under review

தடாதகைப் பிராட்டியாரின் திருமணப் படலம்

From Tamil Wiki
அன்னை மீனாட்சி திருமணம்

பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்களுள் ஒன்று திருவிளையாடல் புராணம். இது மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திரு ஆலவாய்க் காண்டம் என மூன்று காணடங்களைக் கொண்டது. மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் என 64 படலங்கள் இந்நூலில் அமைந்துள்ளன. மதுரைக் காண்டத்தின் ஐந்தாவது படலம், தடாதகைப் பிராட்டியாரின் திருமணப் படலம்.

சிவனின் ஆடல்

மதுரையில் பல்வேறு வகையிலான திருவிளையாடல்களை நிகழ்த்திய சிவபெருமான், தடாதகைப் பிராட்டி என்று அழைக்கப்பட்டும் மீனாட்சி அம்மையின் திருமணத்திற்காக நிகழ்த்திய ஆடல்கள் பற்றி விளக்குவதே தடாதகைப் பிராட்டியாரின் திருமணப் படலம்.

படலத்தின் விளக்கம்

தடாதகைப் பிராட்டியார் என்னும் மீனாட்சி அம்மையின் போர் வெற்றிகள் மற்றும் சிவபெருமானுடனான திருமணத்தைப் பற்றி விளக்குவது தடாதகைப் பிராட்டியாரின் திருமணப் படலம்.

கதைச் சுருக்கம்

மதுரையை மையமாகக் கொண்டு நீதி வழுவாமுறையில் பாண்டிய நாட்டை ஆண்டுவந்தார் தடாதகைப் பிராட்டியார். கணவன் இறந்த நிலையில், மகள் தனித்து வாழ்வது கண்ட தாய் காஞ்சனமாலை மனம் வருந்தினாள். மகளுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினாள். அதனை தடாதகையிடம் தெரிவிக்க, தடாதகை மறுத்து, “அம்மா, கவலை வேண்டியதில்லை. அது நடக்கும். நான் தற்போது தந்தையாரின் விருப்பப்படி, உலகமெங்கும் சுற்றி, அனைத்து தேசங்களையும் என் ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும். என்னை ஆசி கூறி வழி அனுப்பு” என்றார். அன்னையும் ஆசிர்வதித்து அனுப்பினாள்.

தேவருலகை வெல்லுதல்

பெரும்படையுடன் புறப்பட்ட தடாதகைப் பிராட்டியாரைக் கண்டு அஞ்சி, நடுங்கிய மன்னர்களெல்லாம் அவளைச் சரணடைந்தனர். பூவுலகில் வெற்றிக்கொடி நாட்டி தடாதகை பிராட்டியார், தேவலோகத்திற்குச் சென்றார். தடாதகையின் படைபலத்தைக் கண்டு அஞ்சிய இந்திரன் ஓடி ஒளிந்துகொண்டான். தடாதகைப் பிராட்டியார் தேவேந்திரனுக்குச் சொந்தமான சங்கநதி, பதுமநிதி, சிந்தாமணி, காமதேனு, கற்பகதரு போன்ற செல்வங்களையெல்லாம் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டாள். தேவ கன்னியர்களை தனக்கு பணியாளர்களாக்கினாள்.

பின் தென்கிழக்கு திசைக்குச் சென்று அக்கினியை வென்றார். அவன் காணிக்கையாக அளித்த தங்கக் கட்டிகளுடன் தெற்கே வந்து யமனைப் போரில் வென்று, அவன் தந்த வெகுமதிகளுடன் தென்மேற்கே நிருதியை ஜெயித்து, மேற்கிலே வருணனையும் வடமேற்கில் வாயுவையும் வடக்கே சோமனையும் வென்றாள். இவ்வாறு அனைத்து அஷ்டதிக் பாலகர்களையும் வென்ற பின் கயிலை மலையையும் தன் வசமாக்கிக் கொள்வதற்காக படைகளுடன் அங்கு புறப்பட்டாள்.

கயிலையில் போர்

தடாதககைப் பிராட்டியார் திருக்கயிலாயம் சென்றார். அன்னையின் பெரும் படைகளைக் கண்ட நந்திதேவர் பூதகணங்களைப் போருக்கு அனுப்பினார். பூத கணங்களை மிக எளிதில் வெற்றிகொண்டாள் அன்னை. அதனை அறிந்த நந்தி தேவர், கயிலையின் தலைவரான சிவபெருமானுக்கு விவரங்களைத் தெரிவித்தார்.

