under review

சேயோன்

From Tamil Wiki
டாக்டர் சேயோன்

சேயோன் (முனைவர் சேயோன்; டாக்டர் சேயோன்; என். முருகன்; டாக்டர் என். முருகன்; முனைவர் என். முருகன்; சேயோன் முருகன்) (பிறப்பு: டிசம்பர் 29, 1952) கவிஞர், எழுத்தாளர். இதழாசிரியர், சொற்பொழிவாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். அகில இந்திய வானொலியில் உதவி நிலைய இயக்குநர் உள்படப் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்தார். மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனச் செயலாளர். தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

என். முருகன் என்னும் இயற்பெயர் கொண்ட சேயோன், டிசம்பர் 29, 1953-ல், திருநெல்வேலியில் பிறந்தார். தந்தை எம். நடராஜன். திருநெல்வேலியில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளம் அறிவியல் பட்டமும், தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் பட்டம் (பி.எட்) பெற்றார். அமெரிக்காவின் டியான்ட்ரா பல்கலைக்கழகத்தில் டி.லிட் பட்டம் பெற்றார். பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் பட்டயம் பெற்றார். ஹிந்தியில் பிரக்யா தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

சேயோன் மணமானவர்.

சேயோன் நூல்கள்

கல்விப் பணிகள்

சேயோன், நெய்வேலி ஜவஹர் வித்யாலயாவில் மொழி ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். மேட்டூர் மால்கோ வித்யாலயாவில் முதுகலை ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.

வானொலி

சேயோன், சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பு நிர்வாகியாக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். நிகழ்ச்சி நிர்வாகியாகப் பதினோரு ஆண்டுகள் பணிபுரிந்தார். திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் சென்னை அகில இந்திய வானொலி நிலையங்களில் ஆறு ஆண்டுகள் உதவி நிலைய இயக்குநராகப் பொறுப்பு வகித்தார். சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் 1999 முதல் 2000 வரை துணை இயக்குநராகப் பணியாற்றினார். ஆகஸ்ட் 2000 முதல் மார்ச் 2005 வரை உதவி நிலைய இயக்குநராகப் பணிபுரிந்தார். கோயம்புத்தூர் அகில இந்திய வானொலி நிலையத்தில் உதவி நிலைய இயக்குநர் மற்றும் நிகழ்ச்சித் தலைவராக ஜூன் 2007 வரை பணியாற்றினார். சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் உதவி நிலைய இயக்குநராக 2012 வரை பணியாற்றினார். சென்னை அகில இந்திய வானொலியின் வணிக ஒலிபரப்பு சேவைப் பிரிவின் அலுவலகத் தலைவராகவும் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

முதல்வரிடமிருந்து கலைமாமணி விருது

இலக்கிய வாழ்க்கை

சேயோன் திருக்குறள் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். குறள் சார்ந்து பல நூல்களை எழுதினார். இலக்கியம், பொது அறிவு, மனித வள மேம்பாடு, உரை விளக்கம், நாடகம் என 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவற்றில் 15-க்கும் மேற்பட்ட நூல்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பாட நூல்களாய்ப் பரிந்துரைக்கப்பட்டன. இவரது நூல்களில் சில ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டன.

அமைப்புப் பணிகள்

சேயோன், மயிலை திருவள்ளுவர் இலக்கியச் சங்கம் மூலம் பல இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். மலர் வெளியீடு தொடங்கி விருது வழங்குதல் வரை பல பணிகளை முன்னெடுத்தார்.

அறிவியல் பூங்கா இதழ்

இதழியல்

சேயோன், 'அறிவியல்' பூங்கா' என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

பதிப்பகம்

சேயோன் முரளி பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் தனது நூல்கள் சிலவற்றை வெளியிட்டார்.

