under review

சி. கன்னையா

From Tamil Wiki
சி. கன்னையா

சி. கன்னையா (1872- 1932) தமிழக நாடக முன்னோடிகளில் ஒருவர். ஸ்ரீ கிருஷ்ண விநோத சபா என்னும் நாடகக் குழுவைத் தொடங்கி நாடக அரங்காற்றுகை செய்தார். அரங்கக்காட்சிகளை அமைப்பதில் தமிழ் நாடக மேடைக்கு சி.கன்னையா முன்னோடியாகத் திகழ்ந்தார்.

பிறப்பு, கல்வி

சி.கன்னையா 1872-ல் தெலுங்கு சாதடா வைணவரான சென்னை கலசப்பாக்கம் ரங்கமன்னாரையாவின் பத்தாவது மகனாகப் பிறந்தார். சென்னை பாண்டியா தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றபின் படிப்பை துறந்து தன் 12-ஆவது வயதில் சென்னை அரசு அச்சகத்தில் அச்சுதயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றினார்.

நாடக வாழ்க்கை

சி.கன்னையா அச்சகத்தில் பணியாற்றுகையில் புகழ்பெற்ற நாடகநடிகராகத் திகழ்ந்த சுப்பராயாச்சாரிக்கு ஆடைகள் தைத்த சுப்பராயலு ராஜு என்பவருக்கு உதவியாளராகச் சேர்ந்து நாடக அறிமுகம் பெற்றார். பெற்றோருக்கு தெரியாமல் கோபால்ராவ் என்பவரின் நாடகக்குழுவில் சேர்ந்து நான்குமாத காலம் சிங்கப்பூருக்குச் சென்று நாடகங்களில் நடித்தார். திரும்பி வந்து சென்னை வால்டாக்ஸ் தியேட்டரில் தி.நாராயணசாமிப் பிள்ளை நடத்திவந்த சென்னை கிருஷ்ண வினோதினி நாடக சபாவில் 12 ரூபாய் ஊதியத்திற்கு வேலைக்குச் சேர்ந்தார். அங்கே சாகுந்தலம் நாடகத்தில் துஷ்யந்தனாக நடித்துப் பெரும்புகழ் பெற்றார்.

சி.கன்னையா தன் 26-ஆவது வயதில் நகைச்சுவை நடிகர் சி.எஸ்.சாமண்ணா ஐயர் மற்றும் ஆல்ஃப்ரட் பார்ஸி நாடகக் குழு தலைவர் ஆமிர் அலி ஆகியோரின் உதவியுடன் தானே ஒரு நாடகக்குழுவை தொடங்கினார். ரங்கூன் சென்று அங்கிருந்த காமாட்சியம்மன் தியேட்டரில் ராமாயணம், அரிச்சந்திரா, கண்டிராஜன் முதலிய நாடகங்களை நடத்தினார். அதைக் கண்டு மகிழ்ந்த பி.எம்.மதுரைப்பிள்ளை அவருக்கு பரிசுகள் அளித்து ஆதரித்தார். யாழ்ப்பாணம் வைத்திலிங்க வித்வத் பிள்ளை, சபாபதி முதலியார் போன்றவர்கள் அங்கே அவருக்கு புரலவலர்களாக இருந்தனர். ரூபாய் 7000 மதிப்புள்ள பரிசுகள் அவருக்கு அளிக்கப்பட்டன. அந்தப் பணத்தில் நவீன நாடகக் கருவிகள், திரைச்சீலைகள் வாங்கிக்கொண்டார். 'ஶ்ரீ கிருஷ்ண விநோதசபா' என்ற பெயரையும் தன் நிறுவனத்திற்குச் சூட்டிக்கொண்டார்

