under review

ச. பூபால பிள்ளை

From Tamil Wiki

ச. பூபால பிள்ளை (1856-1921) ஈழத்து தமிழ்ப்புலவர், எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

ச. பூபால பிள்ளை இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு புளியந்தீவில் 1856-ல் பிறந்தார். பெற்றோர் சதாசிவப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை இணையர். ஆரம்பக்கல்வியை புளியந்தீவு மெதடிஸ்ட் ஆங்கிலப்பள்ளியில் பயின்றார். ஆங்கிலம், தமிழ் மொழிகளில் தேர்ச்சி பெற்றார். தமிழ் இலக்கண இலக்கியங்களையும், புராண இதிகாசங்களையும், சித்தாந்த சாஸ்திரங்களையும் முறையாக ச.வைத்தியலிங்கம்பிள்ளையிடம் பயின்றார்.

பணி

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் இவர் அரசாங்க சேவையில் எழுதுவினைஞராக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். அரசாங்கக் கட்டட வேலைத் திணைக்களத்தில் சிறப்பியல் உயர்பதவி பெற்றார். 1915-ல் அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

ச. பூபால பிள்ளை தமிழ்மொழி, சைவ சமயம் சார்ந்த நூல்களை எழுதினார். தன் இருபத்தியேழாவது வயதில் ”பெரியதுறைத் திருமுருகன் பதிகம்” என்ற முதல் செய்யுள் நூலை வெளியிட்டார். ச. பூபால பிள்ளை வித்துவான் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். ச. பூபால பிள்ளை எழுதிய சீமந்தனி புராணம் சோமவார விரதத்தின் மேன்மையைக் கூறுவது. சூதமுனி கூறிய கதையை அடிப்படையாகக் கொண்டு விரித்து எழுதினார். இதில் 780 செய்யுள்கள் உள்ளன. இவர் எழுதிய பத்து சமய நூல்களைத் தொகுத்து திருமயிலை செ.வெ. ஜம்புலிங்கம் பிள்ளை 1923-ல் வெளியிட்டார்.

ச. பூபால பிள்ளையின் மொழி ஆய்வுக் கட்டுரைகள் பல மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ”செந்தமிழ்” இதழிலும் ஈழத்து இதழிலும் பிரசுரமானது.

மறைவு

ச. பூபால பிள்ளை 1921-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • திருமுருகர் பதிகம் (1882)
  • சீமந்தனி புராணம் (1884)
  • விநாயகர் மான்மியம் (1905)
  • புளியநகர் ஆனைப்பந்தி விக்னேஸ்வரர் பதிகம் (1905)
  • சிவதோத்திரம்
  • முப்பொருளாராய்ச்சிக் கட்டுரை (1918)
  • அரசடி கணேசர் அகவல் (1920)
  • கணேசர் கலிவெண்பா (1921)
  • தமிழ்வரலாறு

உசாத்துணை


✅Finalised Page