under review

தீம்தரிகிட

From Tamil Wiki
தீம்தரிகிட முகப்படையாளம்
தீம்தரிகிட

தீம்தரிகிட (1982 - 2002) இதழாளரும் எழுத்தாளருமான ஞாநி நடத்திய செய்தி இதழ். தமிழில் குறிப்பிடத்தக்க விமர்சன இதழாக விளங்கியது.

தொடக்கம்

ஞாநி இந்த செய்தி இதழின் ஆசிரியர். ஜனவரி 6, 1982ல் ஞாநி ஒரு செய்தி இதழ் தொடங்க நிதி கோரி கடிதம் எழுதினார். அம்முயற்சிக்கு சுப்ரமணிய ராஜு மூவாயிரம் ரூபாய் தந்தார். சுந்தர ராமசாமி ஆயிரம் ரூபாய் அளித்தார். வைத்தீஸ்வர் போன்ற சில நண்பர்களின் உதவியும் இருந்தது. சுந்தர ராமசாமியின் சுதர்சன் ஜவுளி நிலையம், ராமகிருஷ்ணனின் க்ரியா புத்தக வெளியீட்டு நிறுவன விளம்பரங்கள் உள் அட்டையில் இடம் பெற்றன.

அது பாரதி நூற்றாண்டு என்பதால் “திக்குகள் எட்டும் சிதறி - தக்க தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட” என்ற பாரதி வரியில் இருந்து தலைப்பு தேர்வு செய்யப்பட்டது.

நிறுத்தம்

ஞாநி பன்னாட்டு வணிக நிறுவனங்களிடம் விளம்பரம் பெறக் கூடாது என்று பிடிவாதமாக அந்த பத்திரிக்கையை வெறும் சந்தாவை மட்டுமே நம்பி நடத்தினார். விற்பனையாளர்கள் ஒருவரும் சொல்லியபடி பணத்தை தராததால் தீம்தரிகிட இதழை நிறுத்தினார். மூன்று இதழ்கள் மட்டுமே வெளியாயின.

மறு தொடக்கங்கள்

1985-ல் தன் பணி ஊதிய மிச்சமாக இண்டியன் எக்ஸ்பிரஸ் அளித்த பணத்தில் மீண்டும் தீம்தரிகிட இதழைத் தொடங்கினாலும் ஏழு இதழ்களுடன் நிறுத்த வேண்டியிருந்தது.

2002-ல் மீண்டும் தீம்தரிகிட இதழை வார இதழாகச் சிறிய அளவில் தொடங்கினார். ஐம்பது இதழ்களுடன் 2006-ல் அது நின்றுவிட்டது.

உள்ளடக்கம்

’ஏறக்குறைய இந்தக் கால் நூற்றாண்டு காலத்தில் வார இதழ், மாதம் இருமுறை, மாத இதழ் என்று கால மாற்றங்களையும், ஏ4, ஏ3, 1/8 டெமி என்று வடிவ மாற்றங்களையும் கண்டிருக்கிறது ‘தீம்தரிகிட’. செய்தி விமர்சனப் பத்திரிகை என்ற நிலையில் பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும் முதலாமாண்டு இதழ்களில் இடம்பெற்றிருந்த நேரடிக் களச் செய்திகளை, கடைசியாக வெளிவந்த இதழ்களில் பார்க்க முடியவில்லை. கலை இலக்கியங்களுக்கான பக்கங்கள் கூடிக்கொண்டே வந்திருக்கின்றன. பலவண்ண அட்டைப் படங்கள் முதலாண்டிலேயே முடிவுக்கு வந்து, கருப்பு-வெள்ளையில் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன. எனினும், தீவிரமான விஷயங்களை இயன்றவரை எளிமையாகச் சொல்லவேண்டும் என்ற ஞாநியின் நோக்கமும் பிடிவாதமும் நிறைவேறியிருக்கின்றன’ என்று விமர்சகர் செல்வ புவியரசன் மதிப்பிடுகிறார்.

தொகுப்பு

ஞாநியின் மறைவுக்குப் பின் ஞானபாநு பதிப்பகம் 1982-லிருந்து 2006 வரை வெளிவந்த ‘தீம்தரிகிட’ இதழ்களின் தொகுப்பை ஏறக்குறைய 2000 பக்கங்களில் ஏழு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறது. பொன்.தனசேகரன் முன்னுரை எழுதி தொகுத்துள்ளார்.

இடம்

ஞாநியின் சிற்றிதழான தீம்தரிகிட தமிழில் விமர்சன இதழாக குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றிய ஒன்று. பாரதியின் கண்களும் மீசையும் மட்டும் கொண்ட கோட்டோவியம் அவர் அவ்விதழுக்காக உருவாக்கியது, பின்னர் அனைவராலும் பயன்படுத்தப்பட்டது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Apr-2025, 05:16:22 IST