தேனோலை (இதழ்)
தேனோலை (1974) தமிழில் வெளிவந்த ஆய்விதழ்களுள் ஒன்று. தேனோலை இதழின் ஆசிரியர் கொடுமுடி சண்முகப்பிரகதம்.
வெளியீடு
ஜூலை 1974 முதல் சென்னை இந்திரா நகரிலிருந்து வெளிவந்த காலாண்டு இதழ் தேனோலை. சுவடிகள், பட்டயங்கள், பழந்தமிழ் நூல்கள், கல்வெட்டாய்வுகள் குறித்த செய்திகளை வெளியிட்டது. இவ்விதழின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கொடுமுடி சண்முகப்பிரகதம்.
இதழ் அமைப்பு
தேனோலை இதழின் முகப்பு உள்பக்கத்தில் 'தேனோலை' என்னும் இதழின் தலைப்பின் கீழ், 'பழஞ்சுவடிக் காலாண்டிதழ்' என்ற குறிப்பு இடம்பெற்றது. தனிப்பிரதியின் விலை ரூபாய் ஒன்று. ஆண்டுச்சந்தா: நான்கு ரூபாய். ஆயுள் சந்தா: ரூபாய் 100/-. 40, 42, 48 என பல்வேறு பக்கங்களில் இதழ் வெளிவந்தது.
உள்ளடக்கம்
தேனோலை இதழ்களில் பல்வேறு வரலாற்றுச் செய்திகள், கல்வெட்டுச் செய்திகள் இடம்பெற்றன. பழந்தமிழ்ச் சுவடிகள், செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுக்களிலிருந்து பல தகவல்கள் வெளியிடப்பட்டன. காளிங்கராயன் கால்வாயை வீரபாண்டியனின் சம காலத்து மன்னனான சாத்தந்தை காளிங்கராயன், பொ.யு. 1263-ல் கட்டியதை வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் பாதுகாத்தளித்த பட்டயச் செய்தி கூறுகிறது.
காஞ்சிபுரத்தின் காமாட்சி அம்மனுக்காகச் செய்யப்பட்ட தேரை, அது வலம் வர இயலாமல் வலங்கையாளனான சேணிய சிம்மப்புலி என்ற மந்திரவாதி மோடி வித்தை செய்து தடுத்தது, அதனை மீண்டும் ஓட வைக்க இடங்கையினர் சிம்ம அனுமன் என்னும் மந்திரவாதியை வேண்ட, அவன் தன் மனைவியையே நரபலி கொடுத்து தேரை வலம் வரச் செய்தது, அதனால் அவனுக்குக் கிடைத்த சில உரிமைகள் போன்ற செய்திகளை மல்லிகுந்தம் பட்டயம் கூறுகிறது.
குறுநில மன்னர்கள் பற்றிய பல்வேறு வரலாற்றுத் தகவல்கள், ஊர்களின் வரலாறு, ஆலயங்களின் வரலாறு, பழந்தமிழ் நூல்கள் வரலாறு, தனிநபர் செப்பேடுகள், பட்டயங்கள், சுவடிகள் பற்றிய செய்திகள், மன்னர்களின் கோட்டைகள் பற்றிய விவரங்கள், காணியாட்சி உரிமை பற்றிய தகவல்கள் எனப் பல வரலாற்றுச் செய்திகளை தேனோலை இதழ் வெளியிட்டது. தேனோலை இதழில் திருநீலகண்டர் பள்ளு, பூர்வச்சக்கரவர்த்தி நாடகம், மெச்சும்பெருமாள் பாண்டியன் கதை ஆகிய மூன்று சுவடிப்பதிப்புகள் வெளியாகின.
பங்களிப்பாளர்கள்
வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர், செ. இராசு உள்ளிட்ட பலர் தேனோலை இதழுக்குப் பங்களித்தனர். அவர்களின் அரிய கண்டுபிடிப்புகள், வரலாற்றாய்வுகள் தேனோலை இதழில் வெளிவந்தன.
இதழ் நிறுத்தம்
1987 வரை தேனோலை இதழ்கள் வெளிவந்தமையை அறிய இயலுகிறது. அதன் பின்னான இதழ்கள் வெளியீடு குறித்த செய்திகளை அறிய இயலவில்லை.
ஆவணம்
தேனோலை இதழ்கள் சில தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
மதிப்பீடு
தமிழில் வெளிவந்த குறிப்பிடத்தகுந்த ஆய்விதழ்களுள் ஒன்றாக தேனோலை இதழ் அறியப்படுகிறது. குறிப்பாக கொங்கு நாட்டின் வரலாற்றைப் பெருமளவு ஆவணப்படுத்திய இதழாக தேனோலை இதழ் மதிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
- தேனோலை இதழ்கள், தமிழ் இணைய மின்னூலகம்
- தேனோலை இதழ்க் குறிப்பு, முனைவர் மோ.கோ. கோவைமணி, பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு, தமிழ் இணைய மின்னூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jul-2024, 17:43:06 IST