புன்னகை பூத்த சிவபெருமான், நாக வில்லைக் கையில் ஏந்தி இடப வாகனத்தில் போர்க் களத்துக்கு வந்தார். இறைவனை நேரில் கண்டதும் தடாதகையின் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. உடனே தடாகைக்கு மாயை அகன்று தன்னுடைய சுய நினைவு வந்தது. இறைவனின் மேல் அன்பு மிகுந்து வெட்கத்தில் தலைகுனிந்து நின்றார். இக்காட்சியினை கண்ட அமைச்சர் சுமதிக்கு தடாதகை பற்றி, மன்னர் முன்பு தனக்குக் கூறியது நினைவுக்கு வந்தது. உடனே அவர் தடாகையிடம், “அம்மையே சிவபெருமானான இவரே தங்களின் மணவாளன்” என்று கூறினார்.

இறைவன் தடாதகையிடம் “நீ திக்விஜயத்தின்போது என்று புறப்பட்டாயோ அன்று முதல் யாமும் உம்மை தொடர்ந்து வந்தோம். உன்னை திங்கள்கிழமை அன்று நல்ல முகூர்த்தம் கூடிய பொழுதில் திருமணம் செய்ய வருவோம். நீ தற்போது உன் நகரமாகிய மதுரைக்கு செல்” என்று கூறி விடைகொடுத்தார்.

மதுரை விஜயம்

இறைவனை வணங்கி விடைபெற்ற தடாகைப் பிராட்டியார் தன் படைகளுடன் மதுரைக்குத் திரும்பினார். மதுரை திரும்பிய தடாதகையை தாய் காஞ்சனமாலை வரவேற்றாள். உலகை வென்றதுடன், ஈசனின் இதயத்தையும் தன் மகள் வென்று வந்தாள் என்ற செய்தியறிந்தாள். மகளுக்கு மணநாள் குறிக்க ஏற்பாடு செய்தாள். அமைச்சர் சுமதி, திருமணப் பட்டோலை எழுதி, பல தேசத்து மன்னர்களுக்கும் அனுப்பினார். மதுரை மக்களுக்கு தடாதகை பிராட்டியாருக்குத் திருமணம் நடக்க இருப்பது குறித்து முரசறைந்து அறிவிக்க ஏற்பாடு செய்தார். மக்கள் மகிழ்ந்தனர். நகரை மிகச் சிறப்பாக அலங்கரித்தனர்.

மீனாட்சியின் திருமணம்

சிவபெருமானின் திருமணம் குறித்து அறிந்த தேவர்கள் மகிழ்ந்தனர். குபேரன் இறைவனை அழகான மணமகனாக அலங்கரித்தார். குண்டோதரன் குடைபிடிக்க இறைவனார் இடப வாகனத்தில் ஏறி மதுரை நகருக்குப் புறப்பட்டார். காஞ்சனமாலை பாண்டிய நாட்டு அமைச்சர்களுடன் சென்று அவரை வணங்கி வரவேற்றாள். “தாங்கள் தடாதகையை மணம் செய்து பாண்டிய நாட்டை ஆள வேண்டும்” என்று விண்ணப்பித்தாள். சிவபெருமானும் அதனை ஏற்றுக் கொண்டு திருமணத்துக்குப் புறப்பட்டார்.

அன்னை மீனாட்சிக்கு சரஸ்வதியும், லட்சுமியும் வந்து அலங்காரம் செய்தனர். தந்தையில்லாத மீனாட்சிக்கு தந்தையாயும், தமையனாயும் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க மகாவிஷ்ணு வந்தார். பிரம்மா வேதமந்திரம் முழங்க, திருமால் தாரை வார்த்துக்கொடுக்க, மணமகளுக்கு திருமாங்கல்யத்தை அணிவித்தார் சிவபெருமான். பாதத்தில் மெட்டி அணிவித்தார். மீனாட்சி அம்மியில் கால் வைக்கவும், திருமணத்துக்கு வந்திருந்த வசிஷ்டரின் மனைவி அருந்ததி தேவி, மீனாட்சியின் முன்னால் வந்து நின்று, “தங்களின் பார்வை என் மீது பட நான் இங்கே காத்திருக்கிறேன்”, என்று தலை வணங்கி கைகூப்பி நின்றாள். அருந்ததிக்கு ஈசனும், பிராட்டியும் அருள் செய்தனர். திருமணத்துக்கு வந்திருந்த தேவர்கள், முனிவர்கள் என அனைவருக்கும் சிறப்புச் செய்து, விருந்து, பரிசல்கள் அளித்து வழி அனுப்பினர்.

