under review

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

From Tamil Wiki
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) ராபர்ட் கால்டுவெல் எழுதிய மொழியியல் நூல். A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. தென்னிந்தியாவில் பேசப்பட்ட மொழிகளின் இலக்கண அமைப்பை ஒப்பிட்டு அவை ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கால்டுவெல் இந்நூலில் நிறுவுகிறார். அவற்றை திராவிட மொழிகள் என்று அடையாளப்படுத்துகிறார். பின்னாளில் தென்னிந்தியாவில் திராவிட அரசியல்பார்வை உருவாக அடித்தளமிட்ட நூல் இது.

எழுத்து வெளியீடு

ராபர்ட் கால்டுவெல் A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் இந்நூலை எழுதினார். இதன் முதல்பதிப்பு 1956ல் வெளிவந்தது. இரண்டாவது திருத்திய பதிப்பு லண்டனில் உள்ள டர்ப்னர் அண்ட் கோ நிறுவனத்தாரால் 1875 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின் தொடர்ச்சியாக ஆய்வுப்பதிப்புகள் பல வெளியாகியுள்ளன.

இந்நூலை தமிழில் காழி. கண்ணுசாமிப்பிள்ளை, கா.அப்பாத்துரை ஆகியோர் 1941ல் முதலில் மொழியாக்கம் செய்தனர். பின்னர் பல மொழியாக்கங்கள் வெளியாகியுள்ளன.

உள்ளடக்கம்

கிளாஸ்கோ பல்கலையில் மொழியியல் பயின்றவரான கால்டுவெல் தென்னிந்தியாவில் பேசப்பட்ட 9 மொழிகளை ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் கண்டார். இவற்றை திராவிட மொழிகள் என அடையாளப்படுத்தினார். ஏற்கனவே பிரான்ஸிஸ் வைட் எல்லிஸ் தென்னிந்திய மொழிகள் சம்ஸ்கிருதம் அல்லாத ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை, அவற்றை திராவிட மொழிகள் என்று சொல்லலாம் என அடையாளப்படுத்தியிருந்தார். கால்டுவெல் விரிவான மொழியியல் சான்றுகளின் அடிப்படையில் திராவிட மொழிகள் தங்களுக்கான தனித்த இலக்கணம் கொண்டவை என்று நிறுவினார்.

இரண்டாம் பதிப்பில் கால்டுவெல் திராவிட மொழிக்குடும்பத்தில் 12 மொழிகள் உள்ளன என வகைப்படுத்துகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடகு ஆகியவை திருந்திய மொழிகள். தோடர், கோடர், கோண்டு, கூயி, ஒராவன், ராஜ்மகால் ஆகியவை திருந்தா மொழிகள் என கால்டுவெல் கூறுகிறார். தன் நூலின் முதல்பதிப்பில் குடகு மொழி கன்னடத்தின் துணைமொழி என நினைத்திருந்தார். இரண்டாம் பதிப்பில் அது திருந்திய மொழி என வரையறை செய்தார். குருக் என்னும் மொழியை ஒராவன் மொழி என கால்டுவெல் குறிப்பிடுகிறார்.

கால்டுவெல் கனோரி என்னும் ஆப்ரிக்க மொழியுடன் திராவிட மொழிகளுக்கு இருக்கும் தொடர்பை குறிப்பிடுகிறார். லத்தீன் உள்ளிட்ட உலக மொழிகளில் திராவிட மொழியின் சொற்கள் இடம்பெற்றிருப்பதையும் குறிப்பிடுகிறார்.

இந்திய மொழிகள் அனைத்துக்கும் சம்ஸ்கிருதமே மூலமொழி என்னும் கருத்து திகழ்ந்திருந்த காலகட்டத்தில் கால்டுவெல்லின் இந்த ஆய்வுகள் ஆய்வுலகில் பெரிய திருப்புமுனையாகத் திகழ்ந்தன.

நூல் அமைப்பு

கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் அமைப்பு இதுவாகும்.

முன்னுரை

கால்டுவெல் தன் நூலில் ஏறத்தாழ 150 பக்கம் கொண்ட நீண்ட முன்னுரை ஒன்றை எழுதினார். இதில் திராவிடம் என்னும் சொல்லாட்சி, திராவிட மொழிகள் பற்றிய் வரையறை, திராவிட மொழிகளின் இலக்கணம் ஆகியவற்றையும், திராவிட நாகரீகத்தின் தனித்தன்மையையும் அதைப்பற்றிய சம்ஸ்கிருத நூல்களின் சான்றுகளையும் விரிவாகத் தொகுத்தளிக்கிறார். திராவிட மொழிகளில் முதன்மையான திருந்திய மொழி தமிழ் என்று கூறுகிறார். முன்னுரையில் தமிழிலக்கியங்களின் காலம் பற்றிய ஊகங்களை அளிக்கிறார். ஏழு காலகட்டங்களாக தமிழிலக்கியங்கள் உருவான காலத்தைப் பகுத்து அளிக்கிறார். இக்காலகட்டத்தில் சங்க இலக்கியங்கள் பதிப்பிக்கப்படவில்லை. பல முக்கியமான தமிழ் நூல்கள் பதிப்பில் இல்லை. ஆகவே கால்டுவெல்லின் இந்த பகுப்பு முறை ஒரு தொடக்க முயற்சியாகவே கருதத்தக்கது.

