under review

நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம்

From Tamil Wiki
நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் - முழுத்தோற்றம்

நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் கோவில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள முத்தரையர் கால கோவில். இக்கோவில் 9-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் 'இளங்கோ ஆதி அரையன்' என்ற முத்தரைய சிற்றரசரால் கட்டப்பட்டது.

நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் - விமானம்

கோவில் அறிமுகம்

நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது. இக்கோவில் 9-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் 'செம்பூதி' என்றழைக்கப்படும் 'இளங்கோ ஆதி அரையன்' என்ற முத்தரைய சிற்றரசரால் கட்டப்பட்டது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கோவிலின் மூலவராக, விஜயாலய சோழீஸ்வரர் சிற்பம் லிங்க வடிவில் வழிபடப்படுகிறது. கோவிலின் ஆகம முறைகள், இலக்கிய சான்றுகள் பற்றிய விவரங்கள் அறியக் கிடைக்கவில்லை.

இடம்

நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் கோவில் புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 19.5 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சி ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள நார்த்தாமலை என்ற ஊரில் மேலமலை எனும் பாறைக் குன்றின் மேல் அமைந்துள்ளது.

கோவில் வரலாறு, பெயர்

நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் பற்றிய முதன்மையான வரலாற்று செய்திகள் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம், கே.ஆர். வெங்கடராம ஐயர், கே.வி. சௌந்தர ராஜன், கே.ஜி. கிருஷ்ணன் மற்றும் டக்லஸ் பேரட் (Douglas Barrett) ஆகிய வரலாற்று ஆய்வாளர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்குள்ளும் நார்த்தாமலை ஊரிலும் காணப்படும் கல்வெட்டு சான்றுகளைக் கொண்டு கோவில் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

கோவிலின் வடபுறம் உள்ள பாறையில் காணப்படும் மாறவர்ம சுந்தரபாண்டியனின் (பொ.யு. 1216 - 1238) கல்வெட்டு, இவ்வூரை 'தெலுங்கு குலகாலபுரமான குலோத்துங்கசோழ பட்டினம்' என்றும், கோவிலின் மூலவர் 'உடையார் விஜயாலய சோழீஸ்வர உடைய நாயனார்' என்றும் குறிப்பிடுகிறது.

ஊரின் தற்போதைய பெயரான நார்த்தாமலை என்பது 'நகரத்தார் மலை' என்னும் பெயரில் இருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 'நகரம்' என்பது இக்கிராமத்தில் வாழ்ந்த வணிகர்களின் கூட்டமைப்பு. இந்த அமைப்பு, கோவில் சொத்துக்களை நிர்வாகித்தல், நிலங்களுக்கு வரிவிலக்கு செய்தல், நிலம் கைமாறும் விவரங்களை சாசனமாக பதிவு செய்தல் போன்ற பொதுப்பணிகளை கவனிக்கும் உள்ளாட்சி அமைப்பாகவும் இருந்துள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் 'நகரத்தார்' என அழைக்கப்பட்டனர்.

முத்தரையர் வம்ச வரிசை - நன்றி கே.ஜி. கிருஷ்ணன்
ஆய்வாளர்களின் கருத்துகள், விவாதங்கள்

எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம், கோவில் வாயிலின் இடதுபுறம் உள்ள துவார பாலரின் சிலைக்கு கீழுள்ள கல்வெட்டைப் படித்து பதிவு செய்துள்ளார். அதன்படி இக்கோவில் இருக்குவேளிர் வம்சத்தை சேர்ந்த 'செம்பூதி' என்றழைக்கப்படும் 'இளங்கோ ஆதி அரையன்' எனும் சிற்றரசரால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட சில ஆண்டுகளுக்குள் கடுமையான மழையால் பாதிக்கப்பட்ட இக்கோவில் பின்னர் 'மல்லன் விடுமன்' என்றழைக்கப்படும் 'தென்னவன் தமிழ் ஆதி அரையன்' என்பவரால் புனரமைப்பு செய்யப்பட்டது. இப்பகுதியில் உள்ள மற்ற விஜயாலயன் காலத்தை சேர்ந்த கோவில்களை ஒப்பிட்டு இக்கோவில் கட்டப்பட்ட காலம் விஜயாலய சோழனின் காலம் (பொ.யு. 850 - 871) என எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் முடிவு செய்கிறார்.[1]

