தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
தொண்டி ஆமூர்ச் சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் அகநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
தொண்டி ஆமூர்ச் சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். தொண்டி நகரை தலைநகராக கொண்ட சேர நாட்டில் அமைந்துள்ள ஆமூரில் பிறந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
தொண்டி ஆமூர்ச் சாத்தனார் பாடிய பாடல் அகநானூறில் 169-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டுவதற்காக தலைவியை பிரிந்த தலைவன் தனது பாலை நில பயணத்தின் இடை வழியில் தன்னை பிரிந்து வருந்தும் தலைவியின் நிலையை நினைத்து வருந்தி கூறுவதாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- ஆடவர் பொருளீட்ட செல்லும் பாலை நிலமானது சூரியனின் கடுமையான வெப்பத்தில் வறண்டு போனது. வெப்பத்தின் கடுமையால் மரங்களின் நுனி கருகியும் வயல்வெளியில் கதிர்கள் எரிந்து போயும் காணப்படும்.
- பாலை நிலத்தில் புலி யானையை வேட்டையாடிக் கொன்று தின்னும். புலி தின்று வைத்த மீதமுள்ள யானை இறைச்சியை மறவர்கள் வெட்டி எடுத்து தமது கோலில் கோர்த்து கொண்டு செல்வர். மறவரும் விட்டுப்போன யானையின் எஞ்சிய இறைச்சியை அவ்வழி செல்லும் உப்பு வணிகர்கள் தம் தீ மூட்டும் கோலில் சுட்டெடுத்து சுனை நீருடன் அரிசி சேர்த்து வடித்து உண்பர்.
- உவமை: தலைவியின் கண்களில் உள்ள கருவிழி குளத்தில் உள்ள கயல்மீனாக உருவகிக்கப்பட்டது.
பாடல் நடை
அகநானூறு - 169
- திணை: பாலை
- கூற்று: தலைமகன்,இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட,
அலங்குகதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலை,
புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன்
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை,
ஞெலி கோற் சிறு தீ மாட்டி, ஒலி திரைக்
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்
சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும்
சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து; நனி
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து,
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை
மெல் விரல் சேர்த்திய நுதலள், மல்கிக்
கயல் உமிழ் நீரின் கண் பனி வார,
பெருந் தோள் நெகிழ்ந்த செல்லலொடு
வருந்துமால், அளியள், திருந்திழைதானே!
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Mar-2025, 09:56:14 IST