திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவில்
திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள முற்கால சோழர் கோவில். இக்கோவில் முதலாம் ஆதித்ய சோழன் (பொ.யு. 871 - 907) காலத்தில் கட்டப்பட்டது.
ஆலய அறிமுகம்
திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலந்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது. இக்கோவில் முதலாம் ஆதித்ய சோழன் (பொ.யு. 871 - 907) காலத்தில் கட்டப்பட்டது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவிலின் மூலவராக சுந்தரேஸ்வரர் சிற்பம் லிங்க வடிவில் வழிபடப்படுகிறது. கோவிலின் ஆகம முறைகள், தலபுராணங்கள், இலக்கிய சான்றுகள் பற்றிய விவரங்கள் அறியக் கிடைக்கவில்லை.
இடம்
திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவில் புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 4.5 கிலோமீட்டர் தொலைவிலும் புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கே 2.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள திருக்கட்டளை என்ற ஊரில் அமைந்துள்ளது.
கோவில் வரலாறு, பெயர்
திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவில் பற்றிய முதன்மையான வரலாற்று செய்திகள் வரலாற்றாய்வாளர் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் எழுதிய 'Early Chola Art' என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளது[1]. இக்கோவிலுக்குள்ளும் திருக்கட்டளை ஊரிலும் காணப்பட்டும் கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு கோவில் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவில் முதலாம் ஆதித்ய சோழன் (பொ.யு. 871 - 907) காலத்தில் கட்டப்பட்டடு, பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டது.
கோவிலின் மகாமண்டபமும் அம்மன் சன்னிதியும் கோவிலின் மற்ற பகுதிகளிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது. இவை பிற்காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனவும் இவை கட்டப்பட்ட காலம் முதலாம் குலோத்துங்கன் (பொ.யு. 1070 - 1118) மற்றும் மூன்றாம் குலோத்துங்கனின் (பொ.யு. 1178 - 1216) காலத்திற்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் எனவும் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் கருதுகிறார்.
கோவிலின் பெயர் முற்கால கல்வெட்டுகளில் ‘கற்குறிச்சி திருக்கற்றளி’ எனவும், மூலவரின் பெயர் ‘கற்குறிச்சி கற்றளி பெருமானடிகள்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 15-ஆம் நூற்றாண்டின் விஜயநகர கால கல்வெட்டுகளில் மூலவர் பெயர் ‘திருக்கட்டளை ஈஸ்வரம் உடைய நாயனார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்கற்றளி எனும் பெயர் திருக்கட்டளை என மருவி இருக்கலாம் எனவும் ஊரின் முற்கால பெயர் 'கற்குறிச்சி' என்றும் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் கருதுகிறார்.
கோவில் தெய்வங்கள்
மூலவர்
கோவிலின் மூலவரான சுந்தரேஸ்வரர் சிற்பம், லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
கருவறையை சுற்றியுள்ள விமான அமைப்பில் கோஷ்டங்களில் திரிபுராந்தகர், விஷ்ணு, பிரம்மா ஆகிய வடிவங்கள் உள்ளன.
அம்மன் சன்னிதி, பரிவார ஆலயங்கள்
கோவிலில் அம்மன் சன்னிதி தனியாக அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளே சூரியன், சப்தமாதர், விநாயகர், சுப்ரமணியர், ஜேஷ்டா தேவி, சண்டிகேஸ்வரர், சந்திரர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கான ஆலயங்கள் அமைந்துள்ளன.
கோவில் கட்டிடக்கலை அமைப்பு
திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவில் முற்கால சோழர் கலை பாணியில் அமைந்துள்ளது. முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
கருவறை, அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபத்துடன் கூடிய கருங்கல் கட்டுமானம் வளாக மையத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறை உள்புறத்தில் 1.83 மீட்டர் பக்க அளவும் வெளிப்புறத்தில் 3.66 மீட்டர் பக்க அளவும் கனத்த சுவர்களும் கொண்ட சதுர வடிவமாக உள்ளது. கருவறைக்கு மேல் நாகர பாணி விமானம் அமைந்துள்ளது. மையக் கட்டுமானத்தைச் சுற்றி கருங்கல் பதிக்கப்பட்ட தளம் உள்ளது.
மூலக்கருவறையை சுற்றி திருச்சுற்று மதிலை ஒட்டியவாறு பரிவார தேவதைகளுக்கான தனித்தனி சுற்றாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவிலுக்கு எதிரே மதிலுக்கு வெளியே திருக்குளம் அமைந்துள்ளது.
அர்த்தமண்டபம்
அர்த்தமண்டபம் 1.83 மீட்டர் நீள அகலம் கொண்டது. சுவர் 0.6 மீட்டர் கனம் கொண்டது. அர்த்தமண்டபத்தின் வாயிலில் இரு துவார பாலர் சிற்பங்கள் ஜடாமகுடத்துடன் ஊர்த்துவஜானு நிலையில் ஸூசி மற்றும் பல்லவ ஹஸ்தத்தில் உள்ளன.