கே.ஆர். வெங்கடராம ஐயர், செந்தலை கல்வெட்டுகளிலிருந்து முத்தரையர்களின் வம்ச வரிசையை தொகுக்கும்பொது, அதில் வரும் இளங்கோ ஆதி அரையன் எனும் மாறவர்மன் பரமேஸ்வரனும் நார்த்தாமலை கல்வெட்டில் உள்ள செம்பூதி எனும் இளங்கோ ஆதி அரையனும் ஒருவரே என்கிறார். அதன்படி இக்கோவில் கட்டப்பட்ட காலம் பொ.யு. 731 - 796 அல்லது அதற்கும் முன்னதாக இருக்கலாம் என்றும், கட்டியவர் முத்தரைய அரசரான இளங்கோ ஆதி அரையன் என்றும் கருதுகிறார்.[2]

கே.வி. சௌந்தர ராஜன், இக்கோவிலைக் கட்டிய இளங்கோ ஆதி அரையன் மற்றும் புனரமைத்த தென்னவன் தமிழ் ஆதி அரையன் ஆகியோரின் காலம் விஜயாலய சோழனின் காலத்திற்கு முற்பட்டது என்று கூறுகிறார். அதன்படி இக்கோவில் கட்டப்பட்ட காலம் 9-ஆம் நூற்றாண்டின் மையப்பகுதி. கருங்கல் கட்டுமானம் மற்றும் பரிவார ஆலயங்கள் அமைத்தல் போன்றவற்றைக் கொண்டு இக்கோவில் பாண்டியர் கலை பாணியை பின்பற்றி கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.[3]

கே.ஜி. கிருஷ்ணன், செந்தலை மற்றும் மலையாடிப்பட்டி கல்வெட்டுகளில் இருந்து முத்தரையர்களின் வம்ச வரிசையை தொகுக்கும்பொது, இக்கோவிலை கட்டிய இளங்கோ ஆதி அரையனும், எதிரில் இருக்கும் சிவன் குடைவரையை கட்டிய சாத்தன் பழியிலியும் சகோதரர்கள் என்று வரிசைப்படுத்துகிறார். குடைவரை கல்வெட்டில் இருந்து சாத்தன் பழியிலியின் காலம் 9-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியாக அறியப்படுகிறது. ஏறக்குறைய அதே காலத்தில் விஜயாலய சோழீஸ்வரமும் கட்டப்பட்டிருக்கலாம் என கே.ஜி. கிருஷ்ணன் கருதுகிறார்.[4]

டக்லஸ் பேரட் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு குறிப்பிடும் 'விஜயாலய சோழீஸ்வரம்' என்பதை தவிர சோழர்களுக்கும் இக்கோவிலுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என வரையறுக்கிறார். கோவிலின் கட்டிடக்கலை அமைப்பிலும், கலை பாணியிலும் சோழர்களின் தாக்கம் பெரிய அளவில் இல்லை எனவும் இக்கோவில் முத்தரைய அரசர்களால் 9-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் கட்டப்பட்டது எனவும் டக்லஸ் கருதுகிறார்.[5]

தொன்மம்

இலங்கையில் ராம - ராவண போரின் பொழுது படைவீரர்களின் காயங்களை குணப்படுத்த இமாலய உச்சியில் உள்ள சஞ்சீவி மலையை அனுமன் இலங்கைக்கு எடுத்துச் சென்றார். அந்த மலையை இலங்கையில் இருந்து திரும்ப கொண்டுவரும் பொழுது மலையில் இருந்து தவறி விழுந்த சிறு குன்றுகள் தான் நார்த்தாமலை கிராமத்தை சுற்றியுள்ள மலைகள் என்று நம்பப்படுகிறது. இம்மலைகள் மூலிகை செடிகள் நிறைந்ததாகவும் அதனால் வைத்தியர்கள் அடிக்கடி வரும் இடமாகவும் கருதப்படுகிறது.

பெருங்கலூர் தலபுராணம், நாரதமுனிவர் பெயரிலிருந்து 'நாரதர் மலை' எனவும் பின்பு நார்த்தாமலை என மாறியுள்ளதாகவும் கூறுகிறது.[6]

நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் - மூலவர்

கோவில் தெய்வங்கள்

மூலவர்

கோவிலின் மூலவரான விஜயாலய சோழீஸ்வரர் சிற்பம், லிங்க வடிவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. வட்ட வடிவ ஆவுடையை சுற்றிலும் பத்ம வரிகள் உள்ளன.

நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் - முன்புற தோற்றம்
பரிவார ஆலயங்கள்

கோவிலுக்கு உள்ளே உள்ள பரிவார ஆலயங்களில் தற்போது தெய்வங்கள் இல்லை.

கோவில் கட்டிடக்கலை அமைப்பு

நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் முற்கால சோழர் கலை பாணியில் அமைந்துள்ளது. முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துடன் கூடிய கருங்கல் கட்டுமானம், வளாக மையத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் வேசர பாணி விமானமும், மையக் கட்டுமானத்தைச் சுற்றி கருங்கல் பதிக்கப்பட்ட தளமும் காணப்படுகின்றது.

இடப்புற துவார பாலர்

மூலக்கருவறையை சுற்றி பரிவார தேவதைகளுக்காக தனித்தனி சுற்றாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அர்த்தமண்டப வாயிலுக்கு முன்பு, மையக் கட்டுமானத்திற்கு எதிரே, சிறிது தொலைவில் ரிஷப மண்டபம் உள்ளது. கூரை இன்றி அடித்தளம் மட்டும் உள்ள ரிஷப மண்டபத்தில் கருவறையை நோக்கி ரிஷபம் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு சிறிய தூண்கள் சதுரம் மற்றும் கட்டுகளுடன் உள்ளன.

கோவிலை சுற்றி சிதைந்த நிலையில் திருச்சுற்று மதில் உள்ளது.

கோவிலுக்கு நேர் எதிரே சிறிது தொலைவில் சிவன் குடைவரை மற்றும் விஷ்ணு குடைவரை என்ற இரண்டு குடைவரை கோவில்கள் உள்ளன.

கருவறை

கருவறை உள்புறத்தில் 2.6 மீட்டர் விட்ட அளவு கொண்ட வட்ட வடிவமாக உள்ளது. கருவறையின் சுவர்கள் 1.5 மீட்டர் கனம் கொண்டவை. உயரம் 2.4 மீட்டராக உள்ளது. விமானத்தின் எடையை தாங்குமாறு கருவறையின் நான்கு மூலையிலும் நான்கு தூண்கள் உள்ளன.

வட்ட வடிவ கருவறையை சுற்றி வலம் (பிரதக்க்ஷணம்) வரும் வகையில் குறுகலான பாதை விடப்பட்டு (சாந்தாரம்) சதுர வடிவில் ஒரு கட்டுமானம் உள்ளது. இந்த சதுர கட்டுமானம் உள்புறத்தில் 6.7 மீட்டர் பக்க அளவும் வெளிப்புறத்தில் 8.8 மீட்டர் பக்க அளவும் கொண்டது.

அர்த்தமண்டபம்

அர்த்தமண்டத்தில் ஆறு முழுத்தூண்களும் ஆறு அரைத்தூண்களும் உள்ளன. தூண்கள் சதுரம் மற்றும் கட்டுகளுடன் தரங்க போதிகை கொண்டவையாக உள்ளன. மண்டத்தின் சுவரில் ஓவியங்கள் காணப்படுகின்றன.

அர்த்தமண்டத்தின் வாயிலில் கலை வேலைப்பாடுகள் கொண்ட இரண்டு துவார பாலர் சிலைகள் உள்ளன. துவார பாலர் சிலைகளின் உயரம் 1.5 மீட்டராக உள்ளது. ஒரு கை கதையின் மீது பல்லவ ஹஸ்தத்திலும் மற்றொரு கை விஸ்மய ஹஸ்தத்திலும் அமைந்துள்ளது. துவார பாலர் சிற்பங்கள், ஜடாமகுடம் மற்றும் விரிசடையுடன் பத்ர குண்டலம், கடகம், சரப்பளி, உதரபந்தம், இடைக்கட்டு போன்ற அணிகலன்களுடன் உள்ளன. தோளின் குறுக்காக உள்ள யக்ஞோபவீதம் (பூணூல்) மணிகளுடன் நுணுக்கமான வேலைப்பாடு கொண்டது. இடப்புற துவார பாலர் சிலையில் தலைக்கு பின்புறம் திரிசூலம் காணப்படுகிறது. அர்த்தமண்டத்தின் நிலைவாயில், கொடிக்கருக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விமான அமைப்பு

விமானத்தின் அடித்தளம் - பாதபந்த அதிஷ்டானம்

அதிஷ்டானம் (அடித்தளம்), பாதவர்க்கம் (சுவர்ப்பகுதி), பிரஸ்தாரம் (கூரை), கிரீவம் (கழுத்து), சிகரம் மற்றும் கலசம் ஆகிய உறுப்புகளைக் கொண்டு மூன்று தள (த்ரிதளம்) விமானமாக அமைந்துள்ளது.

