under review

ஜார்ஜ் ஸ்டோஷ்

From Tamil Wiki
ஜார்ஜ் ஸ்டோஷ்

ஜார்ஜ் ஸ்டோஷ் (ஜோஹன் எர்ன்ஸ்ட் ஜார்ஜ் ஸ்டோஷ்; ஸ்தொஷ் ஐயர்) (செப்டம்பர் 2, 1851-டிசம்பர் 24, 1920) ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மத போதகர். லுத்தரன் திருச்சபையைச் சேர்ந்தவர். மதப் பரப்புரைக்காக தமிழ்நாடு வந்தார். ’கிறிஸ்து மான்மியம்’ என்ற நூலை எழுதியவராக அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

ஸ்தொஷ் ஐயர் என்று அழைக்கப்பட்ட ஜார்ஜ் ஸ்டோஷ், செப்டம்பர் 2, 1851-ல், ஜெர்மனில் உள்ள பாட்சன் (Bautzen) என்ற ஊரில், ஜார்ஜ் ஆண்ட்ரியாஸ் - மரியா லூயிஸ் ஸ்டோஷ் பீ ஹெய்ன்கே இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த இவர், 1871 முதல் 1874 வரை லீப்ஜிக் மற்றும் எர்லாங்கனில் இறையியல் கல்வி படித்தார். படிப்பை முடித்த பின் ஜெர்மனின் தென்மேற்கில் உள்ள பேடனில் பணியாற்றி குருப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஜார்ஜ் ஸ்டோஷ், 1877-ல், ஹெலன் ரிக்டரை மணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரிச்சர்ட் ஆண்ட்ரியாஸ் ஜோஹன்னஸ் ஸ்டோஷ், ஓட்டோ ஜார்ஜ் ஹென்ரிச் ஸ்டோஷ், பாஸ்டர் கார்ல் மார்ட்டின் ஸ்டோஷ் என மூன்று மகன்கள்.

மதப்பணிகள்

ஜார்ஜ் ஸ்டோஷ், 1877 முதல் 1880 வரை சாக்சன் சுவிட்சர்லாந்தில் உள்ள ரோசென்டலில் போதகராகப் பணிபுரிந்தார். பின் ஹெல்ம்ஸ்டெட்டுக்கு அருகிலுள்ள மரியன்பெர்க்கில், லூத்தரன் சிஸ்டர்சியன் மடாலயத்தைச் சேர்ந்த தேவாலயத்தில் எட்டு ஆண்டுகள் போதகராகப் பணியாற்றினார். 1888-ல், இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். கடலூர் மற்றும் பண்ருட்டிப் பகுதிகளுக்கான மிஷனரியாகப் பொறுப்பேற்றார். தரங்கம்பாடியிலிருந்த அச்சகத்தின் மேலாளராகப் பணிபுரிந்தார். 1891-ல், ஜார்ஜ் ஸ்டோஷ், சென்னைக்கு மாற்றப்பட்டார். இந்தியாவின் வெயில் ஒத்துக் கொள்ளாததாலும், உடல் நலக்குறைவாலும் இந்திய மிஷனரி சேவையை விட்டுவிட்டு ஜெர்மனிக்குத் திரும்பினார்., பெர்லினில் உள்ள ராணி எலிசபெத் எவாஞ்சலிகல் மருத்துவமனையில் போதகராகப் பணிபுரிந்தார். 1902 முதல் பெர்லின் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ மிஷன் பற்றிப் போதிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1906 முதல், பொமரேனியாவில் உள்ள நியூவெடெல்லில் போதகராகப் பணியாற்றினார்.

கிறிஸ்தவ இறையியலாளராக, ஜார்ஜ் ஸ்டோஷ், வட ஜெர்மன் நியோ-லுத்தரன் இயக்கத்திற்காகவும் கிளாஸ் ஹார்ம்ஸ், லூயிஸ் ஹார்ம்ஸ், லுட்விக் அடால்ஃப் பெட்ரி மற்றும் தியோடர் க்லீஃபோத் போன்ற முன்னோடி இறையியலாளர்களுக்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். பலிபீடச் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

இலக்கியப் பணிகள்

ஜார்ஜ் ஸ்டோஷ், தரங்கம்பாடி லுத்தரன் மிஷன் அச்சகத்தின் மூலம் 1891-ல், ‘கிறிஸ்து மான்மியம்’ என்னும் கிறித்தவக் காப்பியத்தை எழுதி வெளியிட்டார். ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் பல நூல்களை, கட்டுரைகளை எழுதினார். 20-க்கும் மேற்பட்ட நூல்களை ஜார்ஜ் ஸ்டோஷ் எழுதினார்.

சர்ச்சை

‘கிறிஸ்து மான்மியம்’ நூலை ஜார்ஜ் ஸ்டோஷ் எழுதவில்லை; இயேசு கிறிஸ்துவைப் பற்றி தமிழ்ப் புலவர் ஒருவரிடம் சொல்லி எழுத வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், நூலில் கிறிஸ்தவர் அல்லாத அந்தப் புலவரின் பெயருக்குப் பதிலாக நூல் எழுதக் காரணமானவரும், பதிப்பாளருமான ஜார்ஜ் ஸ்டோஷ் பெயர் அச்சிடப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து கிறித்தவ இலக்கிய ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

மறைவு

ஜார்ஜ் ஸ்டோஷ், டிசம்பர் 24, 1920 அன்று, தனது 69-ம் வயதில் ஜெர்மனியில் காலமானார்.

மதிப்பீடு

ஜார்ஜ் ஸ்டோஷ், தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் பண்ருட்டிப் பகுதிகளில் போதகராகப் பணியாற்றினார். தமிழில் கிறிஸ்தவக் காப்பியம் எழுதிய இந்தியர் மற்றும் தமிழர் அல்லாத ஒருவராக அறியப்படுகிறார். ஆனால், அவர் இந்தியாவில் மதப்பணி செய்தது நான்கே ஆண்டுகள் தான் என்பதால், அந்தக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் அவர் தமிழை முழுமையாகக் கற்று காப்பியம் எழுதுமளவிற்குத் தேர்ச்சி பெற்றிருந்தாரா என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை.

நூல்கள்

  • Kiṟistu māṉmiyam.
  • The Holy Sacraments of the Church of Christ. Dedicated to souls hungry for salvation.
  • Letters about the revelation of St. John.
  • St. Paul the Apostle. An apologetic study.
  • The eyewitnesses of the life of Jesus. A contribution to the gospel question.
  • In distant India - impressions and experiences in the service of the Lutheran mission among the Tamuls.
  • The soul and its history. Meditations for the inner life.
  • Son of God and Mary. Spiritual pictures based on the Gospel of St. John.
  • Paganism as a religious problem in missiological outlines.
  • For sacred goods. Aphorisms for the Historical Justification of the Old Testament.
  • The prophecy of Israel in religious-historical appreciation, 3 parts (in one volume).
  • The nature of inspiration examined on the basis of the Old Testament.
  • The Inspiration of the New Testament Gospels.
  • Aphorisms from the world of thought for consideration in serious times.

உசாத்துணை


✅Finalised Page