சேவல்கட்டு (நாவல்)
'சேவல்கட்டு’ (2009) எழுத்தாளர் ம. தவசி எழுதிய நாவல். இது, மூன்று தலைமுறைகளாகச் சேவல்கட்டில் தன் மனத்தைப் பறிகொடுத்து அதிலிருந்து மீளமுடியாமல் சொத்தையும் வாழ்க்கையையும் தொலைத்தவர்களைப் பற்றியது. இது ம. தவசியின் முதல் நாவல். இந்த நாவல்தான் ம. தவசிக்கு 2011-ல் இளைஞர்களுக்கு சாகித்திய அகாதமி வழங்கும் 'யுவ புரஸ்கார்’ விருதைப் பெற்றுத்தந்தது.
உருவாக்கம், வெளியீடு
'சேவல்கட்டு’ நாவலை 2009-ல் புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 2016-ல் வெளிவந்தது.
கதைச்சுருக்கம்
புனவாசல் கிராமத்தைச் சார்ந்த போத்தையா தன்னுடைய தாத்தா ராஜவேல்துரையைப் போலவும் தன்னுடைய அப்பா சேவுகப்பாண்டியனைப் போலவும் சேவல்கட்டில் மிகுந்த விருப்பமுள்ர். ராஜவேல்துரை சேவல்கட்டின் குருவாய் (நடுவர்) இருந்தவர். போத்தையாவின் அப்பா சேவல்கட்டில் ஈடுபட்டு தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இழந்தவர்தான். ஆனாலும் அவர் சேவல்கட்டின் மீதுள்ள பற்றினை இழக்கவில்லை. போத்தையாவும் தன்னுடைய அப்பாவைப் போலவே சேவல்கட்டைப் பற்றிய எந்தவிதமான நுணுக்கங்களும் தெரியாமலேயே சேவல்கட்டின் மீது விருப்பம் கொண்டு, சேவல்கட்டு நிகழும் கிராமங்களுக்கெல்லாம் செல்கிறார். தன் நண்பர்களின் (வேல்சாமி, ராமபாண்டி) ஆலோசனையின் பேரில் சேவல்கட்டுக்குரிய சேவல்களை வாங்கி, அவற்றைச் சேவல்கட்டுக்குப் பழக்குகிறார். சிறிய அளவில் வெற்றிபெறுகிறார். ஆனால், அவரையே அறியாமல் பெருந்தோல்விகளைச் சந்தித்து, இறுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலைசெய்துகொள்கிறார்.
கதைமாந்தர்கள்
முதன்மைக் கதைமாந்தர்கள்
போத்தையா - கதையின் நாயன்
ராஜவேல்துரை தேவர் - போத்தையாவின் தாத்தா, சேவல்கட்டின் குரு (நடுவர்)
சேவுகப்பாண்டியன் - போத்தையாவின் அப்பா
வேலாயி - போத்தையாவின் அம்மா
வேல்சாமி - போத்தையாவின் நண்பர்
ராமபாண்டி - போத்தையாவின் நண்பர்
முத்துச்செல்வம்
துணைமைக் கதைமாந்தர்கள்
ஆப்பனூர் மகாலிங்கம்
கடுகு சந்தை பொன்னுச்சாமி
மாரந்தை வேல்ப்பாண்டி
மாரந்தை காளிமுத்து
அங்கம்மா கிழவி - சேவல்கட்டின் குரு
இருளாயி - சேவல்கட்டின் குரு
வெள்ளாயி
சண்முகம் - போத்தையாவின் அத்தை
தொத்தாழி - சேவல்கட்டின் குரு
செவல்பட்டி வில்லி - சேவல் ஜோசியர்
சடையக்கப் பாண்டியன் - செவல்பட்டி வில்லியின் அப்பா
இலக்கிய இடம்
சி.சு. செல்லப்பா வாடிவாசல் என்ற நாவலில் ஜல்லிக்கட்டு பற்றி நுட்பங்களையும் அதில் ஈடுபடும் மனிதர்களின் அகப்புற எண்ணங்களையும் வெளிப்படுத்தியது போலவே ம. தவசி இந்தச் சேவல்கட்டு நாவலின் வழியாகச் சேவல்சண்டைக்குப் பயிற்றுவிக்கப்படும் சேவல்களைப் பற்றியும் அவற்றை வளர்ப்போரின் வாழ்க்கைப்போராட்டத்தைப் பற்றியும் சேவல்கட்டினைப் பார்க்கச் செல்லும் மக்களின் எண்ணவோட்டங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் இந்த நாவல் வாடிவாசல் நாவலுக்கு நிகரான நாவல். அக்காலத்தில் ஜல்லிக்கட்டில் ஆண்கள் ஈடுபட்டதைப்போலவே பெண்கள்தான் சேவல்கட்டில் ஈடுபட்டதாக இந்த நாவல் சுட்டியுள்ளது. புராணத்தில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்து அவனின் உடலின் ஒரு பகுதியைச் சேவலாகவும் மறுபகுதியை மயிலாகவும் மாற்றிக்கொண்டதனை ஒரு குறியீடாக இந்த நாவலில் பயன்படுத்தியுள்ளார். மதுரை மாவட்ட வட்டாரமொழிநடையில், அந்தப் பகுதியில் நடைபெற்ற சேவல்கட்டினைக் காட்சிப்படுத்தும் நாவல் இது என்ற வகையில் இந்த நாவல் முக்கியத்துவம் பெறுகிறது.
உசாத்துணை
வாசிப்பை நேசிப்போம்-சேவல் கட்டு ம.தவசி
வெளி இணைப்புகள்
ஹிந்து தமிழ்-சேவல்கட்டை அனுமதிக்க அரசு ஏன் தயங்குகிறது?
தினமலர்-சேலாவலசு சேவல்கட்டுப் போட்டி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
26-Dec-2022, 11:52:20 IST