under review

நந்தி (இதழ்)

From Tamil Wiki
நந்தி (இதழ்)

நந்தி (1963) சித்த மருத்துவம் சார்ந்த மாத இதழ். சென்னை ஷெனாய் நகரிலிருந்து வெளிவந்தது. நந்தி இதழின் நிர்வாகியாக திருமதி குட்டியம்மாள் வேணுகோபால் செயல்பட்டார். ஸ்ரீலஸ்ரீ சுந்தரானந்த சரஸ்வதி இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

பதிப்பு, வெளியீடு

சித்த மருத்துவம் சார்ந்த செய்திகளை மக்களுக்குத் தர வேண்டும் என்ற நோக்கத்தில், நவம்பர் 1963-ல், சென்னை ஷெனாய் நகரில் தோற்றுவிக்கப்பட்ட இதழ் நந்தி. ஸ்ரீலஸ்ரீ சுந்தரானந்த சரஸ்வதி இதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் பணிபுரிந்தார். திருமதி குட்டியம்மாள் வேணுகோபால் இதழின் நிர்வாகியாகச் செயல்பட்டார். நந்தி பதிப்பகம் இவ்விதழை வெளியிட்டது.

1965-ல், 36 பக்கங்களுடன் வெளிவந்த இதழ், 1966-ல் 24 பக்கங்களுடன் வெளிவந்தது. இதழின் ஆண்டுச் சந்தா ஐந்து ரூபாய். சந்தாதாரர்களுக்கு மட்டுமே இவ்விதழ் அனுப்பி வைக்கப்பட்டது.

உள்ளடக்கம்

‘நந்தி சித்த வைத்திய திங்கள் இதழ்’ என்ற வாசகங்கள் இதழின் உள் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றன. ஆண்டினைக் குறிக்க மாலை என்பதையும், மாதத்தைக் குறிக்க மலர் என்பதையும் நந்தி இதழ் பயன்படுத்தியது. சித்த வைத்தியம், மக்கள் உடல்நலம் ஆகியவற்றுக்கு இந்த இதழ் முக்கியத்துவம் அளித்தது. சித்த மருத்துவம் சார்ந்த செய்திக் கட்டுரைகள், அனுபவ வைத்தியக் குறிப்புகள், சித்த மருத்துவர்களின் ஆலோசனைகள் இவ்விதழில் இடம் பெற்றன.

புதிய இதழ்கள், நூல்கள் பற்றிய அறிமுகம் இதழ்தோறும் வெளிவந்தது. சித்த மருந்துங்கள், சித்த மருத்துவர்களின் விளம்பரங்கள் அதிகம் இவ்விதழில் இடம் பெற்றன. அகத்தியர் வாகடம், கொங்கணர் முப்பூ வைத்தியம் போன்ற நூல்களிலிருந்து மருத்துவம் குறித்த பாடல்கள் விளக்கங்களுடன் இடம் பெற்றன. சித்த மருந்துகள் செய்முறை பற்றிய கட்டுரைகள் விளக்கங்களுடன் வெளியாகின. சித்த மருத்துவம் குறித்த வினா-விடைகளும் நந்தி இதழில் இடம் பெற்றன.

குடும்பக்கட்டுப்பாட்டிற்குச் சிறந்த மருந்து, கருப்பை சுருங்கி பிள்ளைப்பேறு ஏற்படாமல் இருக்க மருந்து, இருதய நோய்க்கு மருந்து எனப் பல்வேறு மருந்துகளின் செய்முறை விளக்கங்கள் நந்தி இதழில் இடம் பெற்றன. மரணமில்லா வாழ்வும் சித்தர் காயகற்பமும், கருவின் லீலைகள், மருத்துவ வெண்பா எனப் பல்வேறு தலைப்புகளில் படைப்புகள் இடம் பெற்றன. சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்ற சித்த மருத்துவர்கள் பலர் இவ்விதழில் கட்டுரைகளை எழுதினர்.

நிறுத்தம்

நந்தி இதழ் எத்தனை ஆண்டுகள் வெளிவந்தது, எப்போது நின்று போனது என்ற விவரங்களை அறிய இயலவில்லை.

வரலாற்று இடம்

மருத்துவம் சார்ந்து பல இதழ்கள் வெளிவந்த காலக்கட்டத்தில், சித்த மருத்துவம் சார்ந்து, மருந்துத் தயாரிப்பு முறைகள் பற்றிய விளக்கமான கட்டுரைகளைக் கொண்ட இதழாக ‘நந்தி’ இதழ் வெளிவந்தது.

உசாத்துணை


✅Finalised Page