டி.கே. சங்கரன்
- சங்கரர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சங்கரர் (பெயர் பட்டியல்)
டி.கே. சங்கரன் (1904 - மார்ச் 31, 1948) தமிழ் நாடக நடிகர். டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவர். ஸ்ரீ பால ஷண்முகானந்த சபையின் நிறுவனர்களில் ஒருவர். நாடகங்கள் அரங்காற்றுகை செய்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
டி.கே. சங்கரன் டி.எஸ்.கண்ணுசாமிப் பிள்ளை, சீதையம்மாள் இணையருக்கு மூத்த மகனாக 1904-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் டி.கே.முத்துசாமி, டி.கே.ஷண்முகம், டி.கே.பகவதி
நாடக வாழ்க்கை
1918-ல் சங்கரதாஸ் சுவாமிகள் ஏற்படுத்திய 'மதுரை மீனலோசனி வித்துவ பாலசபை' என்ற நாடகக் குழுவில் டி.கே.எஸ் சகோதரர்கள் பயிற்சி பெற்றனர். மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பல பகுதிகளுக்கும் சென்று நாடகங்களில் நடித்தனர். ஆகஸ்ட் 3, 1922-ல் தந்தையால் அந்த நாடகக் குழுவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர் நடத்திய 'பால மனோகர சபை' என்னும் நாடகக் குழுவில் ஆகஸ்ட் 4, 1922-ல் சகோதரர்களுடன் சேர்க்கப்பட்டார். சங்கரதாஸ் சுவாமிகள் மன வேதனை அடைந்ததால் அக்டோபர் 16, 1922-ல் பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்த தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் மீண்டும் இணைக்கப்பட்டனர். டி.கே. சங்கரன் 1924-ல் நடிப்பைக் கைவிட்டு கம்பெனியில் கணக்கு வேலைகளைப் பார்த்தார். சொந்த கம்பெனி தொடங்கிய பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையின் முதலாளிகளில் ஒருவரான சுப்பிரமணியபிள்ளையிடம் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக பிப்ரவரி 15, 1925-ல் அந்நாடகக்குழுவிலிருந்து டி.கே.எஸ் சகோதரர்கள் அவர்தம் பாதுகாவலர்களால் விலக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.
டி.கே. சங்கரனின் சாரீரம் கம்பீரமானதாக் இருக்கும். வசனங்களைத் தெளிவாகப் பேசுவதில் தனித்திறமை கொண்டவர். சுலோச்சனா சதி நாடகத்தில் இந்திரஜித்தாக நடித்தார். சீமந்தினியில் அவலோகன், அபிமன்யு சுந்தரியில் துரியோதனன் ஆகிய வேடங்களில் நடித்தார்.
டி.கே.எஸ் சகோதர்கள் இணைந்து மார்ச் 31, 1925-ல் 'ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை' நாடகக் குழு தொடங்கினர். 1950 வரை தமிழ்நாட்டிலும், உலக நாடுகள் பலவற்றிலும் தொழில் முறை நாடகக்குழுவாக ஏராளமான நாடகங்களை நடத்தினர்.
அரங்கேற்றிய நாடகங்கள்
- குமாஸ்தாவின் பெண்
- வித்யா சாகரர்
- சிவலீலா
- மனிதன்
- இன்ஸ்பெக்டர்
- மனைவி
- எது வாழ்வு
- கள்வனின் காதலி
- தமிழ்ச்செல்வம்
- ராஜ ராஜ சோழன்
- வாழ்வில் இன்பம்
- அப்பாவின் ஆசை
- ஔவையார் நாடகம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Jul-2024, 20:21:19 IST
