under review

சோதிப்பிரகாசம்

From Tamil Wiki
சோதிப்பிரகாசம்

சோதிப்பிரகாசம் ( 1951-அக்டோபர் 3, 2007) மார்க்ஸிய அறிஞர், ஆய்வாளர். மார்க்ஸியத்தின் அடிப்படைத் தத்துவங்கள் சார்ந்து ஆய்வுசெய்தவர். பின்னாளில் தமிழ்த்தேசிய சிந்தனைகளின் ஆதரவாளராக ஆனார். மார்க்சியம் தேசிய இனங்களின் விடுதலை வழியாகவே நிகழமுடியும் என வாதிட்டார்

பிறப்பு, கல்வி

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே 1951-ல் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த சோதிப்பிரகாசத்தின் தந்தை வள்ளலார் ஆதரவாளர். ஆகவே மகனுக்கு சோதிப்பிரகாசம் என்று பெயரிட்டார். சோதிப்பிரகாசம் வள்ளியூரில் பள்ளி இறுதிவரை பயின்றார்.

சென்னை வாழ்க்கையில் தனிக்கல்லூரிகளில் பயின்று வரலாற்றில் முதுகலைப் பட்டமும், வழக்கறிஞர் பட்டமும் பெற்றார் சோதிப்பிரகாசம்.

தனிவாழ்க்கை

சென்னைக்கு தன் உறவினரின் மளிகைக்கடையில் வேலைபார்க்கும்பொருட்டு சென்ற சோதிப்பிரகாசம் 1969-ல் ஒரு மில் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது அறிமுகமான சிவபூஷணம் என்ற தொழிலாளரிடமிருந்து மார்க்ஸியம் அறிமுகமாகியது. சென்னையில் மார்க்ஸிய களப்பணியாளராகவும், தொழிற்சங்கப் பணியாளரகாவும் பணியாற்றினார். வழக்கறிஞராக சென்னையில் பணியாற்றினார்.

சோதிப்பிரகாசம் மிகவும் காலந்தாழ்த்தி மணம் புரிந்துகொண்டார். அவருக்கு வாரிசுகள் இல்லை.

மார்க்ஸியக் களச்செயல்பாடுகள்

சோதிப்பிரகாசம் 1973 முதல் தோழர் எஸ்கெ என்று அழைக்கப்படும் எஸ்.கிருஷ்ணமூர்த்தியால் வலுவாக ஈர்க்கப்பட்டு தொழிற்சங்க பணியில் ஈடுபட்டார். எஸ்கெ சென்னை நகர மேயராக இருந்தபோது அவருடன் நெருங்கிப்பழக வாய்ப்பு கிடைத்தது. (வரலாற்றின் முரணியக்கம் நூலில் கோவை ஈஸ்வரன் எழுதிய எஸ்கெ பற்றிய நினைவுக்கட்டுரை). பின்னர் ஆர்.குசேலர், ஏ.எம்.கோதண்டராமன் ஆகிய தொழிற்சங்கத் தலைவர்களுடன் அணுக்கமான உறவு கொண்டிருந்தார். மக்கள் உரிமை மன்றம் என்றபேரில் (இன்றைய சத்யா ஸ்டுடியோ அருகில்) ஓர் அமைப்பை நிறுவி அதை முற்போக்கு சிந்தனைகளை வளர்க்கப் பயன்படுத்தினார். அப்போது பி.ஆர் பரமேஸ்வரன், என். ராம் போன்ற பலர் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். இக்காலகட்டத்தைப் பற்றி சோதிப்பிரகாசத்தின் நண்பர் சொ.கண்ணன் எழுதியிருக்கிறார்

தமிழகத்தில் மார்க்ஸிய லெனினிய இயக்கங்கள் உருவானபோது சோதிப்பிரகாசம் தன் நண்பர் சோ.கண்ணனுடன் அவற்றில் ஈடுபட்டு போராட்டக்களத்தில் இருந்தார். ஓராண்டுக்கும் மேல் தலைமறைவாக இருந்தவர் வேறுபெயரில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார் எனப்படுகிறது. தலைமறைவுக் காலகட்டத்தில் ஞானி அவருக்கு சிறிதுநாள் திருப்பூரில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார். இக்காலகட்டம் பற்றி அவரோ பிறரோ பதிவுசெய்யவில்லை.

