under review

டி.பி.ராஜலட்சுமி

From Tamil Wiki
டி.பி.ராஜலட்சுமி
டி.பி.ராஜலட்சுமி

டி.பி.ராஜலட்சுமி (திருவையாறு பஞ்சாபகேசன் ராஜலெட்சுமி) (நவம்பர் 11, 1911 - 1964) தமிழின் தொடக்ககால எழுத்தாளர்களில் ஒருவர். நாடக நடிகை, தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நடிகை, முதல் பெண் இயக்குநர், தயாரிப்பாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

டி.பி.ராஜலட்சுமி தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, சாலியமங்கலத்தில் பஞ்சாபகேச ஐயர், மீனாட்சி இணையருக்குப் பிறந்தார். தந்தை அந்தக் கிராமத்தின் கர்ணமாகப் பொறுப்பு வகித்தார். ராஜலட்சுமியின் தந்தை இறந்துவிட்டதால் குடும்பம் வறுமையில் இருந்தது. தாயுடன் திருச்சி வந்தார்.

தனிவாழ்க்கை

ராஜலட்சுமிக்கு எட்டு வயதில் திருமணமானது. வரதட்சணைக் கொடுமையால் கணவனால் விரட்டப்பட்டு தாய் வீட்டில் வாழ்ந்தார். வள்ளி திருமணத்தில் தன்னுடன் நாரதராக நடித்த, சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்ட காங்கிரஸ்காரரான டி.வி. சுந்தரம் என்பவரை காதலித்து மணந்தார்.

நாடக வாழ்க்கை

டி.பி.ராஜலட்சுமி திருச்சியில் அப்போது வெற்றிகரமாக நடந்து வந்த மதுரை சி.எஸ்.சாமண்ணாவின் நாடகக் கம்பெனியில் தன் பதினொன்றாம் வயதில் சேர்ந்தார். நாடக ஆசிரியர் சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகப் பயிற்சி பெற்றார். முதன் முதலாக ‘பவளக்கொடி’ நாடகத்தில் புலேந்திரன் வேடத்தில் டி.பி.ராஜலட்சுமி நடித்தார். பின்னர் கே.எஸ். செல்லாப்பாவின் நாடகக் கம்பனியில் இணைந்து நடித்தார். பின்னர் கே.பி. மொய்டீன் சாகிப் நாடக மன்றத்தில், மூன்றாண்டுகள் கதாநாயகியாக நடித்தார். அந்நாடகக் குழு பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் நாடகங்களை நடத்தும்போது அங்கு சென்று நடித்தார். பின்னர் கன்னய்யா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார். சி. கன்னையா நடத்தி வந்த நாடக கம்பெனியில் எஸ்.ஜி. கிட்டப்பாவுக்கு ஜோடியாக ராமா பட்டாபிஷேகம் போன்ற நாடகங்களில் நடித்தார். தியாராஜ பாகவதருக்கு ஜோடியாக பவளக்கொடி போன்ற நாடகங்களில் நடித்தார். வி.ஏ. செல்லப்பாவுடன் இணைந்து நடித்தார்.

டி.பி.ராஜலட்சுமிக்கு மதராஸ் பட்டணத்தை அறிமுகப்படுத்தியவர் திருச்சி டி.எஸ்.நடராஜப்பிள்ளை. அவரது அழைப்பின் பேரில், அன்று பிரபலமாக இருந்த ‘ஸ்பெஷல்’ நாடகங்களில் நடிக்க அடிக்கடி மதராஸுக்கு வந்தார்.

விடுதலைப்போராட்டம்

தான் நடித்த நாடகங்கள் அனைத்திலும் தேச பக்திப் பாடல்களைப் பாடி மக்களின் வரவேற்பைப் பெற்றார். கர்நாடக இசைப் பாடல்களையும் பாடினார். இவர் பாடிய "இந்தியர்கள் நம்மவர்களுக்குள் ஏனோ வீண் சண்டை...", "இராட்டினமாம் காந்தி கைபாணமாம்..." போன்ற தேசபக்திப் பாடல்கள் மக்களிடையே பிரபலமடைந்தன. தேசபக்திப் பாடல்களைப் பாடியதற்காகப் பிரித்தானிய அரசால் கைது செய்யப்பட்டு சில முறை சிறையும் சென்றார்.

மகாத்மா காந்தியின் மேல் காங்கிரஸ் கட்சியின் மேல் கொண்ட பற்றால் சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து 'இந்தியத் தாய்' என்ற படத்தை உருவாக்கினார். ஆனால் சென்சார் கெடுபிடியினால் அவர் முயற்சி வெற்றி பெறாமல் நஷ்டத்தில் முடிந்தது.

திரை வாழ்க்கை

மெளனப்படம்

டி.பி.ராஜலட்சுமி ‘ஸ்பெஷல்’ நாடகங்களில் நடிக்க அடிக்கடி மதராஸுக்கு வந்தபோது மௌனப் படங்களைப் பார்த்து அதில் நடிக்க விரும்பினார். சிவகங்கை ஏ. நாராயணனின் ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷனின் படங்கள் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த ஸ்டுடியோவுக்குள் நுழைந்து அவரைச் சந்தித்தார். 1917-ல் ஆர். நடராஜ முதலியார் தயாரித்த, தமிழ்த் திரைப்படவுலகின் முதல் மௌனப் படமான கீசகவதம்' என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து நாடகங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். 1929-ல் ஊமைப் படங்களைத் தயாரித்து வந்த ஜரைல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஏ. நாராயணன், ராஜலட்சுமியைத் தனது ‘கோவலன்’ எனும் ஊமைப்படத்தில், மாதவியாக நடிக்க வைத்தார். இது இவர் நடித்த இரண்டாவது ஊமைத் திரைப்படம். இதனைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் ‘உஷா சுந்தரி’, ராஜா சாண்டோவின் 'இராஜேசுவரி' (1931) போன்ற சில ஊமைப்படங்களில் நடித்தார். 1931-ல் மும்பையைச் சேர்ந்த சாகர் மூவிடோன் தயாரித்த தமிழ் சினிமாவின் முதல் குறும்படமான 'குறத்தி பாட்டும் நடனமும்'-ல் நடித்தார்.