பொறுப்பு

  • மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் நிறுவன செயலாளர்
  • திருவள்ளுவர் அறிவுக் களஞ்சியம் வளர்ச்சி மைய நிறுவனர்

விருதுகள்

  • தமிழ் மறை இணையர் விருது
  • திருக்குறள் செம்மல் விருது
  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • தமிழக அரசின் திருவள்ளுவர் விருது
  • சேவாரத்னா
  • மகாத்மா காந்தி அகயோகி புரஸ்கார் விருது
  • தமிழ் வாகைச் செம்மல் விருது
  • குறள் நெறிச் செல்வர் விருது
  • டாக்டர் மால்கம் எஸ். ஆதிசேஷையா விருது
  • தந்தை ஈ.வெ.ரா. பெரியார் விருது

ஆவணம்

டாக்டர் சேயோனின் பணிகளைக் குறித்து, தோணிரேவு தூயவன், 'வண்ணக்களஞ்சியமே வாழ்க நீ பல்லாண்டு' என்ற நூலை எழுதினார்.

மதிப்பீடு

சேயோன் திருக்குறளை பொதுவாசகர்களிடம் கொண்டுசெல்லும் பணியை ஆற்றியவர்களுள் ஒருவர். திருக்குறள் சார்ந்து விளக்கநூல்களை எழுதியும் ஒலிப்பேழைகளைத் தயாரித்தும் பங்களிப்பாற்றினார். சொற்பொழிவுகள் மூலம் திருக்குறள் நெறி பரப்பினார். திருக்குறள் நெறி பரப்பி வரும் ஆர்வலர்கள் பலருள் முக்கியமானவராகவும், குறிப்பிடத்தகுந்த ஒருவராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

தமிழ் நூல்கள்
உரை நூல்
  • திருக்குறள் அமுதமொழி
  • திருவள்ளுவர் ஆத்திசூடி (மூலமும் உரையும்)
  • திருவள்ளுவர் ஆத்திசூடி - ஆங்கிலம்
  • திருவள்ளுவர் ஆத்திசூடி - ஹிந்தி
கட்டுரை நூல்கள்
  • அன்றாட வாழ்வில் அறிவியல்
  • ஆளுமை வளர்ச்சிக்கு திருக்குறள் அமுதமொழி
  • மகாகவி பாரதியாரின் மானுட மேம்பாட்டுச் சிந்தனைகள்
  • இலக்கியங்களில் திருக்குறள்
  • திருவள்ளுவர் காட்டும் நெறிகள்
  • திருக்குறளில் அறிவியல் தொழில்நுட்பம்
  • திருக்குறள் சிந்தனைப் பெட்டகம்
  • திருக்குறள் சிந்தனை முத்துக்கள்
  • திருக்குறள் சிந்தனைக் களஞ்சியம்
  • அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா
  • படப்பாடல்களில் மனித ஆற்றல்
  • மனத்தை உழுத மகான்
  • மயிலேறு மாணிக்கம்
  • காவியமும் ஓவியமும்
  • திரைப்படப் பாடல்கள் இலக்கியமாகுமா?
  • தாலாட்ட மறந்த தமிழ்க் கவிஞன்
  • சிறப்பு வேண்டுமெனில்...
  • புலமைப் புறா
  • பல்துறைகளில் மகளிர்
  • பன்முக நோக்கில் திருக்குறள்
  • திருக்குறள் நெறியே தமிழ நெறி
  • பல்கலைக் களஞ்சியம்
  • வெற்றி உங்களுக்கே
  • உலகியல் அறிய...
  • வானை ஒரு மான் தாவுமோ?
  • புதுமைப்பெண் படைத்த புண்ணியன்
  • உயிரோவியம்
  • அம்மா எப்ப நீ பாட்டியாவ? (நாடகம்)
  • இக்கால உலகிற்குத் திருக்குறள் (மூன்று தொகுதிகள் - பதிப்பாசிரியர்களுள் ஒருவர்)
ஆங்கில நூல்கள்
  • Pearls of Wisdom
  • Mosaic of Motivation
  • Personality Development
  • Thirukkural Nectar of Life

உசாத்துணை


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Jul-2024, 09:52:24 IST