under review

தா. நீலகண்டபிள்ளை

From Tamil Wiki
முனைவர், பேராசிரியர் தா. நீலகண்ட பிள்ளை

தா. நீலகண்டபிள்ளை (பிறப்பு: பிப்ரவரி 03, 1957) தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர். நாகர்கோவிலில் உள்ள தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். இலக்கியம், ஆய்வு, வாழ்க்கை வரலாறு, சமயம் தொடர்பான நூல்களை எழுதினார். தமிழ்மாமணி, சைவச் செம்மல் உள்ளிட்ட பல பட்டங்களைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

தா. நீலகண்டபிள்ளை, பிப்ரவரி 03, 1957 அன்று, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள பறக்கை என்னும் சிற்றூரில், க. தாணுமாலய பெருமாள் பிள்ளை - ப.சரஸ்வதி இணையருக்குப் பிறந்தார். பறக்கை நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்தார். நாகர்கோவில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் புகுமுக வகுப்பு கற்றார். தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் பயின்று தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) பட்டம் பெற்றார். தொடர்ந்து முதுகலை இதழியல், முதுகலை சுற்றுலாவியல், முதுகலை விளம்பரவியல் படித்தார். காந்தியச் சிந்தனையில் பட்டயம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

தா. நீலகண்டபிள்ளை மணமானவர். மனைவி, தே.நா.கோலம்மாள். மகள்கள்: பாரதி, நாகலட்சுமி.

கல்விப் பணிகள்

தா. நீலகண்டபிள்ளை, 1988-ல் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1990 முதல் நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

முனைவர் தா. நீலகண்டபிள்ளை நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

தா. நீலகண்டபிள்ளை, 'கோட்டாறு செட்டியார் வரலாறும் வாழ்வியலும்', ‘சங்கத்தமிழர் வாழ்வியல்' உள்ளிட்ட பல நூல்களை எழுதினார். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குக் கல்விச் சுற்றுப்பயணம் சென்று கருத்தரங்குகளில் உரையாற்றினார். உலக அளவிலும், தேசிய அளவிலும் ஆய்வரங்குகளில், ஆய்விதழ்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். தா. நீலகண்டபிள்ளையின் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், ஐம்பதிற்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டமும் பெற்றனர். தா. நீலகண்டபிள்ளை, பல்வேறு சமூக, இலக்கிய அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.

இதழியல்

தா. நீலகண்டபிள்ளை கல்லூரியில் படிக்கும் காலத்தில் ‘இலக்கியப் பூங்கா' என்ற இதழை நடத்தினார்.

விருது/பரிசு

  • சிறந்த அறிவியல் கட்டுரைக்காக இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் அளித்த பரிசு - 1997
  • கவிதை உறவு அளித்த 'அருந்தமிழ் தொண்டன்’ பட்டம்
  • அகில உலக அரிமா சங்கத்தின் 'சிறந்த தமிழ் ஆய்வாளர்' விருது
  • அரிமா சங்கத்தின் 'சிறந்த நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்' விருது
  • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 'சிறந்த என்.எஸ். எஸ். திட்ட அலுவலர்' விருது
  • சுழற் சங்கத்தின் ‘சமூகச் சேவகர்' விருது
  • கம்பன் கழகத்தின் ‘கம்பன்' விருது
  • தமிழ் ஐயா கல்விக் கழகத்தின் 'தமிழ்மாமணி' பட்டம்
  • பன்னிரு திருமுறை பன்னாட்டு ஆய்வு மாநாட்டில் வழங்கப்பட்ட ‘சைவச் செம்மல்’ பட்டம்

ஆவணம்

தா. நீலகண்டபிள்ளையின் வாழ்க்கைக் குறிப்பை முனைவர் சு. ஜெயகுமாரி நூலாக எழுதினார். இந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மலேயாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்தெடுத்த விழாவில் வெளியிட்டது.

மதிப்பீடு

தா. நீலகண்டபிள்ளை சிறந்த சொற்பொழிவாளராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் அறியப்படுகிறார். இலக்கியம், சமயம் சார்ந்த இவரது நூல்கள் குறிப்பிடத்தகுந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களை உருவாக்கிய முன்னோடித் தமிழ்ப் பேராசிரியராக மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • கோட்டாறு செட்டியார் வரலாறும் வாழ்வியலும்
  • சங்கத்தமிழர் வாழ்வியல்
  • கலைவாணர் ஒரு சகாப்தம்
  • செவ்விலக்கிய மணிகள்
  • அன்பே யோகம்
  • ஊடகங்களின் எதிர்காலம்
  • திருநாவுக்கரசரின்‌ தமிழ்ச்சுவை
  • பழந்தமிழர் வாழ்வில் பக்தி இயக்கம்
  • இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள்
  • செம்மொழிச் சிந்தனைகள்
  • திருமுறைகளில் இறைத்தத்துவம்
  • செம்மொழித் தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் முதல் சம காலம் வரை உணவுப் பழக்கம் (தொகுப்பாசிரியர்)

உசாத்துணை

  • தா. நீலகண்டபிள்ளை, எழுத்தாக்கம்: முனைவர் சு. ஜெயகுமாரி, கலைஞன் பதிப்பக வெளியீடு. முதல் பதிப்பு: 2017.


✅Finalised Page