சைவம் (இதழ்)
- சைவம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சைவம் (பெயர் பட்டியல்)
சென்னை சிவனடியார் திருகூட்டம் என்றழைக்கப்படும் சைவ மஹா சபையின் மாதாந்திர இதழ் சைவம். இவ்விதழ் இருக்கம் ஆதிமூல முதலியார் என்பவரால் சென்னை ஏழுகிணறு பகுதியில் 1914-ல் ஆரம்பிக்கப்பட்டது.
பதிப்பு, வெளியீடு
சைவத்தின் பெருமையை பரப்புவதும், பழமையை போற்றுவதுமே இவ்விதழின் நோக்கம். சைவத்தின் உயர்வு, சைவ சமயத்தின் உண்மை, அதனைப் பரப்பச் செய்ய வேண்டியது பற்றிய கட்டுரைகள் சைவத்தில் இடம்பெற்றன.
உள்ளடக்கம்
இதழின் முகப்பில் விநாயகர் வணக்கம், திரு ஞானசம்பந்தர் துதி போன்ற இறைவணக்கப் பாடல்கள் இடம்பெற்றன. இதழுக்கு சந்தா, இந்தியா மற்றும் இலங்கைக்கு, தபால் செலவு சேர்த்து வருடத்திற்கு ரூபாய் ஒன்றரை. வெளிதேசங்களுக்கு சந்தா இரண்டு ரூபாய். ஆயுள் சந்தா ரூபாய் பத்து. தனி இதழின் விலை மூன்று அணா.
32 பக்கங்கள் கொண்ட சைவம் இதழ் திரு.வி.க. மற்றும் அவரது சகோதரருக்குச் சொந்தமான சாது அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. இதழின் முகப்பில் 'ஸ்ரீமான் மெ. அரு. நா. இராமநாதன் செட்டியாரவர்களுக்குச் சமர்பிக்கப்பெறுவது’ என்ற குறிப்பு காணப்படுகிறது.
இதழ் தாமதமாக வெளிவருவது குறித்து அதன் ஆசிரியர் ஆதிமூல முதலியார் பின்வரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். "இக்காலத்தில் சைவ சமயபரிபாலனம் செய்வாரில்லை. கை ஒழுக்கங்கள் குன்றிப்போயின. ஒவ்வோர் காலத்தில் ஒவ்வொர் சைவாபிமானிகள் வெளிப்பட்டுச்செய்யும் முயற்சிகளும் அவ்வவர்களோடு அழிகின்றன. இப்படியே அடியேன் செய்யும் முயற்சிகளும் என்னோடேயழிந்து போகலாம். ஆதலால் நான் இப்போது தொடங்கி நடத்திவருவன என்றும் நிலைபெற்று மேலுமேலும் விருத்தியடையுமாறு பெருமுயற்சிகள் செய்துகொண்டிருக்கிறேன். நான் இன்னும் இரண்டொரு வருடம் உயிரோடிருந்தால் இம்முயற்சி இறைவனருளால் முற்றுப்பெறும். இதற்கிடையில் பத்திரிகைக்கு விஷயங்கள் எழுதுவதில் என்மனம் செல்லவில்லை. அவரவர்கள் பலபல உதவிகளை நாடி எழுதுங் கடிதங்களைக் கவனிக்கவும் இயலவில்லை. பத்திரிகை தாமதித்து அனுப்பநேரிடுகிறது. இக்குறைகளை சிலகாலம்வரை அன்பர்கள் பொறுத்துக்கொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன்." - இ. ஆதிமூல முதலியார்.
பங்களிப்புகள்
’சைவம்’ இதழில் பெரிய புராணம் தொடராக வெளியாகியுள்ளது. சாத்திர விளக்கம், நாம விளக்கம் எனப் பல விளக்கக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சிவஞான போதம், தேவார, திருவாசகப் பாடல் விளக்கங்கள், நூல் அறிமுகப் பகுதி போன்றவையும் இடம் பெற்றுள்ளன. சைவம் சார்ந்த செய்திகளோடு கூடவே மதமாற்றம், சுகாதாரம், மகப்பேறு, மருத்துவம் பற்றிய செய்திகளுக்கும் இவ்விதழ் முக்கியத்துவம் கொடுத்தது.
