under review

கமலாக்ஷி சரித்திரம்

From Tamil Wiki
கமலாக்ஷி சரித்திரம்
கமலாக்ஷி சரித்திரம். பழைய ஓவியம்
கமலாட்சி சரித்திரம் பரிசல்வெளியீடு 2026

கமலாக்ஷி சரித்திரம் (கமலாக்ஷி, கமலாட்சி சரித்திரம்) தமிழிலக்கியத்தின் நான்காவது நாவலாகக் கருதப்படுகிறது. தி.ம.பொன்னுசாமிப் பிள்ளை இந்நாவலின் ஆசிரியர்.

வெளியீடு

தி.ம.பொன்னுச்சாமிப் பிள்ளை இந்நூலின் ஆசிரியர். 1903ல் சென்னை மினெர்வா அச்சகத்தில் இந்நூல் அச்சிடப்பட்டு ஆசிரியராலேயே வெளியிடப்பட்டது. 1910ல் இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளியாகியது. 2006ல் கால சுப்ரமணியம் பதிப்புரையுடன் பரிசல் பதிப்பக வெளியீடாக இந்நூலின் அண்மைக்கால பதிப்பு வெளியாகியது.

நோக்கம்

இந்நாவலை ஆங்கில ஆசிரியர் ரெயினால்ட்ஸ் எழுதுவதுபோல ஜனரஞ்சகமாக எழுதவேண்டும் என்னும் எண்ணம் கொண்டு படைத்ததாக ஆசிரியர் முன்னுரையில் சொல்கிறார்.

'நாடகச் சாயலாக ஆங்கிலேய பாஷையில் நவநவமான கதைகளை யியற்றி யாவர்க்கும் மகிழ்ச்சியை விளைவித்து நற்புத்தி புகட்டும் ரெனால்ட்ஸ் முதலிய அபிநவகதாக் கிரந்தகர்த்தர்களுடைய கோட்பாட்டை யனு சரித்து, கமலாக்ஷிசரித்திரம் என்னும் இதனை எழுதி வெளிப்படு த்தலானேன். இஃது பண்டிதபாமர ரஞ்சிதமா யிருத்தல் வேண்டு மென்றும், இல்லறத்துக் குரிய காரியங்களைச் செய்து முடித்தபின் அன்றாடம் வேலையற்றிருக்குங் காலத்து இதனை நம்மாதரும் பொழு துபோக்காக எளிதில் வாசித்துக் களிப்படைதல் வேண்டுமென றும் யான் உத்தேசித்தவ னாதலின், அனாவசியமாகப் பாஷைநடை யைக் கடினமாக்காமல் கூடியவரையில் முழுவதுமே சம்பா ரூபமாகக் கருத்தை வெளியிட்டிருக்கின்றேன்'.

கதைச்சுருக்கம்

இந்நாவலின் கதைநாயகி கமலாக்ஷி. அவளுடைய வாழ்க்கையில் அவள் சந்திக்கும் சோதனைகள், அவற்றில் இருந்து அவள் பலவகையான நாடகீயமான தருணங்கள் வழியாக மீள்வது இந்நாவலில் சொல்லப்படுகிறது.

கட்டமைப்பு

முதற்பதிப்புக்கு தண்டலம் பாலசுந்தர முதலியார் சூசிகை (முன்னுரை) எழுதியுள்ளார். திரிசிரபுரம் தி.முத்துக்கிருஷ்ண பிள்ளை செய்யுளில் பாயிரம் எழுதியுள்ளார். இந்நூல் மரபான முறையில் விநாயகர் துதியுடன் தொடங்குகிறது. ஒன்பதாவது அத்தியாயத்தில், ஆசிரியர் தன் வழக்கப்படி சைவசித்தாந்த கருத்துக்களை விவாதித்துள்ளார்.