தன் 27-ஆவது வயதில் சென்னைக்கு திரும்பிய சி.கன்னையா சென்னை வால்டாக்ஸ் தியேட்டரில் ஓராண்டுக்காலம் தொடர்ச்சியாக நாடகங்களை நடத்தினார். தன் நிறுவனத்தில் ஏகை வித்வான் சிவசண்முகம் பிள்ளையை ஊழியராக வைத்துக் கொண்டார். கன்னையா குழுவினருக்கான நாடகங்கள் சிவசண்முகம் பிள்ளையால் எழுதப்பட்டன. தன் 28 வயது முதல் 32 வயது வரை நான்காண்டுகாலம் தென் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து நாடகங்களை நடத்தினார். பம்மல் சம்பந்த முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், சி.பி.ராமசாமி ஐயர் போன்றவர்கள் சி.கன்னையாவை பாராட்டி எழுதினார்கள்.

சி.கன்னையா ஶ்ரீ லக்ஷ்மணாச்சார்யலு நடத்திய கீதை பேருரைகளில் ஆர்வம் கொண்டவர். அவருடைய நாடகங்களில் வைணவத்தை பிரச்சாரம் செய்தார்.செங்கோட்டை எஸ்.ஜி.அப்பாத்துரை ஐயர், எஸ்.ஜி. கிட்டப்பா, செல்லப்பையர், காசி ஐயர், சுப்பையர் ஆகிய நாடக நடிகர்களை தன் குழுவில் சேர்த்துக்கொண்டார். கிருஷ்ணலீலா, தசாவதாரம், ஶ்ரீ ஆண்டாள், கந்தபுராணம், நந்தனார் கதை ஆகிய நாடகங்கள் நடிக்கப்பட்டன. சி.கன்னையாவின் ஸ்ரீ கிருஷ்ண விநோத சபா நாடகக் குழுவில் 200 பேர் இருந்தனர். பத்து வண்டி லாரி அளவுள்ள காட்சி அமைப்புக்களுக்கான பொருட்கள் வைத்திருந்தார் எனப்படுகிறது. 1915-ல் கும்பகோணத்தில் காலை 10 மணிக்காட்சியாக நாடகம் நடத்தினார். காட்சிச் சிறப்பிற்காக தனிக்கவனம் செலுத்தினார். நாடக இருக்கைகளுக்கு முன்பதிவு முறையை ஏற்பாடு செய்தார்.

கன்னையாவின் தசாவதாரம் நாடகம் 1008 நாட்கள் நடத்தப்பட்டது. இவரது நாடகம் சென்னையில் நடக்கும்போது 650- கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலி வரை விளம்பரம் செய்யப்பட்டது. நாடகத்தில் அகன்ற மேடைக்காட்சிகளை அமைப்பதில் முன்னோடியாய் திகழ்ந்தார். இவரைப் பார்த்து, "மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி", "பால மீன ரஞ்சனி சங்கீத சபை", "ஸ்ரீபால ஷண்முகானந்த சபா" முதலிய நாடக சபைகளும் காட்சியமைப்பில் தங்களது கவனத்தைச் செலுத்தின.

சி.கன்னையா தன் நாடகக் காட்சிகளில், மேடையிலேயே குதிரை, யானை, தேர், காளை முதலானவற்றைக் கொண்டு வந்துவிடுவார். அரசவைக் காட்சிகளில் இரண்டு தூதர்கள் நிற்க, அவர்களுக்குப் பின்னால், நிறைய வெட்டுருக்கள் (கட்அவுட்) வைத்து ஐம்பது பேர் நிற்பது போலக் காட்டிவிடுவார். அரிச்சந்திரா நாடகத்தில் மயானக் காட்சியில், பிணம்போல் உருவம் செய்து அதற்கு இறுதிச் சடங்குகள் செய்வதைக் காட்டினார். இவரது குழுவில் நாற்பது அரங்கக் கலைஞர்கள் பணியாற்றினார்கள். லாகூரில் இருந்து புகழ்பெற்ற நாடகத்திரைச்சீலை ஓவியரான உசேன் பக்ஸ் என்பவரை வரவழைத்து தங்க வைத்து அரங்குகளை உருவாக்கினார்.