மகாமண்டபம்
மகாமண்டம் 6.4 மீட்டர் நீளமும் 5.64 மீட்டர் அகலமும் கொண்டது. மகாமண்டபத்தில் உட்புறத்தில் நான்கு முழு தூண்களும், தெற்கு சுவரில் ஒரு கல் சாளரமும் உள்ளன. தூண்கள் சதுரம் மற்றும் கட்டுகளுடன் வெட்டு போதிகை கொண்டவையாக உள்ளன. தூண்கள் 2.44 மீட்டர் உயரம் கொண்டவை. அர்த்தமண்டப வாயிலின் முன் ரிஷபமும் பலிபீடமும் உள்ளன.
விமான அமைப்பு
அதிஷ்டானம் (அடித்தளம்), பாதவர்க்கம் (சுவர்ப்பகுதி), பிரஸ்தாரம் (கூரை), கிரீவம் (கழுத்து), சிகரம் மற்றும் கலசம் ஆகிய உறுப்புகளைக் கொண்டு த்விதள (இருதள) விமானமாக அமைந்துள்ளது.
அதிஷ்டானம்
விமானத்தின் மொத்த கட்டுமானத்தையும் தாங்கும்அடித்தள அமைப்பான அதிஷ்டானமானது உபானம், ஜகதி, முப்பட்டை குமுதம், பாதம் மற்றும் பட்டிகை போன்ற உறுப்புகளை கொண்டுள்ளது. பாதபந்த அதிஷ்டானமாக வகைப்படுத்தப்படுகிறது.
பாதவர்க்கம்
கருவறையின் அதிஷ்டானத்திற்கு மேல் உள்ள பாதவர்க்க பகுதியில் அரைத்தூண்களும் (குட்யஸ்தம்பம்) கோஷ்டங்களும் உள்ளன. அரைத்தூண்கள் தாடி, ஆமலகம், பலகை, வீரகண்டம் மற்றும் தரங்க போதிகையுடன் காணப்படுகின்றன.
பொதுவாக சிவன் கோவில்களில் கருவறையின் வெளிப்புறச் சுவரில் தெற்குப்பகுதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சிற்பம் காணப்படும். இங்கு அவ்வழக்கத்திற்கு மாறாக திரிபுராந்தகர் சிற்பம் உள்ளது. திரிபுராந்தகர் சிற்பம் அர்த்த வைதஸ்திக ஸ்தானகத்தில் ஜடாமகுடத்துடன் தோள்வளை, கடகம், உதரபந்தம், இடைக்கட்டு ஆகிய அணிகலன்களுடன் காணப்படுகிறது. முன்னிரு கைகளில் வில்லும் அம்பும் உள்ளன. பின்னிரு கைகள் கர்த்தரி ஹஸ்தத்தில் அமைந்து ஆயுதங்கள் உடைந்த நிலையில் உள்ளன.
கோஷ்டத்தின் மேற்பகுதியில் ஹம்ச வரிசைகளும் அதற்கு மேல் மகர தோரணமும் காணப்படுகின்றன. கோஷ்டத்தின் இருபுறமும் உள்ள அரைத்தூண்களில் பூவடிவ வேலைப்பாடுகள் உள்ளன.
மேற்கு கோஷ்டத்தில் விஷ்ணு சிற்பம் கிரீடமகுடத்துடன் ஒரு கை அபய ஹஸ்தமாகவும் மற்றொரு கை ஊரு ஹஸ்தமாகவும் சமபாத ஸ்தானகத்தில் உள்ளது. பின்னிரு கைகளில் சங்கும் சக்கரமும் காணப்படுகிறது. கண்டிகை, சரப்பளி, முப்புரி நூல், உதரபந்தம், கடகம் மற்றும் இடைக்கட்டு போன்ற அணிகலன்களுடனும், பாதம் வரை ஆடையுடனும் காணப்படுகிறது. கோஷ்டத்தின் மேற்பகுதியில் பத்ம வரிசைகளும் அதற்கு மேல் மகர தோரணமும் உள்ளன.
வடக்கு கோஷ்டத்தில் பிரம்மாவின் சிற்பம் ஜடாமகுடத்துடன் முன்னிரு கைகள் அபய மற்றும் கடி ஹஸ்தமாக உள்ளது. பின்னிரு கைகளில் கர்த்தரி ஹஸ்தத்தில் அக்கமாலையும் குண்டிகையும் ஏந்தி நான்கு முகங்களுடன் காணப்படுகிறது. அணிகலன்களாக கண்டிகை, சரப்பளி, தோள்வளை, கடகம், முப்புரி நூல், உதரபந்தம், இடைக்கட்டு போன்றவை உள்ளன. கோஷ்டத்தின் மேற்பகுதியில் பத்ம வரிசைகளும் அதற்கு மேல் மகர தோரணமும் உள்ளன.
