under review

திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர்

From Tamil Wiki

திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர் (1857 - 1913) கர்நாடக இசை மரபை சார்ந்த வயலின் கலைஞர். கர்நாடக இசையில் வயலின் கருவியை வாசிப்பதில் தனித்துவம் மிக்கவராக திகழ்ந்தார்.

இளமை, கல்வி

திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர் 1857-ம் ஆண்டு திருக்கோடிக்காவல் என்ற ஊரில் குப்புசாமி ஐயருக்கு மகனாகப் பிறந்தார். குப்புசாமி ஐயர் இசை பாடகர் மற்றும் இசை பேருரைகள் ஆற்றும் பாகவதர். தந்தை குப்புசாமியிடம் இருந்து தொடக்க காலத்து இசைக்கல்வியை பெற்றார். பின்னர் குடவாசல் வெங்கடராம ஐயரிடம் இசை கற்றுக்கொண்டார். வெங்கடராம ஐயர் தான வர்ணங்கள் இயற்றுவதில் வல்லவர். திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயருக்கு குரல் வளம் நன்றாக இல்லை. வெங்கடராம ஐயர் வயலின் வாத்திய கருவியை கற்கும்படி பரிந்துரைத்தார். எனவே பிடில் சுப்பாராயாரிடம் வயலின் கற்றுக்கொள்ள தொடங்கினார். பின்னர் முத்துசாமி தீட்ஷிதர் பரம்பரையில் வந்த சாத்தூர் பஞ்சு ஐயரிடம் இசை கற்றார். இவருடன் வீணை தனம்மாள், நாதஸ்வர வித்துவான் திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை ஆகியோரும் பஞ்சு ஐயரிடம் இசை கற்றனர்.

தனிவாழ்க்கை

திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர் கிராம முன்சீப்பாக வேலை செய்தார். இசை நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதை காரணம் கூறி பிரிட்டீஷ் மேலதிகாரி இவரது பணியை ரத்து செய்தார். அரசாங்கத்திடம் மேல்முறையீடு செய்து அப்பணியை தனது மகனுக்குக் கிடைக்கும்படி செய்தார். செம்மங்குடி சீனிவாச ஐயர் இவரது மருமகன்.

இசைப்பணி

திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர் தனது வாழ்நாளின் முழுமைக்கும் தொடர்ச்சியாக வயலின் கருவியை கர்நாடக இசை மரபிற்கேற்ப மேம்படுத்துவதில் ஈடுப்பட்டிருந்தார். ஒவ்வொரு நாளும் சரளி வரிசை, தானம் என்பவற்றை சாதகம் செய்தார். மிக குறைந்த கதியில் தொடங்கி நான்கு ஸ்தாயிகளில் பயிற்சி செய்தார். அத்துடன் வில்லின் ஒரு அசைவிலேயே 4, 8, 12, 32 இசைக்குறிப்புகளை எழுப்பும் திறனையும் பயிற்சியையும் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் நான்கு வர்ணங்கள் வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தார். வயலின் பக்கவாத்திய கருவி என்றும் அதன் பணி பிரதான இசைக்கலைஞரின் இசையை பிரகாசிக்க செய்வதே என்பதை உணர்ந்து மேடையில் தனது இசைப்பங்களிப்பை ஆற்றினார். எனவே திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர் தனியாக தானே இசைக்கோலங்கள் போடுவதில்லை. பிரதான பாடகரின் குரலை வயலினில் ஒலிக்க செய்து மெருகூட்டும் வித்துவானாக திகழ்ந்தார். தனது காலத்தின் பிரபல வித்துவான்களான மகா வைத்தியநாதையர், பட்டணம் சுப்பிரமணிய ஐயர் முதலியோருக்கு வயலின் வாசித்துள்ளார்.

ஒரு சமயம் திருமண வைபவம் ஒன்றின்போது கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரின் இசைக்கச்சேரிக்கு கிருஷ்ண ஐயர் வயலின் வாசித்தார். கும்பகோணம் அழகநம்பி பிள்ளை மிருதங்கம், புதுக்கோட்டை தட்சணாமூர்த்திப் பிள்ளை கஞ்சிரா, உமையாள்புரம் சுந்தரம் ஐயர் கடம் வாசித்தனர். கச்சேரி நான்கு மணி நேரம் நடைபெற்றது.

அச்சமயம் சிறுவனாக இருந்த அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் தனது தகப்பனாரான திருவேங்கடதையங்காருடன் வந்திருந்தார். பிரதான கச்சேரி முடிந்ததும் சிறுவனைப் பாட வைத்தனர். மிகப் பெரிய பக்க வாத்திய வித்துவான்களுக்கு மத்தியில் உட்காரப் பயந்து சிறுவன் இராமானுஜன் ஒரு ஓரமாக உட்கார்ந்தான். அச்சமயம் திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர் சிறுவனை நோக்கி "முன்னுக்கு வா" என்று கூறியதாகவும், பின்னாளில் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் மிகப் பெரும் இசைக் கலைஞராவதற்கான ஆசியாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.

மாணவர்கள்

மறைவு

திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர் 1913-ம் ஆண்டு மறைந்தார்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Nov-2025, 15:40:07 IST