நடை

முதல் அத்தியாயம்:

திருவருளை முன்னிட்டு நாம் எழுதும் இக்கதை பத்தொன்பதாம் நூற் றாண்டைப் பற்றியது. இங்கிலீஷ் 1830-ம் வருடத்திற்குத் தமிழ் விரோதி வருஷம் தைமீ 10உ இரவு பத்துமணிக்கு ஆகாயவாணி வைரங்கள் பதித்த நீலவஸ்திரத்தை உடுத்திருப்பதுபோல், நீல நிறத்தைச் சொண்ட ஆகாயத்தில் நக்ஷத்திரங்கள் பிரகாசித்து வழிப் போக்கர்களுக்கு வழிகாட்டவும், அவர்களுக்கு ஆயாஸம் தோன்றாமல் இருக்க வாயுபசவான் சிறுகாற்றுவீசி உதவிபுரியவும், வனப்பெண் பல வித புட்பங்களிலுள்ள நறுமணத்தைக் கொடுத்து உதவ எண்ணங் கொண்டிருக்கவும், அதைக்கெடுக்க எண்ணங்கொண்டதுபோல் மயி லாபுரி என்கிற நசரத்தை அடுத்த சாட்டிலுள்ள பெரிய பல விருக்ஷங்கள் ஆகாயத்தை மறைத்து நடித்திரங்களுடைய பிரகாசத்தைத் தடுத்துத் தங்களை அடுத்திருக்கும் இருளுக்கு உதவி புரிய எண்ணங் கொண்டிருப்பதுபோல் அடர்ந்திருந்தன. இவ்விருண்ட காட்டில் இருவர் அதிவேகமாக நடந்து நெடுந்தூரம்போனபின் இருவரில் ஒருவர் தம்மோடு வருகிறவளைப்பார்த்து, "பெண்ணே! இனிமேல் நாம் துரிதமாகப் போகவேண்டிய அவசியமில்லை, மெதுவாகப் போகலாம்; உன்னால் வேகமாக நடந்துவர முடியவில்லை யல்லவா?" என்று நகைத்தான்.

பெண் - தங்களுடைய இஷ்டம்போலவே செய்யலாம், அத்தான்.

வாலிபன்.- (சிரித்துக் கொண்டே) ஆ! ஆ! என்ன ! அத்தானா! அத்தான் என்ற வாய்க்கு முத்தம் கொடுக்காமல் போகலாமா? முத்தம் கொடுப் பாய் என் கண்ணே! நான் உன்னை இரண்டொரு தடவையில் பார்த் திருந்தும் உன்னோடு வார்த்தையாடினதேயில்லை. (என்று முத்தம் கொடுத்தான்.)

பெண் - யான் தங்களை இரண்டொரு தடவையில் பார்த்திருப்பதாக எனக்கும் ஞாபகமிருக்கிறது.

வாலிபன்.- அங்கிலேயரைப்போல் புருடர் பெண்களோடு வார்த்தையாடி மனச்சம்மதங் கேட்டுக்கொள்வது நமக்குள் வழக்கமில்லை யாதலால்,நம் இருவர் மனதின் சம்மதம் அறியாமலே யாவும் முடிவுபெற்றிருக்கின்றன. ஆயினும், இப்பொழுது நேரிட்ட விபத்தால் நாம் இருவரும் பேசிக்கொ ள்ள நேர்ந்ததைக் குறித்துச் சந்தோஷப்படுகிறேன். ஆனதால், என் விஷயத்தில் நீ கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைச் சொல்லவேண்டும்.

பெண் - தாங்க ளிவ்விதங் கேட்பது நியாயந்தானா? (என்று நசைத்தாள்.)

சமகாலக் கருத்துக்கள்

'...உயர்ந்த ஒழுக்கம் கற்பிக்கும் கதையமைந்ததாய் எளிய இனிய தமிழ்நடையில் எழுதப்பட்டு நல்லுணர்வுடைய பண்டிதர்க்கும் நல்லுணர்வை நாடும் பாமரர்க்கும் ஸ்திரீ புருஷர் இருபாலர்க்கும் இனிமை பயந்து பயன்படுவதாகின்றது. கதையை வாசித்தறிவோர் அது பல தலைப்பட்டு இறுதி யத்தியாயத்தில் வந்து முடிபெய்தும் மாட்சியையும் நிகழும் விஷயங்கள் ஒவ்வொன்றும் தமிழ்க் குடும்பங்களில் நிகழத் தக்கவைகளேயென்னும் உண்மையினையும் வியவாமற்போகார்....நவீன நூல்களுள் இதனை யொத்தன இன்னும் ஒன்றிரண்டுக்கு மேற் காண்டலரிது' - பேராசிரியர் எஸ். அனவரத விநாயகம் பிள்ளை