கால்டுவெல் தமிழிலக்கிய காலகட்டங்களை கால அடிப்படையில் அன்றி ஏழு அறிவு வட்டங்களாக பிரிக்கிறார்.

  1. சமணவட்டம்: தொல்காப்பியர் முதல் திருக்குறள் வரையிலான நூல்களை சமணர்களால் இயற்றப்பட்டவை என்று கருதும் கால்டுவெல் கிபி 9 முதல் 13 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை இவை என்கிறார்
  2. தமிழ் இராமாயண வட்டம்: கம்பராமாயணத்தையும் அதனுடன் ஒப்பிடத்தக்க பிற நூல்களையும் சோழர் வரலாற்றுண்ட இணைத்து ஒரு காலக்கணிப்பை முன்வைக்கிறார். கிபி 13க்கு பிறகு இந்த வட்டம் அமைகிறது
  3. புதுப்பிக்கப்பட்ட சைவ வட்டம்: சைவத் திருமுறைகளின் காலம்
  4. வைணவவட்டம்: வைணவநூல்களும் அவற்றுக்கான உரைநூல்களும் இணைந்த காலகட்டம்
  5. புதுப்பிக்கப்பட்ட இலக்கிய வட்டம்: அதிவீரராமபாண்டியனின் நடைந்தம் முதல் சம்ஸ்கிருத நூல்களின் மொழியாக்கம் உள்ளிட்டவை உருவான ஒரு இடைக் காலகட்டம் இது. சிவஞானபோதம் போன்றநூல்களும் இந்தவட்டத்தைச் சேர்ந்தவை. சிற்றிலக்கியங்களின் காலம் இது
  6. எதிர்பார்ப்பனிய வட்டம்: சித்தர்மரபின் பாடல்கள். திருமூலர் திருமந்திரம் போன்றவை. இவை பிராமணிய, வைதிக கருத்துக்களுக்கு எதிரானவை
  7. சமகாலப்படைப்பாளிகள். பதினெட்டு, பத்தொன்பதாம்நூற்றாண்டின் படைப்பாளிகள். வீரமாமுனிவர், தாயுமானவர் போன்றவர்கள். நவீன அகராதிநூல்கள். இலக்கணநூல்கள். ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள்.

இந்த முன்னுரையில் கால்டுவெல் திராவிடமொழிகளின் எழுத்துக்கணக்குகள் பற்றி விரிவாக ஒப்பிட்டு ஆராய்கிறார்

பொருளடக்கம்

கால்டுவெல்லின் நூல் உள்ளடக்கமாக ஏழு தலைப்புகளில் விரிவான ஆய்வுகள் கொண்டதாக உள்ளது.

  1. ஒலிகள்: திராவிடமொழிகளின் ஒலியமைப்பு பற்றிய ஆய்வு. அசைபிரித்தல், ஒலிமாற்றங்கள் ஆகியவை பேசப்படுகின்றன
  2. வேர்ச்சொற்கள்: திராவிட மொழிகளிலுள்ள சொற்களின் வேர்பற்றிய ஆய்வுகள்
  3. பெயர்ச்சொல்: பால்.எண்,வேற்றுமை பற்றிய ஆய்வுகள்
  4. எண்: எண் பெயர்கள் எண்ணிக்கை கணக்குகள்
  5. இடப்பெயர்: தமிழ் உள்ளிட்ட மொழிகளின் இடப்பெயர்கள், ஆகுபெயர்கள் பற்றிய ஆய்வு
  6. வினைச்சொல் : திராவிடமொழிகளில் தன்வினை, பிறவினை போன்றவை அமைந்திருக்கும் முறை
  7. சொல்லொற்றுமை: திராவிட மொழிகளில் ஒரே சொற்கள் அமைந்திருக்கும் விதம்
பின்னிணைப்பு

92 பக்கங்கள் கொண்ட விரிவான பின்னிணைப்பை ஏழு தலைப்புகளிலாக கால்டுவெல் அளித்துள்ளார்

  1. பிராகுயி மற்றும் சிறிய திராவிட மொழிகள்
  2. கோவரின் தென்னிந்திய நாட்டுப்புறப் பாடல்தொகுப்பிலுள்ள மொழியியல் குறிப்புகள்
  3. சுந்தரபாண்டியன் பற்றிய குறிப்புகள்
  4. தென்னிந்திய பறையர்கள் திராவிடர்களா எனும் ஆய்வு
  5. திராவிடர்களின் உடலமைப்பு
  6. திராவிடர்களின் தொல்சமயம்

