தி.ம.பொன்னுச்சாமிப் பிள்ளை
- பொன்னுசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பொன்னுசாமி (பெயர் பட்டியல்)
தி.ம.பொன்னுச்சாமிப்பிள்ளை: (திரிசிரபுரம் ம. பொன்னுச்சாமிப் பிள்ளை) தமிழில் எழுதிய தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். சைவசித்தாந்தக் கருத்துக்களை நாவலில் புகுத்தி எழுதியவர். கமலாக்ஷி என்னும் அவருடைய முதல் நாவல் 1903-ல் வெளிவந்தது.
வாழ்க்கைக் குறிப்பு
தி.ம.பொன்னுச்சாமிப்பிள்ளை திருச்சியில் பிறந்து வளர்ந்தார். பிரிட்டிஷ் அரசுக்காக பர்மாவில் இரங்கூன் பேப்பர் கரன்ஸி ஆபீஸ் பொக்கிஷதாராக பணிபுரிந்தார்.
கலை வாழ்க்கை
பொன்னுசாமிப் பிள்ளையின் கமலாக்ஷி நாவலில் வரும் சாற்றுகவியில் இருந்து இவர் ரங்கூனில் சுஜனரஞ்சனி சபா, சுகிர்த நாடக சபா போன்ற அமைப்புக்களை உருவாக்கி நாடகங்கள் அரங்கேற்றியிருக்கிறர் என்று தெரிகிறது.
இலக்கிய வாழ்க்கை
தி.ம.பொன்னுச்சாமிப் பிள்ளை தமிழ், ஆங்கில, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். நவீன இலக்கியத்திலும், சைவ சித்தாந்தத்திலும் ஈடுபாடு கொண்டவர். பொது வாசிப்புக்குறிய ஆறு நாவல்களை எழுதினார். பொழுதுபோக்கு, மர்மம், கொலை, கொள்ளை, திடுக்கிடும் சம்பவம், திடீர் திருப்பம் ஆகிய சுவாரஸ்யமான கதைக்கூறுகளுடன் சைவ சித்தாந்தத்தின் பிரச்சாரத்தையும் உள்ளடக்கியவை இவரின் நாவல்கள்.
தி.ம. பொன்னுசாமிப் பிள்ளையின் கமலாக்ஷி சரித்திரம் அல்லது கமலாக்ஷி என்னும் நாவல் தமிழிலக்கியத்தின் நான்காவது நாலையாகக் கருதப்படுகிறது.
"கௌரவமான துரைத்தன உத்தியோகத்தில் ஒரு நாள் சேவை செய்து இப்போது உபகாரச் சம்பளம் பெற்று தேச யாத்திரை செய்து கொண்டிருப்பினும் என் காலத்தை வீணில் கழிக்காமல் சிறுவர் சிறுமிகளின் நன்மையையும் விநோதத்தையும் கருதி உலகாநுபவத்தை ஒட்டி இக்கதைகளை எழுதத் துணிந்தேன். திரிசிரபுரம் எனது ஜன்ம பூமியாதலால் இளமையில் தென்னாட்டுத் தமிழ் மக்களிடையில் வளர்ந்து வேளாளர் முதலானோருடைய குடிவாழ்க்கை வகைகளையும் அவர்கள் இயல்பையும் நான் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். இரங்கூன் நான் துரைத்தன சேவை செய்திருந்த இடமாகையால், நாட்டுக் கோட்டை நகரத்து ஸாவகாரிகளான வேளாண் செட்டிகளோடு கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக நெருங்கிப்பழகி அவர்கள் இயல்பையும் அறிந்திருக்கிறேன். ஆகவே என்னுடைய கதைகள் பெரும்பாலும் வேளாண் குடிமக்களையும் வேளாண் செட்டிகளையுமே பற்றியிருக்கும்." என்று திரிசிரபுரம் ம பொன்னுசாமிப் பிள்ளை தன் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
ஆன்மிகம்
தி.ம. பொன்னுச்சாமிப் பிள்ளை தன் நாவல்களின் ஒன்பதாம் அத்தியாயத்தில் சைவசித்தாந்தக் கருத்துக்களை விவாதங்களாகவோ உரையாடலாகவோ கொடுக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
விருதுகள்
பொன்னுசாமிப் பிள்ளை பிரிட்டிஷ் அரசு வழங்கிய ராய்பகதூர் பட்டம் பெற்றவர்.
