under review

நல்லெழுநியார்

From Tamil Wiki

நல்லெழுநியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று பரிபாடலில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

நல்லெழுநியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

நல்லெழுநியார் பாடிய பாடல் பரிபாடலில் 13-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. திருமாலின் பல நிலைகளையும் தத்துவங்களையும் இப்பாடலில் விரித்துப் பாடியுள்ளார்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • திருமால் நீல நிற மலையில் தோன்றும் ஞாயிறு போல் அழகிய ஆடையும் மணிமுடியும் அணிந்தவன்.பொன்னும் மணியும் அடித்துக்கொண்டு மலையிலிருந்து இறங்கும் அருவி போல் மாலை அணிந்திருப்பான்.கருடப் பறவை பொறித்த கொடியைப் பிடித்துக்கொண்டிருப்பான்.அவன் கையிலிருக்கும் சக்கரம் தண்ணொளி தரும் நிலாவைப் போன்று இருக்கும்.கார்ப் பருவத்தில் ஞாயிறும் திங்களும் தோன்றுவது போல சங்கும் சக்கரமும் கையில் ஏந்திக்கொண்டிருப்பான்.மேகத்து மின்னல் போல் மார்பில் பொன்னணி அணிந்திருப்பான்.அருவி கொட்டுவது போல மார்பில் முத்தாரம் அணிந்திருப்பான்.
  • நா அறியும் சுவை, செவி அறியும் இசை, கண் அறியும் தோற்றம், மூக்கு அறியும் நாற்றம், உடம்பு அறியும் தொடு-உணர்வு ஆகியவற்றால் நீ போரிடுகிறாய். நா, செவி, கண், மூக்கு, மெய் ஆகியவை உன் போர்க்கருவிகள். 5 பூதங்களில் முதல் பூதத்தில் விசும்பாக விளங்குகிறாய். அது உயிர்.உயிர் உணர்ந்து வாங்கிக் கொள்ளும் மூச்சும் நீ.உயிரும் மூச்சும் உணரும் உடல் வெப்பமும் நீ.உயிர், மூச்சு, உடல்வெப்பம் மூன்றும் உணரும் குளுமை நீரும் நீ.உயிர், மூச்சு, உடல்வெப்பம், உடல்-தண்மை நான்கிலும் உணரும் நிலமும் நீ.அதனால் உன்னிடம் 3 ஆக இருக்கும் 7 உலகங்களின் மூலங்களும் தோன்றின.அறத்தை முதலாகக் கொண்ட பொருள் இன்பங்களும் தோன்றின.மூன்று காலங்களும் விசும்பும் உயிரோட்டமும், காற்றின் அசைவும், வெப்பத்தின் சலனமும் தோன்றின.
  • நீல நிறத்துக்கு நடுவில் பாற்கடல்.பாற்கடலுக்கு நடுவில் 1000 தலை கொண்டபாம்பு.அந்தப் பாம்புப் படுக்கையில் துளசி மாலை அணிந்துகொண்டு துயில்கிறான்.எல்லாவற்றையும் அறிந்துகொண்டே உறங்குகிறான்.படையோடு வந்து தாக்கும் திறனாளிகளின் உயிரைப் போக்க அவர்களின் நெஞ்சத்தை உழும் கலப்பையுடன் விளங்குபவன் நாஞ்சிலோன் என்னும் பரசுராமன்.பன்றி உருவில் கொம்பில் பொன்னாலாகிய பூண் அணிந்துகொண்டு, நிலத்தை உழும் பன்றிக்களிறு அவன். பாற்கடல் உறக்கம், பரசுராமன் தோற்றம், பன்றி உருவம் ஆகிய 3 உருவங்களாகப் பிரிந்து விளங்குபவன் திருமால்.
  • பாம்பைப் பகையாகக் கொண்ட படர்ந்த சிறகினை உடைய கருடனைக் கொடியாகக் கொண்ட வளைந்துகொடுக்காத செல்வன் நீ.உன் ஆணை இது என்று வேதங்களாகிய முதுமொழிகள் கூறுகின்றன.கருடச் சேவல் ஓங்கியிருக்கும் கொடியை உடைய செல்வன் நீ.புகழின் உருவமாகத் திகழ்பவன் நீ.கார் மேகம், காயாம் பூ, கடல், இருள், மாணிக்கம் ஆகியஐந்தும்போல நிறம் கொண்டவன் நீ. வலம்புரிச் சங்கு, பலிக்கும் வாய்மொழி, அதிரும் வான், முழங்கும் மேகம் ஆகியநான்கும்போல் அருளும், அழிக்கும் ஆற்றலும் கொண்டவன் நீ.முடிந்தது, முடிந்துகொண்டிருப்பது, முளைக்கப் போவதுமூன்றையும்அறிந்தவன் நீ. இவற்றைக் கடந்தவனும் நீ.உன் காலடி நிழலில் இவை கிடக்கின்றன.செயலில் நன்மை தீமை என்றுஇரண்டுஇல்லாதவன் நீ.உள்ளத்தில்ஒருமைப்பாட்டோடு செயல்படுபவன் நீ.அடைந்து கிடப்பதை விடுத்து மலரும் இதழ்களைக் கொண்டதுதான் எங்களைத் தாங்கிக்கொண்டிருக்கும்உன் அடி, கை, கண், வாய், தொடை, உந்திக் கொப்பூழ், தோளில் அணியும் வளையம், உள்ளங்கால், தோள், பிடரி ஆகிய தாமரை.மறையாக விளங்கும் கேள்வி, அறிவு, அறம் ஆகியவற்றில் நீ நுட்பமானவன்.வேள்வி செய்தல், போரிடுதல் ஆகியவற்றில் நாட்டம் கொண்டவன் நீ. அற்றுப்போகாத வலிமை, சினம் கொள்ளாமல் சிவந்திருக்கும் கண், போராற்றல் மிக்க ஆழிச்சக்கரம் அகியவற்றைக் கொண்ட செல்வன் நீ.வெல்லும் போரில் எரித்து நகைக்கும் துளசி மாலை மரபோடு அணிந்த மார்பினை உடையவன் நீ. நீதான் தாய் என்று எண்ணி உன் திருவடியைத் தொழுகின்றோம்.பல முறை வணங்குகின்றோம், வாழ்த்துகின்றோம்.நாங்கள் செய்துவந்த தவத்தின் பயனாக உன்னைத் தொழுவது எங்களுக்கு உள்ள காம வேட்கை. இந்தப் பேற்றினை எங்களுக்குத் தந்தருள்வாயாக.

பாடல் நடை

பரிபாடல் - 13

  • பண்: நோதிறம்
  • கூற்று:கடவுள் வாழ்த்து

மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று
அணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி,
இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின்
நிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி,
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத்
தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்!
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையான்
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண்,
அருவி உருவின் ஆரமொடு, அணிந்த நின்
திரு வரை அகலம் தொழுவோர்க்கு
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து.
...............................................................................................

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Sep-2025, 11:47:22 IST