under review

தமிழ் மருத்துவப் பொழில் (இதழ்)

From Tamil Wiki
தமிழ் மருத்துவப் பொழில் இதழ்



தமிழ் மருத்துவப் பொழில் (1941) மருத்துவம் சார்ந்து வெளிவந்த மாத இதழ். சென்னையிலிருந்து வெளிவந்த இந்த இதழின் ஆசிரியர் எம். வடிவேலு முதலியார்.

பிரசுரம், வெளியீடு

தமிழ் மருத்துவப் பொழில், சென்னையிலிருந்து, ஜனவரி 1941 முதல் வெளிவந்த சித்த மருத்துவம் சார்ந்த இதழ். அரசு இந்திய மருத்துவப் பாடசாலையின் சித்த மாணவர் கழகத்தின் வெளியீடாக வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர், மாங்காடு பண்டிதர் எம். வடிவேலு முதலியார். டாக்டர் கே. காசிநாதன், டாக்டர் சி.எஸ். உத்தமராயன், டாக்டர் வி.என். சாமராவ், டாக்டர் சி. துரைராஜன் ஆகியோர் தமிழ் மருத்துவப் பொழில் இதழின் பதிப்பாளர்களாகச் செயல்பட்டனர்.

நோக்கம்

தமிழ் மருத்துவப் பொழில் இதழின் நோக்கங்களாக, இரண்டாவது இதழான பிப்ரவரி 1941 இதழில் கீழ்க்காணும் குறிப்புகள் இடம் பெற்றன.

  • இதுவரை வெளிவராததும், வெளிவந்தும் பிழை நிரம்பியதும், ஒரு முறை அச்சேறி மறுமுறை அச்சேறாததுமான சித்த மருத்துவ நூல்களைத் திருத்தியும் உரையெழுதப்படாதவைகட்கு உரையெழுதியும், பகுதி பகுதியாக வெளியிடல்.
  • நாடி, நோய்த்தீர்வு, உயர்ந்த உலோகங்கள் முதலியவைகளைப்பற்றி அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை அனுபவமும் வைத்திய தேர்ச்சியும்கொண்ட மருத்துவர்களைக் கொண்டு எழுதுவித்தல்.
  • இதுவரை அவரவர்கள் அனுபவத்தில் கண்ட சில தீரா அரிய நோய்களையும் பரிகாரங்களையும் எழுதுவித்தல்.
  • இதுகாறும் மருத்துவர்களும், மருத்துவத்தில் பழக விரும்புவோரும் மருத்துவ மாணவர்களும் மருந்து வகையை விரும்பி அதில் பழகுவதையே மருத்துவமெனக் கொண்டிருந்தாரெனத் தோன்றுகின்றது. எங்ஙனமெனில்: நம் நாட்டு மருத்துவ நூல்கள் யாவும் பெரும்பாலும் மருந்து வகைகளையே கூறுகின்றமையாலாம். நோயறியாது மருந்தறிதல் அவ்வளவு உயர்ந்த தன்மையதாகாது. ஆகலால் தற்காலம் நோய் வகைகள் முழுமையும் எழுதப்படாவிடினும் சிற்சில முக்கிய நோய் விளக்கங்கள் இதில் எழுதப்பெறும்.
  • இப்பத்திரிகையின் பதிப்பாளர்கள் பல கையேட்டுப் பிரதிகளையும் கிடைத்தற்கருமையான பல நூற்களையும் வெளியிடும் நல் நோக்கத்துடன் ஒப்புநோக்கி ஒழுங்குபடுத்தி அச்சிடத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைக்குக் கவுரவ ஆசிரியராயிருந்து உதவிபுரிய முன்வந்துள்ள தமிழ்ப் பேராசிரியரும், மருத்துவப் பேராசிரியருமான பண்டிட் மாங்காடு வடிவேல் முதலியார் அவர்கட்கு நமது மனமார்ந்த வணக்கத்தைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

நூல் அமைப்பு

தமிழ் மருத்துவப் பொழில் இதழின் முகப்பில், இதழின் பெயர் வளைவு அச்சில் பெரிய எழுத்துருவில் இடம் பெற்றது. அதன் கீழே 'திங்கள் வெளியீடு' என்ற குறிப்பும், 'TAMIL SIDDHA MEDICAL MAGAZINE' என்ற குறிப்பும் இடம் பெற்றன. அதன் கீழ் இதழின் ஆசிரியர், பெயர், உரிமையாளர் பெயர், அச்சிட்டவர், பதிப்பாளர் பெயர், விவரங்கள் இடம்பெற்றன.