அதிஷ்டானம்

விமானத்தின் மொத்த கட்டுமானத்தையும் தாங்கும் அடித்தள அமைப்பான அதிஷ்டனமானது உபானம், ஜகதி, முப்பட்டை குமுதம், பாதம் மற்றும் பட்டிகை போன்ற உறுப்புகளை கொண்டுள்ளது. பாதபந்த அதிஷ்டானமாக வகைப்படுத்தப்படுகிறது.

பாதவர்க்கம்

கருவறையின் அதிஷ்டானத்திற்கு மேல் உள்ள பாதவர்க்க பகுதியில் அரைத்தூண்கள் (குட்யஸ்தம்பம்) உள்ளன. அரைத்தூண்கள் தாடி, ஆமலகம், பலகை, வீரகண்டம் மற்றும் போதிகையுடன் காணப்படுகின்றன. கோஷ்டங்கள் இல்லை.

பிரஸ்தாரம்
முதல் தளத்தில் உள்ள நடன சிற்பம்

பிரஸ்தாரத்தின் வலபியில் பூதகணங்கள் விளையாடிக்கொண்டும் இசைக்கருவிகளுடனும் உள்ளன.

கபோத பகுதியில் இடைவெளி விட்டு நாசிக்கூடுகளும் ஓரப்பகுதியில் கோடிப்பாளை கருக்குகளும் உள்ளன. கூடுப்பகுதியில் கீர்த்தி முகங்கள் காணப்படுகின்றன. கருக்குகளுக்கு கீழும் கபோதக் கூடுகளுக்கு இடதும் வலதும் தொடர்ந்து சந்திரமண்டலம் காட்டப்பட்டுள்ளது. கபோதத்திற்கு மேல் உள்ள பகுதியில் யாளி வரிகள் காணப்படுகின்றன.

முதல் தளம்

முதல் தளம் இரண்டு சுவர்களால் ஆனது. முன்புற சுவரில் நான்கு பக்கங்களிலும் சாலை, பஞ்சரம் மற்றும் கர்ண கூடு போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. கர்ண கூடுகளின் சிகரங்கள் சதுரமாகவும், சாலையின் சிகரங்கள் செவ்வகமாகவும் (சாளாகாரம்) உள்ளன. கூடு மற்றும் சாலையின் நாசிகைகளில், பல்வேறு நிலைகளில் உள்ள நடன சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த ஹாரம் அர்த்தமண்டபத்தை சுற்றி நீண்டுள்ளது. இவ்வாறு விமானத்தின் ஹாரம் அர்த்தமண்டபத்தை சுற்றி நீள்வது பல்லவர் கட்டிட கலையில் பொதுவாக காணப்படுவது எனவும், குறிப்பாக இது முற்கால சாளுக்கியர் பாணி எனவும் டக்லஸ் கூறுகிறார்.

முதல் தளத்தில் அர்த்தமண்டபம் மற்றும் கருவறையின் கூரைப்பகுதிகள் இணைந்துள்ளன.

முதல் தளத்தில் பின்புற சுவர் பகுதியில் அரைத்தூண்கள் உள்ளன. அரைத்தூண்கள் தாடி, ஆமலகம், பலகை, வீரகண்டம் மற்றும் போதிகையுடன் காணப்படுகின்றன. கபோதத்தின் கீழ் பகுதியில் பூதகணங்கள் இசைக்கருவிகளுடன் காணப்படுகின்றன. கபோதத்தில் இடைவெளி விட்டு கூடுகளும் ஓரப்பகுதியில் கோடிப்பாளை கருக்குகளும் உள்ளன. கூடுப்பகுதியில் மையத்தில் கீர்த்தி முகங்களும் இரு கூடுகளுக்கு இடையில் சந்திர மண்டலங்களும் காணப்படுகின்றன. கபோதத்திற்கு மேல் உள்ள பகுதியில் யாளி வரிகள் காணப்படுகின்றன.

