under review

தொண்டூர்-வழுவா மொழிப் பெரும்பள்ளி

From Tamil Wiki
தொண்டூர் வழுவாமொழி குகை

தொண்டூர்-வழுவா மொழிப் பெரும்பள்ளி (பொ.யு. 10-ம் நூற்றாண்டு) செஞ்சி அருகே உள்ள இயற்கை குகை. இது ஒரு சமணப்பள்ளியாக இருந்துள்ளது. இதனருகே தொண்டூர் அதிட்டானம் என்னும் இன்னொரு சமணக்குகைப்பள்ளி உள்ளது

இடம்

செஞ்சியிலிருந்து ஏறத்தாழ 22 கிலோ மீட்டர் வடகிழக்கிலுள்ளது தொண்டூர். இவ்வூரை ஒட்டியுள்ள மலையில் இயற்கையாக அமைந்த இரண்டு குகைகள் காணப்படுகின்றன. இவை வழுவாமொழி பெரும்பள்ளி எனப்படுகின்றன.

குகைகள்

இந்த குகைகளுள் ஒன்றின் உட்புறத்தில் சில இடங்களில் கற்படுக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. இப்படுக்கைகள் சுமார் ஏழு அடி நீளமும் மூன்று அடி அகலமும் உடையவையாய் திகழ்கின்றன. இந்த குகை மண், கல், ஆகியவற்றால் சிறிது மூடப்பெற்றிருப்பதாலும், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடப்பதாலும், இங்கு எத்தனை கற்படுக்கைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதை உறுதி செய்வதற்கில்லை. பொ.யு. 10-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இக்குகை சமணர் பள்ளியாக விளங்கியிருக்கிறது. இப்பள்ளி வழுவாமொழிப் பெரும் பள்ளி எனப்பெயர் பெற்றுள்ளது. .

பார்ஸ்வநாதர் சிற்பம்

குகையை அடுத்துள்ள பாறைப் பகுதியில் எழில் மிக்க பார்ஸ்வநாதர் புடைப்புச் சிற்பம் ஒன்று வடிக்கப்படுள்ளது. அருக தேவரது தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில், அவருக்குக் குடை பிடித்தாற் போன்று திகழ்கிறது. இதற்கு மேலாக முக்குடை வடிவமும் மெல்லியதாகத் தீட்டப் பெற்றிருக்கிறது. பொ.யு. 10-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

கல்வெட்டுக்கள்

தொண்டூரில் ஊர்பகுதியிலுள்ள சிறிய பாறையொன்றில் சோழர் காலக் கல்வெட்டுக்கள் இரண்டு பொறிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிலிருந்து இங்குள்ள குகைப்பள்ளி வழுவா மொழிப் பெரும்பள்ளி எனப் பெயர் பெற்றிருந்ததையும், இதனைப் பறம்பூரைச் சார்ந்த வஜ்ரசிங்க இளம் பெருமானடிகள் என்னும் துறவி நிர்வகித்து வந்ததையும் அறியலாம். இந்த பள்ளிக்கு விண்ணகோவரையன் வைரிமலையன் என்னும் வாணர் குலச்சிற்றரசன் பரகேசரி என்னும் பட்டப் பெயர் பூண்ட சோழ மன்னனது ஆட்சியின் போது, குணநேரிமங்கலம் என்ற ஊரையும், தொண்டூரிலிருந்த சில தோட்டங்களையும், கிணறுகளையும் தானமாக அளித்திருக்கிறான். இந்த பள்ளிச் சந்த நிலங்கள் அனைத்தும் பள்ளியைக் கண்காணித்து வந்த வஜ்ரசிங்க இளம் பெருமானடிகளின் பொறுப்பில் விடப்பட்டிருக்கின்றன. தானமாக அளிக்கப்பட்ட குணநேரி மங்கலத்திற்கு வழுவாமொழி ஆரந்தி மங்கலம் எனவும் பெயர் வழங்கப் பெற்றிருந்ததாக அறியமுடிகிறது.

இந்த விண்ணகோவரையன் வைரிமலையன் விண்ணகோ வரைய நாடு என்னும் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள குளங்களை ஆண்டுதோறும் முறையாகப் பராமரிப்பதற்காக வேண்டி விளைநிலங்களிலிருந்து பெறப்படும் ஒருபகுதி வரியினை ஒதுக்கியிருக்கிறான். அதாவது ஒரு காடி அளவுள்ள நிலத்திற்கு ஒரு நாழி நெல்வீதம் கொடுக்கப்படவேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த குளங்கள் தொண்டூர், குணநேரிமங்கலம் ஆகிய ஊர்களில் இருந்திருக்க வேண்டும்.

