டி.வி. சுவாமிநாத சாஸ்திரி
டி.வி. சுவாமிநாத சாஸ்திரி (வா. சுவாமிநாத சாஸ்திரி; டி.வி.எஸ். சாஸ்திரி) (1887 - ஜூலை 19, 1946) சுதந்திரப் போராட்ட வீரர். எழுத்தாளர், இதழாசிரியர், காந்தியவாதி. மருத்துவராகப் பணியாற்றினார். திருச்சி ஹரிஜன சேவா சங்கத்தின் முதல் தலைவர். திருச்சி மாவட்ட காங்கிரஸ் குழுத் தலைவர்.
வாழ்க்கைக் குறிப்பு
டி.வி. சுவாமிநாத சாஸ்திரி, 1887-ல், கும்பகோணத்தில், வாசுதேவ சாஸ்திரி - லட்சுமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். உயர்கல்வி கற்றபின் சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். திருச்சியில் மருத்துவராகப் பணியாற்றினார். மணமானவர். மனைவி: கல்யாணி.
சமூகப்பணி
டி.வி. சுவாமிநாத சாஸ்திரி காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஹரிஜன சேவா சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்தார். தீண்டாமையை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். திருச்சி தென்னூரில் மல்லிகைபுரம், சங்கிலிச்சேரி ஆகிய இரு தாழ்த்தப்பட்ட குடியிருப்புகளுக்கு மத்தியில் தனது மருத்துவமனையைக் கட்டினார். ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவச் சிகிச்சை அளித்தார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்விற்காகப் பல்வேறு நற்பணிகளில் ஈடுபட்டார். உறவினர்களால் சாதி விலக்கு செய்யப்பட்டபோதும் அதனைப் புறந்தள்ளி அம்மக்கள் வாழ்க்கை உயர்வுக்காக இலவச வீடுகள், தண்ணீர் வசதி, கல்வி கற்க வேண்டிய உதவி என்று பல பணிகளைச் செய்தார். தீண்டாமை, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, விதவைகள் மறுமணம் போன்ற சமூக சீர்திருத்தங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
அரசியல்
டி.வி. சுவாமிநாத சாஸ்திரி, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகமெங்கும் சென்று பல உரைகளை நிகழ்த்தினார். அவரது பேச்சால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர். டி.வி. சுவாமிநாத சாஸ்திரி திருச்சி மாவட்ட காங்கிரஸ் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். காமராஜர், சத்தியமூர்த்தி, ஈ.வெ. ராமசாமி, டி.எஸ்.எஸ். ராஜன், கல்கி, எஸ்.எஸ்.வாசன், சதாசிவம் எனப் பலருடன் நல்ல நட்புக் கொண்டிருந்தார்.
1921-ல் நடந்த ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறை வாசத்தின் போதும் அங்குள்ள கைதிகளுக்கு மருத்துவம் பார்த்தார்.
1930-ல் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் டி.வி. சுவாமிநாத சாஸ்திரி, அவரது மனைவி கல்யாணி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறை சென்றனர்.
டி.வி. சுவாமிநாத சாஸ்திரி, தினந்தோறும் ராட்டையில் நூல் நூற்பதைத் தனது கடமையாகக் கொண்டிருந்தார்.
இதழியல்
டி.வி. சுவாமிநாத சாஸ்திரி, 1934-ல், "களி ராட்டை" என்ற இதழைத் தொடங்கி நடத்தினார்.
மறைவு
டி.வி. சுவாமிநாத சாஸ்திரி, சிறைவாசத்தின் போது ஏற்பட்ட காசநோயின் காரணமாக, ஜூலை 19, 1946 அன்று காலமானார்.
நினைவு
டி.வி. சுவாமிநாத சாஸ்திரியின் நினைவாக, திருச்சியில் அவர் வசித்த தென்னூர் பகுதியில் உள்ள ஒரு நீண்ட சாலைக்கு, 'சுவாமிநாத சாஸ்திரி சாலை' என்று பெயர் சூட்டப்பட்டது.
மதிப்பீடு
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னலமற்று ஈடுபட்டு பாரத நாட்டின் விடுதலைக்காக உழைத்தவர்கள் பலர். சாதி, மத, இன, பேதம் கடந்த அவர்களுள் ஒருவராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்த தலைவர்களில் ஒருவராகவும் டி.வி. சுவாமிநாத சாஸ்திரி அறியப்படுகிறார்.
உசாத்துணை
- தலித்துகளும் பிராமணர்களும், கே.சி.லட்சுமி நாராயணன், எல்.கே.எம். பப்ளிகேஷன், தியாகராய நகர், சென்னை - 600 017, முதல் பதிப்பு: ஜூன் 2009
- திருச்சி - டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி சாலை, எனது எண்ணங்கள் தளம் https://tthamizhelango.blogspot.com/2014/10/blog-post_12.html
- நரசய்யா கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Feb-2025, 09:12:42 IST