இரண்டாம் தளம்

இரண்டாம் தளத்தில் நான்கு பக்கங்களிலும் ஓரங்களில் கர்ண கூடுகளும், ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு சாலைகளும் காணப்படுகின்றன. கர்ண கூடுகளின் சிகரங்கள் சதுரமாகவும், சாலையின் சிகரங்கள் செவ்வகமாகவும் உள்ளன. கூடு மற்றும் சாலையின் நாசிகைகளில் சிதைவடைந்த நிலையில் பல்வேறு சிற்பங்கள் உள்ளன.

மூன்றாம் தளம்

இதுவரை சதுரமாக இருந்த விமான அமைப்பானது, மூன்றாம் தளத்தில் வட்டமாக மாறி கருவறையின் வட்ட வடிவத்துடன் பொருந்துகிறது. இங்கும் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்களும், கபோதத்தில் கூடுகளும், கீழ்பகுதியில் பூதகணங்களும், மேற்பகுதியில் யாளி வரிகளும் காணப்படுகின்றன. தளத்தின் மேல் நான்கு புறங்களிலும் ரிஷபம் அமைக்கப்பட்டுள்ளது.

கிரீவ கோஷ்டம் - வீணாதர தக்க்ஷிணாமூர்த்தி
கிரீவம்

தெற்கில் உள்ள கிரீவ (கண்டம்) கோஷ்டத்தில் வீணாதர தட்சிணாமூர்த்தி சிற்பம் ஜடாமண்டலத்துடன் ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துள்ளது. பின்னிரு கைகள் சிதைந்த நிலையில் உள்ளன. முன்னிரு கைகளில் வீணையும் காலடியில் ரிஷபமும் காணப்படுகின்றன.

வடக்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் பிரம்மாவின் சிற்பம் நான்கு முகங்களுடன் சுகாசனத்தில் அமர்ந்துள்ளது. சிதைந்த நிலையில் இருப்பதால் கைகளில் உள்ளவற்றை அடையாளப்படுத்த முடியவில்லை.

கிழக்கில் உள்ள கிரீவ கோஷ்டத்தில் உமாசகிதர் சிற்பம் சுகாசனத்தில் வலது தொடையில் உமையை தாங்கியவாரும் வலது முன்கையால் உமையை அணைத்தவாரும் அமர்ந்துள்ளது. பின்கைகள் சிதைந்த நிலையில் உள்ளன.

சிகரம், கலசம்
பரிவார ஆலயம்

விமானத்தின் சிகரம் வட்ட வடிவமான வேசர சிகரம். சிகரத்தின் அடிப்பகுதியில் யாளி வரிசைகள் உள்ளன. நான்கு கிரீவ கோஷ்டங்களின் மேல் பகுதியிலும் மகா நாசிகைகள் காணப்படுகின்றன. இரண்டு மகா நாசிகைகளுக்கு இடையில் ஒரு அல்ப நாசிகை அமைக்கப்பட்டுள்ளது.

சிகரத்தின் மேற்பகுதியில் பத்ம வரிகள் உள்ளன. தற்போது கலசம் இல்லை.

பரிவார ஆலயங்கள்

கோவில் வாளாகத்தில் பரிவார தெய்வங்களுக்காக ஆறு தனித்தனி ஆலயங்கள் உள்ளன. பரிவார ஆலயங்கள் அனைத்துமே மூலக்கருவறையை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளன.

அர்த்தமண்டபம் - பைரவர் ஓவியம்

கோவில் கட்டப்படும்போது மூலக்கருவறையை சுற்றி எட்டு பரிவார தெய்வங்களுடன் (சூரியன், சப்தமாதர், விநாயகர், சுப்ரமணியர், ஜேஷ்டா தேவி, சண்டிகேஸ்வரர், சந்திரர், பைரவர்) அஷ்ட பரிவார ஆலயமாக இருந்திருக்க வேண்டும். தற்போது ஆறு ஆலயங்கள் மட்டுமே உள்ளது. ஏழாவது ஆலயத்தின் சிதைந்த அடித்தளம் மட்டுமே காணக்கிடைக்கிறது.

பரிவார தேவதைகளின் ஆலயங்கள் அனைத்துமே பாத பந்த அதிஷ்டானத்துடன் கூடிய ஏகதள விமானம் கொண்டவை. சிகரங்கள் சிதைவடைந்த நிலையில் உள்ளன. ஓரளவு சிதைவடையாத கோவிலின் சிகங்கள் வேசரமாக அடையாளப்படுத்த படுகிறது. ஒரு சிகரம் மட்டும் சாளாகாரமாக உள்ளது. அது சப்த மாதர்களுக்கான கோவிலாக இருக்கலாம்.

