under review

ஜெ. பிரான்சிஸ் கிருபா

From Tamil Wiki
கவிஞர் ஜெ. பிரான்சிஸ் கிருபா

ஜெ. பிரான்சிஸ் கிருபா (1974-2021). நவீனத் தமிழ் கவிஞர். இரண்டாயிரத்திற்குப் பின் எழுந்தவந்த இளம் கவிஞர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் என விமர்சகர்களால் மதிப்பிடப்படுபவர். கன்னி என்ற நாவலின் ஆசிரியர். அதன் வழியாக பெரிய வாசகப்பரப்பை சென்றடைந்தவர். திரைப்படங்களில் பாடல் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

பிறப்பு, கல்வி

இயர்பெயர் ஜெ.பிரான்சிஸ். மும்பையில் இளம் வயதில் இறந்து போன தன் நெருங்கிய நண்பனான கிருபாகரன் என்பவரின் நினைவாக, ஜெ. பிரான்சிஸ் கிருபா என்ற பெயரில் எழுதினார்.

பிறந்த ஆண்டு 1974. தன் தாய் தந்தைக்கு ஏழாவது பிள்ளை. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தினிப் பாறை சொந்த ஊர். எட்டாம் வகுப்புவரை மட்டுமே பள்ளிப்படிப்பு.

தனிவாழ்க்கை

பிரான்ஸிஸ் கிருபா பதினைந்து ஆண்டுகாலம் மும்பையில் வசித்தார். அங்கு டீக்கடைகளில், லேத் பட்டறையில் வேலைகளை செய்துள்ளார். அதன்பின் அங்கு லேத்பட்டறை ஒன்றை சொந்தமாக வைத்திருந்ததாகவும் அது பாபர் மசூதி இடிப்பு பிரச்சனை காரணமாக மும்பையில் நடந்த கலவரத்தில் தரைமட்டமானதாகவும் சொல்லியிருகிறார். அதன்பின் சென்னைக்கு வந்து திரைத்துரையில் பணியாற்றினார்.

இளமையிலேயே உளச்சிதைவு நோய்க்கு ஆளான பிரான்ஸிஸ் சிறிதுகாலம் சிகிச்சையில் இருந்தார். மது அடிமையாக இருந்தார். நண்பர்களின் ஆதரவில் வாழ்ந்தவர் ஒருகட்டத்தில் காணமலாகி வீதிகளிலும் வாழக்கூடியவராக இருந்திருக்கிறார். திருமணம் செய்துகொள்ளவில்லை.

திரைவாழ்க்கை

பிரான்ஸிஸ் கிருபா 'காமராஜ் தி கிங்மேக்கர்’ என்ற தொலைகாட்சி தொடரில் திரைக்கதை வசனம் எழுதினார், எண்ணிக்கையில் இருபது திரைப்பட பாடல்கள்வரை எழுதியுள்ளார். "யாதும் ஊரே யாதும் கேளிர்" என்ற பெயரில் கவிஞர் தேவதேவன் குறித்து குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என்று ஐந்து பகுதிகளாக ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

மறைவு

செப்டம்பர் 16, 2021 அன்று சென்னையில் மறைந்தார். சொந்த ஊரான பத்தினிப்பாறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

பிரான்ஸிஸ் தன் இலக்கியவாழ்க்கை பற்றி சொன்னவற்றில் இருந்து தெரிவன இவை. தன்னை படிக்க வைத்துப்பார்க்க ஆசைப்பட்ட அப்பாவை ஏமாற்றிவிட்டோமோ என்ற எண்ணம் அவரை வாசிக்கச்செய்தது. பேனாவோடு சிந்திக்கும் கவிஞர் கண்ணதாசனின் புகைப்படம் ஒன்று எழுத்தாளராக ஆக வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. மும்பையில் கிடைத்த தமிழ் இதழ்களை தொடர்ந்து வாசித்தார்.தொடர்ந்து 'மராத்திய முரசு’, 'ஓல்ட் இண்டியா’, 'மும்பை தமிழ் டைம்ஸ்’ மும்பை தமிழ் இதழ்களிலேயே அவரது கவிதைகள் பிரசுரமாயினர்.

