under review

தேனி சீருடையான்

From Tamil Wiki
தேனி சீருடையான்

தேனி சீருடையான் தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்தவர். இளமையில் சிறிதுகாலம் விழியிழந்தவராக இருந்திருக்கிறார். அதை விவரிக்கும் தன்வரலாறு ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

தேனி சீருடையானின் இயற்பெயர் கருப்பையா. தேனியில் பிறந்தார். தேனிக்கு அருகிலுள்ள அம்மாப்பட்டி பூர்வீகம். ஏழாவது வயதில் பார்வையை இழந்தார். சென்னை பூந்தமல்லியிலுள்ள பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் பிரெய்லி முறையில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். இருபதாவது வயதில் அறுவை சிகிச்சை மூலம் பார்வை பெற்றார். தந்தையின் தொழிலைத் தொடர முயன்று, சாலையோர தள்ளுவண்டிக் கடையில் பழ வியாபாரத்தைத் துவங்கினார். தற்போது பெரியகுளம் சாலையில் ஒரு பழக்கடை நடத்தி வருகிறார்.

தேனி சீருடையான்

அமைப்புப் பணிகள்

தேனி சீருடையான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் (தமுஎகச) மாவட்டப் பொறுப்புகளிலும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி, தற்போது மாநிலக்குழு உறுப்பினராக அங்கம் வகிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். தேனி சீருடையான் ’கடை’ என்ற நாவல் மூலம் கவனிக்கப்பட்டார். 1972-ல் 'விரக்தி' எனும் முதல் கவிதை ’கணையாழி’ இதழில் பிரசுரமானது. தொடர்ந்து ஞானரதம், செம்மலர், வானம்பாடி என பல இலக்கிய இதழ்களில் கவிதைகள் எழுதினார். பொன் விஜயன் அவர்களின் தூண்டுதலால் சிறுகதை வாசிப்பில் கவனம் திரும்பியதாகக் குறிப்பிடுகிறார். கந்தர்வன், ஜெயந்தன் ஆகியோரை இலக்கிய ஆதர்சங்களாகக் குறிப்பிடுகிறார். 'புதிய நம்பிக்கை' இதழில் தேனி சீருடையானின் முதல் சிறுகதை பிரசுரமானது. இலக்கிய இதழ்களில் சிறுகதைகளையும், இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளையும் எழுதிவருகிறார்.

சீருடையானின் நாவல்களில் 'நிறங்களின் உலகம்' முக்கியமான படைப்பு. பார்வையற்றவர்களின் உலகத்தை தமிழில் பதிவு செய்த முதல் நாவல். 'தேனி சீருடையானின் படைப்புலகம்' எனும் குறு நூலினை கலைஞன் பதிப்பகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து வெளியிட்டிருக்கிறது. தமுஎகச அறம் கிளை பாரதி புத்தகாலயத்தோடு இணைந்து சீருடையானின் நேர்காணலை தனி நூலாக வெளியிட்டிருக்கிறது.

ஆவணப்படம்

சீருடையானின் படைப்புகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடமாக உள்ளது. அய்.தமிழ்மணியின் இயக்கத்தில் தேனி சீருடையான் குறித்த ஆவணப்படம் 'தனித்த பறவை' உருவாக்கப்பட்டுள்ளது.

  • தனித்த பறவை ஆவணப்படம்[1]
முனைவர்பட்ட ஆய்வுகள்
  • எழுத்தாளர் கரிச்சிராம்பாரதி (ராமகிருஷ்ணன்) மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தேனி சீருடையானின் படைப்பு பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
  • திருப்பூர் கலைக்கல்லூரி பேராசிரியர் கந்தசாமி 'நிறங்களின் உலகம்'வழியே மாற்றுத் திறனாளிகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
  • கோவில்பட்டியைச் சேர்ந்த ஆசிரியை தாயம்மா சீருடையானின் சிறுகதைகளை ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.
  • காந்தி கிராமியப் பல்கலைக் கழக மாணவி சுலோச்சனா மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி வெங்கட் ரமணி ஆகியோர் தங்களது தமிழிலக்கிய பட்டப்படிப்பின் திட்ட அறிக்கைக்காக சீருடையானின் சிறுகதைகளை ஆய்வு செய்துள்ளனர்.

விருதுகள்

  • இளைஞர் முழக்கம் சிறுகதைப் போட்டி – முதல் பரிசு (1983)
  • இலக்கிய வீதி சிறுகதைப் போட்டி – முதல் பரிசு (1985)
  • தமுஎச சிறுகதைப் போட்டி – இரண்டாவது பரிசு (1987)
  • தமுஎச நாவல் போட்டி – மூன்றாம் பரிசு (1991)
  • ஜோதி விநாயகம் நினைவுப் பரிசு (1999)
  • ஆதித்தனார் இலக்கிய விருது (1999)
  • கலை இலக்கியப் பெருமன்ற நாவல் போட்டி (2008)
  • கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது (2010)
  • எஸ்.ஆர்.வி. பள்ளி படைப்பூக்க விருது (2010)
  • கவின் முகில் அறக்கட்டளை நாவல் விருது (2013)
  • மதுரை தமிழ்ச் சங்க விருது (2014)
  • உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், அமெரிக்கா சிறந்த நூலுக்கான விருது (2017)

நூல்கள்

நாவல்கள்
  • கடை
  • நிறங்களின் உலகம்
  • சிறகுகள் முறியவில்லை
  • நாகராணியின் முற்றம்
சிறுகதைத் தொகுப்புகள்
  • ஆகவே
  • ஒரே வாசல்
  • விழுது
  • பயணம்
  • மான்மேயும் காடு
  • கந்துக்காரன் கூண்டு
  • பாதகத்தி
கட்டுரை
  • சிறுகதை பாதையும், பயணமும்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

இணைப்புகள்


✅Finalised Page