under review

திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்

From Tamil Wiki
முருகன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முருகன் (பெயர் பட்டியல்)
திருவிரிஞ்சைப் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருவிரிஞ்சைப் (பெயர் பட்டியல்)
பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பிள்ளைத்தமிழ் (பெயர் பட்டியல்)
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்

திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ், (17-ம் நூற்றாண்டு) பிள்ளைத்தமிழ் வகையைச் சேர்ந்த சிற்றிலக்கியங்களுள் ஒன்று. இந்நூலை இயற்றியவர் மார்க்க சகாய தேவர். முருகப்பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட இந்நூலில் மொத்தம் 101 பாடல்கள் உள்ளன.

நூல் பதிப்பு வரலாறு

திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூலின் முதல் பதிப்பு சென்னை கல்வி விளக்க அச்சுக்கூடத்தில் 1836-ல் வெளியானது. தொடர்ந்து 1864, 1891, 1944 எனப் பல பதிப்புகள் வெளியாகின. பேராசிரியர் பு. சி. புன்னைவனநாத முதலியார் எழுதிய அரும்பொருள் விளக்க உரையுடன் இந்நூலின் மறுபதிப்பை திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1957-ல் பதிப்பித்து வெளியிட்டது. இதன் புதிய பதிப்பை சென்னை திருப்புகழ்ச் சங்கமம், 2018-ல் வெளியிட்டது.

தல வரலாறு

திருவிரிஞ்சை தொண்டைநாட்டில், பாலாற்றங் கரையிலுள்ள ஒரு நகர். இதில் நான்முகன், திருமால், பராசக்தி முதலியோர் பூசித்துப் பேறுபெற்றனர். கழுதை முகமுள்ள அசுரன் ஒருவன் பூசித்துக் கழுதை முகம் போக்கிக் கொண்டதாக நூல் வரலாறு கூறுகிறது. இதனால் இத்தலம் கரலூர், கரபுரி என்று அழைக்கப்பட்டது. இத்தல இறைவன் மார்க்கசகாயர். அம்பாள் மரகதவல்லி. அந்தணச் ஒருவனுக்காக சிவபெருமான் திருமுடியை வளைந்து கொடுத்த தலமாக அறியப்படுகிறது. வணிகர் ஒருவருக்கு இத்தல இறைவன் வழித்துணையாக வந்த காரணத்தால் 'மார்க்க சகாயர்' என்று போற்றப்படுகிறார்.

இத்தலத்தில் முருகப் பெருமானுக்குத் தனிச்சன்னதி உள்ளது. அங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு மார்க்க சகாய தேவரால் பாடப்பட்ட நூலே திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்.

ஆசிரியர் குறிப்பு

மார்க்க சகாய தேவர், திருவிரிஞ்சை தலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். முருகனின் அருள் பெற்றவர். வரகவி என்று போற்றப்பட்டவர். அருணகிரிநாதரின் பாடல்களை ஆராய்ந்து அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என்று முதன் முதலில் குறிப்பிட்டவர் மார்க்க சகாய தேவர். இவரது காலம் (17 ஆம் நூற்றாண்டு

நூல் அமைப்பு

சிற்றிலக்கியங்களில் பிள்ளைத்தமிழ் என்னும் வகைமையச் சார்ந்தது திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ். நூலின் தொடக்கத்தில் பிள்ளையார் வணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கான கீழ்க்காணும் பருவங்கள் இடம்பெற்றன.

  • காப்புப்பருவம்
  • செங்கீரைப்பருவம்
  • தாலப்பருவம்
  • சப்பாணிப்பருவம்
  • முத்தப்பருவம்
  • வருகைப்பருவம்
  • அம்புலிப்பருவம்
  • சிற்றிற் பருவம்
  • சிறுபறைப்பருவம்
  • சிறுதேர்ப்பருவம்

நூலின் தொடக்கத்தில் அமைந்த காப்புச் செய்யுளுடன் சேர்த்து பருவத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் 101 பாடல்கள் இடம்பெற்றன.

உள்ளடக்கம்

முருகன் பிள்ளைத்தமிழ் நூலின் முதலில் அமைந்த காப்புப் பருவத்தில், மற்ற நூல்கள் எதிலும் இடம் பெறாத வகையில் திருவருள், திருநீறு, மார்க்க சகாய சுவாமி, கங்கை, கணபதி, வைரவன், திருவேல், திருமயில், திருமுருகாற்றுப்படையும் திருப்புகழும், பலதேவர்கள் என முருகன் தொடர்பானவை பற்ரிய பாடல்கள் அமைந்துள்ளன.

இந்நூலில் முருகனின் பெருமை, சிறப்பு, புகழ், அருள் புரியும் விதம் இவற்றோடு சிவபெருமான், முருகன் ஆகியோர் செய்த அற்புதங்களும் பல்வேறு பாடல்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.

பாடல் நடை

காப்புப்பருவம்: பலதேவர்கள்

கந்தனை வேளை விரிஞ்சையில் மேவு
கடம்பனை மாதுமையாள்
மைந்தனை வேலனை எங்கும ரேசனை
வந்திரு தாள்பணிவார்
இந்திரர் வானவர் சந்திர சூரியர்
எண் இசை யோர்முனிவோர்
செந்திரு மார்பினர் விஞ்சையர் பா கலர்
செங்கம லாசனரே.

சப்பாணிப்பருவம்

துக்கம்அக லத்தினநி னைப்பவர்ம னத்திருள் து
ரத்தியம ணித்தீபமே
சுற்றியபி றப்பினில்இ யற்றியவி னைத்திடர் து
வைக்குமொரு சிற்றானையே
மைக்கடுவ டக்கியவ ழித் துணைவர் பொற்புயம
லைக்கணியு முத்தாரமே
மற்றுநிக ரற்றசுரு திப்பொருள்க லைப்பொருள்ம
ணக்குமொரு கர்ப்பூரமே
நெக்குருகு சிட்டர்கள்கு ளித்திட௮ ருட்புனல்நி
றைத் தருளு நெட்டோடையே
நித்தம்உத் திக்குளுத யப்பரிதி யிற்சுடர்நி
கழ்த்தியம ணிக்கோவையே
குக்குடமு யர்த்தருள் தி ருக்கரபு ரத்திறைவ
கொட்டியருள் சப்பாணியே
கொட்டமொடெ திர்த்தவசு ரக்குழுவை வெட்டுமுனி
கொட்டியருள் சப்பாணியே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2024, 19:46:06 IST