under review

நகர தூதன் (இதழ்)

From Tamil Wiki
நகர தூதன் இதழ் - 1934 (வெளியீடு: திருச்சி, உறையூர்)

நகர தூதன் (1930) சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் வெளிவந்த வார இதழ். திருச்சி உறையூரிருந்து வெளிவந்த இவ்விதழின் வெளியீட்டாளர், ஆசிரியர் எம். இரத்தினம் மற்றும் எம். துரைசாமி. சில ஆண்டுகளுக்குப் பின் மணவை ரெ. திருமலைசாமி இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். பாரதிதாசனின் தொடக்கக் காலப் படைப்புகள் நகர தூதனில் வெளிவந்தன.

நகர தூதன் இதழ் - 1945 (வெளியீடு: சென்னை)

பிரசுரம், வெளியீடு

ஆகஸ்ட் 25, 1930 முதல், திருச்சி உறையூரில் இருந்து வெளிவந்த வார இதழ், நகர தூதன். சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் வெளிவந்த இவ்விதழ், ஞாயிறு தோறும் வெளிவந்தது. வெளியீட்டு ஆண்டினைக் குறிக்கப் 'போர்' என்பதையும், மாதத்தினைக் குறிக்க 'வெற்றி' என்பதையும் நகர தூதன் கையாண்டது. தொடக்கக் கால இதழ்களில் 18 முதல் 20 பக்கங்கள் இடம் பெற்றன.

பிற்காலத்தில் சென்னையிலிருந்து வெளிவந்த போது எட்டு பக்கங்கள் கொண்ட இதழாக வெளிவந்தது. அக்காலக்கட்டத்தில் தனிப்பிரதி இதழின் விலை 1 அணா 6 பைசா. வருஷ சந்தா ஆறு ரூபாயாக இருந்தது.

உள்ளடக்கம்

நகர தூதன் இதழின் முகப்புப் பக்கத்தில், ‘நகர தூதன்’ என்னும் இதழின் தலைப்பின் மேல், THE CITY HERALD என்ற குறிப்பு இடம் பெற்றது. பிற்காலத்து இதழ்களில் இக்குறிப்பு இடம்பெறவில்லை. பிற்காலத்து இதழ்களின் முகப்பில் ‘நகர தூதன்’ என்ற தலைப்பிற்குப் பின்னால், திருச்சி மலைக்கோட்டையின் சித்திரம் இடம் பெற்றது.

ஆரம்ப கால நகர தூதன் இதழ்களில்,

புற்றில்வாழ் அரவுக் கஞ்சோம் பொய்யர்தம் மெய்யுக் கஞ்சோம்

விற்றொழில் வேந்தர்க் கஞ்சோம் வெஞ்சிறை வாழ்வுக்கஞ்சோம்

கோற்றொழில் பீரங் கிக்கும் கொடும்பணத் திமிர்க்கு மஞ்சோம்

பற்றில்லா ஏழைக் கண்ணீர் பார்க்கநாம் அஞ்சு வோமே!

- என்ற பாடல் வரிகளைத் தனது கொள்கையாக அறிவித்து வெளிவந்தது. சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர்கள் பலர் நகர தூதன் இதழில் எழுதினர். திருச்சி மட்டுமல்லாது பிற நகரச்‌ செய்திகளுக்கும்‌ முக்கியத்துவம் அளித்து நகரதூதன் வெளியிட்டது. சுயமரியாதை இயக்கச் செய்திகள், ஈ.வெ.ரா. பெரியார் குறித்த செய்திகள், நீதிக் கட்சியின் கூட்டங்கள், திருச்சியில் நடந்த முக்கியமான சம்பவங்களைப் பற்றிய செய்திக் குறிப்புகள் நகர தூதனில் இடம் பெற்றன.