மூன்று பக்கமும் கோஷ்ட தூண்களின் பலகை மீது இரு கால்களை உயர்த்திய நிலையில் யாளியின் சிற்பம் காணப்படுகிறது.
பிரஸ்தாரம்
பிரஸ்தாரத்தின் வலபியில் பூதகணங்கள் விளையாடிக்கொண்டும் இசைக்கருவிகளுடனும் உள்ளன. தெற்குப் பகுதியில் உள்ள கோஷ்டத்தின் மேற்புற வலபியில் இரு பூதகணங்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்வது போன்று காட்டப்பட்டுள்ளது.
கபோத பகுதியில் இடைவெளி விட்டு கூடுகளும் ஓரப்பகுதியில் கோடிப்பாளை கருக்குகளும் உள்ளன. கூடுப்பகுதியில் கீர்த்தி முகங்கள், ரிஷபம் மற்றும் கஜசம்ஹார மூர்த்தி போன்ற சிற்பங்கள் உள்ளன. கருக்குகளுக்கு கீழும் கபோதக் கூடுகளுக்கு இடதும் வலதும் தொடர்ந்து சந்திரமண்டலம் காட்டப்பட்டுள்ளது. கபோதத்திற்கு மேல் உள்ள பகுதியில் யானை மற்றும் யாளி வரிகள் காணப்படுகின்றன.
முதல் தளம்
முதல் தளத்தில் நான்கு பக்கங்களிலும் சாலை, கூடு மற்றும் கர்ண கூடு போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. சாலை மற்றும் கர்ண கூடுகளின் சிகரங்களின் மீது கலசம் உள்ளது. சாலையின் மையப் பகுதியில் ஒரு தெய்வ உருவமும் இருபுறமும் பார வாககன்களும் இடம்பெற்றுள்ளன. பார வாககன்களின் ஒரு கை சாலையின் சிகரத்தை தாங்கியவாரும் மற்றொரு கை தொடையில் வைத்தவாரும் ஆலீடாசன நிலையில் உள்ளது.
முதல் தளத்தின் தென் பகுதியில் உள்ள சாலையின் மையத்தில் பிட்சாடனார் சிற்பம் அர்த்த வைதஸ்திக ஸ்தானகத்தில் உள்ளது. முன்னிரு கைகளில் வலதுகை கீழே நிற்கும் மானை தொட்டு கொண்டும் இடதுகை திரிசூலத்தை ஏந்தியவாரும் காணப்படுகின்றன. கூடுகளில் பூதகணங்களும் நடன சிற்பங்களும் உள்ளன.
மேற்கில் உள்ள சாலையின் மையத்தில் விஷ்ணு சிற்பம் அமர்ந்த நிலையில் உள்ளது. கர்ண கூடுகளில் முனிவர், தவழும் குழந்தை மற்றும் நடன கோலத்தில் உள்ள குழந்தை போன்றவை சுதைச் சிற்பங்களாக உள்ளன.
வடக்கில் உள்ள சாலையின் மையத்தில் பிரம்மாவின் சிற்பம் நான்கு முகங்களுடன் சுகாசனத்தில் அமைந்துள்ளது.
இரண்டாம் தளம்
இரண்டாம் தளத்தின் கபோதத்தின் கீழ் பகுதியில் அன்ன வரிசைகளும் மேல்பகுதியில் யாளி வரிசைகளும் காணப்படுகின்றன. கபோதத்தில் இடைவெளி விட்டு கூடுகளும் ஓரப்பகுதியில் கோடிப்பாளை கருக்குகளும் உள்ளன. கூடுகளுக்கு இடையில் சந்திர மண்டலங்கள் காட்டப்பட்டுள்ளன. தளத்தின் மேல் நான்கு புறங்களிலும் ரிஷப வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. ரிஷபத்தின் கழுத்தில் மணி மற்றும் ஆரங்கள் காணப்படுகின்றன.
கிரீவம்
தெற்கில் உள்ள கிரீவ (கண்டம்) கோஷ்டத்தில் வீணாதர தட்சிணாமூர்த்தி சிற்பம் நான்கு கரங்களுடனும் ஜடாபாரத்துடனும் காணப்படுகிறது. முன்னிரு கைகள் வீணையை பிடித்தவாறு வீராசனத்தில் அமைந்துள்ளது. பின் வலதுகையில் நாகமும், இடதுகையில் மானும் உள்ளன. காலடியில் ரிஷப வாகனம் உள்ளது.