'...உயர்மதிகூடலினாய்ந்த பெண்டீந்தமிழ்' என்று ஸ்ரீமணிவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளும் அருமை வாய்ந்த தமிழ்ப்பாஷையிலே அறம்பொருளின்பம் வீடென்னும் புருஷார்த்தங்கள் நான்கினையும் நம்மனோ ஸ்தூலத்திற்குச் சாதகமாயுள்ள நூல்கள் அளவிறந்திருக்கினும். மாயை வயப்பட்ட மானிட மனோதத்துவ இலட்சணம் இனைத்தென்பதையும் நல்லொழுக்கத்தால் விளையுமின்பம் இஃதென்பதையும், கூடாவொழுக்கத்தால் நேரிடும் துன்பம் இத்திறத்ததென்பதையும் எளிய வசன நடையில் கதா ரூபமாக அஸம்பாவிதமான கற்பனாம்சங்களை ஒழித்துக் கூறும் நூல்கள் மிகச் சிறுபான்மையே யாதலின் ஸ்ரீமான் தி. ம. பொன்னுசாமிப் பிள்ளை யவர்களியற்றிய கமலாக்ஷி என்னும் இந்நூல் தமிழராம் இரு பாலார்க்கும் அமுதுபோலினித்து நற்பயன் நல்க வல்லதென்பது திண்ணம்' - தண்டலம் பாலசுந்தர முதலியார்.

இலக்கிய இடம்

கமலாக்ஷி தமிழில் எழுதப்பட்ட முதல் வணிகக் கேளிக்கை எழுத்து என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. தொடக்ககால நவீன இலக்கியப் படைப்புகளில் இருந்த வாழ்க்கையின் யதார்த்தத்திற்கு பதிலாக, ஆசிரியர் நிகழ்வுகளை உருவாக்கி, அவற்றை திறம்படப் பின்னிப் பின்னிச் செல்லும் கதைமுறை இதில் கையாளப்பட்டது. பின்னாளில் கல்கி முதலிய படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தது இந்த எழுத்துமுறை.

இலக்கிய விமர்சகர் க.நா.சு அவருடைய 'முதல் ஐந்து தமிழ் நாவல்கள்' என்னும் நூலில் இதை இவ்வாறு மதிப்பிடுகிறார்.

'சம்பவங்களைப் பின்னி ஒழுங்கு படுத்துவதில் தமிழ் நாவல் இலக்கியத்தை வளப்படுத்துவதில் முதல் முதலாகப் பொன்னுசாமிப்பிள்ளை தான் ஊக்கம் காட்டினார் என்று சொல்ல வேண்டும். மாதவையாவும், ராஜமையரும் வேதநாயகம் பிள்ளையும், நடேச சாஸ்திரியாரும் நேராகவே கதை சொல்ல விரும்பினார்கள். தமிழ் நாவல் பொன்னுசாமிப் பிள்ளையின் கையில் சிடுக்கில்லாத பின்னலாக மாறிற்று; அழகான பின்னலாக மாறிற்று. நாவல் எழுதித் தேறத் தேற அவர் கை இந்தப் பின்னல் வேலையில் பிரமாதமான தேர்ச்சி பெற்றது. கமலாக்ஷியைவிட ஞானாம்பிகையில் இந்தப் பின்னல் வேலை அபூர்வமாக அமைந்துவிட்டது. எனினும் கமலாக்ஷியிலும் பின்னல் சிறப்பாகவே இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்'.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால நாவல் என்ற வகையில் அன்றைய வாழ்க்கைச் சூழலையும் மனநிலைகளையும் முன்வைக்கும் நாவலாக இதை மதிப்பிடலாம். க.நா.சு இதை இவ்வாறு மதிப்பிடுகிறார்.

'பொன்னுசாமிப் பிள்ளையின் நாவலைப் படிக்கும்போது அந்த நாட்களின் வாழ்க்கை வளம் நமக்கு ஓரளவுக்குத் தெரிகிறது; ஓரளவுக்கு என்று சொல்வதுதான் நியாயம். ஏனென்றால் கதை சுவாரஸ்யமாக ஓட வேண்டுமே என்பதற்காகச்சில விஷயங்களை அவர் சற்று அதிகப்படுத்தியே எழுதிவந்திருக்கிறார் என்று எண்ண வேண்டியதாக இருக்கிறது'.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jun-2026, 08:25:57 IST