்ணன் அலங்கரிக்கப்பட்ட ஆதிசேடன் வாகனத்தில் எழுந்தருளி உலா வருவார். மக்கள் வழிபட ஆற்றிலிருந்து கோவில்வரை உள்ள வீடுகளில் வாகனம் நிறுதப்படும். தேர்வீதிகளையும் சுற்றி கோவிலுக்குள் வந்தடைந்தப்பின் பூஜைகள் நடைபெறும். தந்திரி கொடியை இறக்கியபின் அனந்தகிருஷ்ணனை ஆதிசேட வாகனத்தில் இருந்து கருவறைக்குள் அமர்த்துவர். அதன் பின் பூஜையும் பூஜைக்கு பின் திருப்பலியும் நடைபெறும்.

களபம் சாத்துதல்

பத்து நாள் திருழா முடிந்து கொடி இறக்கியபின் பதினொன்றாம் நாள் களபம் சாத்துதல் நிகழ்ச்சி நடைபெறும். களபம் நிரப்பப்பட்ட மூன்று வெள்ளிக் கலசங்களுக்கு பட்டு கட்டி மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்டு களபம் கொண்டு அனந்தகிருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்யப்படும். களபம் சாத்துதல் முடிந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

வரலாறு

நாகராஜா கோவில் கல்வெட்டுச் சான்றுகளின்படி பதினாறாம் நூற்றாண்டுவரை சமணப்பள்ளியாக இருந்துள்ளது. சிதறால் மலைகோவில் கல்வெட்டுகளின் காலம் 9-ம் நூற்றாண்டு என்பதால் அதன் சமகாலத்தில் முக்கிய வணிகத் தலமான கோட்டாறில் இப்பள்ளி செயல்பட்டிருக்கலாம் என ஆய்வாளர் செந்தீ நடராசன் ஊகிக்கிறார். கோவில் இருக்கும் பகுதி கோட்டாறு என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது.

ஐந்தாவது கற்பலகை

நாகராஜா கோவில் கல்வெட்டுகளின் படி வழிபாட்டிற்காக விடப்பட்ட நிலம் திருவிடையாட்டமாக விடப்படாமல் பள்ளிச்சந்தமாக விடப்பட்டுள்ளது சமணப்பள்ளி என்பதற்கு சான்றாக உள்ளது. அனந்தகிருஷ்ணன் கருவறை மூலவருக்கு இரவுணவு அளிக்கப்படாததற்கு சமணர்களுக்கு இரவுணவு உண்ணும் பழக்கம் இல்லை என்பதை காரணமாக கொள்கிறார் செந்தீ நடராசன். சமணப்பள்ளியாக இருந்த கோவில் நாகராஜா(தர்னேந்திரன்) சந்நிதி 17-ம் நூற்றாண்டில் அனந்தாழ்வார் சந்நிதியாக மாறி பின்னர் கிருஷ்ணன், அனந்த கிருஷ்ணன் சந்நிதியாக மாறியுள்ளது.

”சிவலிங்கம் நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டிருக்கலாம். கருவறை அமைப்பைப் பார்த்தாலேயே புரியும் – இடையே நுழைக்கப்பட்ட கருவறை சிவன் சந்நதி . இச்சந்நதி அமைக்கப்படும்போது எந்த கோவில் கட்டிட ஆகமவிதியையும் பின்பற்றியதாகத் தெரியவில்லை.” என்று செந்தீ நடராசன் கூறுகிறார்.

கல்வெட்டுகள்

நாகராஜா கோவில் முகமண்டபம், திருச்சுற்றுகள், அனந்தகிருஷ்ணன் கருவறைச் சுவர்களில் என பன்னிரண்டு கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகள் தமிழிலும் தமிழும் கிரந்தமும் கலந்த மொழியிலும் உள்ளன.

நாராயணன் நயினான் குணவீர பண்டிதன் மற்றும் சீவகாருடையான் கமலவாகன பண்டிதன் என்னும் சமண சமயப் பெரியவர்கள் நாகராஜா கோவில் வளாகத்தில் வீடு கட்டி கோவிலை நிர்வகித்துள்ளனர். இவர்கள் பொ.யு. 1505 முதல் பொ.யு. 1521 வரை ஏழுமுறை பள்ளிச்சந்தமாக நிலம் தந்துள்ளதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