காஞ்சன மாலைக்கு கொடுத்த வாக்கின்படி மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் சிவபெருமான். நடுவூர் என்னும் ஊரினை உருவாக்கி, அதில் இம்மையிலும் நன்மை தருவார் என்னும் சிவாலயத்தை ஏற்படுத்தினார். பின் இம்மையிலும் நன்மை தருவாரை வணங்கி வழிபாடு நடத்தினார். பின் மீனாட்சியுடன் இணைந்து சுந்தர ஈஸ்வரனான சுந்தரேசன் மதுரையை நீதி வழுவா முறையில் சிறப்புற ஆட்சி செய்தார்.

பாடல்கள் நடை

அன்னை தடாதகை போருக்குப் புறப்படுதல்

தேம்பரி கோதை மாதின் றிருவுளச் செய்தி நோக்கி
ஆம்பரி சுணர்ந்த வேந்த ரமைச்சரும் பிறரும் போந்தார்
வாம்பரி கடாவித் திண்டேர் வலவனுங் கொணர்ந்தான்வையந்
தாம்பரி வகல வந்தா ளேறினாள் சங்க மார்ப்ப

ஆர்த்தன தடாரி பேரி யார்த்தன முருடு மொந்தை
ஆர்த்தன வுடுக்கை தக்கை யார்த்தன படகம் பம்பை
ஆர்த்தன முழுவந் தட்டை யார்த்தன சின்னந் தாரை
ஆர்த்தன காளந்தாள மார்த்தன திசைக ளெங்கும்

சிவபெருமானின் போர்க்கோலம்

ஒற்றை வார் கழல் சரணமும் பாம்பசைத்து உடுத்த வெம் புலித் தோலும்
கொற்ற வாள் மழுக் கரமும் வெண் நீறணி கோலமும் நூல் மார்பும்
கற்றை வேணியும் தன்னையே நோக்கிய கருணை செய்திருநோக்கும்
பெற்ற தன் வலப் பாதியைத் தடாதகை பிராட்டியும் எதிர் கண்டாள்

அன்னை தடாதகை தன் பிறப்பின் உண்மையை உணர்தல்

கண்ட எல்லையில் ஒரு முலை மறைந்தது கருத்தில் நாண் மடம் அச்சம்
கொண்ட மைந்திடக் குனிதா மலர்ந்த பூம் கொம்பரின் ஒசிந்து ஒல்கிப்
பண்டை அன்பு வந்து இறை கொளக் கரும் குழல் பாரமும் பிடர் தாழக்
கெண்டை உண் கண்ணும் புறவடி நோக்க மண் கிளைத்து மின் என நின்றாள்

அன்னை மீனாட்சி திருமணம்

அத்தலை நின்ற மாயோன் ஆதி செம்கரத்து நங்கை
கைத்தலம் கமலப் போது பூத்தது ஓர் காந்தள் ஒப்ப
வைத்தரு மனுவாய் ஓதக் கரகநீர் மாரி பெய்தான்
தொத்தலர் கண்ணி விண்ணோர் தொழுது பூ மாரி பெய்தார்

சிவபெருமான் இன்மையின் நன்மை தருவார் ஆலயம் அமைத்துப் பூஜை செய்தது

மெய்ம்மைநூல் வழியே கோயில் விதித்தருட் குறிநிறீஇப்பேர்
இம்மையே நன்மை நல்கு மிறையென நிறுவிப் பூசை
செம்மையாற் செய்து நீப வனத்துறை சிவனைக் காலம்
மும்மையுந் தொழுது வைய முழுவதுங் கோன டாத்தும்.

உசாத்துணை


✅Finalised Page