under review

ஜான் சுந்தர்

From Tamil Wiki
ஜான் சுந்தர் (நன்றி: அய்யப்ப மாதவன்)

ஜான் சுந்தர் (பிறப்பு: டிசம்பர் 3, 1973)எழுத்தாளர், மேடைப்பாடகர், இசைக் கலைஞர். கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு,கல்வி

இயற்பெயர் வே. ஜான் டிக்ரூஸ். ஜான் சுந்தர் கோயம்புத்தூரில் பே.வேலுச்சாமி, மரியம் அம்மாள் இணையருக்கு டிசம்பர் 3,1973-ல் பிறந்தார். பள்ளிப் படிப்பு பத்தாம் வகுப்பு வரை பயின்றார். லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியின் ROCK & POP VOCALS பிரிவில் கிரேட் 8-ல் மெரிட் நிலையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

தனி வாழ்க்கை

ஜான் சுந்தர் 2000-த்தில் அவிலா கிறிஸ்டினாவை  மணந்தார். மகன் ரோஷன், மகள் ரோஜா.

ஜான் சுந்தர்

இசை

'டமருகம் கற்றல் மையம்' வாயிலாக குழந்தைகளுக்கான நுண்கலை பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்கிறார். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், எம் எஸ் விஸ்வநாதன், கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவக்குமார் ஆகியோருக்காக தனிப்பாடல்கள் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, ஜிக்கி, கங்கை அமரன், சீர்காழி சிவசிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைமுறைப் பெருங்கலைஞர்களோடும் மஹதி, ஹரீஷ் ராகவேந்தர், அனுராதா ஸ்ரீராம், தேவன், முகேஷ் உள்ளிட்ட கலைஞர்களோடும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

ஜான் சுந்தரின் முதல் கவிதைத்தொகுப்பு ‘சொந்த ரயில்காரி’ 2013-ல் வெளியானது. இவரது கவிதைகளும் கட்டுரைகளும், கதைகளும் ஆனந்தவிகடன், கல்கி, இனிய வரம்  உள்ளிட்ட பத்திரிக்கைகளிலும் காலச்சுவடு, உயிர்மை, கதைசொல்லி, கணையாழி, ரசனை, மணல்வீடு, 361டிகிரி, கொம்பு, மலைகள், கனலி உள்ளிட்ட இலக்கிய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் கோவை PSG கலை அறிவியல் கல்லூரியின் பாடத்திட்டத்திலும், தற்போதைய மகாராஷ்டிரா மாநில அரசின் தமிழ்ப் பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளன.

நகலிசைக் கலைஞன் என்னும் தலைப்பில் ஜான் சுந்தர் தன் மேடைப்பாடல் அனுபவங்களை எழுதிய கட்டுரைத்தொகுப்பு புகழ்பெற்றது.

இலக்கிய இடம்

”நகலிசைக்கலைஞன் கட்டுரை நூல் மெல்லிசைக் கச்சேரிக் கலைஞர்களின் வலிமிகுந்த அனுபவத் தொகுப்பு இந்தப் புத்தகம். அதைப் பற்றிய ரசிக மனப்பான்மையோடு அணுகிய எழுத்து என்கிற வகையில் இந்தக் கட்டுரைகள் தமிழுக்குப் புது வாழ்க்கையைக் காட்டுகின்றன. நகலிசைக் கலைஞர்களைப் பற்றிய எழுத்து என்பதால் ஜான் சுந்தரின் எழுத்தில் ஓர் இசைமை கூடிவந்திருக்கிறது. அதில் சம்பவங்களின் சுவாரஸ்யமும் வார்த்தைகளின் துல்லியத்தன்மையும் ஒரு சிறுகதையை வாசிக்கிற அனுபவத்தைத் தருகின்றன. அதற்கு ஒரு உதாரணமாக 'பூக்கமழ் தேறல்’ தலைப்பில் வரும் பாணன் வீழ்ந்த காதையைச் சொல்லலாம்” என பத்திரிக்கையாளர் வெ.நீலகண்டன் குறிப்பிடுகிறார்.

”ஜான்சுந்தர் அடிப்படையில் ஓர் இசைக்கலைஞர். இசை துய்க்க மொழி அவசியமில்லையென்று சொல்லப்பட்டாலும், பாட்டில் புழங்கும் ஒருவர் சொற்களின் ரம்யத்தில் மயங்குவது இயல்பானதே. ஜான்சுந்தர் இந்த மயக்கத்தோடே எழுதவும் வந்திருக்கிறார்.சொந்த ரயில்காரி தொகுப்பின் அநேக கவிதைகள் குழந்தைகளின் உலகில் நிகழ்பவை. ஜான்சுந்தர் தன் ஒவ்வொரு சொல்லையும் குழந்தைகளாக்கி அதன் பரிசுத்த அறியாமைகளோடு விளையாட விட்டுவிட விரும்புகிறார்” என கவிஞர் இசை குறிப்பிடுகின்றார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • சொந்த ரயில்காரி (2013 அகநாழிகை பதிப்பகம்)
  • பிஸ்கட்நிலாக்கள் (2018, தன்னறம் பதிப்பகம்)
  • ரவிக்கைச்சுகந்தம் (2019, காலச்சுவடு பதிப்பகம்)
சிறுகதைத் தொகுப்பு
  • பறப்பன திரிவன சிரிப்பன (2021, காலச்சுவடு பதிப்பகம்)
கட்டுரை
  • நகலிசைக்கலைஞன் (2016 காலச்சுவடு பதிப்பகம்)

விருதுகள்

  • சொந்தரயில்காரி கவிதை நூலுக்கு மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளை'ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது – 2014’ வழங்கி சிறப்பித்தது.

இணைப்புகள்