under review

சையிது முகம்மது அண்ணாவியார்

From Tamil Wiki

சையிது முகம்மது அண்ணாவியார் பதினெட்டாம் நூற்றாண்டு தமிழ்ப் புலவர். அலி நாமா, சாந்தாதியசுவமகம் உட்பட பத்து நூல்களை எழுதியுள்ளார். அமிர்த மதுரகவி என்று அழைக்கப்பெற்றார்.

பிறப்பு, கல்வி

சையிது முகம்மது அண்ணாவியார் மதுரையில் பிறந்தார். இவரது தந்தை செய்கு மீரான் லெப்பை. பாட்டனார் பெயர் நூருத்தீன் லெப்பை.

இளமையில் பெற்றோரை இழந்ததால் மதுக்கூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். அவ்வூர் முஸ்லிம் மக்கள் ஆதரவில் திருக்குரானையும் மற்ற சமய நூல்களையும் கற்றார். மூத்தாக்குறிச்சியில் வாணியச் செட்டியார் ஒருவர் நடத்திவந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தமிழ் பயின்றார். அவரது தமிழறிவு யமகம், திரிபு, அந்தாதி, மாலைமாற்று முதலான அரிய பாடல் வகைகளை விரைந்து பாடும் ஆற்றலைக்கொடுத்தது.

பின்னர் நாகூருக்குச் சென்று அங்கு வழுத்தூர் செய்கு வகாபுத்தீன் சாகிபு என்பவரை ஆன்மகுருவாக ஏற்றுக்கொண்டார்.

தொழில்

சையிது முகம்மது ஐயம்பேட்டையில் பள்ளிக்கூடம் வைத்து பல மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து அதனால் அண்ணாவியார் (உபாத்தியாயர்-ஆசிரியர்) எனப் புகழ் பெற்றார்.

பின்னர் அதிராமபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்று தங்கினார்.

குடும்பம்

சையிது முகம்மது அண்ணாவியாருக்கு சையிது மீரா லெப்பை என்றும், நூர்முகம்மது என்றும் இரு மகன்கள் இருந்தனர்

தொன்மங்கள்

சையிது முகம்மது அண்ணாவியார் கதிர்வேல் உபாத்தியாயர் என்பவருக்கு சுப்பிரமணிய கடவுள் மீதான பாடல்களை (சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்) எழுதித் தந்ததாகவும், அதனைப் பாடிய கதிர்வேல் உபாத்தியாயருக்கு சுப்பிரமணிய கடவுள் நேரில் காட்சி தந்ததாகவும் அட்டாவதானம் ராமசாமிப் பிள்ளை தன் 'மகாபாரத அம்மானை' என்ற நூலின் பதிப்புரையில் குறிப்பிடுகிறார்.

இலக்கியப் பங்களிப்பு

சையிது முகம்மது அண்ணாவியார் இஸ்லாம் மற்றும் இந்து காவியங்களை புனைந்துள்ளார்.

இவரது முதன்மையான படைப்பாக 'அலி நாமா' என்ற காவியம் கருதப்படுகிறது. சாந்தாதியசுவமகம் மகாபாரத்தின் பதினான்காவது பருவமான அஸ்வமேத பருவத்தை விவரித்து இயற்றப்பட்ட தமிழ்க் காவியம்.

பாடல் நடை

இரதம் உற்றுறு புரவலர் முனையொடும்
எதிர்கு தித்திடும் கயலொடு கயலடி கொளல் போலும்
விரைவில் உற்றிடு தகரொடு தகருகள்
வினைமிகுத்துர மொடும் எதிர் பொருதிடு வதுபோலும்
வரித னுக்கொடு சுடுகணை சொரிதலின்
மணிஅ ழுத்திய கொடி குடைசகடுகள் விடுதோடு
புரவி மற்றவும் ஒருநொடி யளவுபல்
பொடிய டுத்தின எவர்களும் இவைசொல அரிதாமே
-- (அலிநாமா பாடல்)
எதிர்த்து ஓடிவரும் இரண்டு சுறாமீன்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது போன்றும்; விரைந்து பின்வாங்கி முன்னேறி மோதிக்கொள்ளும் செம்மறிக்கடா போன்றும்; தேரில் இவர்ந்து வரும் மன்னர்கள் வில்லை இழுத்து விடுகின்ற அம்புகள் இரத்தினம் அழுந்திய கொடிகள், குடைகள், வண்டிகள் முதலியவற்றையும் சிறுநொடியில் பொடி செய்தன.

மறைவு

சையிது முகம்மது அண்ணாவியார் தனது 65-ஆவது வயதில் உயிர் நீத்தார். அதிராமபட்டினத்து பள்ளிவாசலின் வடக்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டார்.

நூல்கள்

  • நூர் நாமா
  • அலி நாமா (பொ.யு 1753)
  • சாந்தாதி அசுவமகம் (சாந்தாதியசுவமகம்)
  • குமார காவியம்
  • நாவான் சாத்திரம்
  • மனையலங்கார சாத்திரம்
  • சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்

உசாத்துணை


✅Finalised Page