சைவம் சார்ந்த விவாதங்களும், சர்ச்சைக் கட்டுரைகளும் இவ்விதழில் வெளியாகியுள்ளன. ஜெ.எம்.நல்லுசாமிப் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு இவ்விதழில் தொடராக வெளியாகியுள்ளது. ’செவ்வந்தி புராணம்’ மிக விரிவான விளக்கத்துடன் வெளியாகியுள்ளது. ஆரம்ப காலத்தில் விளம்பரங்கள் ஏதும் இல்லாமல் வெளியான சைவத்தின் பிற்காலத்து இதழ்களில் விளம்பரங்கள் இடம் பெற்றன.
பங்களிப்பாளர்கள்
சைவச் சான்றோர்கள் பலர் இவ்விதழுக்குப் பங்களித்துள்ளனர். இதழின் ஆசிரியராக இருந்த ஆதிமூல முதலியார், சிவஞானபோதம் நூலுக்கு உரை எழுதி 'சைவம்’ இதழில் தொடராக வெளியிட்டுள்ளார். காந்திமதி நாதப் பிள்ளை, ராவ்பஹதூர் கே.எஸ். ஸ்ரீநிவாசப் பிள்ளை, திரிசிரபுரம் தி. சாம்பசிவம் பிள்ளை, ஆர்.எஸ். நாராயணசாமி ஐயர், த. குமாரசாமிப் பிள்ளை, ம. சாம்பசிவம் பிள்ளை, யாழ்ப்பாணம் எஸ். சபாரத்தின முதலியார் போன்றோரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. காரைக்குடி சொக்கலிங்கையா, சிவபாத சுந்தரம் பிள்ளை, சூளை சோமசுந்தர நாயகர், தஞ்சை கே.எஸ். சீநிவாசப் பிள்ளை, ஆ.ஈ. சுந்தரமூர்த்திப் பிள்ளை, த. கைலாசப் பிள்ளை முதலிய சைவச் சான்றோர்கள் இவ்விதழில் கட்டுரைகள் எழுதினர்.
இந்து சாதனம், ஞானசித்தி போன்ற இதழ்களிலிருந்தும், சூளை சோமசுந்தர நாயகர், பாம்பன் சுவாமிகள் போன்றோர் எழுதிய நூல்களிலிருந்தும் இவ்விதழில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஆதிமூல முதலியாருக்குப் பின் மறைமலையடிகளாரின் சீடரான அழகரடிகள் இவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.
சென்னை சிவனடியார் திருக்கூட்டம்
சென்னை சிவனடியார் திருக்கூட்டத்தின் சார்பில் 'சைவம்’ மாத இதழோடு கூடவே பள்ளி, தேவாரப் பாடசாலை போன்றவையும் தொடங்கி நடத்தப்பட்டன. சென்னைச் சிவனடியார்த் திருக்கூட்டத்தினர் நூல்களும் பல வெளியிட்டுள்ளனர். ஆண்டுதோறும் கூட்டத்தினரின் வரவு செலவுக் கணக்குகளை விரிவாக விளக்கி ஆவணப்படுத்தியுள்ளனர்.
ஆவணம்
ஆர்கைவ் தளத்திலும் தமிழ் இணைய நூலகத்திலும் 'சைவம்’ மாத இதழின் பிரதிகள் சில ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
உசாத்துணை
- சைவம் இதழ்கள்: தமிழ் இணைய நூலகம்
- சைவம் இதழ்கள்:ஆர்கைவ் தளம்
- வலம் இணைய இதழ் கட்டுரை:
- நெல்லைச் சொக்கர் கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Dec-2022, 17:47:35 IST