கருத்து
"அந்தக் காலத்தில் சர்வஜன ரஞ்சகமாக இருந்த ஆங்கில பத்தாம் ரக நாவலாசிரியர் ஜி. டபிள்யூ. எம். ரெய்னால்ட்ஸ் என்கிற ஆசிரியரை நினைவூட்டுகிற பகுதிகள் பல இருக்கின்றன கமலாக்ஷி என்ற இந்த நாவலிலே. எனினும் இது தமிழ் நாட்டுக் கதைதான். தமிழ் நாட்டுக் கதையைச் சொல்லப் பொன்னுசாமிப் பிள்ளை ஏற்றுக்கொண்ட பாணிதான் அவ்வளவு சரியாக இல்லை என்று சொல்ல நமக்குத் தோன்றுகிறது. சம்பவத்துக்கு முக்கியமளித்து ஒன்றன் பின் ஒன்றாகத் திடுக்கிடும் காரியங்கள் நிகழ வேடும் என்கிற கொள்கையுடன் எழுத ஆசிரியர் பாடுபட்டிருப்பது தெளிவாகவே நமக்குத் தெரிகிறது." என்று க.நா.சு தன் முதல் ஐந்து தமிழ் நாவல்கள் நூலில் குறிப்பிடுகிறார்.
இலக்கிய இடம்
தி.ம.பொன்னுச்சாமிப் பிள்ளையின் பிரதிநிதித்துவம் கொண்ட படைப்பாகிய கமலாட்சி சரித்திரம் நாவலை க.நா.சு. தம் முதல் ஐந்து தமிழ் நாவல்கள் என்ற அறிமுக விமர்சன நூலில் பிற்காலத் தமிழ் நாவல்களின் ஐந்து வகைப் போக்குகளைத் தீர்மானித்த ஐந்தாவது நாவலாக முன்னிலைப்படுத்தி எழுதியுள்ளார்.
தி.ம.பொன்னுச்சாமிப் பிள்ளையின் நாவல்கள் விவரணைகள் குறைவாக, நாடகம்போல உரையாடல்கள் வழியாகவே முன்னகர்பவை.தன் ஒவ்வொரு நாவலின் பத்தொன்பதாம் அத்தியாயத்திலும் ஒரு பிரசங்கியாரைக்கொண்டு நீண்ட சைவசித்தாந்தச் சொற்பொழிவை நிகழ்த்துவது இவருடைய வழக்கம். 1900-களில் ஜே.எம். நல்லுச்சாமிப்பிள்ளை போன்றவர்களின் முயற்சியால் சைவம் மறுமலர்ச்சி அடைந்தபோது அதில் பங்குபெற்றவர் என்று தி.ம.பொன்னுச்சாமி பிள்ளையைச் சொல்லமுடியும்.
நூல்கள்
நாவல்கள்
- கமலாக்ஷி (1903)
- ஞானாம்பிகை (1913)
- சிவஞானம் (1920)
- விஜயசுந்தரம் (1913)
- ஞானசம்பந்தம் (1913)
- ஞானப்பிரகாசம் (1920)
உசாத்துணை
- Tamil Renaissance by Hillol Sarkar - Issuu
- Tamil renaissance and the beginnings o f the Tamil novel -R.E.Asher
- வெகுஜன ரஞ்சக நாவல்களின் முன்னோடி: தி.ம.பொன்னுசாமி பிள்ளை - facebook
- முதல் ஐந்து தமிழ் நாவல்கள் க.நா.சு- இணையநூலகம்
- ஞானாம்பிகை. இணைய நூலகம்
- தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும். கி.வா.ஜகந்நாதன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:10 IST