சி.கன்னையா நாடகம் வழியாக ரூ 20 லட்சம் வரை அக்காலத்தில் சொத்து சேர்த்தார் என்று அவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பை எழுதிய அவருடைய தம்பி மகன் சி.கிருஷ்ணையா பதிவுசெய்துள்ளார் (எனது சிறிய தந்தையார்) ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆலயம், திருக்கண்ணபுரம் ராமர் ஆலயம், திருப்பதி வெங்கடேசப்பெருமாள் ஆலயம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம் போன்ற பல ஆலயங்களுக்கு திருப்பணிகள் செய்தார். திருப்பதி பெருமாளை தரிசிக்க ஏழைகளை தனி ரயில் அமர்த்தி தன் செலவில் அழைத்துச் சென்றார். தசாவதாரம் நாடகம் முடிவடையும்போது திருமண விருந்து போல ஏராளமானவர்களுக்கு உணவிட்டார். சென்னை ராயல் தியேட்டரை நாற்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கி அதை பத்தாயிரம் ரூபாய் செலவில் சீரமைத்து நாடகங்கள் நடத்தினார்.

கன்னையாவின் நாடகச் சீர்திருத்தங்கள்

சி.கன்னையா தமிழகம் திரும்பியபோது இங்கே நடந்துவந்த நாடகங்கள் தெருக்கூத்தின் பாணியில் அமைந்திருந்ததை கண்டார். மேடையில் நீண்டநேரம் நிகழும் கேள்விபதில் விவாதங்கள், தொடர்பற்ற பாடல்கள் , பொருந்தாத மிகை ஒப்பனை ஆகியவை இருந்தன. அவர் அவற்றை மாற்றி பார்ஸி நாடகங்களின் பாணியில் ஒப்பனைகளை செய்தார். ஒயிலாக்க நடிப்பை முறைப்படுத்தினார். பாடல்களை முறையாக இசையமைத்து பயிற்றுவித்து பாடவைத்தார். சி.கன்னையாவின் குழுவில் இருந்த எஸ்.ஜி.செல்லப்பா இசையமைத்த ‘தசரத ராஜகுமாரா’ என்னும் பாடல் அக்காலத்தில் மிகமிகப் புகழ்பெற்றிருந்தது என பி.கணபதி சுப்ரமணியம் குறிப்பிடுகிறார் ( Cunniah -A Colossus of the Theatre)

கன்னையாவின் நாடகச் சீர்திருத்தங்கள் என இவை குறிப்பிடப்படுகின்றன

 • நீளம், அகலம், உயரம் என்னும் முப்பரிமாணம் கொண்ட காட்சி அமைப்புகளுடன் நாடக மேடை அமைத்தது.
 • நிஜ குதிரை, தேர், யானை போன்றவற்றை மேடைக்கே கொண்டு வந்தது.
 • ஒளி அமைப்பில் எண்ணெய் விளக்குடன் கேஸ் விளக்குகளையும் பயன்படுத்தியது.
 • விரிவாக விளம்பரங்கள் செய்தல்
 • ஒலிபெருக்கி இல்லாத காலத்தில் முன் மேடையில் வரிசையாகப் பானைகளைக் கட்டி எதிரொலி கேட்கும் வண்ணம் செய்யும் உத்தி
 • பாத்திரங்களுக்கு ஏற்றவாறு உடைகளை அமைத்தார்.

மறைவு

சி. கன்னையா ஆகஸ்ட் 1, 1932-ல் காலமானார்.

அரங்கேற்றிய நாடகங்கள்

 • சம்பூரண ராமாயணம்
 • அரிச்சந்திரா
 • தசாவதாரம்
 • கிருஷ்ணலீலா
 • ஆண்டாள் திருக்கல்யாணம்
 • துருவன்
 • சக்குபாய்
 • பக்த குசலோ
 • சாகுந்தலா
 • பகவத்கீதை

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:47 IST