மேற்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் பூவராக மூர்த்தி சிற்பம் வலதுதொடையில் லட்சுமியை தாங்கியவாறு இடதுகாலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அமைந்துள்ளது. பின்னிரு கரங்களில் சங்கும் சக்கரமும் உள்ளன. முன்னிரு கரங்களில் வலது கை தேவியை அணைத்தவாரும் இடதுகை வரத முத்திரையாகவும் உள்ளது. தேவியின் சிற்பம் கரண்ட மகுடத்துடன் வராக மூர்த்தியை அணைத்தவாறு இரு கால்களையும் தொங்கவிட்டு சுகாசனத்தில் அமைந்துள்ளது.
வடக்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் பிரம்மாவின் சிற்பம் நான்கு முகங்களுடன் சுகாசனத்தில் அமைந்துள்ளது. சிதைந்த நிலையில் இருப்பதால் கைகளில் உள்ளவற்றை அடையாளப்படுத்த முடியவில்லை.
கிழக்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் உமாசகிதர் சிற்பம் சுகாசனத்தில் வலது தொடையில் உமையை தாங்கியவாரும் வலது முன் கையால் உமையை அணைத்தவாரும் அமைந்துள்ளது. பின்கைகள் சிதைந்தநிலையில் உள்ளன.
சிகரம், கலசம்
விமானத்தின் சிகரம் சதுர வடிவம் கொண்ட நாகர சிகரம். சிகரத்தின் அடிப்பகுதியில் அன்னவரிசைகள் உள்ளன. சிகரத்தின் நான்கு ஓரங்களிலும் கோடிப்பாளை கருக்குகளும் கூடுகளில் கீர்த்தி முகமும் காட்டப்பட்டுள்ளன. சிகரத்தின் மேற்பகுதியில் பத்ம வரிசைகளும் அதற்குமேல் கல்லாலான கலசமும் அமைந்துள்ளது.
அம்மன் சன்னிதி
வடகிழக்கு ஈசான மூலையில் தெற்கு நோக்கியவாறு அம்மன் சன்னிதி அமைந்துள்ளது. கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துடனும் பாதபந்த அதிஷ்டானத்துடனும் பிரஸ்தாரம் வரை அமைந்துள்ளது. விமானம் இல்லை. கருவறை 3.51 மீட்டர் நீள அகலம் கொண்டது. கருவறையில் உள்ள தேவியின் பெயர் மங்கலநாயகி அம்மன். அம்மன் சிற்பம் நின்ற நிலையில் முன்னிரு கைகள் அபய மற்றும் வரத ஹஸ்தமாகவும் பின்னிரு கைகளில் தாமரை மலர் மொட்டுக்கள் ஏந்தி கிரீடமகுடத்துடன் காணப்படுகிறது.
கிழக்கு பக்கம் மூலவரின் எதிரில் ரிஷபம் மற்றும் பலிபீடம் உள்ளது. ரிஷபத்தின் கழுத்தில் மணி மற்றும் ஆரங்கள் காணப்படுகின்றன.
பரிவார ஆலயங்கள்
திருச்சுற்று மதிலை ஒட்டி சூரியன், சப்தமாதர், விநாயகர், சுப்பிரமணியர், ஜேஷ்டா தேவி (ஜேஷ்டை), சண்டிகேஸ்வரர் மற்றும் சந்திரன் ஆகிய பரிவார தேவதைகளுக்கு தனித்தனி ஆலயங்கள் உள்ளன.
பரிவார தேவதைகளின் ஆலயங்கள் அனைத்துமே பாத பந்த அதிஷ்டானம் மற்றும் ஒற்றை கலசத்துடன் கூடிய ஏகதள விமானம் கொண்டவை. சிகரத்தின் ஓரங்களின் கோடிப்பாளை கருக்குகளும் மையப் பகுதியில் கூடுகளும் காணப்படுகின்றன. கலசத்தின் கீழ் பகுதியில் பத்ம வரிகள் காணப்படுகின்றன. சப்தமாதர் கோவில் சிகரம் சாளாகரமாகவும் மற்ற கோவில்களின் சிகரங்கள் நாகரமாகவும் உள்ளது. பழுதுபடாத பரிவார தேவதைகளின் ஆலயங்களை கொண்டிருப்பது இக்கோவிலின் சிறப்பு. நார்த்தாமலையில் உள்ள விஜயாலய சோழீஸ்வரத்திலும் இது போன்ற பரிவார ஆலயங்கள் சிதைந்த நிலையில் மூலவர் இன்றி உள்ளன.
சூரியன்
மூலக்கருவறையின் தெற்கு பக்கம் வடக்கு பார்த்து உள்ள கோவிலின் மூலவர் சூரியன். சூரிய சிற்பம் சமபாத ஸ்தானகத்தில் (நின்ற நிலையில்) ஜடாபாரத்துடன் காணப்படுகிறது.