கல்வெட்டுகள்
இடம் காலம் மொழி செய்தி
நுழைவாயில் வலப்பக்க கல்ப்பலகை பொ.யு. 1503 தமிழ் நாகர் நாகராஜா பூஜைக்கும் அமுதுபடி செலவிற்கும் குணவீர பண்டிதனும் கமலவாக பண்டிதனும் அளித்த நிபந்தம், நிலவிவரம் விரிவாக உள்ளது.
நுழைவாயில் வலப்பக்க கல்பலகை பொ.யு. 1514 தமிழ் பெரும்பாலான வரிகள் குறியீடுகளால் ஆனவை. நாகர்க்கும் நாகராஜாவிற்கும் தினப்படி பூஜைக்கும் ஜாயிறு பூஜைக்கும் குணவீர பண்டிதனும் கமவாகன பண்டிதனும் பள்ளிசந்தமாக நிலம் அளித்துள்ளனர். இரு பண்டிதர்களும் பள்ளி உடையான் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
வெளித் திருச்சுற்று முகமண்டப நுழைவாயிலின் வலப்பக்கம் மூன்றாவது கல்ப்பலகை பொ.யு. 1516 தமிழ் கோட்டாறான மும்முடிச் சோழபுரத்து நாகர் கோவிலில் பள்ளி உடைய குணவீர பண்டிதனும் கமலவாக பண்டிதனும் நாகர்க்கும் நாகராசாவிற்கும் பூஜைக்கு நாள் ஒன்றுக்கு சாத்துபடி திருமாலை உள்பட்ட வகைக்கும் அமுதுபடிக்கும், ஞாயிறு எண்ணெய்க் காப்புக்கும் நிபந்தமாக நிலம் பள்ளிசந்தமாக விடப்பட்டுள்ளது
நுழைவாயில் வலப்பக்க கல்ப்பலகை பொ.யு. 1518 தமிழ் நாகர்க்கும் நாகராஜாவிற்கும் வழிபாட்டிற்காக குணவீர பண்டிதனும் கமவாகன பண்டிதனும் சேரவன் மாதேவி என்னும் ஊரில் சில நிலங்களை பள்ளிச்சந்தமாக அளித்துள்ளனர்.

கல்வெட்டில் குறியீடுகள் அதிகம்.

வலப்பக்க நான்காம் கல்ப்பலகை பொ.யு. 1520 தமிழ் குணவீர பண்டிதனும் கமவாகன பண்டிதனும் நாகர்க்கும் நாகராஜாவிற்கும் வழிபாட்டிற்கு அமுதுபடி, விளக்கு எரிக்க இரண்டு மாக்காணி நிலம் பள்ளிச் சந்தமாக அளிக்கப்பட்டுள்ளது.

உமைபங்கனேரி அருகே பெருவழி, கலியன்குளம், செங்குளம் போன்ற பெயர்கள் உள்ளன.

நுழைவாயில் வலப்பக்க கல்பலகை பொ.யு. 1520 தமிழ் நாகர்க்கு வீரமார்த்தாண்டன் சந்தி உச்சி பூஜை நடத்துவதற்குக் கறியமுது திருவமுது படைக்க வீரமார்த்தாண்டன் பள்ளிசந்தமாக நிபந்தம் அளித்துள்ளார். நிபந்ததை குணவீர பண்டிதன் மற்றும் கமவாகன பண்டிதன் ஆகியோர் கைகளில் ஒப்படைக்கிறார். அர்சர் களக்காடான சோழகுல வல்லிபுரத்து வீரமார்த்தாண்ட சதுர்வேதி மங்கலம் என வேணாட்டு அரசன் பேரால் உருவான ஊரில், புதியவீட்டில் இருந்து இந்த நிபந்தத்தை கொடுத்திருக்கிறான்.
நுழைவாயில் வலப்பக்க கல்ப்பலகை பொ.யு. 1521 தமிழ் பெருமளவில் குறியீடுகள் உள்ளன. குணவீர பண்டிதனும் கமவாகன பண்டிதனும் நிபந்தம் கொடுத்துள்ளனர். அவர்கள் இருந்த வீடு சிங்கப்பெருமாள் அகம் என அழைக்கப்படுகிறது.
அனந்தகிருஷ்ணன் கருவறை பின்பக்கச் சுவர் பொ.யு. 1588 தமிழ் கோவிலில் உள்ள திருவனந்தாழ்வார் பூஜைக்கு கருங்குளம் வளநாட்டு கும்பிகுளத்துத் திருகுருகைப் பெருமாள் ஒரு நாளைக்கு ஒரு உழக்கு அரிசியாக ஒரு ஆண்டுக்கு அளிக்க பணம் 65 கொடுத்துள்ளார்

இங்கு அனந்தகிருஷ்ணன் 'திருவனந்தாழ்வார்’ என்று அழைக்கப்படுகிறார்

முகமண்டபத் தூண் பொ.யு. 1641 தமிழ் குலசேகரப் பெருமாள் நாகராஜருக்கு கொன்றை மாலை அளித்துள்ளார்
நுழைவாயில் வலப்பக்க முதல் கல்ப்பலகை பொ.யு. 1645 தமிழ் நாகர்க்கும் நாகராஜாவுக்கும் மகாத்தோரண விளக்கொன்று எரிப்பதற்கு மாளுவநம்பியார் மாளுவ நம்பியும் தம்பிரான்குட்டி சடையனும்பலரிடம் இருந்து பணம் வசூலித்து நாகர் ஸ்ரீ பண்டாரத்தில் 600 பணம் கொடுக்கப்பட்டதும் பணம் வசூலிக்கப்பட்ட நபர்களின் பட்டியலும் உள்ளது.

தண்டல், பலிசை, பிணமாலை அணஞ்சபெருமாள், கலியுகத்து உழையன் போன்ற பெயர்கள் உள்ளன.

உசாத்துணை

  • தென்குமரி கோவில்கள், முனைவர் ஆ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு - 2018.
  • நாகராஜாகோவில், சிவ. விவேகானந்தன், காவ்யா பதிப்பகம், முதல் பதிப்பு - 2007.
  • குமரியில் சமணத்தின் சுவடுகள், செந்தீ நடராசன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 2021.
  • கன்னியாகுமரி மாவட்ட கல்வெட்டுகள், அ. கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு - 2023.
  • நாகராஜா கோவில்- தினமலர்
  • நாகராஜா கோவில் - findmytemple


✅Finalised Page