திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்
- முருகன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முருகன் (பெயர் பட்டியல்)
- திருமலை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருமலை (பெயர் பட்டியல்)
- பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பிள்ளைத்தமிழ் (பெயர் பட்டியல்)

திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் (19-ம் நூற்றாண்டு), திருமலை என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானின் மீது பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல். இந்நூலை இயற்றியவர் கவிராச பண்டாரத்தையா.
பதிப்பு வரலாறு
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் நூலைப் பரிசோதித்துப் பதிப்பித்தவர், சென்னை வித்வான் சி. வே. விவேகாநந்த முதலியார். இந்நூலை, 1927-ல், சென்னை எம்.வி. அம்பாள்தாஸன் அண்ட் கோ நிறுவனம் அச்சிட்டு வெளியிட்டது. இதன் மற்றொரு பதிப்பை, 1929-ல், திருமலை முருகன் கோயில் தர்மகர்த்தாக்கள் T. S. செண்பகம் பிள்ளை, V. S. சுப்பையா பிள்ளை இணைந்து பதிப்பித்தனர். சென்னை சி. முனுசாமி முதலியார் சன்ஸ் நிறுவனம் இந்நூலை அச்சிட்டு வெளியிட்டது. அதே ஆண்டில், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் நிறுவனமும் இந்நூலை வெளியிட்டது.
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் நூலை திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், பேராசிரியர் பெருநாவலர் பு. சி. புன்னைவனநாத முதலியார் எழுதிய அரும்பொருள் விளக்கத்துடன், 1957-ல் பதிப்பித்தது.
தல வரலாறு
திருமலை என்ற தலம், செங்கோட்டையை அடுத்துள்ளது. தென்காசி வட்டத்தைச் சார்ந்த பண்புழியை (பண்பொழில்) சேர்ந்தது. இதுவே இச்செய்யுள் நூலில் பண்பை நகர் என்று குறிக்கப்பட்டுள்ளது. இதன் பண்டைய பெயர் 'பைம்பொழில்' என்பது ரா.பி. சேதுப்பிள்ளையின் கருத்து.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானின் மீது கவிராச பண்டாரத்தையாவால் பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்.
ஆசிரியர் குறிப்பு
கவிராச பண்டாரத்தையா திருநெல்வேலியை அடுத்துள்ள செங்கோட்டையில் வாழ்ந்தவர். பெரும்புலவர் என்று போற்றப்பட்டவர். இவர் முருகன் மீது பாடிய மற்றொரு பிள்ளைத் தமிழ் நூல், திருவிலஞ்சி முருகன் பிள்ளைத் தமிழ்
நூல் அமைப்பு
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் பின்வரும் பருவங்கள் இடம்பெற்றன.
- காப்புப்பருவம்
- செங்கீரைப்பருவம்
- தாலப்பருவம்
- சப்பாணிப்பருவம்
- முத்தப்பருவம்
- வருகைப்பருவம்
- அம்புலிப்பருவம்
- சிற்றிற் பருவம்
- சிறுபறைப்பருவம்
- சிறுதேர்ப்பருவம்
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் நூலின் தொடக்கத்தில் அமைந்த காப்புச் செய்யுள் மற்றும் அவையடக்கப் பாடலுடன் சேர்த்து பருவத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் இந்நூலில் 102 பாடல்கள் இடம்பெற்றன.
உள்ளடக்கம்
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் நூலின் தொடக்கத்தில் கணபதி மீதான காப்புச் செய்யுள் இடம்பெற்றது. தொடர்ந்து வந்த காப்புப் பருவத்தில் குழந்தை முருகனைக் காக்க வேண்டி திருமால், சிவபெருமான், உமை, திருமகள், நாமகள், பிரம்ம தேவன், காளி, வள்ளி, தேவயானை, கன்னிமார், சப்த மாதாக்கள், வீரபத்திரர், வயிரவர், சரஸ்தா, அட்டவசுக்கள், ஏகாதச ருத்திரர், அசுவினி தேவதைகள், சந்திரன், ஆதித்தர், பதினெண்கணம், சப்தரிஷிகள் ஆகியோர் துதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து முருகப்பெருமானின் குழந்தைப் பருவச் செயல்களுடன் முருகனின் சிறப்பு, பெருமை, வேலின் புகழ், அருள் ஆகியன பாடல்களில் கூறப்பட்டன.
பாடல் நடை
தாலப்பருவம்
பண்டைக் கொடிய தீவினையும்
பழிக்குங் குலமும் நானெனும் ஓர்
பகையும் தீர்ந்திட் டிம்மையிலே
பரிந்து மனது குழைந்துருகுந்
கொண்டைக் தொகையி னுடன்கூடித்
தொனிக்க இனிக்கும் திருப்புகழைச்
சொல்லிக் துதிக்க நல்இயலாந்
தொலையா வாழ்வு கொடுத் தருளி
அண்டத் திறைவன் பொன்முடிக்கும்
அமலக் கமலன் மணிமுடிக்கும்
அமரர் முனிவர் தலைகளுக்கும்
அணியப் பணியக் கிடையாத
தண்டைப் பதத்தை எனக்களித்த
தலைவா தாலோ தாலேலோ
தாமக் குவளை திருமலை வித்
தகனே தாலோ தாலேலோ.
சிறுபறைப் பருவம்
மருவாத பாலையிற் பொய்யா மொழிக்குமுன்
வந்தொரு செழுங்கவிதையு
மாறான சூரன்முன் தம்பிநீ தூதுபோய்
வாவென் றியம்புமொழியுங்
குருவாக வந்தருண கிரியைத் திருப்புகழ்
கூறென முதற்சந் தமுங்
கும்பமுனி இருசெவி மனத்தொடு சரீரமுங்
குளிரமுத் தமிழின் இயல்பும்
அருவாய் மிகுந்தபல வுருவாய் நிறைந்தருளும்
அப்பனுக் கொப்பிலாத
ஆனந்த மதுரரசம் ஒழுகுதே வாரமுடன்
அழியாத ஒருவாய்மையுந்
திருவாய் மலர்ந்துரைசெய் குமரகுரு நாதனே!
சிறுபறை முழக்கியருளே
செழுமறை முழக்கமுறு திருமலை யருட்குமர
சிறுபறை முழக்கியருளே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Aug-2024, 18:55:53 IST