இதழியல்

1978-ல் பிரகடனம் என்ற சிறு பத்திரிகையை சோதிப்பிரகாசம் வெளியிட்டார். நான்கு இதழ்களுடன் அது நின்றுவிட்டது

எழுத்துப்பணிகள்

சோதிப்பிரகாசம் 1978-ல் ஹெகல் எழுதிய ஒரு கட்டுரையை மொழியாக்கம் செய்தார், ஹெகல் பற்றிய ஒரு சிறு நூலை எழுதி பிரகடனம் வெளியீடாக கொண்டுவந்தார். கார்ல் மார்க்ஸின் டாஸ் காபிடலின் முதல் அத்தியாயத்தை நண்பர் திருநாவுக்கரசுடன் இணைந்து மொழியாக்கம் செய்தார். மார்க்ஸியக் கொள்கைவிளக்கமாக வரலாற்றின் முரணியக்கம், வாழ்க்கையின் கேள்விகள் ஆகிய நூல்களை எழுதினார்

சோதிப்பிரகாசம் தன் வாழ்நாளின் பிற்பகுதியில் தமிழ்த் தேசிய இன விடுதலை சார்ந்து ஆழமான ஆர்வம் கொண்டிருந்தார். மார்க்சியர்களில் தமிழ் மரபிலக்கியத்தை ஆழமாகக் கற்றவர்களில் ஒருவர். தேவநேயப் பாவாணர் மீது ஆழ்ந்த பற்றுகொண்டிருந்த சோதிப்பிரகாசம் தமிழின் தனித்தன்மை, தொன்மை ஆகியவற்றை நிறுவும் ஆழமான ஆய்வுநூல்களை எழுதி வெளியிட்டார். அவரது ‘திராவிடர் வரலாறு’, ‘ஆரியர் வரலாறு’ஆகிய இரண்டு நூல்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.

மறைவு

சோதிப்பிரகாசம் கல்லீரல் பாதிப்பினால் அக்டோபர் 3, 2007-ல் சென்னையில் மறைந்தார்.

தத்துவப் பங்களிப்பு

சோதிப்பிரகாசத்தின் தத்துவப் பங்களிப்பு தமிழ் தேசிய சிந்தனைகளையும், தமிழ் மரபையும் மார்க்ஸியத்துடன் இணைக்கும் முயற்சி என்று வரையறை செய்யலாம். ஆரிய-திராவிட இனப்பிரிவுக் கொள்கையை மார்க்ஸியக் கோணத்தில் மொழியியல் சான்றுகள் வழியாக விளக்கினார். தமிழின் தனித்தன்மை தமிழர்களை ஒரு தனித்தேசிய இனமாக காட்டுகிறது என வாதிட்ட சோதிப்பிரகாசம் தேசிய இன விடுதலையே மார்க்ஸியத்தின் வழிமுறை என்றார். தமிழ்த்தேசியச் சிந்தனைகளில் உள்ள மரபுவாதம், பழமைப்பற்று ஆகியவை ஃபாஸிசத்திற்கு இட்டுச்செல்லும் என்றும் அதை மார்க்ஸியத்தின் தேசியஇன விடுதலைக் கொள்கையாகவே அணுகவேண்டும் என்றும் சொன்னார்.

தூயதமிழில் மார்க்ஸியத்தை எழுத முயன்ற சோதிப்பிரகாசம் பல மார்க்ஸிய, தத்துவக் கலைச்சொற்களை தமிழுக்கு மாற்றியமைத்தார். சான்றாக, டைலடிக்ஸ் என்ற சொல் இயங்கியல் என்றும், பூர்ஷ்வா என்ற சொல் முதலாளி என்றும்தான் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்தது. சோதிப்பிரகாசம் அவற்றை முரணியக்கம் என்றும் முதலாளர் என்றும் மாற்றினார். ஏராளமான கலைச்சொற்கள் சோதிப்பிரகாசத்தால் உருவாக்கப்பட்டன. அவரது நூல்களின் பெரிய கலைச்சொல்லடைவுகள் முக்கியமானவை.

நூல்கள்

  • ஹெகல் ஓர் அறிமுகம்
  • முதல், ஒன்றாம் அத்தியாயம் மொழியாக்கம் (திருநாவுக்கரசு, சோதிப்பிரகாசம்)
  • வாழ்க்கையின் கேள்விகள் (இரு பகுதிகள்)
  • வரலாற்றின் முரணியக்கம்
  • திராவிடர் வரலாறு
  • ஆரியர் வரலாறு

உசாத்துணை


✅Finalised Page