மறுப்புகள்

திராவிட என்னும் சொல் தென்னிந்தியாவை, குறிப்பாக ஆந்திர நிலப்பகுதியைக் குறிப்பதாகவே பழைய தாந்த்ரீக - சிற்பநூல்களில் காணப்படுகிறது என்றும், அதை மொழியடையாளமாக உருவகிக்கும் கால்டுவெல் பின்னர் அதை மொழிப்பகுப்பாய்வின் அடிப்படையை மட்டுமே கொண்டு இன அடையாளமாக ஆக்கினார் என்றும், தென்னிந்திய மக்களுக்கு ஓர் இன அடையாளத்தை அளிக்க முயன்றார் என்றும், அவ்வாறு திராவிட இனம் என தனித்த ஒரு இனம் தென்னிந்தியாவில் மட்டும் உள்ளது என்பதற்கு மானுடவியல் சான்றுகள் ஏதுமில்லை என்றும் பிற்கால அறிஞர்கள் கூறுகிறார்கள். திராவிடர் என்பதற்கு கால்டுவெல் கூறும் உடற்கூறியல் அடையாளங்கள் கொண்ட மக்கள் இந்தியா முழுக்க வாழ்கிறார்கள்.

மத்திய இந்தியாவிலுள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியை திராவிட மொழிக்குடும்பத்திற்குள் சேர்க்கமுடியாது என்றும் அவை தனி மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் கூறப்படுகிறது.

விவாதங்கள்

ஆய்வாளரான எம். வேதசகாயகுமார் கால்டுவெல் உயிருடனிருந்தபோது 1875 ஆம் ஆண்டு வெளிவந்த திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஆங்கில நூலில் இடம்பெற்றிருந்த 96 பக்கமுள்ள விரிவான பின்னிணைப்பு அவர் மறைந்தபின் வெளிவந்த பதிப்புகளிலும் மொழியாக்கங்களிலும் 12 பக்கங்களாகச் சுருக்கப்பட்டிருந்தது என்றும், பறையர்களே தொல்திராவிடர் என்று கால்டுவெல் எழுதியிருந்தமையே அப்பகுதி நீக்கப்படுவதற்கான காரணம் என்றும் குற்றம்சாட்டி எழுதினார். இது சார்ந்த விவாதங்கள் கவிதாசரண் மற்றும் சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்ட மாற்றுவெளி ஆகிய இதழ்களில் நடைபெற்றன.

அறிவியக்க இடம்

கால்டுவெல்லின் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளின் தனித்தியங்கும் தன்மையை முன்னிறுத்தியது. அவை ஒரே தொன்மையான மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதை நிறுவியது. ஒட்டுமொத்தமாக அனைத்து மொழிகளையும் சம்ஸ்கிருத மூலம் கொண்டவை என்று சொல்லிக்கொண்டிருந்த பழைய பார்வையை முழுமையாக நிராகரித்தது. இதன்விளைவாக கீழ்க்கண்ட அறிவியக்கங்கள் உருவாயின.

  • தமிழ் உள்ளிட்ட மொழிகள் தங்களுக்கென தனித்த இலக்கண அமைப்பு கொண்டவை என்றும், அவை ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், அந்த மொழிக்குடும்பத்தை திராவிட மொழிக்குடும்பம் என்று சொல்லலாம் என்றும் வகுக்கும் கால்டுவெல் திராவிடர்கள் தனி இனம் என்றும், தனித்தன்மைகொண்ட உடலமைப்பும் வாழ்க்கைமுறையும் கொண்டவர்கள் என்றும் கூறினார். இது இந்திய மக்கள்தொகையை ஆரிய இனம், திராவிட இனம் என இரண்டாக பிரிக்கும் பார்வையை நிலைநாட்டியது. தென்னிந்தியாவில் திராவிட இனச்சார்பு அரசியல் உருவாக வழியமைத்தது. திராவிட அரசியலின் தந்தை என கால்டுவெல் மதிக்கப்படுகிறார்
  • தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளில் உள்ள விரிவான தனித்தன்மைகொண்ட சொற்களஞ்சியத்தை கால்டுவெல் சுட்டிக்காட்டினார். விளைவாக இம்மொழிகளிலுள்ள சம்ஸ்கிருதச் சொற்கள் அயல்மொழிச் சொற்கள் என அடையாளம் காணப்பட்டன. அச்சொற்களை விலக்கி தங்கள் மொழிகளின் தனித்தன்மையை மீட்டெடுக்கவேண்டும் என்னும் எண்ணம் உருவாகி அது தனித்தமிழியக்கம் போன்ற மொழித்தூய்மைவாத இயக்கங்களை பிறப்பித்தது.
  • தென்னிந்தியாவின் திராவிட மொழிகளில் தமிழே தலையாயதும் தொன்மையானதும் என்று கால்டுவெல் நிறுவியமை சம்ஸ்கிருத மேலாதிக்கவாதிகளால் இழிவுபடுத்தப்பட்டிருந்த தமிழறிஞர்களுக்கு தமிழ்ப்பெருமிதத்தை மீட்டளித்தது. தமிழிசை இயக்கம், தமிழ்ப் பதிப்பியக்கம் உள்ளிட்ட தமிழியக்கங்களுக்கான கருத்தியலடிப்படையை இந்நூல் உருவாக்கியளித்தது

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Nov-2024, 21:25:18 IST