சப்தமாதர்
மூலக்கருவறையின் தெற்கு பகுதியில் சூரியக்கோவிலை அடுத்துள்ள சப்தமாதர் கோவிலில் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி சிற்பங்கள் உள்ளன. இத்துடன் விநாயகர் மற்றும் வீரபத்திரன் சிற்பம் உள்ளது. வீரபத்திரன் சிற்பம் ஜடாமகுடத்துடன் முன்னிரு கைகள் அபய மற்றும் தண்ட ஹஸ்தமாகவும் பின்னிரு கைகளில் சாட்டையுடணும் உள்ளது. யோகப்பட்டையுடன் யோகாசனத்தில் அமர்ந்துள்ளது.
விநாயகர்
விநாயகர் கோவிலானது மூலக்கருவறையின் தென்மேற்கு மூலையில் கிழக்கு பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் விநாயகரின் இடதுபுறம் ஐந்து தலை கொண்ட நாகத்தின் கீழ் நின்ற நிலையில் நாகதேவி சிற்பம் உள்ளது. வலது புறம் ஒற்றைத் தலையுடைய நாக சிலை ஒன்று காணப்படுகிறது. விநாயகருக்கு முன்பகுதியில் மூஷிக வாகனம் உள்ளது.
சுப்ரமணியர்
சுப்ரமணியர் சன்னிதி மூலக்கருவறையின் மேற்கு பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுப்ரமணியர் சிலை முன்னிரு கைகள் அபய மற்றும் கடி ஹஸ்தமாகவும் பின்னிரு கைகள் சக்தி மற்றும் வஜ்ராயுதத்துடனும் காணப்படுகின்றன.
ஜேஷ்டா தேவி
மூலக்கருவறையின் வடமேற்கு திசையில் மதில் சுவரை ஒட்டியவாறு கிழக்கு பார்த்து ஜேஷ்டா தேவியின் ஆலயம் அமைந்துள்ளது. ஜேஷ்டா தேவி சிற்பம் ஜடாமகுடம் அணிந்து இரு கரங்களுடனும் பெரிய வயிற்றுடனும் அபய ஹஸ்தத்தில் அமைந்துள்ளது. இடது புறம் மகளான மாந்தி மற்றும் வலதுபுறம் மகனான மாந்தனின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. பின்பக்கம் தலைக்கு மேல் ஜேஷ்டையின் வாகனமான காக்கை உள்ளது.
சண்டிகேஸ்வரர்
சண்டிகேஸ்வரர் சன்னிதி மூலக்கருவறையின் வடக்குப் பக்கம் மதில்சுவரை ஒட்டி தெற்கு பார்த்தவாறு அமைந்துள்ளது. சண்டிகேஸ்வரர் சிற்பம் ஜடாபாரத்துடன் சுகாசனத்தில் அமர்ந்து வலதுகரத்தில் பரசு ஏந்தி் இடதுகரத்தை இடது தொடை மீது வைத்தவாறு உள்ளது.
சந்திரன்
மூலக்கருவறையின் வடக்குப் பக்கம் மதில் சுவரை ஒட்டி தெற்கு பார்த்தவாறு சந்திரன் சன்னிதி அமைந்துள்ளது. இக்கோவிலின் கருவறையில் சிலைகள் ஏதுமில்லை.
பைரவர் சிலை
கோவிலின் பொதுவான அமைப்பிலிருந்து விலகி, கிழக்கு மதில்சுவரில் மேற்கு நோக்கியவாறு பைரவர் சிற்பம் நின்ற நிலையில் உள்ளது.
பைரவர் சிற்பம் சுடர் முடியுடன் கோரைப்பற்களுடன் வாகனமான பைரவருடன் காணப்படுகிறது. முன்னிரு கரங்களில் திரிசூலம் மற்றும் மண்டை ஓட்டு பாத்திரமும் பின்னிரு கரங்களில் உடுக்கை மற்றும் சர்ப்பமும் கொண்டுள்ளது.
சிற்பங்கள் பட்டியல்
திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவிலில் மூலவர் சுந்தரேஸ்வர லிங்கம், மங்கலநாயகி அம்மன், துவார பாலர்கள், திரிபுராந்தகர், நின்ற நிலையில் விஷ்ணு, பிரம்மா, பிட்சாடனார், வீணாதர தட்சிணாமூர்த்தி, பூமாதேவியுடன் வராக மூர்த்தி, அமர்ந்த நிலையில் விஷ்ணு, முனிவர், உமாசகித மூர்த்தி, சூரியன், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, விநாயகர், சுப்பிரமணியர், ஜேஷ்டா தேவி, சண்டேஸ்வர், சந்திரன், அம்மன், பைரவர், வீரபத்திரன், ரிஷபம், கஜசம்ஹார மூர்த்தி ஆகிய சிற்பங்கள் உள்ளன.
