under review

தி. த. கனகசுந்தரம் பிள்ளை

From Tamil Wiki
தி.தா.கனகசுந்தரம் பிள்ளை

தி.த. கனகசுந்தரம் பிள்ளை ( 22 ஆகஸ்ட் 1863 - 1922) தமிழறிஞர், பதிப்பாசிரியர். கம்பராமாயணத்தின் முதல் இரு காண்டங்களையும், தொல்காப்பியத்தையும் பிழையறப் பதிப்பித்தமையால் குறிப்பிடப்படுபவர்.

பிறப்பு, கல்வி

திருகோணமலை தம்பிமுத்துப் பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை ஆகஸ்ட் 22, 1863-ல் திருகோணமலை அரசூழியரான தம்பிமுத்துப்பிள்ளைக்கும் அம்மணி அம்மாளுக்கும் பிறந்தார். திருகோணமலையின் சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களான கணேசபண்டிதரிடம் தமிழையும், வடமொழியையும் கதிரைவேற்பிள்ளை அவர்களிடம் ஆங்கிலத்தையும் கற்றார்.

கனகசுந்தரம் பிள்ளை 1880-ம் ஆண்டில் சென்னைக்கு சென்று சூளையில் உள்ள செங்கல்வராய நாயகர் பாடசாலையில் சேர்ந்து பயின்றார். சென்னைப் பல்கலைக்கழக மத்திய பாடசாலைத் தேர்வில் தேறியபின் பச்சையப்பன் கல்லூரியில் எஃப்.ஏ தேர்வில் வென்று சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

முதல் தமிழ் சரித்திர நாவலை எழுதிய தி. த. சரவணமுத்துப் பிள்ளையின் தமையன்.

தனிவாழ்க்கை

கனகசுந்தரம் அன்றைய சென்னை ராஜதானியில் இருந்த, ஆந்திரத்தின் சித்தூரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வி இலாகா அலுவலகத்தில் கணக்காளர் பணியிலும் பின்னர் சென்னை அரசுச் செயலகத்தில் கல்வித்துறை நிர்வாகியாகவும் பணியாற்றினார்.

கனகசுந்தரம் தெல்லிப்பழை சிதம்பரநாத முதலியார் மகள் சுந்தரம்பாளை 1895-ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இராசராசன், இராசசேகரன், இராசேசுவரன், இராசமார்த்தாண்டன் என நான்கு ஆண் பிள்ளைகளும், செல்வநாயகி என பெண் பிள்ளையும் பிறந்தனர். சென்னை ஆயலூர் முத்தையா முதலியார் வீதியில் இவர் வசித்து வந்தார். செல்வநாயகி ராவ்பகதூர் க. வைத்தியலிங்கம் பிள்ளை என்பவரின் புதல்வர் அரங்கநாதனை மணந்தார்.

கல்விப்பணி

ஆசிரியப்பணி
  • கனகசுந்தரம் பிள்ளை சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக 1905-ல் பணியேற்றார்.
  • பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவராக இருந்த திருமணம் செல்வக்கேசவராய முதலியார் 1921-ல் மறைந்ததை அடுத்து அப்பதவியை ஏற்றார்.
  • சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுக்குழு உறுப்பினராகவும் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.
  • மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் தேர்வாளர்களில் ஒருவராக பணியாற்றினார்.
மாணவர்கள்

கனகசுந்தரம் பிள்ளையின் மாணவர்களில் சோமசுந்தர முதலியார், மணி திருநாவுக்கரசு முதலியார், மோசூர் கந்தசாமி, வித்துவான் சுப்பிரமணிய ஆச்சாரி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

பதிப்புப் பணி

கனகசுந்தரம் பிள்ளை பதிப்புப் பணியில் ஈடுபாடு கொள்ள நல்லூர் ஆறுமுக நாவலர் முதன்மைக் காரணம். நாவலர் சென்னையில் நிறுவிய அச்சியந்திர சாலையில் முகவராக கனகசுந்தரம் சேவை செய்திருக்கிறார். சி.வை. தாமோதரம் பிள்ளையுடனும் அணுக்கமான தொடர்பு இருந்தது. உ.வே.சாமிநாதையருக்கு கனகசுந்தரம் பிள்ளை சுவடிகளை கொடுத்து உதவியிருக்கிறார். ’தி. த. கனகசுந்தரம் பிள்ளை மணிமேகலையையும், உதயணன் கதையையும் பதிப்பிக்க வேண்டுமென்று எழுதினார்’ என்று குறிப்பிடுகிறார். (என் சரித்திரம். புறநாநூற்றுப் பதிப்பு) தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் சுவடிகளை உ.வே.சாமிநாதையருக்கு கனகசுந்தரம் பிள்ளை அளித்தார். “தி. த. கனகசுந்தரம் பிள்ளை என்னிடம் ஒரு பழைய ஏட்டுச் சுவடியைக் கொடுத்து, “இந்தச் சுவடி இன்னதென்றுவிளங்கவில்லை; புறப்பொருள் பற்றிய வெண்பாவை இடையிலே கண்டேன்; பாருங்கள்” என்று சொன்னார். நான் அதை எடுத்து வந்து பார்க்கையில் ஏடுகள் வரிசையாக இராமல் நிலைமாறிக் கோக்கப் பட்டிருந்தன. மிகவும் சிரமப்பட்டு ஒழுங்குபடுத்திப் பிரதி செய்வித்தேன். அப்பால் அதைப் படித்துப் பார்க்கையில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் உரையென்று தெரிந்தது” என்று என் சரித்திரம் நூலில் உ.வே.சாமிநாதையர் சொல்கிறார் (பக்கம் 742)