கருவறை சதுர வடிவம் கொண்டது. இங்குள்ள பரிவார மூலவர் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டு புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

பரிவார ஆலயங்களை கொண்டுள்ள பழமையான கோவில்களில் இக்கோவில் குறிப்பிடத்தக்கது என கே.வி. சௌந்தர ராஜன் கருதுகிறார்.

ஓவியங்கள்

அர்த்தமண்டபத்தில் ஓவியங்கள் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன.

அர்த்தமண்டபம் - விஷ்ணு ஓவியம்

இடக்கையில் சங்கு எந்திய விஷ்ணு, எட்டு கரங்களுடன் பைரவர் (திருவாசியின் மேல் கந்தர்வர்கள் பறந்தவாறு உள்ளனர்), மிதுன இணையர் மற்றும் பெண்களின் ஓவியங்கள் காணப்படுகின்றன. ஓவியத்தில் தற்போது காணப்படும் பகுதிகளை வைத்து இந்த ஓவியங்கள் மிக பிற்காலத்தியவை எனவும், 17-ஆம் நூற்றாண்டுக்கு பின் வரையப்பட்டவையாக இருக்கலாம் எனவும் கே.ஆர். வெங்கடராம ஐயர் கருதுகிறார்.

சிற்பங்கள் பட்டியல்

அர்த்தமண்டபம் - மிதுன இணையர்கள் ஓவியம்

நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் கோவிலில் மூலவர் சோழீஸ்வர லிங்கம், துவார பாலர்கள், பிரம்மா, வீணாதர தட்சிணாமூர்த்தி, உமாசகித மூர்த்தி, ரிஷபம் மற்றும் பல்வேறு நடன சிற்பங்கள் உள்ளன.

கல்வெட்டுகள்

இக்கோவிலில் காணப்படும் 3 கல்வெட்டுகளில் ஒன்று முத்தரையர் காலத்தை சேர்ந்தது. மற்ற இரண்டும் பாண்டியர் காலத்தை சேர்ந்தவை. மூன்று கல்வெட்டுகளும் ஸ்வஸ்தி ஸ்ரீ என்னும் மங்கலச் சொல்லுடன் துவங்குகின்றன.

