திருவாரூர் வீதிவிடங்கன் பிள்ளை
- திருவாரூர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருவாரூர் (பெயர் பட்டியல்)
திருவாரூர் வீதிவிடங்கன் பிள்ளை (1873-1933) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
வீதிவிடங்கன் பிள்ளை திருவாரூர் சுப்பிரமணிய பிள்ளை - மாணிக்க நாச்சியார் இணையருக்கு 1873-ம் ஆண்டு பிறந்தார்.
தந்தை சுப்பிரமணிய பிள்ளையிடம் வாய்ப்பாட்டு கற்றார். குறுகிய கால நாடக வாழ்க்கைக்குப் பிறகு நாதஸ்வர இசையில் பயிற்சி எடுத்துக்கொண்டார்.
தனிவாழ்க்கை
வீதிவிடங்கன் பிள்ளை உடன் பிறந்தவர்கள் தியாகப்பாபிள்ளை (நாதஸ்வரம்), அகிலாண்டம். மாணிக்க நாச்சியார் மறைவுக்குப் பின் சுப்பிரமணிய பிள்ளை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு நடேசபிள்ளை (நாதஸ்வரம்), கண்ணப்பாபிள்ளை (தவில்), முத்தப்பா பிள்ளை (நாதஸ்வரம்) என்ற பிள்ளைகள் பிறந்தனர்.வீதிவிடங்கன் பிள்ளை
இளமையில் திருவையாற்றில் நடந்த நாடகங்களில் பெரும் ஈடுபாடு கொண்டு வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் சென்று ஒரு நாடகக் குழுவில் சேர்ந்தார். அவரது குரல் வளத்துக்காக பெரும் புகழ் பெற்றிருந்தார். எழாண்டுகள் கழித்து நாடக வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.
வீதிவிடங்கன் பிள்ளை திருவாரூர் ராஜாயி அம்மாளை மணந்து கொண்டார். சில காலத்திலேயே ராஜாயி அம்மாள் காலமானார். அதன் பின்னர் நாதஸ்வரக் கலைஞர் திருவாரூர் நடேச பிள்ளையின் மகள் வீரம்மாளை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். மகன் டி. வி. நமச்சிவாயம் (இசைக்கலைஞர்), மகள் சக்குபாய் (கணவர்: திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளையின் மகன் சிவாஜி).
இசைப்பணி
திருவாரூர் வீதிவிடங்கன் பிள்ளையின் நாதஸ்வர இசை வாய்ப்பாட்டு போல ஒலிக்கும். ஏராளமான கீர்த்தனைகள் அறிந்தவர்.
இவரிடம் வாய்ப்பாட்டு கற்ற மாணவர்களில் முக்கியமானவர் வானொலி நிலையத்தில் இசைத்தயாரிப்பில் இருந்த கே. ஸி. தியாகராஜன்.
மறைவு
திருவாரூர் வீதிவிடங்கன் பிள்ளை 1933-ம் ஆண்டு காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-Jul-2023, 06:30:44 IST