கவிஞர் கலாப்பிரியாவின் 'உலகமெல்லாம் சூரியன்’ என்ற கவிதை தொகுப்பின் வழியாக தமிழ் நவீன கவிதையின் உலகம் அறிமுகமாகியது. முதல் ஆதர்ச கவிஞரான கலாப்பிரியாவை நேரில் தேடிபோய் சந்தித்தார். சென்னை வந்தபின் கவிஞர் யூமா வாசகி வழியாக தமிழ் நவீன இலக்கிய உலகம் அவருக்கு அறிமுகமானது. 2003-ல் முதல் கவிதை தொகுப்பு 'மெசியாவின் காயங்கள்’ தமிழினி பதிப்பகத்தின் வாயிலாக வெளியானது. 'மல்லிகை கிழமைகள்’ 52 வாரம் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு.

உளச்சிதைவும் காதலும் அலைக்கழித்த தன் இளமையனுபவங்களை ஒட்டி அவர் எழுதிய 'கன்னி’ சென்னையில் ராயபேட்டையில் இருந்த தமிழினி பதிப்பக அலுவலகத்திற்கு தினம் தினம் சென்று எழுதபட்ட நாவல். பிரான்ஸிஸ் கிருபா இறந்த போது, "ஏறக்குறைய இறைவன்" என்ற நாவல் ஒன்று எழுதும் முடிவுறாத திட்டம் ஒன்று இருந்தது. அது அவரின் மும்பை வாழ்க்கையை பின்னணியாகக் கொண்ட நாவல். அதை ரயில் சினேகிதன் ஒருவருக்காக சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். கூடவே "நட்சத்திர பிச்சைக்காரன்" என்ற பெயரில் கவிதை தொகுப்பு ஒன்று வருவதற்கு தயாராக கவிதைகள் இருப்பதாகவும் பேட்டிகளில் சொல்லியிருந்தார்.

இலக்கிய இடம்

பிரான்ஸிஸ் கிருபா தீவிரமான உணர்வுநிலைகளை படிமங்கள் வழியாக வெளிப்படுத்தியவர். அவருடைய அழகியல் கற்பனாவாதப் பண்புள்ளது என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். தன்னுடைய கவிதைகளை பற்றி பிரான்சிஸ் கிருபா சொல்லும் போது 'என்னுடைய கவிதைகளில் மொழியின் சிலிர்ப்பு இருப்பதாக நம்புகிறேன்’ என்கிறார். 'இளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ. பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது. அசாதாரணமான, கரைபுரளும் வெள்ளம் போல் கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் கொண்டுள்ளது. அவரது நிதானமான வரிகளாய் கவிதை வெளிப்படும் இடங்களில் காணப்படும் வெளிச்சமானது யோசிக்கத் தூண்டுவதாகும்’ என்று கவிஞர் தேவதேவன் குறிப்பிடுகிறார்

'ஜெ. பிரான்ஸிஸ் கிருபாவின் கவிதைகளில் இரண்டு கூறுகள் உண்டு. ஒன்று அவருடைய பித்தின்கசப்பு கனிந்து எழும் கருணை வெளிப்படும் வரிகள். அத்தகைய அமரத்துவம் வாய்ந்த சிலவரிகளாலேயே ஃப்ரான்ஸிஸ் கவிஞன் என கருதப்படுகிறார். இன்னொன்று அப்பித்து அமர்விடமோ பிடிமானமோ தேடி அலையும் தவிப்புக்கள் வெளிப்படும் வரிகள்’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் சொல்கிறார்[1]. 'கிருபா கவிதைகளின் பலமும் பலவீனமும் ஒன்றேதான். அது அவர் பயன்படுத்தும் உருவகத் தொடர்களால் அமைந்த மொழி. அவருடைய கவிதைகளை உத்வேகமும் உணர்ச்சிச் செறிவும் கொண்ட ஒன்றாக மாற்றும் அதுவே மிஞ்சிப் போகும் சில சமயங்களில் சரளமான வாசிப்பிற்கான தடையாக மாறிவிடுகிறது" என்கிறார் க.மோகனரங்கன்[2].

விருதுகள்

 • 2007-ல் கன்னி நாவலுக்கான ஆனந்த விகடனின் சிறந்த நாவலுக்கான விருது
 • 2008-ல் நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது
 • 2017-ல் சம்மனசுக்காடு கவிதை தொகுப்புக்காக சுஜாதா விருது

படைப்புகள்

நாவல்
 • கன்னி
கவிதை தொகுப்பு
 • மெசியாவின் காயங்கள்
 • நிழலன்றி ஏதுமற்றவன்
 • வலியோடு முறியும் மின்னல்கள்
 • மல்லிகைக் கிழமைகள்
 • ஏழுவால் நட்சத்திரம்
 • சம்மனசுக்காடு
 • பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page