under review

திருப்பறம்பூர் புஷ்பதந்தர் கோயில்

From Tamil Wiki
திருப்பறம்பூர் புஷ்பதந்தர் (நன்றி பத்மாராஜ்)

திருப்பறம்பூர் (திருப்பணமூர்) புஷ்பதந்தர் கோயில் (பொ.யு. 15--ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டலம்) காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

காஞ்சிபுரத்திலிருந்து பதினெட்டு கிலோமீட்டர் தொலைவில் கலவைக்குச் செல்லும் சாலையை ஒட்டி திருப்பறம்பூர் புஷ்பதந்தர் கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து தென் மேற்கில் அய்யங்கார்குள திருப்பத்தில் உள்ள வலதுபுற சாலையில் இருபது கிலோமீட்டரில் திருப்பறம்பூர் உள்ளது.

வரலாறு

திருப்பறம்பூர் புஷ்பதந்தர் கோயில்

பொ.யு. 15--ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில். கரந்தை, திருப்பறம்பூர் எனப்பெயர் கொண்டு ஒரே ஊராகத் திகழ்ந்த இத்தலத்தின் தென்பகுதி கரந்தை எனவும், வடபகுதி திறப்பறம்பூர் எனவும் பிற்கால பிரிக்கப்பட்டது. இத்தகைய பிரிவுஏற்பட்ட காலத்தில் வடபகுதியாகிய திருப்பறம்பூரில் புஷ்பதந்த தீர்த்தங்கரருக்குத் தனிக்கோயில் ஒன்று எழுப்பப்பட்டிருச்கிறது. பல நூற்றாண்டுகளாக சமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். அருகில் கரந்தையில் சென்று வழிபாடு செய்து வந்தனர். 15--ம் நூற்றாண்டில் தங்கள் ஊருக்கான சமணக்கோயிலாக திருப்பறம்பூர் (திருப்பணமூர்) புஷ்பதந்தர் கோயிலை நிறுவினர்.

புஷ்பதந்தர் கோயில் அருகர் பாதங்கள்

அமைப்பு

இக்கோயில் கருவறை, அர்த்ததண்டபம், முகமண்டபம், மானஸ்தம்பம், பலிபீடம், திருச்சுற்றுமதில் ஆகிய பகுதிகளைக் கொண்டது. கருங்கல்லால் கட்டப்பட்ட அடித்தளம் தாமரை இதழ்கள் செதுக்கப்பட்ட உபானம், ஜகதி, தாமரை இதழ்களைக் கொண்ட முப்பட்டைக் குமுதம், கண்டரம், கம்பம், மகாபட்டிகை, வாஜனம் முதலிய உறுப்புகளையுடையது. கருவறை, மண்டபங்கள் ஆகியவற்றின் புறச்சுவர்களில் அரைத்தூண்கள், கும்பஞ்சரங்கள், தேவகோட்டங்கள் ஆகியவை உள்ளன. அரைத்தூண்கள் கால், கலசம், கும்பம், கண்டம், பூமுனை அமைப்புடைய போதிகை ஆகிய அமைப்புகள் உள்ளன. தேவகோட்டங்களில் சிற்பங்கள் எவையும் இல்லை. இத்தேவகோட்டங்களின் மேற்பகுதியில் சாலை எனப்படும் நீள்சதுர வடிவக்கோயில் அமைப்புகள் உள்ளன. வெளிச்சுவர்களை அணி செய்யும் கும்பஞ்சரங்கள் அலங்கார வேலைப்பாடுகளுடனும், கும்பத்தினின்று வெளிப்படும் உருண்டை வடிவ தூண்கள் செதுக்கு வேலைப்பாடுகளுடனும் மேற்பகுதியில் கூடம் எனப்படும் சதுர வடிவ கோயில் அமைப்பினைப் பெற்றிருப்பதையும் காணலாம்; இந்த தூண்களின் அடிப்பகுதியில் சிங்கமுக அலங்காரங்கள் உள்ளன. இந்தகைய கலைப்பாணி அனைத்தும் பொ.யு. 15-ம் நூற்றாண்டிற்குரியது.

அர்த்தமண்டபத்தில் தூண்கள் எவையும் நிறுவப்படவில்லை. மகாமண்டபத்திலுள்ள தூண்கள் உருண்டை வடிவமாகவும், அவற்றின்மேல் நீள்சதுரப்பொதிகைகளையும் உள்ளன. பொ.யு. 15--ம் நூற்றாண்டில் இந்த கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய பகுதிகளை மட்டும் கொண்டதாக இருந்தது. பொ.யு. 19--ம் நூற்றாண்டில் முகமண்டபம் புதியதாகத் தோற்றுவிக்கப்பட்டது. இக்கோயில் 1979--ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டபோது மகாமண்டபத்தில் வெளிச்சுவர்களும் சீர் செய்யப்பட்டது. விமானம் முன்பு ஒரு தளமுடையதாக இருந்து 1979-ல் முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டது.