பேசும்படம்
காளிதாஸ் திரைப்படத்தில் டி.பி. ராஜலட்சுமி

பம்பாய் இம்பீரியல் மூவி டோன் நிறுவனர் அர்தேஷிர் இரானி தயாரித்த தமிழின் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' திரைப்படத்தில் நடிக்க ராஜலட்சுமியைத் தேர்ந்தெடுத்து கே. சுப்பிரமணியம் பம்பாய்க்கு அனுப்பினார். இத்திரைப்படம் அக்டோபர் 31,1931-ல் இல் சென்னையில் சினிமா சென்ட்ரல் என்ற திரையரங்கில் முதன்முதலில் திரையிடப்பட்டது. இப்படத்தில் ராஜலட்சுமி "காந்தியின் கைராட்டினமே" என்ற பாடல் உட்பட இரு பாடல்களும் பாடி, குறத்தி நடனமும் ஆடினார்.

1932-ல் ராமாயணம் திரைப்படத்தில் சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து, அரிச்சந்திரா, கோவலன், சத்தியவான் சாவித்திரி, உஷா சுந்தரி, ராஜேஸ்வரி, மதுரை வீரன் ஆகிய படங்களில் நடித்தார். 1933-ல் டி.பி. ராஜலட்சுமி நடித்து வெளிவந்த 'வள்ளி திருமணம்' தமிழின் முதல் வெற்றிப்படம். கணவரான டி.வி. சுந்தரத்துடன் கல்கத்தாவில் 'திரௌபதி', 'அரிச்சந்திரா', 'குலேபகாவலி' போன்ற படங்களில் இணைந்து நடித்தார். அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து டைரக்டராக விளங்கிய எல்லீஸ்.ஆர். டங்கனின் டைரக்சனில் உருவான 'சீமந்தினி' என்ற படத்தில் நடித்தார். 1938-ல் 'நந்தகுமார்' என்ற படத்தை ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தயாரித்தார். இதில் டி.ஆர். மகாலிங்கம் பால கிருஷ்ணனாகவும், ராஜலட்சுமி யசோதையாகவும் நடித்தனர். 1943 வரையில் பதினான்கு திரைப்படங்களில் நடித்தார். இறுதி காலங்களில் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ராஜலட்சுமி 'ஜீவ ஜோதி', 'இதய கீதம்' படங்களில் தாயாக நடித்தார்.

தயாரிப்பாளர், இயக்குனர்

கல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பிய காலகட்டத்தில் ராஜலட்சுமி ஸ்ரீ ராஜம் டாக்கீஸ் என்ற கம்பனியைத் தொடங்கி 'மிஸ் கமலா' என்ற பெயரில் தானே கதைவசனம் எழுதிக் கதாநாயகியாக நடித்து, தயாரித்து, இயக்கி, வெளியிட்டார். இதன் மூலம் தமிழில் முதல் பெண் தயாரிப்பாளர், இயக்குனர் என்ற பெயர் ராஜலட்சுமிக்குக் கிடைத்தது. 1936-ல் வெளிவந்த இப்படம் தோல்வி அடைந்தது. 1938-ல் மதுரை வீரன் படத்தை இயக்கினார். இதில் வி.ஏ. செல்லப்பாவுடன் ஜோடியாக நடித்தார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துக்கும் இவரது சகோதரர் டி.பி. ராஜகோபால் இசையமைத்தார். திரைப்படக் கம்பனியை மற்றொரு சகோதரர் டி.பி. ராஜசேகரன் கவனித்தார்.

நடித்த திரைப்படங்கள்

மெளனப்படம்
  • கோவலன்
  • உஷா சுந்தரி
  • ராஜேஸ்வரி
பேசும்படம்
  • காளிதாஸ்
  • ராமாயணம்
  • வள்ளி திருமணம்
  • திரௌபதி
  • அரிச்சந்திரா
  • குலேபகாவலி
  • அரிச்சந்திரா
  • கோவலன்
  • சத்தியவான் சாவித்திரி
  • உஷா சுந்தரி
  • ராஜேஸ்வரி
  • மதுரை வீரன்
  • சீமந்தினி

இலக்கிய வாழ்க்கை

டி.பி.ராஜலட்சுமி முப்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதினார். ஆனால் திரைப்படத்தில் நடித்த டி.பி.ராஜலட்சுமியும் நாவல் எழுதிய டி.பி.ராஜலட்சுமியும் ஒன்றா என்பதில் விவாதங்கள் உள்ளன.

விருது

  • டி.பி.ராஜலட்சுமி 1961-ல் கலைமாமணி விருது பெற்றார்.

மறைவு

டி.பி.ராஜலட்சுமி 1964-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

நாவல்கள்
  • கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்
  • விமலா (1933)
  • மல்லிகா (1933)
  • சுந்தரி
  • வாஸந்திகா
  • உறையின் வாள்
  • மறைந்த முகம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Apr-2023, 08:11:28 IST