சையத் ஃபைஸ் அஹமத் காதரி
ஃபைஸ் காதரி (சையத் ஃபைஸ் அஹமத்) (பிறப்பு: 29 நவம்பர்,1978) உருது மொழி அறிஞர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர். உருது இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். எழுத்தோவியக் கலை (caligraphy) பயின்றவர்.
பிறப்பு, கல்வி
ஃபைஸ் காதரி நவம்பர் 29, 1978 அன்று கோவையிலுள்ள சுக்ரவார்பேட்டையில் நூர் முகமத், சமாஜா தம்பதியருக்குப் பிறந்தார். ஃபைஸ் காதரியின் தந்தை நூர் முகமத் உருது கவிஞர் ஃபைஸ் அகமத் ஃபைஸ் (Faiz Ahmed Faiz) நினைவாக ஃபைஸ் அஹமத் எனப் பெயரிட்டார். சையத் குடும்பப் பெயர். காதரி என்னும் பெயர் காதரி (Qadiri) என்னும் சூஃபி மரபைச் சேர்ந்தவர் என்பதைக் குறிக்கும்.
ஃபைஸ் காதரி உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். ஃபைஸ் காதரி ஆரம்பக் கல்வியை கோட்டைமேடு நல்ல ஆயர் பள்ளியில் பயின்றார். சே.ப. நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கல்வி கற்றார். இங்கே கவிஞர் புவியரசு காதரியின் ஆசிரியராகப் பணியாற்றினார். பின் பொ.யு. 2001-ல் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் உருது மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
ஃபைஸ் காதரி ஜனவரி 03, 2010 அன்று அஷ்ரஃப் நிஷாவைத் திருமணம் செய்து கொண்டார். அஷ்ரஃப் நிஷா உருது மொழியும், மார்க்கக் கல்வியும் பயின்றவர். ஃபைஸ் காதரி, அஷ்ரஃப் நிஷா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள், அதிபூ நிஷா, சையத் ப்ராஸ் அஹமத்[1]. ஃபைஸ் காதரி பத்தாம் வகுப்பு முடித்ததும் பொ.யு. 1993-ல் குடும்பத் தொழிலான விளம்பரப் பலகைக் கலைஞர்(sign board artist) தொழிலை மேற்கொண்டார். முதுகலைப் பட்டத்திற்கு பின் முழு நேர உருது மொழி ஆய்வாளராகவும், உருது, தமிழ் இரு மொழிகளில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
ஃபைஸ் காதரி மௌலானா வஹிதுத்தீன் கானின் நேரடி மாணவர். மௌலானா வஹிதுத்தீன் கான் எழுதிய கட்டுரை நூல்களை உருது மொழியிலிருந்து ஃபைஸ் காதரி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். உருது இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பின் உருது மொழி பற்றிய ஓர் அறிமுக நூலைத் தமிழில் எழுதினார். தமிழில் எழுதப்பட்ட உருது மொழி குறித்த முதல் அறிமுக நூலாக இது கருதப்படுகிறது. ஃபைஸ் காதரி கஸல் கவிதைகளும், புதுக் கவிதைகளும் பல எழுதியுள்ளார். அவை 'இனிய உதயம்', 'சம உரிமை' போன்ற பல்வேறு இதழிகளில் வெளிவந்துள்ளது. ஃபைஸ் காதரி உலக அளவில் நிகழ்ந்த பல்வேறு முஷாராக்களில்[2] தன் கஸல் கவிதைகளை வாசித்துள்ளார்.
மொழிபெயர்ப்பு பணிகள்
ஃபைஸ் காதரி உருது மொழியிலுள்ள கஸல் கண்ணிகளை (Ghazal Couplets) தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூல் 820 கண்ணிகள் கொண்ட பெரும் தொகுப்பு. உருது இலக்கிய எழுத்தாளரான குத்றதுல்லாஹ் ஷஹாப் இன் 'இறைவா' குறுநாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். திருகுர்ஆனை உருது மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் குழுவில் முக்கிய பங்காற்றியுள்ளார். தனது ஆசிரியரான மௌலானா வஹிதுத்தீன் கானின் நான்கு நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். தொடர்ந்து கஸல் சார்ந்த கட்டுரைகளையும், கவிதைகளையும் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.