கல்வெட்டுகள்
இக்கோவிலில் 12 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று சிதைந்து விட்டது. எஞ்சிய 11 கல்வெட்டுகளில் 8 கல்வெட்டுகள் சோழர்களுடையது, ஒன்று பாண்டியருடையது, மற்ற இரண்டும் விஜயநகர மன்னர் காலத்தை சார்ந்தவை. பெரும்பான்மையான கல்வெட்டுகள் ஸ்வஸ்தி ஸ்ரீ என்னும் மங்கலச் சொல்லுடன் துவங்குகின்றன. அனைத்துமே தமிழ் கல்வெட்டுகள்.
சோழர் கால கல்வெட்டுகள்
- ராஜகேசரிவர்மன் முதலாம் ஆதித்யனின் மூன்றாம் ஆட்சியாண்டு (பொ.யு. 874) கல்வெட்டு கோவிலின் வடக்கு சுவரில் காணப்படுகிறது. 10 வரிகளை கொண்டுள்ள சிதைந்த இக்கல்வெட்டில் நிலத்தின் எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: வல்லநாட்டு கவிர்ப்பாற், முடிச்சோழத்தரைய, சாற்றி பொன்னாண்டான், மேற்கும் தென்பாற்க்கெல்லை குளத்தூர்[2].
- பரகேசரிவர்மன் முதலாம் பராந்தகனின் இரண்டாம் ஆட்சியாண்டு (பொ.யு. 909) கல்வெட்டு கோவிலின் தெற்கு சுவரில் காணப்படுகிறது. முழுமை பெறாத 30 வரிகளை கொண்டுள்ள இக்கல்வெட்டில் தான் ‘கற்குறிச்சி திருக்கற்றளி’ என்று கோவிலின் பெயர் முதன்முதலில் குறிப்பிடப்படுகிறது. கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் பற்றிய குறிப்பும் கோவிலுக்கு முப்பது கலம் நெல் ஊர்க்காலால் அளந்து வழங்கப்பட்டது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: கற்குறிச்சி திருக்கற்றளி ஆள்வார்க்கு, தெற்கோடிய பெருவழிக்கும், கலையமங்கலத்து, அந்தர தாழி புன்செய்க்கும், பூசல் பிடாரன், அணுக்கன் மனவ, உண்ணிலம் நீர் நிலம், இந் நெல்லு, ஊர்க் காலால் முப்பது கலம் அளக்க கடவ[3].
- பரகேசரிவர்மன் முதலாம் பராந்தகரின் ஒன்பதாம் ஆட்சியாண்டு (பொ.யு. 916) கல்வெட்டு கோவிலின் தெற்கு சுவரில் காணப்படுகிறது. 19 வரிகளை கொண்ட இக்கல்வெட்டு சிங்கங் கொற்றன், கண்டங் கொற்றன் மற்றும் அவனது தம்பி ஆகிய மூவரும் பத்து நிலை விளக்குகளுக்கு ஒரு விளக்குக்கு ஒரு காசு வீதம் பத்து காசுகள் கொடுத்ததை பேசுகிறது. விளக்குகள் சூரிய சந்திரர்கள் உள்ளவரை நிற்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: கற்குறிச்சி கற்றளி பெருமானடிகளுக்கு, கண்டங் கொற்றனுந் தம்பிமாரு, பத்து நிலை விளக்குக்கு காசொன்று, சந்திராதித்ய பலன் நிற்க, திருநொந்தா விளக்கொன்றும்[4].
- முதலாம் பராந்தகனின் முப்பத்தைந்தாவது ஆட்சியாண்டு (பொ.யு. 941 - 942) கல்வெட்டு கோவிலின் தெற்கு சுவரில் 16 வரிகள் கொண்டு காணப்படுகிறது. பராந்தகன் ‘மதுரை கொண்ட கோப்பரகேசரி’ என்று குறிப்பிடப்படுகிறார். இக்கோவிலின் திருவிழாவிற்காக தெற்றலூர் நத்தத்து ஊர் பூமியினை தானமாக வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: ஸ்ரீ மதிரை கொண்ட கொண்ட கோப்பரகேசரி, தெற்றலூர் நத்தத்து ஊர் பூமி, திருவிழாபுறம் செய்து கொடுத்தோம்[5].
- முதலாம் குலோத்துங்கனின் ஒன்பதாவது ஆட்சி ஆண்டு கல்வெட்டு (பொ.யு. 1078 - 1079) கோவிலின் தெற்கு சுவரில் 18 வரிகளுடன் காணப்படுகிறது. ‘ஸ்வஸ்தி ஸ்ரீ புகழ்மாது விரும்ப ஜெயமாது நிகழ’ என்ற குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது. போகேந்திர சிங்கப் பேரரையன் மிலட்டூர் பூசலில் இறந்துபட்டதனால் அவன் ஆத்ம சாந்திக்காக அவன் தம்பி அணுக்கன், கோவிலுக்கு விளக்கு எரிக்க 25 ஆடுகளை தானமாக அளித்த செய்தியை கூறுகிறது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: வீரசிங்காதனத்து புவனிமுழுதுடையாளொடும் வீற்றிருந்தருளிய ஸ்ரீ கொலத்துங்க சோழ, ஜயசிங்ககுலகால வளநாட்டு, ராஜேந்திரசோழ மங்கலநாடாழ்வான், போகேந்திர சிங்கப்பெரையந் மிலட்டுற் பூசலில்[6].
