under review

தொண்டூர் அதிட்டானம்

From Tamil Wiki
பஞ்சனாப்பாடி மலை. தொண்டூர்

தொண்டூர் அதிட்டானம். தென்னார்க்காடு மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தைச் சார்ந்த அகலூரை அடுத்துள்ள தொண்டூர் கிராமத்தின் அருகே பஞ்சனாப்பாடி என்ற மலைக்குன்றில் அமைந்துள்ள இயற்கையான சமணர் குகை. இங்கு கற்படுக்கைகள், 23-ம் தீர்த்தங்கரரான பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் மற்றும் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகியவை உள்ளன. இக்கல்வெட்டு பொ.யு. 1-ம் நூற்றாண்டு என்றும் பொ.யு. 3-ம் நூற்றாண்டு என்றும் சொல்லப்படுகிறது. பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் பொ.யு .8 -ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.தொண்டைமண்டல சமணநிலைகளில் இது ஒன்று

தொல்சான்றுகள்

கல்படுக்கைகள் (புகைப்படம் முத்துசாமி இரா)

பஞ்சனாப்பாடி ஊரில் வயல் நடுவே விண்ணாம்பாறை என்று அழைக்கப்படும் தனிப்பாறையில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுதியில் விஷ்ணு வலமிருந்து இடமாகப் பள்ளிகொண்ட கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளார். பொ.யு. எட்டாம் நூற்றாண்டில் மூன்றாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் செதுக்கப்பட்டது இச்சிலை எனப்படுகிறது.

பஞ்சனாப்பாடி குன்றில் இரண்டு சமணக் குகைதளங்களும் கற்படுக்கைகளும் உள்ளன. தொண்டூர் குகையில் மூவாயிரம் ஆண்டு தொன்மையுள்ள தொல்குடிக் குகை ஓவியங்களும் உள்ளன.சமணப் படுக்கையை ஒட்டி 23-ம் தீர்த்தங்கரான பார்சுவனாதரின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் வழிபடப்படுகிறது. ஊராரால் நாயினார் கோவில் என்று அறியப்படுகிறது. இந்தச் சிற்பம் . பொ.யு.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

வரலாறு

பார்ஸ்வநாதர், (புகைப்படம் முத்துசாமி இரா)

தொண்டூர் அதிட்டானம் பொ.யு. 1-ம் நூற்றாண்டு காலத்திலேயே சமண சமயத்தலமாகத் திகழ்ந்திருக்கிறது. இங்குள்ள குன்றில் நிலப்பரப்பிலிருந்து ஏறத்தாழ எழுபது அடி உயரத்தில் பாறைப்பரப்பினில் மூன்று கற்படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த படுக்கைகளுக்குக் கீழ்ப்புறத்திலுள்ள சரிவான பகுதியில் இரண்டு வரிகளாலான பிராமிக் கல்வெட்டு ஒன்றை தமிழகத்தொல்லியல் துறையினர் கண்டுபிடித்தனர்

சாசனம்

இச் சாசனம்,

"ஸங்காயிபன் ஏவ அகஸ ஊரறம்

மோசிச் செய்த அதிட்டானம்"

என்னும் வாசகத்தைக்கொண்டுள்ளது. அதாவது செங்காசிபன் என்னும் துறவியரின் ஏவலின் படி அகச ஊரைச்சார்ந்த (?) அறம்மோசி என்பவர் படுக்கைகளைத் தோற்றுவித்தார் எனப்பொருள்படும். இந்த கல்வெட்டின் இறுதிப்பகுதியில் மூன்று கோடுகள் தீட்டப்பட்டிருக்கின்றன. இவை இங்குள்ள மூன்று படுக்கைகளைக் குறிப்பவையாக இருக்கலாம். இது போன்ற குறியீடுகள் வேறு சில இடங்களிலுள்ள கல்வெட்டுக்களிலும் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தலத்திலுள்ள கல்வெட்டின் வரிவடிவம் பொ.மு. 1-லிருந்து பொ.யு. 1-ம் நூற்றாண்டு வரையுள்ள காலக்கட்டத்தைச் சார்ந்தாகும்.

இந்த கல்வெட்டில் கூறப்படும் செங்காசிபன் என்ற துறவியின் பெயர் திருச்சியிலும், புகழூரிலும் உள்ள சமண பிராமிக் கல்வெட்டுக்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இக்கல்வெட்டுக்கள் அனைத்தும் ஏறத்தாழ சமகாலத்தவையாக இருப்பதால், பல வேறு இடங்களில் காணப்படும் இப்பெயர் ஒரே துறவியைக் குறிப்பதாகவும் இருக்கலாம்; அல்லது வெவ்வேறு முனிவர்களைக் குறிப்பதாகவும் இருக்கலாம்.

விஷ்ணு (புகைப்படம் முத்துசாமி இரா)

இச்சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'அ க ச ஊர்’ என்னும் ஊர்ப்பெயரில் சற்று முரண்பாடுள்ளது போலத்தெரிகிறது. அதாவது இதனை எழுதியவர் சரிவர எழுதாமல் தவறுபட எழுதியிருக்கலாம் எனத்தோன்றுகிறது. ஒருவேளை இது தொண்டு அடுத்துள்ள அகலூரின் பண்டைய பெயராகவும் இருக்கலாம் அறம்மோசி என்னும் பெயர் சங்க இலக்கியங்களில் கூறப்படும் முடமோசியார், மோசிகீரன் போன்ற பெயர்களை ஒத்திருப்பது கருத்திற்கொள்ளத்தக்கதாகும் என்று தொண்டை நாட்ட்சு சமணத்தலங்கள் என்னும் நூலில் ஏ.ஏகாம்பரநாதன் குறிப்பிடுகிறார்.

இத்தலம் பிற்காலத்திலும் சமண சமயத்தொடர்புடையதாகத் திகழ்ந்ததை இங்குள்ள பிற தமிழ்க் கல்வெட்டுக்கள் அறிவுறுத்துகின்றன.

உசாத்துணை


✅Finalised Page