புஷ்பதந்தர் கோயில் சிற்பங்கள்

மானஸ்தம்பம் இருபதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. மானஸ்தம்பத்திற்குத் தென்புறத்தில் அண்மைக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட மண்டபம் உள்ளது. இதன் நடுப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள பீடங்களில் இரண்டு அறவோர்களது திருவடிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை திருப்பறம்பூரைச்சார்ந்த தர்மசாகர். சுதர்மசாகர் என்னும் சான்றோர்களின் திருவடிகளைக் குறிப்பவை. 1870--ம் ஆண்டு அவதரித்த தர்மசாகர் சமண நெறிவழுவாது வாழ்ந்து துறவறம் மேற்கொண்டு பின்னர் சிரவணபெலகோலாவில் 1940--ம் ஆண்டு உயிர் நீத்திருக்கிறார். இப்பெரியோரது மைந்தராகிய சுதர்மசாகர் 1902--ம் ஆண்டு அவதரித்தவராவார். துறவு நெறி பூண்டொழுகிய இவர் 1973--ம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்திலுள்ள கஜபந்தர் என்னும் தலத்தில் சுகதியடைந்ததாகத் தெரிகிறது. 1988--ம் ஆண்டு அவ்வூரிலேயே சல்லேகனைப் பூண்டு சுகதி அடைந்த கஜபதிசாகரின் திருவடிகளும் நிறுவப்பட்டுள்ளன. புஷ்பதந்தர் கோயிலை உள்ளடக்கியவாறு பொ.யு. 15--ம் நூற்றாண்டில் திருச்சுற்று மதிலும், அதன் கிழக்குப் பகுதியில் கோபுரமும் கட்டப்பட்டது.

சிற்பங்கள்

புஷ்பதந்தர் கோயில் தருமதேவி

திருப்பறம்பூரிலுள்ள கோயிலின் கருவறையில் புஷ்பதந்த தீர்த்தங்கரர் தியானக் கோலத்தில் உள்ளார். கல் சிற்பமாகிய இதில் சுதை பூசி வெள்ளை நிற வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. மூலவராகத் திகழ்ந்த இச்சிற்பம் தற்போது நுழைவாயிலில் வழிபாடற்ற நிலையிலுள்ளது. சிம்மாசனத்தில் தியானக் கோலத்தில் வீற்றிருக்கும் புஷ்பதந்தரின் தலைக்குப் பின்புறம் அரைவட்ட வடிவ அலங்கார பிரபையும், அதற்கு மேல் முக்குடையும், கொடியமைப்பும் செதுக்கப்பட்ட இச்சிற்பம் பொ.யு. 16--ம் நூற்றாண்டுக் கலைப்பாணியைக் கொண்டது.

அர்த்தமண்டபத்தினுள் பிரம்மதேவர், பார்சுவதேவர். தருமதேவி ஆகியோரது சிற்பங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் பிரம்மதேவர் திருவுருவம் பீடமொன்றில் அமர்ந்தவாறு காணப்படுகிறார். இவரது வலது கால் யானை வாகனத்தின் மீது ஊன்றிய வாறும், இடது கால் பீடத்தில் மடக்கி வைத்தவாறும் உள்ளன. இத்தேவரது வலதுகை லாக்குடம் என்னும் வளைந்த கோலை பெற்றும், இடதுகை சின்முத்திரையைக் குறித்தும் உள்ள இச்சிற்பம் பொ.யு. 14--ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இது புஷ்பதந்தர் கோயிலைச் சார்ந்ததல்ல. அண்மைக் காலத்தில் கரந்தையிலுள்ள குந்துநாதர் கோயிலிலிருந்து கொண்டு வந்து நிறுவியதாகக் கூறப்படுகிறது. இந்த சிற்பத்தைத் தவிர மற்றவை தற்காலத்தைச் சார்ந்தவை. இவற்றைப் போன்று இங்குள்ள தீர்த்தங்கரர், யக்ஷன் யக்ஷியரைக் குறிக்கும் உலோகத் திருமேனிகளும் பழமை வாய்ந்தவையல்ல. இதன் எந்த பகுதியிலும் கல்வெட்டுக்கள் இல்லை.

வழிபாடு

நித்ய பூஜை, நந்தீஷ்வர் பூஜை, விசேஷ பூஜைகளோடு நவராத்திரி, மார்கழி முக்குடையும் மார்ச் மாத அஷ்டானிகத்தின் கடைசி மூன்று நாட்கள் தரணேந்திர பத்மாவதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 

உசாத்துணை


✅Finalised Page