under review

தொல். திருமாவளவன்

From Tamil Wiki
தொல். திருமாவளவன் (நன்றி: குணசீலன்)
தொல். திருமாவளவன்

தொல். திருமாவளவன் (பிறப்பு: ஆகஸ்ட் 17, 1962) அரசியல்வாதி, கட்டுரையாளர், பேச்சாளர், களச்செயல்பாட்டாளர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர், தலைவர். மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

பிறப்பு, கல்வி

தொல். திருமாவளவன் அரியலூர் மாவட்டம், செந்துரை அருகிலுள்ள அங்கனூர் கிராமத்தில் ஆகஸ்ட் 17, 1962-ல் ராமசாமி, பெரியம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஒரு அக்கா, இரு தம்பிகள். சொந்த ஊரில் பள்ளிக்கல்வி பயின்றார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பி.யூ.சி. பயின்றார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் குற்றவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். 1988-ல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். 2019-ல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 'மீனாட்சிபுரம் தலித்துகளின் மத மாற்றம் - ஒரு பாதிப்பியல் ஆய்வு' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.

பெயர்க்காரணம்

2002-ல் சாதி மத அடையாளங்களற்ற தூய தமிழ்பெயர்களை வைக்கும் பொருட்டு தன் தந்தையின் பெயரை தொல்காப்பியன் என்று மாற்றி தன் பெயரை தொல்.திருமாவளவன் என மாற்றினார். தன் குடும்பத்திலுள்ளவர்களும் தொண்டர்களும் அவ்வாறு பெயர் மாற்ற ஊக்கப்படுத்தினார்.

தனிவாழ்க்கை

தொல். திருமாவளவன் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமாவளவன் மதுரையில் அரசு தடயவியல்துறையில் அறிவியல் உதவியாளராக 1999-ம் ஆண்டு வரை அரசுப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

அம்பேத்கரின் மனைவி சவீதா ஆரம்பித்த ’பாரதீய தலித் பேந்தர்’ அமைப்பின் தமிழக அமைப்பாளரான மலைச்சாமியுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக 1982-ல் தன்னை அவ்வமைப்பில் இணைத்துக்கொண்டார். 1983-ல் நடந்த ஈழத்தமிழர்களுக்கான மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டார். 1986-ல் இலங்கையில் நடந்த தமிழ்க் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் நேரில் சென்று கலந்துகொண்டார். 1989-ம் ஆண்டு மலைச்சாமி இறந்தபின் 1990-ல் பாரதீய தலித் பேந்தர்ஸ் அமைப்பின் மாநில அமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் அந்த அமைப்பின் பெயரை ’இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்’ என மாற்றியதோடு, புதிய கொடியையும் அறிமுகப்படுத்தினார். நீலம் மற்றும் சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து ஏப்ரல் 14, 1990-ல் மதுரையில் அக்கொடியை ஏற்றினார். மீண்டும் 1991-ம் ஆண்டு அமைப்பின் பெயரை ’விடுதலைச் சிறுத்தைகள்’ என மாற்றினார்.

தொடக்கத்தில் தேர்தல் அரசியலை விமர்சித்தும், புறக்கணித்தும் வந்த திருமாவளவன் 1999-ம் ஆண்டு ஜி.கே.மூப்பனாரின் உந்துதலின் பெயரில் முதன்முறையாக மக்களவைத் தேர்தலை த.மா.கா கூட்டணியுடன் சேர்ந்து சந்தித்து தோல்வியடைந்தார். ஆனாலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். மங்களூர் தொகுதியில் நின்று வெற்றிபெற்று 2001-2006 காலகட்டங்களில் மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியிலிருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எழுத்து

தொல். திருமாவளவன் அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரைகள் எழுதினார். இவை புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

திரை வாழ்க்கை

'அன்புத்தோழி', 'கலகம்', 'மின்சாரம்' போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

விருது

  • 2006-ல் தமிழ்நாடு அரசு அம்பேத்கர் விருது வழங்கியது.
  • 2010-ல் குருகுலம், சென்னையின் கௌரவ டாக்டர் பட்டம்
  • 2020-ல் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது

நூல்கள் பட்டியல்

  • அத்துமீறு
  • தமிழர்கள் இந்துக்களா?
  • ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்
  • இந்துத்துவத்தினை வேரறுப்போம்
  • அமைப்பாய் திரள்வோம்
  • முள்வலி
  • அமைப்பாய்த் திரள்வோம்
  • கருத்தியலும் நடைமுறையும்

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Dec-2023, 07:57:12 IST