கல்விப் பணி
டில்லி தேசிய உருது மொழி வளர்ச்சி கழகம் சார்பாக உருது மொழியில் பொ.யு. 2012 முதல் பயிற்சி அளித்து வருகிறார். இவரது தனி பயிற்சியின் கீழ் கிட்டதட்ட மூவாயிரம் மாணவர்கள் உருது மொழி பயின்றுள்ளனர். தற்போது சூம் செயலி மூலம் ஆன்லைனிலும் இவ்வகுப்புகளை நிகழ்த்தி வருகிறார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உருது மொழி பாடத்திட்டக் குழுவின் பொறுப்பாளராக உள்ளார்.
கருத்தரங்கு
கோவையில் அல்லாமா இக்பால் அகாடமி சார்பாக அல்லாமா இக்பாலுக்கு ஒரு மாநாடும், அஞ்சுமனே உருது (உருது சபை) சார்பாக தேசிய கருத்தரங்கு ஒன்றும் ஒருங்கிணைத்துள்ளார்.
அமைப்புப் பணி
2011-ம் ஆண்டு முதல் மூன்று வருடம் தமிழக உருது அகாடமியின் உறுப்பினராக இருந்துள்ளார். பொ.யு. 2025-ல் மீண்டும் அப்பதவிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விருதுகள்
- கல்விப் பணிகளுக்காக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் விருது (2011)
- இலக்கிய சேவை விருது, சென்னைப் பல்கலைக்கழகம், உருது துறை (2013)
- தமிழக உருது அகாதெமி சார்பாக சிறந்த மொழி இலக்கிய சேவைக்கான Award of Excellence விருது வழங்கப்பட்டது, (விடுதலைநாள் விழா, 2022)
நூல்கள்
- உருது இலக்கிய ஓர் அறிமுகம், யுனிவர்சல் பப்ளிசர்ஸ் (2006)
- கவிக்கோ ஒரு ஜீவநதி
மொழிபெயர்ப்பு நூல்கள்
உருது - தமிழ் மொழிபெயர்ப்பு
- இவர் தான் மகாகவி அல்லாமா இக்பால் (2006)
- உருது கஸல் கன்னிகள் (820 Ghazal Couplets from Urdu) - அச்சில்
- பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு (கட்டுரை) மூலம்: மௌலானா வஹிதுத்தீன் கான், உருது (யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்)
- அழைப்பு பணி, மூலம்: மௌலானா வஹிதுத்தீன் கான், உருது
- இறுதிப் பயணம், மூலம்: மௌலானா வஹிதுத்தீன் கான், உருது
- இறைவா (குறுநாவல்), மூலம்: குத்றதுல்லாஹ் ஷஹாப், உருது (சீர்மை நூல்வெளி, 2022)
- திருகுர்ஆன் மொழிபெயர்ப்பு (உதவியாசிரியர்)
தமிழ் - உருது மொழிபெயர்ப்பு
- ஆலாபனை (கவிக்கோ அப்துல் ரகுமான்) - அச்சில்
- பித்தன் (கவிக்கோ அப்துல் ரகுமான், உதவியாசிரியர், ஆசிரியர்: முஸஃபர் ஸாமிரி)
- ஹிமாசல் பிரதேஷ் உருது அகாடமி சிறுகதை தொகுப்பில் சுஜாதா உட்பட ஐந்து எழுத்தாளர் சிறுகதைகளை தமிழிலிருந்து உருதுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
உசாத்துணை
வெளி இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-May-2025, 11:51:56 IST