under review

நற்செய்திக் காவியம்

From Tamil Wiki

நற்செய்திக் காவியம் கிறிஸ்தவக் காப்பிய நூல்களுள் ஒன்று. பரிசுத்த வேதாகமத்தில் உள்ள நான்கு நற்செய்தி நூல்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது. இந்நூலின் ஆசிரியர், ஆர்.எஸ். அருளானந்தம்.

பிரசுரம், வெளியீடு

தமிழ்ப் பேராசிரியரும், கிறிஸ்தவ இறைத் தொண்டருமான ஆர்.எஸ். அருளானந்தம், 2000-த்தில், பாளையங்கோட்டையிலிருந்து, நற்செய்திக் காவியம் நூலை இயற்றி வெளியிட்டார்.


ஆசிரியர் குறிப்பு

ஆர்.எஸ். அருளானந்தம், திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் 1938-ல் பிறந்தார். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில், ஆங்கிலப் பேராசிரியராகவும், ஆங்கிலத் துறைத் தலைவராகவும் பணிபுரிந்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரியாகப் பணியாற்றினார்.

இயேசுவின் ஏழு வார்த்தைகள், வேதனையில் வெற்றி - யோபின் வரலாறு, திருத்தொண்டர் கால்ட்வெல் போன்ற பல நூல்களை எழுதினார். இவர் எழுதிய குறிப்பிடத்தகுந்த நூல் நற்செய்திக் காவியம்.

நூல் அமைப்பு

நற்செய்திக் காவியம், இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவு, ’மனிதனின் தோற்றமும், வளர்ச்சியும்’ குறித்து ஐந்து இயல்களில் கூறுகிறது. இப்பகுதி பழைய ஏற்பாட்டுச் செய்திகளைக் கொண்டுள்ளது. இறைவனது படைப்பின் மகிமை, உலகம் தோன்றியது, மனிதன் தோன்றியது, சாத்தானின் குறுக்கீடு, மனிதன் வீழ்ந்து பாவம் தோன்றியது போன்ற செய்திகள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இரண்டாம் பிரிவான, ‘மன்னிப்பும் மீட்பும்’ ஐந்து பாகங்களைக் கொண்டது/

  • முதல் பாகம்- இயேசுவின் பிறப்பு, குழந்தைப் பருவம் பற்றிய செய்திகள் (எட்டு இயல்கள்)
  • இரண்டாம் பாகம் -இயேசுவின் போதனைகள், பிற அரிய செயல்கள் (பன்னிரண்டு இயல்கள்)
  • மூன்றாம் பாகம் -சிலுவையில் இயேசு (பதின்மூன்று இயல்கள்)
  • நான்காம் பாகம்- இயேசு உயிர்த்தெழுந்த செய்திகள்,(மூன்று இயல்கள்)
  • ஐந்தாம் பாகம்-இயேசுவின் தொடர்ந்து செயல்படும் மகத்துவங்கள் (இரண்டு இயல்கள்)

உவமைகள், அணிகள், வருணனைகள், பழமொழிகள் போன்றவை இந்நூலில் அதிகம் இடம்பெறவில்லை. இவற்றால் நற்செய்திக் கருத்துக்கள், அற்புதங்கள். பாடு, மரணம், உயிர்ப்பு முதலிய கருத்துக்களில் வெளிப்படும தெய்வீக உணர்வுகள் சிதைந்து விடக் கூடும் என்று ஆசிரியர் கருதியதால் இலக்கியக் கூறுகளை அதிகம் கையாளவில்லை. வசனப் பகுதிகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

43 உட்பிரிவுகளையும், 4600 அடிகளையும் கொண்டதாய் நற்செய்திக் காவியம் அமைந்துள்ளது.

பாடல்கள்

ஏதேன் தோட்டத்தின் வர்ணனை

தெளிந்த நீர் ஓடும் ஆறு
கண்ணிமைக்காமல் நீந்தும் மீன்
செங்கால் நாரை வெண்ணிற அன்னம்
இசைக்குயில் தோகை விரித்தாடும் மயில்
சிறகொடு உயரப்பறந்திடும் கழுகு
சிறுத்தை வேகமாய் ஓடும் மான்
ஒட்டகம் தாவிடும் குரங்கு
கரடி ஓங்கிய ஒட்டகச் சிவிங்கி
குதிரை துதிக்கையால் நீரை விசிறிடும் யானை
ஆல் அரசு பனை தென்னையுடன் தேக்கு
மா பலா வாழையுடன் கொய்யா
பசும்புல் செம்பருத்தி வெண்தாமரை
முள்ளே இல்லாப் பல்வகை ரோஜா
இன்னும் பிறமரம் பூ கனி

இயேசு அடைந்த துன்பம்

அவர் ஆடையைத் தொட்டுக்
குணம் அடைந்தாள் பெண்ஒருத்தி
இன்று அதே ஆடையில்
இகழ்வாரின் உமிழ்நீர்
தொழுநோயாளி பலரைக்
கூசாமல் தொட்டுக்
குணமாக்கிய கரங்களில்
இன்று இரும்பு விலங்கு
கன்னம் ஒன்றில் அறைந்தால்
மறுகன்னம் காட்டிடு என்ற
கோமானின் முகத்தில்
இன்று முரடரின் கைத்தடம்

மதிப்பீடு

நற்செய்திக் காவியம், காப்பியத்திற்குரிய இலக்கணங்களை அடிப்படையாகக் கொள்ளாமல், வேதாகமத்தின் நற்செய்திகளைக் கூறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை, விவிலியப் பின்னணியில் காவியமாகப் படைப்பதையே நோக்கமாகக் கொண்டு நற்செய்திக் காவியம் இயற்றப்பட்டுள்ளது.

நற்செய்திக் காவியம், கிறித்தவக் காப்பியங்களுள் வசன நடைக் காப்பியமாக மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page