- முதலாம் குலோத்துங்கனின் பத்தாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு (பொ.யு. 1079 - 1080) கோவிலின் தெற்கு சுவரில் 6 வரிகளுடன் சிதைந்து காணப்படுகிறது. குலோத்துங்க சோழனின் மெய் கீர்த்தியுடன் தொடங்குகிறது. இறைவனுக்கு தேவையான எண்ணெய் ஆட்டுவதற்கான செக்காலை ஒன்றை அமைக்க வளத்தா மங்கலம் என்னும் ஊரில் உள்ள வயலை தானமாக அளித்து செய்தியுடன் வயலின் எல்லைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: ஜயசிங்ககுலகால வளநாட்டு, வளத்தா மங்கலத்து வயலில் செக்காலை செய், ஊருணி, வாய்க்காலுக்கு, வயக்காலுக்கு[7].
- மூன்றாம் குலோத்துங்க சோழனின் இரண்டாம் ஆட்சியாண்டு (பொ.யு. 1179 - 1180) கல்வெட்டு கோவிலின் கீழ்புறச் சுவரின் வாசற்படிக்கு தென்புறம் காணப்படுகிறது. முழுமை பெறா 7 வரிகளைக் கொண்ட இக்கல்வெட்டானது படிக்காவல் உரிமையினை பற்றி பேசுகிறது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: இராஜராஜ வளநாட்டுத் தென்கவிர், கலையமங்கலமான, செதிகுளமாணிக்கபுரத்து பாடிகாவல், திருமடைப்பள்ளி[8].
- முதலாம் குலோத்துங்க சோழனின் நாற்பத்தி எட்டாவது ஆட்சியாண்டு (பொ.யு. 1118) கல்வெட்டு கோவிலின் வடக்கு சுவரில் காணப்படுகிறது. முழுமையான 44 வரிகளை உடைய இக்கல்வெட்டில் கள்ளன் அமராவதி குப்பையை சாத்தி என்பவன் கோவிலுக்கு திருநந்தா விளக்கு எரிக்க நிலதானம் வழங்கிய செய்தியையும் நிலத்தின் எல்லைகளையும் விரிவாக குறிப்பிடுகிறது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: இவ்வூர் கள்ளன் அமராபதி குப்பையை சாத்தி, ஆற்று வாய்க்கால், நீர் பாஞ்சு நெல் விளையுங் கொங்கந் வயக்கல், கிரிநல்லூருடையான், நெடுங்கல் சிலங்காணி[9].
பாண்டியர் கால கல்வெட்டுகள்
- திருக்கட்டளை கிராமத்தில் நடப்பட்டிருக்கும் ஒரு கல்லில் இக்கோவிலை பற்றிய ஒரு கல்வெட்டு உள்ளது. பாண்டிய மன்னன் குலசேகரனின் மூன்றாவது ஆட்சியாண்டு (பொ.யு. 1118) கல்வெட்டு. பெரும்பான்மையான பகுதிகள் சிதைந்த நிலையில் 7 வரிகளைக் கொண்ட இக்கல்வெட்டில் குலசேகரனின் மூன்றாவது ஆட்சியாண்டில் கோவிலுக்கு திருப்பணி செய்தது தொடர்பான செய்தி இடம் பெற்றுள்ளது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: கள்ளப்பால் கற்குறிச்சி, திருப்பதி செய்கைக்கு[10].
விஜயநகர கால கல்வெட்டுகள்
- விஜயநகர காலத்தை சார்ந்த முழுமையான 33 வரிகளைக் கொண்ட கல்வெட்டு கோவிலின் தெற்கு சுவரில் காணப்படுகிறது. வீர பிரதாப தேவராயரின் மகன் மல்லிகார்ஜுனராயர் தன் சகம் 1184 (பொ.யு. 1462) வது ஆட்சியாண்டில் மேல் செல்லா நின்ற மிதுன ஞாயிற்றுக்கிழமை அமரபஷத்தில் பஞ்சமியான சுக்கிர வாரத்தில் சதய நாளன்று திருக்கட்டளை சோழீசுரமுடையாருக்கு அமுது படைக்க பல்லவன் சந்தி, சிறுகால சந்திக்கென அமுது செய்ய தேவதானமாக திருநாமத்துக்காணி[11] வழங்கிய செய்தியினை இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டில் தான் திருக்கட்டளை என்ற பெயர் முதன்முதலில் வருகிறது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: ஸ்ரீ வீரப்பிரதாப தேவராயர் குமாரன் மல்லிகார்சுனராயற்கு, செயசிங்க குலகாலவளநாட்டு தென்பனைக்காட்டு நாட்டு பெருங்கொளி ஊர், கற்குறிச்சிப்பற்று, சீரங்கன் பல்லவராயன், திருக்கட்டளையீசுரமுடைய, பல்லவன் சந்தியாக சிறுகால சந்தி அமுது, திருநாமத்துக்காணி, நஞ்செய் புஞ்செய், காணியாளர் பன்குடி பரதேசி மற்றும் உண்டான குடியனைவரும், காளிங்கராயன், சிகாரியம், குலகால விழுப்பரையன்[12].
