சோ.சத்தியசீலன்
- சத்தியசீலன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சத்தியசீலன் (பெயர் பட்டியல்)
சோ. சத்தியசீலன் (ஏப்ரல் 14, 1933 - ஜூலை 9, 2021) தமிழ்ச் சொற்பொழிவாளர். மரபிலக்கியம், சமயம் சார்ந்து மேடையுரைகள் ஆற்றியவர். பட்டிமன்றப் பேச்சாளர்.
பிறப்பு, கல்வி
சத்தியசீலன் ஏப்ரல் 14, 1933-ல் பெரம்பலூர் நா. சோமசுந்தரம், மீனாம்பாள் இணையருக்குப் பிறந்தார். பொருளியலில் இளங்கலைப் பட்டமும் பி.டி. பட்டமும் ஆங்கிலத்திலும், தமிழிலும் சமூகவியலிலும் முதுகலைப் பட்டமும் பெற்றார். "வள்ளலாரின் சமுதாய ஆன்மீகக் கொள்கைகள்" எனும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். வள்ளலார் குறித்த இவரது உரை 6 ஒலி நாடாக்களாக வெளிவந்துள்ளது.
தனிவாழ்க்கை
சோ.சத்தியசீலன் தனபாக்கியம் அம்மாளை மணந்தார். மகள் சித்ரா.
சத்தியசீலன் திருச்சி ஈ. ஆர். உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் தமிழாசிரியராகவும் திருச்சி தேசியக் கல்லூரியில் எட்டு ஆண்டுகளும், உருமு தனலட்சுமி கல்லூரியில் எட்டு ஆண்டுகளும் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். உருமு தனலட்சுமி கல்லூரியில் பத்து ஆண்டுகள் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும், பாடத் திட்டக் குழு உறுப்பினராகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் திட்டக்குழு உறுப்பினராகவும் பணி ஆற்றியுள்ளார். திருச்சி மாவட்ட நலப்பணிகள் குழு, கி.ஆ.பெ. விசுவாதம் பள்ளி, உருமு தனலட்சுமி பள்ளி உள்ளிட்டவற்றில் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இலக்கியப்பணி
மேடைப்பேச்சாளராக சத்தியசீலன் இராமலிங்க வள்ளலார் பற்றி பேசுபவர்களில் முக்கியமானவராக இருந்தார்.
விருதுகள்
- கலைமாமணி (2011)
- சொல்லின் செல்வர் (2015)
நூல்கள்
சத்தியசீலன் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
- இலக்கியம் பேசும் இலக்கியம் (தன் வரலாறு)
- அழைக்கிறது அமெரிக்கா
- விடுதலைக்கு ஒரு விளக்கம்
- பாதை பழசு பயணம் புதுசு
- ஒலிப்பதிவுகள்
- வள்ளலார் வழியில்
- அண்ணலும் அடிகளும்,
- சிவபுராணம்
- ஆறுமுக வள்ளலும் அருட்பிரகாச வள்ளலும்
- வரலாற்று நாயகர் வள்ளலார்
உசாத்துணை
- தினமணி செய்தி சோ.சத்தியசீலன் மறைவு
- அஞ்சலி - பேராசிரியர் சோ. சத்தியசீலன் | Thendral Tamil Magazine (tamilonline.com)
- மூத்த தமிழறிஞர் சோ.சத்தியசீலன் மறைவு: மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்துக்கு அருகே அடக்கம் | Tamil scholar Sathyaseelan passed away - hindutamil.in
- So Sathyaseelan, Saiva samaya Peruneri Karutharangam, Vaikasi Visakam, 2013, part 01 - YouTube
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
26-Apr-2023, 18:35:22 IST