தாமப்பல் கண்ணனார்
தாமப்பல் கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
தாமப்பல் கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது தாம் பாடிய பாடலில் தம்மை பார்ப்பனார் என சுட்டுவதால் அந்தண குலத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
இலக்கிய வாழ்க்கை
தாமப்பல் கண்ணனார் பாடிய பாடல் புறநானூறில் 43-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. புலவரும் சோழன் நலங்கிள்ளியின் தம்பியான மாவளத்தானும் வட்டாட்டம் ஆடினர். தாமப்பல் கண்ணனார் வட்டு காய்களை மறைத்து ஆடியதை கண்ட சோழன் தன் கையிலிருந்த வட்டுக்காயால் அவரை அடித்தான். பார்ப்பனரைத் துன்புறுத்தாத பெருமைக்குரிய முன்னோரை கொண்ட நீ என்னை துன்புறுத்தினாயே என புலவர் சினந்து கூறியவுடன் தான் தவறே செய்யாத போதும் மாவளத்தான் வருந்தினான். மாவளத்தானின் நல்குணத்தை கண்ட தாமப்பல் கண்ணனார் அவனையும் சோழ மன்னர்களின் முன்னோரையும் வாழ்த்தி பாடிய வாகைத் திணையில் அரசவாகை துறையில் அமைந்த பாடலே புறநானூறு 43.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- சோழ மன்னர்கள் அத்திமாலையை அணிந்திருப்பர்.
- உலக மக்களின் துன்பத்தை குறைப்பதற்காக சூரிய ஒளியில் எரிந்தபடி காற்றையே உணவாக கொண்டு முனிவர்கள் தவம் புரிவர்.
- சோழர்களின் குலம் அத்தகைய முனிவர்களும் வியக்கும்படி, தன்னிடம் அடைக்கலம் வந்த புறாவைப் பருந்திடமிருந்து காப்பாற்ற தனது தொடை தசையினை அறிந்து கொடுத்த வள்ளல் தன்மை மிக்க சிபி தோன்றிய சிறப்புமிக்கது.
- பகைவரின் முரண்பாட்டை களைந்த தேரோட்டுவதில் சிறப்புமிக்க மன்னன் சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான். அவன் குதிரை ஏற்றத்தில் திறன் மிக்கவனும் விற்படையினரின் படைத்தலைவனுமாவான்.
- சோழர்கள் தமக்கு பிழை செய்தவரையும் பொறுத்து மன்னித்தருளும் உயர்பண்பு மிக்கவர்கள்.
- உவமை: காவிரியாற்றின் கரையில் உள்ள மணற்துகளின் எண்ணிக்கைக்கு ஒப்பாக மாவளத்தானின் ஆயுள் நீளட்டும் என வாழ்த்தினார்.
பாடல் நடை
புறநானூறு - 43
- திணை: வாகை துறை: அரசவாகை
................................................
'ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி,
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே;
'தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்' என,
காண்தகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,
யானே பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள்
மிக்கு வரும் இன் நீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Mar-2025, 10:00:32 IST