தொல்காப்பியம்

கனகசுந்தரம் சென்னை மாகாணக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் இராசகோபால பிள்ளை உதவியுடன் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை மூலச்சுவடிகளுடன் ஒப்பிட்டு, பிழைநீக்கி , பாடபேதம் பார்த்து செப்பனிட்ட பிரதியை நச்சினார்க்கினியர் உரையுடன் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. அந்நூல் பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. "மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையுடன், திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை B.A அவர்கள் பல ஏட்டுச்சுவடிகளைக்கொண்டு செய்து வைத்திருந்த திருத்தங்களுடன் பதிப்பிக்கப்படுகிறது".

அதன்பின் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கனகசுந்தரத்தால் பரிசோதனை செய்யப்பட்டு, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டது.

நம்பியகப்பொருள்

கனகசுந்தரம்பிள்ளை சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவருடன் சேர்ந்து நம்பியகப் பொருளுக்கு உரை எழுதி வெளியிட்டார்

கம்பராமாயணம்

கனகசுந்தரம் பிள்ளை சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவருடன் இணைந்து கம்பராமாயணத்தை பாடபேதம் நோக்கி பிழைநீக்கி அரும்பதவுரையுடன் வெளியிட முயன்றார். பாலகாண்டத்தை வெளியிட்டபின் அயோத்தியா காண்டத்துக்கு அரும்பதவுரை பூர்த்தியாகும் முன்பே அவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக காலமாகினர்.

தமிழ் நாவலர் சரிதை

நாராயணசாமி முதலியார் என்பவர் 1916-ல் பதிப்பித்த தமிழ் நாவலர் சரிதை என்னும் நூலை கனகசுந்தரம்பிள்ளை பாடவேறுபாடு நோக்கி திருத்தி 1921-ல் வெளியிட்டார்.

மறைவு

1922-ம் ஆண்டில் கனகசுந்தரம்பிள்ளை ஆனி மாதம் புதன்கிழமை அன்று அவரது சென்னை இல்லத்தில் காலமானார்.

இலக்கிய இடம்

தமிழ்ப்பதிப்பியக்கத்தில் கனகசுந்தரம் பிள்ளை அவருடைய அறிவியல் அணுகுமுறையாலும், பிழைநோக்கும் நேர்த்தியாலும் மதிக்கப்படுகிறார். சுவடிகளின் மூலத்துடன் படைப்புகளை ஒப்பிடுதல், சொற்களை சரியாக கணித்து பிழைதிருத்துதல் ஆகியவற்றில் பெருந்திறன் கொண்டிருந்தார். அவருடைய கம்பராமாயணம் பாலகாண்டப்பதிப்புப்பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை "...ஆறு காண்டங்களுள் சுன்னாகம் குமாரசுவாமிப்பிள்ளையும், தி.த.கனகசுந்தரம்பிள்ளையும் பதிப்பித்த 'பாலகாண்டம்' ஒன்றே இன்றுவரை சுத்தப்பதிப்பாக வெளிவந்துள்ளது" என்று கூறினார்.

நூல்கள்

பதிப்பித்தவை
  • தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்) நச்சினார்க்கினியார் உரை
  • தொல்காப்பியம் (சொல்லதிகாரம்) சேனாவரையர் உரை (திட்டவட்டமான ஆதாரங்கள் இதற்கில்லை)
  • கம்பராமாயணம் - பாலகாண்டம்
  • தமிழ் நாவலர் சரிதை
  • ஈழமண்டல தேவாரம்
  • ஈழமண்டல திருப்புகழ்
இயற்றியவை
  • முத்துக்குமாரசாமி வெண்பா (கவிதை)
  • இல்லாண்மை (கட்டுரை)

உசாத்துணை


✅Finalised Page