under review

திருக்கைலாய ஞான உலா

From Tamil Wiki

திருக்கைலாய ஞான உலா(திருக்கயிலாய ஞான உலா, பொ.யு. 11-ம் நூற்றாண்டு) சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய, உலா என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்த நூல். பன்னிரு திருமுறைகளில் பதினோறாம் திருமுறையில் இடம்பெறுகிறது. உலா இலக்கியத்தின் முதல் நூலாகையால் ஆதியுலா எனவும் போற்றப்படுகிறது.

ஆசிரியர்

திருக்கைலாய ஞான உலாவை இயற்றியவர் சேரமான் பெருமாள் நாயனார்(கழறிற்றறிவார்). மாக்கோதையார் எனவும் அறியப்பட்டார்.

திருக்கயிலாய ஞான உலா பாடப்பட்ட வரலாறு

சேரமான் பெருமாள், சிவபெருமானின் அருளால் சுந்தரருக்கு உற்ற தோழராக இருந்தார். ஒருநாள் சேரமான் பெருமாள் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில், சுந்தரர் திருவஞ்சைக்களத் திருக்கோயிலையடைந்து, சிவபெருமானை அடையும் தனது விருப்பத்தை எடுத்துக் காட்டும் வகையில் ‘தலைக்குத் தலைமாலை’ என்ற திருப்பதிகத்தைப் பாடினார். அது கேட்டு மகிழ்ந்த சிவபெருமான், சுந்தரரை அழைத்துவருமாறு திருக்கயிலையில் இருந்து வெள்ளையானையுடன் தேவர்களை அனுப்பி வைத்தார். சுந்தரரும் அதன்படி வெள்ளை யானையில் ஏறி கயிலைக்குப் புறப்பட்டார்.

இதனை தமது ஆற்றலால் உணர்ந்து கொண்ட சேரமான் பெருமாள் நாயனார், தமது குதிரையின் மேல் ஏறி திருவஞ்சைக்களத்தை அடைந்தார். சுந்தரர் யானையின் மீதேறி விண்ணில் செல்வதைக் கண்டவர், தமது குதிரையின் காதில் ஐந்தெழுத்தை ஓதினார். உடன் மேலெழுந்த குதிரை வானில் சென்று, யானையை வலம் வந்து, அதற்கு முன்னே சென்றது.

சேரமான் திருக்கயிலையை அடைந்து ‘திருக்கயிலாய ஞான உலா’ பாடி சிவபெருமானைத் துதித்தார். இறைவன் அதைக் கேட்டு மகிழ்ந்து ‘நீ சிவகணத்தோடு ஒருவனாகி இங்கே இருப்பாயாக!’ என்று அருள் பாலித்தார். சேரமான் பெருமாள் நாயனார் என்னும் கழறிற்றறிவார் நாயனார் சிவகணங்களுள் ஒருவரானார்.

நூல் அமைப்பு

திருக்கைலாய ஞான உலா எல்லாவற்றிற்க்கும் ஆதியான கைலாய நாதன் உலாவருவதைப் பாடிய நூல்.197 கண்ணிகள்கொண்டது. பத்துப்பாட்டு நூல்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும் காணப்படும் வெண்பா போன்று இறுதியில் ஓர் வெண்பா இடம்பெறுகிறது. சிவன் உலா வரும்போது ஏழு பருவத்துப் பெண்களும் அவன்மீது காதல் கொள்கின்றனர். ‘கைலைப் பெருமானைப் பற்றிய உலா’ ஆதலின், ‘கைலாய உலா’ என்றும், வெளிநோக்கில் காமம் பொருளாக வந்தது போலத் தோன்றினும் உள்நோக்கில் ஞானம் பொருளாகவே வந்தமையால் ‘ஞான உலா’ என்றும் பெயர்பெற்றது.

பாடல் நடை

நன்றறி வார்சொல் நலம்தோற்று நாண்தோற்று
நின்றறிவு தோற்று நிறைதோற்று – நன்றாகக்
கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட
நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் – பெதும்பை பருவத்துப் பெண் (கண்ணி 98, 99)

பொருள்: நலம் தோற்று, நாண் தோற்று, அறிவு தோற்று, நிறை தோற்று, கைவண்டு (வளையல்) ஓட, கண்வண்டு (விழி) ஓட, கலை (அணிந்துள்ள ஆடை) ஓட, நின்று உள்ளம் ஒழிந்து ஒப்புக்கு நின்றுகொண்டிருந்தாள்.

உசாத்துணை


✅Finalised Page