அர்த்தமண்டபம் - பெண் ஓவியம்
முத்தரையர் கால கல்வெட்டு
  • கோவில் வாயிலின் இடதுபுறம் உள்ள துவார பாலரின் சிலைக்கு கீழுள்ள கல்வெட்டு, மல்லன் விடுமன் என்ற முத்தரையர் காலத்தை சேர்ந்தது. தமிழ் மொழி மற்றும் குறியீடுகள் கொண்டு எழுதப்பட்ட இக்கல்வெட்டு, 4 வரிகள் கொண்டது. செம்பூதி என்றழைக்கப்படும் இளங்கோ ஆதி அரையன் எனும் சிற்றரசரால் கட்டப்பட்ட இக்கோவில் கடுமையான மழையால் பாதிக்கப்பட்டு பின்னர் மல்லன் விடுமன் என்றழைக்கப்படும் தென்னவன் தமிழ் ஆதி அரையன் என்பவரால் புனரமைப்பு செய்யப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: செம்பூதி இளங்கோ ஆதி அரையர், எடுப்பிச்ச கற்றளி, மல்லன் விடுமன் ஆயின தென்னவன் தமிழ் ஆதி அரையன்[7].
பாண்டியர் கால கல்வெட்டுகள்
  • கோவிலின் வடபுறம் உள்ள பாறையில் மாறவர்ம சுந்தரபாண்டியனின் (பொ.யு. 1216 - 1238) பன்னிரண்டாம் ஆட்சியாண்டை (பொ.யு. 1228) சேர்ந்த கல்வெட்டுஉள்ளது. 31 வரிகள் கொண்ட இந்த தமிழ் கல்வெட்டு, கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நெல் மற்றும் நிலத்தின் அளவுகளை பற்றி விரிவாக பேசுகிறது. இது தவிர திருமணத்தின்போது ஆண் மற்றும் பெண் வீட்டார் கோவிலுக்கு கொடுத்த தானங்களை பற்றியும் குறிப்பிடுகிறது. நிலம், நெல், கலம் போன்றவற்றை குறிக்க குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: சோணாடு வழங்கியருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர், இரட்டப்பாடி கொண்ட சோழவள நாட்டு தெலிங்க குலகாலபுரமான குலோத்துங்கசோழ பட்டினத்து, இந்நகரத்து, பதின்எண் பூமி விண்ணகர எம்பெருமானையும், திருப்பொனகத்துக்கு, குடிநீங்கா திருவுடையாட்டமாக, சமையவல்லவர், முக்காணி, இரண்டு மாக்காணி, முருக்கூருடையார், மாவரைக்காணி, இருபத்திரு கலமும், காஞ்சிரங்குடையான், உலகளந்த சோழச்சில செட்டி, நகரத்தார், பொய்யா மொழிச்செட்டி, மனவாண்டார் குடிக்காட்டு குளமும் வயலும், இறைகுடிமை, திருப்பணிக்குடலாக வைத்துக் கொடுத்த பரிசாவது, கண்ணாலத்துக்கு, ஆடு, கிடாயுள், ஆடைக்காசு எண்பது கிடாய் காசு நூறும், பெண் பிள்ளைகள், அணுக்கசிலை செட்டி, மருங்கல நாட்டு, அழகிய பாண்டிய சிலை செட்டி, வல்லநாட்டு, செயங்கொண்ட சிலை செட்டி[8].
  • அதே பாறையின்கீழ் தொடர்ச்சியாக மற்றொரு கல்வெட்டு உள்ளது. இது 46 வரிகள் கொண்ட சிதைந்த கல்வெட்டு. இக்கல்வெட்டில் தான் கோவிலின் மூலவர் பெயர் 'உடையார் விஜயாலய சோழீஸ்வர உடைய நாயனார்' என குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயாலய சோழீஸ்வரம் கோவிலின் வைகாசி திருவிழாவை கொண்டாட இக்கிராமத்தை சேர்ந்த வணிககுழுவான 'நகரத்தார்' எனும் கூட்டமைப்பு தானம் அளித்ததை பற்றி இக்கல்வெட்டு பேசுகிறது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: சோணாடு வழங்கியருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர், இரட்டப்பாடி கொண்ட சோழவள நாட்டு, குலகாலபுரமான குலோத்துங்கசோழ பட்டினத்து, சித்திரை மாதத்து ஆறாம் தேதி, உடையார் விஜயாலய சோழீஸ்வர உடைய நாயனார், பண்டாரம், திருப்படி மாற்று, திருவெண்ணெய் காப்பு, பிள்ளையார் விழா, பழுவூருடையார்[9].

தொடர்புடைய ஆளுமைகள்

  • நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் கோவில் கல்வெட்டுகளின் வாயிலாக கோவிலைக் கட்டி திருப்பணிகள் செய்த ஆளுமைகளாக செம்பூதி என்றழைக்கப்படும் இளங்கோ ஆதி அரையன், மல்லன் விடுமன் என்றழைக்கப்படும் தென்னவன் தமிழ் ஆதி அரையன், மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆகியோர் அறியப்படுகின்றனர்.
  • நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் கோவில் பற்றி நவீன காலகட்டத்தில் வரலாற்றாய்வுகளை தொகுத்தவர்கள் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம், கே.ஆர். வெங்கடராம ஐயர், கே.வி. சௌந்தர ராஜன், கே.ஜி. கிருஷ்ணன் மற்றும் டக்லஸ் பேரட்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. Early Chola Art by S.R. Balasubrahmanyam
  2. Manual of the Pudukkottai State Volume II Part II by K.R. Venkatarama Ayyar
  3. Early Pandya, Muttarayar and Irukkuvel Architecture : Studies In Indian Temple Architecture by K.V Soundara Rajan
  4. Muttarayar by K.G. Krishnan - Journal of the State Dept. of Archeology - Dec 1970
  5. Early Cola architecture and sculpture ; 866-1014 A.D by Barrett, Douglas E
  6. Manual of the Pudukkottai State Volume II Part II by K.R. Venkatarama Ayyar
  7. இது புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் பதிப்பிக்கப்படாத கல்வெட்டு. எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் இக்கல்வெட்டை படித்து பதிவு செய்துள்ளார். பார்க்க: Early Chola Art by S.R. Balasubrahmanyam - Page 50
  8. புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 281, பக்க எண்: 162
  9. புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 282, பக்க எண்: 163


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Nov-2024, 12:06:10 IST