- பிரதாப தேவராய மகராயர் என்ற விஜயநகர அரசரின் கால கல்வெட்டு கோவிலின் தென்புறச் சுவரில் காணப்படுகிறது. 29 வரிகளைக் கொண்ட இக்கல்வெட்டு வீர பிரதாப மல்லிகார்ஜுனராயரின் மகன் வீரப்பிரதாப தேவராய மகாராயர் காலத்தில் சக 1403 மேல் செல்லா நின்ற சாறுவாரி வருடம் ஆவணி மாதம் 25-வது புதன்கிழமை திரேயோதசியும் சதுர்த்தியுமான நாளில் காட்டு நாடான ஜெயசிங்க குலகால வளநாட்டு தென்பனைங்காட்டு நாட்டு பெருங்கேளியூர் அரசு இறைவனுக்கு பல்லவன் சந்தியாக ஆடி அருளி அமுது செய்வதற்கு சர்வ மானியமாக குடிநீங்கா தேவதானமாக நிலதானம் அளித்த செய்தியை கூறுகிறது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: ஆட்டாங்குடி வாய்க்கால், தாவடி மொகர விண்ணகர், பழந்திருவிளை ஆட்டம், விழுப்பரையன் குளத்துள்வாய், இராசராசன் பெருவழி, நாங்கூர் வாய்க்கால், குடிநீங்கா தேவதானம்[13].
சிதைந்த கல்வெட்டு
- கோவிலின் தென்புற சுவரில் உள்ள கல்வெட்டு சிதைந்த நிலையில் இருப்பதால் செய்திகளை தொகுக்க முடியவில்லை. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: குறிச்சி நாட்டான், முத்தரை…, திருக்கற்றளி மகாதேவர் கோவில், கணவதி[14].
தொடர்புடைய ஆளுமைகள்
- திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவில் கல்வெட்டுகளின் வாயிலாக கோவிலைக் கட்டி திருப்பணிகள் செய்த ஆளுமைகளாக ராஜகேசரிவர்மன் முதலாம் ஆதித்யனின் காலத்தை சேர்ந்த சாற்றி பொன்னாண்டான், பரகேசரிவர்மன் முதலாம் பராந்தகனின் காலத்தை சேர்ந்த பூசல் பிடாரன், சிங்கங் கொற்றன், கண்டங் கொற்றன், முதலாம் குலோத்துங்கனின் காலத்தை சேர்ந்த அணுக்கன், அமராவதி குப்பையை சாத்தி, மூன்றாம் குலோத்துங்க சோழன், குலசேகர பாண்டியன், விஜயநகர அரசர் வீர பிரதாப தேவராயரின் மகன் மல்லிகார்ஜுனராயர் ஆகியோர் அறியப்படுகின்றனர்.
- திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவில் பற்றி நவீன காலகட்டத்தில் வரலாற்றாய்வுகளை தொகுத்தவர் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம்.
உசாத்துணை
- Early Chola Art by S.R. Balasubrahmanyam - Page 89 to 92
- Inscriptions in the Pudukkottai State - Part I by K.R. Srinivasa Ayyar
- Inscriptions in the Pudukkottai State - Part II by K.R. Srinivasa Ayyar
- Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority
அடிக்குறிப்புகள்
- ↑ Early Chola Art by S.R. Balasubrahmanyam - Page 89 to 92
- ↑ புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 21, பக்க எண்: 12
- ↑ புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 38, பக்க எண்: 18
- ↑ புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 51, பக்க எண்: 22
- ↑ புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 81, பக்க எண்: 30
- ↑ புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 118, பக்க எண்: 64
- ↑ புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 119, பக்க எண்: 64
- ↑ புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 143, பக்க எண்: 78
- ↑ புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 232, பக்க எண்: 125
- ↑ புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 557, பக்க எண்: 397
- ↑ கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்
- ↑ புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 711, பக்க எண்: 490
- ↑ புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 714, பக்க எண்: 492
- ↑ புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 769, பக்க எண்: 533
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Jan-2025, 18:31:25 IST