‘பேனா நர்த்தனம்’ என்ற பகுதியில், ‘கேசரி’ என்ற புனை பெயரில், மணவை ரெ. திருமலைசாமி தொடர்ந்து அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதினார். கேலியும், கிண்டலும், சீற்றமும் கொண்ட அவரது நடைக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒருங்கே இருந்தன. இந்தியைக் கட்டாயமாக்கும் உத்தரவுக்கு முன்பே இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து வாரந்தோறும் பல கட்டுரைகளை நகர தூதன் வெளியிட்டது. இந்தியை ஆதரித்துப் பிற இதழ்களில் வந்த கட்டுரைகளுக்கு மறுப்புக் கட்டுரைகளை ஈழத்துச் சிவானந்த அடிகள் எழுதினார். ‘தமிழ்நாடு தமிழருக்கே!’, ‘திராவிடர்‌ நாடு திராவிடருக்கே!’ போன்ற கருத்துக்களை முன் வைத்து பல கட்டுரைகள் நகர தூதன் இதழில் வெளிவந்தன.

‘முசோலினியின்‌ முற்கால ஒழுக்கம்’, ‘ஸ்டாலின்‌ - டிராட்ஸ்கி விரோதிகளா? ரகசிய ஏஜெண்டுகளா?', ‘பிரிட்டனில்‌ 296 கோடீசுவரர்கள்’, ‘வீர பின்லாந்தின் போர்‌’ போன்ற உலக நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள்‌ நகர தூதனில் வெளியாகின. இரண்டாம்‌ உலகப்‌ போர்‌ குறித்த செய்திகளை ‘யுத்த டைரி’ என்ற தலைப்பில் படங்களுடன் வெளியிட்டது. இந்தித் திணிப்பையும், வடமொழி ஆதிக்கத்தையும் நகர தூதன் கடுமையாக எதிர்த்தது. இதழில் கேலிச் சித்திரங்களும் வெளியாகின.

திருச்சியிலிருந்து வெளிவந்த நகர தூதன், ‌ 1939 ஜூன்‌ மாதம்‌ முதல்‌ சென்னையிலிருந்து வெளிவந்தது. அக்கால கட்டத்தில் நகர தூதன் இதழின் இறுதிப்பக்கத்தில் திரைப்பட விளம்பரங்கள் வெளியாகின. திரைப்பட விமர்சனங்கள், படப்பிடிப்புகள், திரைப்படம் குறித்த செய்திகள், நடிக, நடிகையர் பற்றிய தகவல்கள் என திரைப்படச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நீதிக் கட்சியில் பிளவு ஏற்பட்டு திராவிடர் கழகம் தோன்றிய காலத்தில், நகர தூதன், நீதிக்கட்சி ஆதரவு இதழாகச் செயல்பட்டது. நீதிக் கட்சித் தலைவர் பி.டி. ராஜனை ஆதரித்தும், ஈ.வெ.ரா. பெரியாரை எதிர்த்தும் பல கட்டுரைகளை வெளியிட்டது. நீதிக் கட்சி குறித்த செய்திகள், கூட்டங்கள், தலைவர்களின் உரைகள் இதழில் வெளிவந்தன.

பங்களிப்பாளர்கள்

மற்றும் பலர்.

இதழ் நிறுத்தம்

1946 வரை வெளிவந்த நகர தூதன் இதழ், அதன் பின் எப்போது நின்று போனது என்ற விவரங்கள் கிடைக்கவில்லை.

ஆவணம்

நகர தூதன் இதழின் சில பிரதிகள் தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

வரலாற்று இடம்

நகர தூதன் இதழ் மூன்று கால கட்டங்களைக் கொண்டிருந்தது. முதல் காலக்கட்டத்தில் சுய மரியாதை இயக்க ஆதரவு இதழாக, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அதிகம் ஈடுபட்டு, மக்களைத் திரட்டிப் போராடிய இதழாக வெளிவந்தது. இரண்டாவது கால கட்டத்தில் ஈ.வெ.ரா. பெரியாரின் கொள்கைகளை ஆதரித்து வெளிவந்தது. மூன்றாவது கால கட்டத்தில் நீதிக் கட்சியை முழுமயாக ஆதரித்து வெளியானது. மாற்றுக் கருத்துக் கொண்டோரும் அதிகம் வாசித்த இதழ்களுள் ஒன்றாக நகர தூதன் அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page