இதழின் ஆண்டு, மாதத்தைக் குறிக்க மலர், இதழ் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டன. இதழின் ஆண்டுச் சந்தா ரூபாய் ஆறு. தனிப் பிரதி விலை குறிப்பிடப்படவில்லை. சந்தாதாரர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்ட இதழாக அறியப்படுகிறது. தொடக்க காலத்தில் 48 பக்கங்களில் வெளிவந்த இதழ் அடுத்தடுத்த இதழ்களில் குறைந்த பக்கங்களில் வெளியானது.

உள்ளடக்கம்

தமிழ் மருத்துவப் பொழில் இதழில் பொதுச் சுகாதாரவியல், நோய்த்தடுப்பு முறைகள் சித்தமருத்துவம் தொடர்பான கட்டுரைகள் வெளியாகின. அகத்தியர் அருளிச்செய்த வைத்திய ரத்தினச் சுருக்கம் 360 நூலிலிருந்து கண்டங்கத்திரி லேகியம், சிந்தாதி லேகியம், மகாவில்வாதி லேகியம், கூஷ்பாண்ட லேகியம், சரபுங்க வில்வாதி லேகியம், கபாட லேகியம் போன்ற லேகிய வகைகளைத் தயாரிக்கும் விதம், பலன்கள்; சௌபாக்கிய சுண்டி, அக்கினிமுக சூரணம், திராட்சாதிசூரணம், அசுவகந்தி சூரணம், சஞ்சீவிச் சூரணம், நிலவாகைச் சூரணம் போன்ற சூரண வகைகளைத் தயாரிக்கும் விதம், அவற்றின் செய்முறை, பலன்கள் பற்றிய பாடல்கள் இடம்பெற்றன.

தேரர் பொருட்பண்பு வெண்பா நூல், வைத்திய சதக நாடி, பிரம்மமுனி கருக்கடைச் சூத்திரம்போன்ற சித்த மருத்துவ நூல்களிலிருந்தும், சுவடிகளிலிருந்தும் பாடல்கள் இதழ் தோறும் தொடராக இடம் பெற்றன. பேதி மருந்து, தாளக மாத்திரை, அயக்கருப்பு சித்த மருத்துவம், மருந்துகள் தொடர்பான பல கட்டுரைகள் இதழில் வெளியாகின.

நாகபடலம், டெரீஜியம் இரண்டு நோய்களும் ஒன்றா, கண் நோய் அணுகா நெறிகள், பல் நோய், செம்பின் பயன் போன்ற கட்டுரைகள் இடம் பெற்றன. சித்த மருத்துவ மாநாடு, சென்னை மாகாண எல்.ஐ.எம். விசேஷ மாநாடு பற்றிய செய்திகள் மிக விரிவான குறிப்புகளுடன் இடம்பெற்றன. விளம்பரங்களுக்கும் இவ்விதழ் இடமளித்தது.

பங்களிப்பாளர்கள்

  • பசுபுலேட்டி கன்னைய வீரராகவன்
  • டாக்டர் பி.சுப்பிரமணியம் எல்.ஐ.எம்.
  • டாக்டர் கே. ராதாகிருஷ்ணான் எல்.ஐ.எம்.
  • டாக்டர் ஆர். தியாகராஜன் எல்.ஐ.எம்
  • பண்டிட் மாங்காடு வடிவேலு முதலியார்
  • டாக்டர் கோ. துரைராசன் எல்.ஐ.எம்.

மற்றும் பலர்

இதழ் நிறுத்தம்

தமிழ் மருத்துவப் பொழில் இதழின் நான்காண்டு இதழ்கள் காணக் கிடைக்கின்றன. அதன் பிறகு எவ்வளவு காலம் தொடர்ந்து வெளிவந்தது, எப்போது நின்று போனது என்பது போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை.

ஆவணம்

தமிழ் மருத்துவப் பொழில் இதழின் சில பிரதிகள் தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு

சித்தமருத்துவம் சார்ந்து வெளிவந்த தமிழின் குறிப்பிடத்தகுந்த நூல்களுள் ஒன்றாக 'தமிழ் மருத்துவப் பொழில்' இதழ் அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Oct-2024, 10:29:30 IST