தொண்டூரிலுள்ள பள்ளியை நிர்வகித்து வந்த துறவியாகிய வஜ்ரசிங்க இளம்பெருமானடிகள் என்பவர் பறம்பூரைச் சார்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. இது செய்யாறு தாலுக்காவில் உள்ள திருப்பறம்பூரே (திருப்பனம்பூர்) ஆகும். இது வரலாற்றுச் சிறப்புமிக்க சமணத்தலம்.

தொண்டூரிலுள்ள தமிழ் கல்வெட்டுக்கள் இரண்டும் கோப்பரகேசரி என்னும் பட்டப்பெயர் பூண்ட சோழமன்னனது மூன்றாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டவையாகும். இவற்றில் அரசனது இயற்பெயர் குறிப்பிடப்படவில்லை. முதலாம் இராசராச சோழனுக்கு முந்திய அரசர்களது சாசனத்தில்தான் பட்டப்பெயர்களை மட்டும் குறிப்பிடும் வழக்கம் இருந்திருக்கிறது. அவ்வகையில் கோப்பரகேசரி என்னும் பட்டப்பெயர் பூண்டு, தொண்டை நாட்டையும் தன் வசப்படுத்தி ஆட்சிபுரிந்த சோழமன்னன் முதலாம் பராந்தகன் என ஊகிக்கப்படுகிறது. எனவே இந்த சாசனங்கள் முதற்பராந்தகனது மூன்றாம் ஆட்சியாண்டாகிய பொ.யு. 910-ல் பொறிக்கப்பட்டவை. எனவே இக்கல்வெட்டுக்களின் வரிவடிவமும், பார்ஸ்வநாதர் சிற்பத்தின் கலைப்பாணியும் பொ.யு.10- ஆம் நூற்றாண்டின் தொடக்ககட்டத்தைச் சார்ந்திருப்பது இதனை மேலும் உறுதிசெய்கிறது.

முதற்பராந்தகனுக்கு அடங்கி வாணர் குலச்சிற்றரசர்கள் தென்னார்க்காடு மாவட்டப்பகுதியை ஆட்சிபுரிந்து வந்த இவர்கள் வழியில் தோன்றிய சிற்றரசனே விண்ணகோவரை வைரிமலையனாவான். இவன் ஆட்சிபுரிந்த பகுதி விண்ணகோவரையர் நாடு எனவும், அது சிங்கபுர நாட்டிற்குடம் பிரிவு என்பதும் அறியப்படுகிறது.சிங்கபுர நாடு என்பது செஞ்சியை அடுத்துள்ள சிங்கபுரத்தை மையமாகக்கொண்ட பல ஊர்களடங்கிய நிலப்பரப்பாகும். இதில் தீவனூர், மேல்சேவூர், சித்தாமூர், தாயனூர், பெருங்களத்தூர் முதலிய பல்வேறு ஊர்களும் அடங்கியதாக இருந்திருக்கிறது.

இந்த சிங்கபுர நாட்டின் உட்பிரிவாகத் திகழ்ந்ததே விண்ணகோவரையர் நாடு என்னும் சிறு நிலப்பரப்பு. இந்த குறு நிலப்பரப்பில் தொண்டூர், குணநேரிமங்கலம் முதலிய ஊர்கள் அடங்கியிருந்திருக்கின்றன. எனவே சிங்கபுர நாட்டின் உட்பிரிவாகிய விண்ணகோவரைய நாட்டை ஆட்சி செய்தவைரிமலையன் வாணர் குலத்தில் தோன்றிய குறுநில மன்னன் என்பது ஊகிக்கப்படுகிறது. வைரிமலைப்பகுதிக்குத் தலைவனாக இருந்ததால் இவனுக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். வைரிமலை என்பது தொண்டூரை ஒட்டியுள்ள மலைக்குப் பண்டைக் காலத்தில் வழங்கிய பெயராக இருக்கவேண்டும். (ஏ.ஏகாம்பரநாதன்)

உசாத்துணை


✅Finalised Page